சிவசேனா vs சிங்கப் பெண் கங்கனா ரணாவத்

-சாவித்திரி கண்ணன்

கங்கனாவை ஒரு மிகப் பெரிய மக்கள் தலைவியாக்கியே தீருவதென்று சிவசேனா தீர்மானித்துவிட்டது என்பதாகத் தான் சம்பவங்கள் போய்க் கொண்டுள்ளன!

கங்கனா ரணாவத்துக்கும் சிவசேனாவிற்குமான மோதலில் சிவசேனை தன்னுடைய பக்குவமற்ற அணுகுமுறையின் மூலமாகப் படுமோசமான விளைவுகளைச் சந்தித்து வருகிறது!

இந்தியாவிலேயே மிக மோசமான ஒரு பாசிஸ்ட் அரசியல் இயக்கம் என்றால்,யாருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிவசேனா தான்! அந்த அளவுக்கு டெரரான ஒரு அரசியல் கட்சியான சிவசேனை சமீப காலமாகச் சரிவைக் கண்டு வருகிறது!

இந்து மதத்தையும்,மகாராஷ்டிர பாரம்பரியப் பெருமைகளையும் உயர்த்தி பிடிப்பதற்கும், பாதுகாப்பதற்குமான இயக்கமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சிவசேனைக்கு ஒரு மிகப் பெரிய மரியாதையும்,ஆதரவும் குறிப்பிடத்தக்க அளவில் ஒரு காலத்திலிருந்தது என்பதை மறுக்கமுடியாது.ஆனால்,அந்த தகுதியை தன் நடவடிக்கைகளின் மூலம் காலப்போக்கில் அது இழந்துவிட்டது அனைவரும் அறிந்ததே!

சம்பவங்களைப் பார்ப்போம்

சுஷாந்த் சிங் மரணத்தின் விளைவாக எழுந்துள்ள சர்ச்சையில்,பாலிவுட் பிரபலங்களிடம் ’கொக்கைன்’ என்ற போதைப் பொருள் அதிகமான புழக்கத்தில் உள்ளது என்றும்,இதற்கு மராட்டிய அரசியல்வாதிகளின் ஆதரவு உள்ளது என்றும்,காவல்துறை நடவடிக்கை எடுக்குமானால் நான் ஒத்துழைக்கத் தயார் என்றும் கங்கனா சொல்கிறார்.

இதற்கு சிவசேனா தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்புகிறது. அவர்கள் கங்கனாவை தாக்கி சமூகவலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள்! அப்படியான ஒரு பதிவிற்கு மும்பை காவல்துறை தரப்பில் லைக் கொடுக்கப்படுகிறது. காவல்துறை ஆதரவுடன் தான் இவை நடக்கிறது என்பதைத் தானாகவே முன்வந்து காவல்துறை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவே இது புரிந்து கொள்ளப்பட்டது.

இதை கங்கனா வெளிப்படுத்தியவுடன், சிவசேனா அரசு யோக்கியமான அரசாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?

காவல்துறையில் சட்டவிரோதமாக இயங்குபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று சொல்லி அதைச் செயல்படுத்தி இருக்கவேண்டும். ஆனால்,அதைவிடுத்து,காவல்துறையை கங்கனா இழிவாகப் பேசுவதா? என்று பொங்கினர்.மராட்டிய அரசியல்வாதிகளையும்,காவல்துறையையும் இழிவாகப் பேசும் ’’கங்கனா ரணாவத் இனி எப்படி மும்பை வருவார் பார்க்கலாம்’’ என்றார் சிவசேனா அமைச்சர் சஞ்சய்ராவத்!

ஆகா,அப்படியென்றால்,மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காங்கிரசாகிவிட்டதா? போலீசே தாக்குமா? அப்படியானால் இது தான் உங்கள் நிர்வாகமா? நான் வருகிறேன்.முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்றார்.

இப்போதாவது சிவசேனை அரசு விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா?

’’எங்களை எதிர்த்தாலும்,பழித்தாலும் எங்கள் மண்ணில் கால்வைக்கும் ஒரு பெண்ணை நாங்கள் துரும்பு கூட மேலே படாமல் பாதுகாத்து அனுப்பிவைப்போம்’’ என்று சொல்லியிருந்தால் மக்கள் மத்தியில் மதிப்பு கூடியிருக்கும்.

ஆனால்,பழிவாங்கு நடவடிக்கையாக அவர் வீட்டில் பாத்ரூமாக இருந்த ஒரு பகுதியை இடித்து அவர் ஆபீஸ் அறையாக அனுமதியின்றி மாற்றியுள்ளார் என்ற அற்ப காரணத்தைச் சொல்லி, இடித்துள்ளனர். மேலும்,கங்கனா வந்து இறங்கும் போது,சிவசேனா தொண்டர்கள் கறுப்புக்கொடி காட்டியுள்ளனர்.

இதனால் கங்கானாவிற்கு பொதுமக்கள் மத்தியில் அனுதாபம் கூடுவதற்குத் துணைபுரிந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை மத்திய பாஜக அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி,கங்கனாவிற்கு y+ எனப்படும் கருப்பு பூனை பாதுகாப்பு தந்துள்ளது மும்பை வருகையில்! சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் அணிவகுத்துச் சூழ்ந்து வர ஜான்சி ராணி போன்ற தோரணையில் மிடுக்குடன் கங்கனா நடந்து வந்ததை ஒட்டுமொத்த ஊடகங்களும் கவரேஜ் செய்தன!

சிவசேனையின் கூட்டாளியான சரத்பவாரால் கூட இந்த விவகாரத்தில் சிவசேனாவிற்கு ஆதரவாகப் பேசமுடியவில்லை,சிவசேனாவின் செயலை ’’டெத் ஆப் டெமாகரசி’’ என்று கங்கனா பதிவிட்டது தேசிய அளவில் டிரண்ட் ஆகிவிட்டது!

’’ஒரு பொம்பளை நம்மை எதிர்ப்பதா?’’ என்ற தன்னுடைய இயல்பான ஆணாதிக்க மனோபாவத்திலும் ஆட்சியில் இருக்கும் அதிகார தோரணையிலும் பிரச்சினையை சிவசேனா அணுகியதே அனைத்திற்கும் காரணம்!

’சிவசேனாவை எதிர்ப்பதெல்லாம் சிம்ம சொப்பனம் அதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது’ என பாலிவுட் சூப்பர் ஸ்டார்களே பம்மும் போது, உத்தவ் தாக்கரே காலம் மாறும், உங்கள் அடாவடித்தனத்திற்கு முடிவு வருகிறது’’ எனப் பேசி பெண்சிங்கமாக கங்கனா ரணாவத் வெளிப்பட்டுள்ளார்!

பொதுவாக பொது தளத்தில் இயங்கும் பெண்களிடம் எப்படி நயத்தக்க நாகரீகத்துடன் பேச வேண்டும் அவர்களின் கருத்துக்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் நம் நாட்டில் எல்லா அரசியல் கட்சிகளில் உள்ள ஆண்களுமே பலவீனமானவர்களாகத் தான் உள்ளனர். அவர்களுடைய ஆணாதிக்க மனோபாவம் அவர்களையும் அறியாமல் வெளிப்பட்டுவிடுகிறது.அது தான் ஜெயலலிதா தமிழ் நாட்டில் பெரும் சக்தியாக வளர்வதற்கு துணைபோனது. ஆனால், இன்னும் கூட இதில் பக்குவமற்றவர்களாகத் தான் அரசியலில் உள்ள ஆண்கள் உள்ளனர்

“பெண்களை பலவீனமானவர்கள் அதட்டி உருட்டினால் பணிந்து போவார்கள்’’ என இன்னும் கூட சிவசேனை நினைத்ததே அதன் சரிவுக்குக் காரணமாயிருக்கிறது.இந்த விவகாரத்தை பாஜக மிகச் சரியாகச் சாதுரியமாக அறுவடை செய்து கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time