காஷ்மீரில் கையாலாகாமல் போன பாஜகவின் அடக்குமுறைகள்…!

ச.அருணாசலம்

ஆகஸ்ட் மாதம் 5 , 2019ல் அதிரடியாக அரசியல் பிரிவு 370 ரத்து, தனி அந்தஸ்து ரத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் -முதன்முறையாக- துண்டாடப்பட்டு மூன்று யூனியன் பிரதேசங்களாக சிறுமைப்படுத்தப்பட்டது. மாநில அந்தஸ்தைஇழந்த காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டது.

ஊரடங்கு அமுலுக்கு வந்தது. அனைத்து அரசியல் தலைவர்களும்,தொண்டர்களும் இரவோடிரவாக கைது(பா ஜ க தவிர). இன்டரநெட் இணைப்பபிற்கு தடை,பத்திரிக்கைகள் முடக்கம், கவர்னர் போய் லெப்டின்ன்ட் கவர்னர் வந்தார் . ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஒரு சிறைச்சாலையாக மாறியது.

இத்தகைய ஒருதலைபட்சமான, தான்தோன்றித்தனமான, அரசியல் சட்டம் மற்றும் மரபு மீறிய இந்த செயலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. நாட்டில் உள்ள நல்லோரும், ஜனநாயகத்தில் அக்கறை உள்ள எதிர்க்கட்சிகளும் கண்டனம் எழுப்பினர்.

ஆனால் காஷ்மீர் பிரச்சினைக்கே இதன்மூலம் முடிவு கட்டிவிட்டார் மோடி, காஷ்மீர் இனி வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறப்போகிறது, முதலீடுகள் அதிகரிக்கப்போகின்றன, பாலும் தேனும் ஆறாக ஓடப்போகிறது நாம் நக்கியே குடிக்கலாம் விரும்பினால் காஷ்மீரக் கன்னிகளையும் மணந்து களிக்கலாம் என்று பா ஜ க வினரும் வேறுசிலரும் எக்காளக் கூச்சலிட்டதை நாடும் , நாட்டு மக்களும் இன்னும் மறக்கவில்லை.

ஆனால் ஏதாவது இதுபோன்று நடந்ததா?

தீவிரவாத நடவடிக்கைகள் குறையவில்லை, சாவுகள் குறையவில்லை, தாங்கவொண்ணா அடக்குமுறைகளுக்கு உள்ளான மக்கள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர். 35ஏ சட்டப்பிரிவு நீக்கத்தால் ஜம்முவில் வாழும் இந்துக்களும், டோக்ரா வகுப்பினரும் பௌத்த மத்த்தினரும் இன்று டெல்லிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று அள்ளிவிடப்பட்ட எந்த தொழில் முன்னேற்றமும் ,முதலீடு அதிகரிப்பும் நடக்கவில்லை. உள்ள தொழிலே ஒழுங்காக நடைபெறவில்லை..!

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் -டி டி சி- தேர்தல்களும் அறிவிக்கப்பட்டு நடந்தது. அனைவரும் சிறையில் இருப்பதால் எளிதில் வென்று நாங்கள்தான் உண்மையான மக்கள் பிரதிநிதி என்று மார்தட்ட பாஜ க முனைந்தது. அதிலும் இறுதியில் மண் விழுந்தது. அனைத்து ஜம்மு காஷ்மீர் கட்சிகள் – ஆகஸ்டு 5 ல் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை எதிர்க்கின்ற கட்சிகள்- ஒன்றிணைந்து குப்கார் கூட்டணி ( குப்கார் அலையன்ஸ்-  People’s Alliance for Gupkar Declaration PAGD)  அமைத்து அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றனர். பாஜக படுதோல்வி அடைந்தது.இந்த அமைப்பை குபதார் கேங் என்றழைத்து கேலி செய்தார் அமீத் ஷா.

இதனிடையே -எடுத்த நடவடிக்கைகள் யாவும் படுத்து விட்ட நிலையில்-  உலக அரங்கில் காட்சிகள் மாறத்தொடங்கின. லடாக்கை தனிப்பகுதியாக அறிவித்த காரணத்தை- அந்த மாற்றத்தை ஏற்காத சீனா பல்வேறு தளங்களிலும் தனது எதிர்ப்பை காட்டியது. இதன் வெளிப்பாடாகவே, இந்திய – சீன எல்லை மோதல், பதட்டம்,உயிர்சேதம் நடந்தது.

இந்தியா இருவேறு இடங்களில் ராணுவத்தை நிறுத்த வேண்டிய – பாக் எல்லை  LOC மற்றும் L A C  லடாக்கில் உள்ள இந்திய சீன எல்லைப்பகுதி- கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

கொரோனாவும் வந்து நாடுகளை, நாட்டு மக்களை வாட்டிய வேளை நமது பொருளாதாரம் ஏற்கனவே பணமதிப்பிழப்பு என்ற அதிபுத்திசாலி நடவடிக்கையால் “அற்புத நடை” யில் இருந்த நம்நாட்டு பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி விரைந்தது.

அமெரிக்க தேர்தலில் பைடன்- ஹாரிஸ் வெற்றி இந்திய அமெரிக்க உறவில் புதிய பரிமாணங்களை வெளிக்காட்டியது. ஆப்கனில் இருந்து வெளியேறும் அமெரிக்கா இப்பிராந்தியத்தில் இணக்க சூழல் ஏற்பட வழிமுறைகளை தேட முயன்றது.

அமெரிக்கா வெளியேறுவதால்(ஆப்கானிஸ்தானை விட்டு) இந்தியா -பாக்கிஸ்தான்-ஆப்கானிஸ்தான் முக்கோண உறவுகள் சீராக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவின் தலையில் வீழ்ந்தது. தாலிபன் தயவும், உறவும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது.

ஆப்கானிஸ்தான் தாலிபன் அமைப்புடன் ரகசிய பேச்சு வார்த்தை யு ஏ இ உதவியுடன் துபாயில்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அதே யு ஏ இ உதவியுடன் பாக்கிஸ்தானுடன் பேக் சேனல் டாக்ஸ் என்றழைக்கப்படும்  மறைமுக பேச்சு வார்த்தை நடத்திய இந்தியா சில முக்கிய உடன்பாட்டையும் எட்டியது.

இந்திய – பாக் உறவுகள் சீராக,எல்லைப்பகுதியில் பதட்டம் குறைந்து போர்நிறுத்ததிற்கு ஒத்துகொள்வது. அதற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க இந்தியா சில ஏற்பாடுகளை  செய்ய உறுதியளித்தது.

 

அவ்வாறு இந்தியா கொடுத்த உறுதிமொழிகளாக- அல்ஜசீரா மற்றும் டான் செய்தி நிறுவனங்கள் – குறிப்பிடுவது

# காஷ்மீரில் மக்கள் குடியமைப்பை மாற்ற முயற்சிக்க கூடாது.

# அடைத்து வைத்துள்ள அனைத்து நபர்களையும் விடுதலை செய்வது.

# இன்டர்நெட் தடை மற்றும் ராணுவ முற்றுகை நீக்கம்

# ஜம்மு காஷ்மீர் முன்பிருந்த நிலைக்கு (ஆகஸ்டு 5,2019) மீண்டும் மாற்றப்பட வேண்டும்.

# படைகளின் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை.

இவைகளின் ஆரம்பமே இந்தியா – பாகிஸ்தான் DGMOக்களுக்கு இடையில் ஒப்பந்தமான உடன்பாடு. இந்த உடன்பாட்டை சில மாதங்களுக்கு முன் இந்தியாவும் பாக்கும் அறிவித்தனர்.

அதனுடைய தொடர்ச்சியும்,  முடிவும் மேலே கூறிய நடவடிக்கைகள் நிறைவேறிய பின் நடக்கும் என்பதைத் தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவு எட்டப்பட்டால் அணு ஆயுதங்களே எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் நாகரீகம் அறிந்த தோழமை நாடுகளாக நடந்து கொள்வோம்”  என்று கூறுகிறார்.

நம்மை சுற்றியுள்ள பாகிஸ்தான்,பூட்டான், நேபாளம், பங்களா தேசம், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளுடன் நமக்கு இணக்கமான உறவு உள்ளதா என்றால் , அவ்வாறில்லை என்றே கூறவேண்டும்.

அமெரிக்க  பைடன் அரசு கொடுத்த அழுத்தத்தின் விளைவாகவும் இந்திய சீன எல்லையில் நிலவும்  ஒரு வருடத்திற்கு மேலான பதட்டமும், படைகுவிப்பும், ஏற்படுத்திய அசாதரண சூழலினாலும் இந்தியா ஒரு இறுக்கமான முனையில் இருப்பதாக உணர்கிறது.

இந்த கூட்டத்தின் அவசியம் என்ன? தேவை எங்கிருந்து வந்தது? நேற்றுவரை குப்தார் கேங் என்று ஏளனம்பேசிய அமீத்ஷா இன்று குப்தார் அமைப்பு தலைவர்களிடம் ஏன் பேசவேண்டும்? இவர்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று வீட்டு காவலில் அடைக்கப்பட்டவர்களை இன்று அழைத்து பேச வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? போன்ற கேள்விகளுக்கான விடை மேலே கூறப்பட்ட அசாதாரண சூழல்தான்…!

ஆட்டங்கண்டுள்ள பா தலைமை  கடப்பாரையை முழுங்கிவிட்டு, சுக்கு கஷாயம்  குடித்தாவது சரிப்படுத்தலாமா என முயற்சிக்கிறது.

மூன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்திற்குப்பிறகு, காஷ்மீரில் ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்தவும், தொகுதி சீரமைப்பை விரைவில் முடித்து தேர்தலை  நடத்தவும் அனைத்து கட்சியினரும் இணைந்து செயல் பட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அரசு தரப்பு செய்திகள் கூறுகின்றன.

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சியினரும் வலியுறுத்திய அம்சங்கள்:

#. காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குதல்

#. அனைத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்

#. மாநில (ஒருங்கிணைந்த மாநில) தேர்தலை விரைவில் நடத்துதல் ஆகியன.

நிலைமை சீரடைந்தபின் முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பதில் அரசு உறுதியாக

இருப்பதாக உள்துறை அமைச்சர் அமீத் ஷா கூறினார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி,  அரசியல் பிரிவு 370 ரத்து செய்த விவகாரம் விவாதப்பொருளாக கொள்ளபடாமல் தவிர்க்க முயற்சிக்கப்பட்டது  என்றாலும், உமர் அப்துல்லா மற்றும் மகபூபா ம்படி ஆகிய இரு தலைவர்களும் அரசியல் பிரிவு 370 ஐ மீட்டெடுப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் அதற்காக அமைதியான முறையில், சட்டபூர்வமாக வெற்றி கிட்டும்வரை போராடுவோம், தனித்தன்மையை இழக்கமாட்டோம் என்று செய்தியாளர்களிடம் கூறினர்.

காஷ்மீரின் தலைவிதியை காஷ்மீர் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் , டெல்லி அல்ல என்பதில் காஷ்மீர் மக்களும்,தலைவர்களும் உறுதியாக உள்ளனர். அந்த மக்களோடு ஒத்திசைந்தே எந்த தீர்வுக்கும் வரமுடியும் என்ற யதார்த்தம் பட்டவர்தனமானது!

ஏற்கனவே பலகாலமாக இருந்துவந்த காஷ்மீர் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது பாஜக அரசின் ஆகஸ்டு 5, 2019 நடவடிக்கையே என்பது ஆட்சியாளர்களுக்கு புரிந்தாலும் அதை அவர்கள் ஒருபோதும் ஒத்துகொள்ள போவதில்லை. பின் தீர்வு எங்கிருந்து வரும்?  எப்படி வரும்?

பரம்பத விளையாட்டு ( Snake and Ladders Game)  மீண்டும் ஆரம்பமாகிறது!

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time