தினமலர் vs பாஜக அம்பலமாகும் உண்மைகள்!

-சாவித்திரி கண்ணன்

பிடிக்காதவர்கள் மீது அவதூறு எழுதுவதும், பிடித்தவர்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்தாலும் மூடிமறைத்து அலட்சியப்படுத்துவதும் தினமலரின் வாடிக்கை! கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்கான போராட்டம், நீட் எதிர்ப்பு போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்டம்..போன்ற மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தி எழுதும். கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை இழிவுபடுத்தி எழுதும். முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என சித்தரிக்கும். காவல்துறை என்ன செய்தாலும் கண்ணை மூடி ஆதரிக்கும்! ஏத்தாபூர் வியாபாரி முருகேசன் போலீசால் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் விஷிவலாக வெளியாகி அனைவரும் பார்த்த நிலையிலும் கூட, சாலையில் விழுந்து, தலையின் பின்பகுதியில் பலத்த காயம்பட்டு  முருகேசன் இறந்ததாக எழுதிய ஒரே பத்திரிகை  தினமலர் தான்.

இப்படிப்பட்ட தினமலர், ‘கமலாயத்தில் விசாகா கமிட்டி விசாரிக்கும் சூழல் வரலாம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை (23.6.2021) அரை பக்கத்திற்கு விலாவாரியாக எழுதியது. அதில் யாரெல்லாம் குற்றம் செய்தார்கள், யார்யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், யார் புகார் தந்துள்ளார்கள் என எந்த விபரங்களும், ஆதாரமும் இன்றி பாஜக நிர்வாகிகள் என்றாலே பாலியல் குற்றவாளிகளோ என சந்தேகிக்கும் வகையில் ஒரு செய்தி போட்டிருந்தது.

அந்தக் கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகிறோம்;

சி.டி.ரவி எப்போதும் இல்லாத அளவுக்கு, கடும் கோபத்தில் இருந்தார். முருகன், கேசவ விநாயகம் என, யாரையும் விட்டு வைக்கவில்லை; எல்லாரையும் வசை பாடினார்.கட்சியின் தோல்வியை விட, பெண் விவகாரங்களால் எழுந்துள்ள புகார்கள் தான், அவருடைய கோபத்துக்கு முக்கிய காரணமாக இருந்தன. இப்படிப்பட்ட புகார்கள் நுாற்றுக்கணக்கில் மேலிடத்துக்கு வந்திருக்கிறதாம். ‘இங்கு யாரையும் விசாரிக்க வரவில்லை. அந்த புகார்களின் நம்பக தன்மையை விசாரித்து விட்டு தான் வந்திருக்கிறேன். விசாரணையில் தெரியவந்துள்ள விஷயமெல்லாம், அருவெறுப்பின் உச்ச கட்டம்’ என்று சி.டி.ரவி கொந்தளித்தார்.

ஒரு தலைவர் மீது மட்டும், 134 புகார்கள் வந்துள்ளனவாம். அந்த தலைவர் மீது, அளவுக்கு மீறிய கோபத்தில் இருந்தார். இது போன்ற சம்பவங்களை தடுக்க, ‘தமிழக பா.ஜ., தலைவர்கள் யாரும் நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்லக் கூடாது அங்கே ரூம் எடுத்து தங்கக்கூடாது. ‘கட்சி ரீதியிலான பணிக்கு சென்று, நட்சத்திர ஓட்டலில் தங்கியதாக தகவல் வந்தால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இதை ஏன் குறிப்பாக சொல்கிறேன் என்றால், நட்சத்திர ஓட்டலுக்கு சென்று, அங்கு பெண்களை வரவழைத்து கும்மாளம் அடிக்கின்றனர். இதை இல்லை என்று மறுத்தால், அதை நிரூபிக்க தயாராக இருக்கிறேன். ‘கட்சி பணி தொடர்பாக, பா.ஜக தலைவர்களும், பெண் நிர்வாகிகளும் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தால், எக்காரணம் கொண்டும், ஒரே விடுதியில் தங்கக் கூடாது. மீறி தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அருகருகே ரூம் எடுத்து தங்கக்கூடாது. அப்படி தங்கி, அதில் ஏதும் புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உத்தரவு போட்டுள்ளார்.

‘ஊரெல்லாம் விசாகா கமிட்டி அமைத்து, பெண்கள் தொடர்பான பாலியல் புகார் மீது விசாரிக்க வலியுறுத்தி கொண்டிருக்கும் நாமே, நம்மிடையே இருப்போர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, விசாகா கமிட்டி அமைக்க வலியுறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும். ‘இப்படியே போனால், கமலாலயத்துக்குள் கட்டாயம் விசாகா கமிட்டி ஒன்று அமைத்தாக வேண்டும் தான்’ என்று, சம்பந்தப்பட்ட தலைவர்களையும் அருகில் வைத்துக் கொண்டே, வார்த்தைகளால் வறுத்தெடுத்தார் சி.டி.ரவி.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த செய்தி பாஜக நிர்வாகிகளை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது! இதைத் தொடர்ந்து தினமலர் மீது அவதூறு வழக்கு பாஜக நிர்வாகி கரு நாகராஜனால் வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ் மூலமாக போடப்பட்டது. சோஷியல் மீடியாவிலும் தினமலரை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து எழுதினார்கள். அதே சமயம் பாஜக ஆதரவாளர்களில் சிலர் தினமலரில் வந்துள்ளதை புறந்தள்ள முடியாது. கட்சிக்குள் இது போல நிறைய நடந்து கொண்டு தான் உள்ளது. நமக்கு ஆதரவான ஒரே பத்திரிகை தினமலர் தான். அதை எதிர்க்க வேண்டாம் என்றும் எழுதினார்கள்!

ஆனால், வேறு சில பாஜக ஆதரவாளர்கள் தினமலர் பத்திரிகை நிர்வாகத்தின் மோசடிகள் என்பதாக சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்ததாவது;

தினமலர் நிர்வாகிகள் தென் தமிழக பகுதியான பழைய நெல்லை மாவட்டம் மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் கோவில் சொத்துகள், சாத்திரம் சொத்துகள், கட்டளை சொத்துகள் ஆகியவற்றை போலி ஆவணங்கள் மூலம் வாரி சுருட்டிய விவரம் சென்னை, தூத்துக்குடி இந்து சமயத்துறையிலும் மற்றும் தென்காசி பதிவுத்துறை மாவட்டப்பதிவாளர் அலுவலகத்திலும் விசாரணை நடந்தது வருகிறது. இந்த விசாரணைகள் நீண்ட காலமாக நடந்த போதிலும், தங்கள் ஊடக செல்வாக்கு காரணமாக தினமலர் தண்டிக்கப்படாமல் தப்பித்து வருகிறது.

 

மேலும், சென்னை டிஜிபி அலுவலகம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவான DVAC அலுவலகம் ஆகியவற்றில், கோவில், சத்திரம் மற்றும் அரசு சொத்துக்கள் அனைத்தும் போலி ஆவணம் மூலம் விற்பனை செய்த தினமலர் நிர்வாகியின் மருமகன் எஸ். வைத்தியநாதன் மீது, புகார் தரப்பட்டுள்ளது.  2017-ல் திருநெல்வேலி மாவட்டாட்சியரின் கடித கோப்பு ந.க.G 3/48554/2017.& ந.க G 3/48555/2017 date : 15.12.2017 -ன்படிமற்றும் மனு நாள்.20-08-2020-ல் 2017 முதல் 2019 வரை சென்னை டிஜிபி அதிகாரிக்கு அனுப்பப்பட்ட 10 மனுக்கள் அனைத்தும் தென் சரக ஐ.ஜி அலுவலகம் விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்த நிலையில் அதிமுக ஆட்சியில் அணுவளவும் இவர்கள் மீது நடவடிக்கையின்றி தப்பித்துவிட்டனர்.

இதை போல் 2012-ல் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த திரு விஜேந்திர பிடாரி IPS அவர்கள் தினமலர் நிர்வாகிகளின் மீது போட்ட நான்கு முதல் தகவல் அறிக்கையும் (FIR)  கேட்பாரற்று தூங்குகிறது.  தினமலர் நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து, திருமலைக் கொழுந்துபுரம் பிராமண மகாஜன டிரஸ்ட் மூலம் கொடுத்த கோவில் கட்டளை சொத்து (தினமலர் பண்ணை ) காருகுறிச்சி அம்பாசமுத்திரம் தாலுகா சரகம் 148 ஏக்கர் எந்த கோவிலுக்கு உரியது என்று தமிழக அரசு விசாரணை செய்து கண்டறியப்பட்டும் நடவடிக்கை இல்லை எனத் தெரியவருகிறது.

தினமலர் நிர்வாகி ரமேஷ் என்பவர் அந்த பத்திரிகையில் வேலை பார்த்த ஒரு பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான குற்றப் புகார்கள், வழக்குகளுக்கு உரிய நீதி கிடைக்காமல் அமுக்கப்பட்டுவிட்டது அது மீண்டும் தோண்டி எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

இவ்வாறாக தினமலர் நிர்வாகத்தை பற்றி விலாவாரியாக எழுதிய பாஜகவினர் ‘’ஒரு வேளை ஆட்சி மாற்றத்தால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கபடுமோ என்ற அச்சத்தில் தினமலர் அந்தர் பல்டி அடித்து பாஜகவிற்கு எதிராக இப்படி எழுதி இருக்கலாம்’’ என குறிப்பிட்டு இருந்தனர்!

இந்த மாதிரி எதிர்ப்புகள் எழுந்ததவுடன் சி.டி.ரவியிடமே ஒரு மறுப்பை கேட்டு வாங்கி அதையும் பிரசுரித்துவிட்டது (25.6.2021) தினமலர்! அதில் அவர், “உங்கள் பத்திரிகையில் எழுதியது போல நான் பேசவில்லை, நீங்கள் வெளியிட்டது உண்மைக்கு மாறான செய்தி என உறுதிபடக் கூறுவதாக’’ எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து  தினமலர், தான் வெளியிட்ட செய்தி, ‘உண்மையா? உண்மைக்கு புறம்பானதா?’ என்ற எந்த விளக்கத்தையுமோ,தெளிவையுமோ தர முன்வரவில்லை. தவறாக செய்தி போடப்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருவது தான் நாணயமாகும். அல்லது எழுதியது உண்மை தான் என்றால், எங்கள் பத்திரிகையில் வந்த செய்தி பொய்யல்ல என துணிந்து சொல்ல வேண்டும்.

நம்மை பொறுத்த வரை பாஜக தலைவர்களோ, நிர்வாகிகளோ முறைதவறி பெண்களிடம் நடந்திருந்தால் அது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலாக ஒலிப்பது தான் பத்திரிகை தர்மம். இன்று சாதாரண பள்ளிக் கூட மாணவிகளே துணிச்சலாகப் பேசும் நிலை மலர்ந்துள்ள சூழலில் – அப்படி யார் ஒருவருமே புகார் சொல்ல முன்வராத பட்சத்தில் – ஒரு கட்சியையே ஒட்டுமொத்தமாக சந்தேகிக்கும் வகையில் மனம் போன போக்கில் எழுதுவது மஞ்சள் பத்திரிகை எனப்படும் ‘எல்லோ ஜர்னலிசம்’ தான்.

பாஜகவினர் குறிப்பிட்டுள்ளபடி தினமலர் பொதுச் சொத்தை களவாடி இருக்கும்பட்சத்தில் அவர்களின் ஊடக பலத்திற்கு அஞ்சாமல் தமிழ்நாடு அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தாங்கள் தான் தேசியத்தையும்,தெய்வீகத்தையும் தூக்கிபிடிப்பதாகவும் உண்மையின் உரைகல் என்றும் தங்களுக்கு தாங்களே விளம்பரம் செய்து கொண்ட தினமலரின் யோக்கியதையை அந்த பத்திரிகையை ஆதரிக்கும் பாஜகவினரே போட்டு கிழித்தது தான் தரமான சம்பவமாகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time