கொடூரமாக செயல்படும் காவலர்கள்! தீர்வு என்ன..?

-சாவித்திரி கண்ணன்

இது லாகப் டெத் கூட இல்லை! நடு ரோட்டுச் சாவு அல்லது கொலை.

சாத்தான்குளத்தில் ஒலித்த சாவு மணி ஏத்தாபூரில் ஏகத்திற்கும் தொடர்கிறது என்பது மட்டுமல்ல, இன்னும் அது தொடர்ந்து கொண்டே செல்வதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம்!

இப்படி நிதானமின்றி நடந்தால் அதிகபட்சம் தற்காலிக பணி நீக்கம் தானே..பார்த்துக் கொள்ளலாம்! நான் போலீஸ், ஆகவே, நான் யாரையும் அடிக்க,உதைக்க உரிமையுள்ளவன். கொன்றாலும் நான் கொலைகாரனாக கருதப்பட்டு தண்டிக்கபடமாட்டேன் என்ற எண்ணம் காவலர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது போலும்!

ஒவ்வொரு நாளும் ஏதேனும் சில இடங்களில் இது போன்ற கொடுர தாக்குதல்கள் காவல்துறையால் நடந்தவண்ணம் தான் உள்ளது. வெளியே தெரிய வருவது மிகக் குறைவே!

தென்காசி புளியேதரை தாட்கோ நகரைச் சேர்ந்த பிரான்சிஸ் அந்தோணீசாமியும் இப்படித் தான் அடித்து துவைத்தெடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் செத்திருந்தால் அந்த விவகாரம் கவனம் பெற்று இருக்கும். ஆனால்,அவரது மகளாகிய இளம்பெண் தன் தந்தைக்கு நியாயம் வேண்டி டெலிபோன் கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.

கொரானா பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபடும் டாக்டர்களைக் கூட காவலர்கள் மதித்துவிடுவதில்லை. மதுரையை சேர்ந்த ஹோமியோபதி டாக்டர் தமிழரசன் காவல்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏறப்பட்டுள்ளது! அவருக்காம்க மருத்துவர் அமைப்புகள் குரல் கொடுத்ததால் இது வெளியே தெரிய வந்தது

இந்த ஏத்தாபூர் விவகாரத்தில் இறந்து போன முருகேசன் எஸ்.ஐ.பெரியசாமியை மரியாதை இல்லாமல் பேசிவிட்டார். அதனால் தான் அவர் அடிக்க நேர்ந்தது என்கிறார்கள்.

முதலில் முருகேசனை தடுத்து நிறுத்தி விசாரிக்கும் போது மரியாதை தரத்தக்க அளவில் பெரியசாமி பேசினாரா..? அல்லது அசிங்கமாக திட்டி இழிவுபடுத்தினாரா..? என்றும் விசாரிக்க வேண்டும். காவல்துறையினர் மரியாதை இல்லாமல் பேசினாலும், பொது மக்கள் பணிந்தே பதில் சொன்னால் தான் பிழைக்க முடியும் என்றால் இது என்ன ஜனநாயக நாடு!

சரி, முருகேசன் தான் மரியாதை குறைவாகப் பேசினார் என்றால், அவர் மீது வழக்கு போட்டு அலை அவரை கழிக்க முடியுமே! காவல் நிலையம் அழைத்துச் சென்று லாகப்பில் சில மணி நேரம் வைத்திருந்தாலே பயந்து, கலங்கி மன்னிப்பு கேட்டிருப்பாரே!

எல்லோருக்குமே கோப, தாபங்கள் இயல்பே! போலீஸ் என்றால் பொறுமை, சகிப்பு தன்மை இழந்து போவீர்களோ..! இந்த கோபத்தை செல்வாக்கான அரசியல்வாதிகளிடம் காட்டமுடியுமா? வி.ஐ.பிக்களிடம் காட்டமுடியுமா..? அல்லது உங்கள் மேலதிகாரியை எதிர்த்து நீங்கள் சுண்டுவிரலையாவது அசைக்கமுடியுமா…?

சென்ற வருடம் மட்டும் நம் நாட்டில் அதிகாரபூர்வமாக தேசிய மனித உரிமை ஆணைய தகவல்படி 1,680 லாக் அப் மரணங்கள் சம்பவித்துள்ளன!

கடுமையாக தாக்கப்படுவதில் ஒருவர் நிரந்தரமாக ஊனமானாலோ,உயிர் இழந்தாலோ அந்த இழப்பை எவ்வளவு பணம் தந்தாலும், ஆறுதல் தந்தாலும் ஈடுக்கட்டவே முடியாது. அந்த குடும்பத்தின் குழந்தைகளின் தந்தைக்கான இழப்பை , மனைவியின் கணவருக்கான இழப்பை, தாய்க்கு மகனுக்கான இழப்பை வேறு யாராலும் ஒரு போதும் ஈடு செய்ய முடியாது.

பொது இடத்தில் பொறுமை இழந்து ஒரு சாதாரண மனிதன் உணர்ச்சிவசப்பட்டு ஒரு வார்த்தை போலீசை திட்டும் பட்சத்தில் அவர்கள் இப்படித்தான் மிருகத்தனமாக நடந்து மரண அடி தருகிறார்கள்! பல நேரங்களில் குற்றுயிரும், கொலை உயிருமாக அடித்து எறிகிறார்கள். சம்பந்தப்பட்டவர் சாகாதவரை இவர்களை யாரும் கேள்வி கூட கேட்க முடியாது. போலீஸ் என்ற கெத்தை இழக்கக் கூடாதாம்! ஆனால், மிருகமாக மாறுவது குறித்து இவர்களுக்கு ஏனோ சிறிதளவேனும் குற்றவுணர்வு கூட இருப்பதில்லை!

கொரோனா காலத்தில் எளிய மக்கள் இவர்களிடம் சிக்குண்டு பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை! போலீசார் கொடூரமான ரவுடிகளிடம் வீரத்தை காட்டி இருந்தால் சிறப்பு! அதை எளிய மனிதனிடம் காட்டுவது கோழைத்தனம். மிகவும் அவமானகரமானதாகும்! பெரிய குற்றங்கள் செய்தவனெல்லாம் கெத்தாக இந்த சமூகத்தில் நடமாடமுடிவதை போலீசாரும் அறிவார்கள் தானே!

பொது மக்களிடமிருந்து தங்களை மேம்பட்டவர்களாக போலீசார் நினைப்பது தவிர்க்கப்பட வேண்டும்! பொது மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே இணக்கம் தோன்றச் செய்ய முதலில் அவர்களிடமிருக்கும் ஈகோவை உடைக்க வேண்டும்! ஈகோ உள்ள மனிதன் சமூகத்திற்கு ஆபத்தானவன் மட்டுமல்ல, அவன் தனக்கே மிகவும் ஆபத்தானவன்!

உணர்ச்சிகளை முறையாக வெளிப்படுத்தவும், உறவுகளை கண்ணியமாக பேணவுமான கல்வியே இன்றைய தினம் காவலர்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது.

நாம் காவலர்களிடம் எதிர்பார்ப்பதை பற்றி மட்டுமே பேசினால் போதாது! அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக காவலர்கள் நடத்தப்படுவதை நாம் பேசாமல் கடக்க முடியாது.

சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கு வேலை நேரத்தை முறைப்படுத்த வேண்டும். நாம் எல்லோருக்கும் எட்டு மணி நேர வேலை. அவர்களுக்கு மட்டும் எல்லா நேரங்களிலும் வேலை என்பது சிறிதும் நியாயமில்லை இது நிச்சயமாக முடிவுக்கு வர வேண்டும். கண்டிப்பாக வாரம் ஒரு நாளேனும் காவலர்களுக்கு விடுமுறை தாருங்கள். அவர்களின் மனித நேயப்பண்பு மேலோங்கும். அவர்களும் மனைவி, குழந்தை மற்றும் உறவுகள் நண்பர்களோடு உறவாடினால் தான் அவர்களின் கலாச்சார விழுமியங்கள் உயரும்.

சாத்தான்குளம் சம்பவம் சம்பவித்த போது எடப்பாடி பழனிச்சாமி, ’அந்த சாவு காவலர் தாக்கியதால் ஏற்பட்டதல்ல’ என்று சொன்னதை போல சொல்லாமல், இன்றைய முதல்வர் ஸ்டாலின் உடனே சம்பந்தப்பட்ட காவர் மேல் கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்தது மன ஆறுதல் தருகிறது என்றாலும், இது போன்ற காவலர்களை முழுமையாக பணி நீக்கம் செய்து, ஆயுள் தண்டனை வழங்கினால் தான் நியாயமாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time