சூறையாடப்பட்ட தமிழகம் – சிஏஜி அறிக்கையை சீண்ட மறுக்கும் ஊடகங்கள்!

-சாவித்திரி கண்ணன்

சிஏஜி அறிக்கை என்பது ஒரு பானை சோறுக்கு ஒரு பருக்கை போல, உள்ளதைச் சொல்லும் உள்ளங்கை நெல்லிக் கனி போன்றது! அதாவது, தமிழ்நாடு அரசே கொடுத்துள்ள தகவல்கள், ஆவணங்கள் வழியாகத் தான் அவர்கள் ஆடிட் செய்து ஒரு அறிக்கை தருகிறார்கள்! அந்த வகையில் நடந்த முறைகேடுகளின் முழுப் பரிமாணத்தையும் தரமுடியாது! ஆயினும், அப்படி தரப்பட்ட சில துளிகளே இவ்வளவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றால், நடந்துள்ள முறைகேடுகளின் அளவு மிகப் பிரம்மாண்டமாகும்!

உதாரணத்திற்கு ஒரு பணி செய்ய இவ்வளவு தான் செலவாகும் தரலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு தொகையைக் காட்டிலும், கூடுதல் பணம் தந்திருந்தாலோ அல்லது அதை செய்யக் காலதாமதப் படுத்தியதன் மூலம் ஏற்பட்ட கூடுதல் செலவுகளையோ தான் சி.ஏ.ஜி இழப்பாக சுட்டிக் காட்டும்!ஆனால், அந்தப் பணியை தரக்குறைவாக செய்து முடித்து பணம் சுருட்டப்பட்டிருந்தால் அது சிஏ.ஜி அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட வாய்ப்பில்லை.ஆனாலும் கூட குறைந்தபட்ச சில உண்மைகளாவது இந்த சி.ஏ.ஜி அறிக்கை மூலம் வருகிறது என்பது இன்றைய ஜனநாயக அமைப்பில் ஒரு ஆறுதலான அம்சமாகும்.

அதுவும் இது ஒன்றிய அரசின் நிதி உதவியைக் கணிசமான அளவில் பெறும் துறைகளின் வரவு செலவுக் கணக்கை மட்டுமே சரிபார்க்கும்!  . இது மத்திய, மாநில அரசுகளால் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாத தன்னாட்சி அதிகாரம் கொண்ட 58,000 க்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட மாபெரும் அமைப்பு என்பது தான் முக்கியம்!

அது தரும் அறிக்கை வாயிலாக பொதுப் பணம் ஒழுங்காக கையாளப்பட்டுள்ளதா என்ற உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும் . தவறு இருக்கிற பட்சத்தில் அரசுகள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கமாகும்!

ஆனால், அப்படித் தரப்பட்ட அறிக்கைகளை வெளிப்படுத்தாமல் அதிமுக அரசு மூடி மறைத்துள்ளது! வெளியானால் தங்கள் வண்டவாளம் வெளியே வந்துவிடும் என் பயந்துள்ளது.இதை கவர்னரும் கேள்வி கேட்கவில்லை. மத்திய அரசும் தட்டிக் கேட்கவில்லை. நமக்கு இணக்கமான ஒரு அடிமை அரசை எதற்கு கேள்விகேட்டு இக்கட்டுக்கு ஆளாக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள் போலும்! சரி ஊடகங்களாவது சி.ஏ.ஜி அறிக்கை என்னாச்சு என கேட்டிருக்கலாமே! அவங்களும் கேட்கவில்லை! அதுவும் மூன்றாண்டுகளாக இது தொடர்பான முணுமுணுப்பு கூட வரவில்லை. எதிர்கட்சியாவது இதை தூண்டி இருக்கலாம் ஏன் சட்ட சபையில் வைக்கவில்லை என்று! நல்ல வேளையாக பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் என்ற அறிவார்ந்த நிதி அமைச்சர் நமக்கு அமைந்ததால் தான் இந்த இப்போதாவது இந்த உண்மை வெளிவந்தது.

அந்த வகையில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையின் அறிக்கை சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களின் பார்வைக்கும் வைக்கப்பட்டதன் மூலம் அதிமுக அரசின் நிர்வாக சீர்க்கேட்டால் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டும் ரூ.34,374 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது   அம்பலமாகியுள்ளது.

விவசாயத்திற்கு அவசியமான நீர் மேலாண்மையில் அதிமுக அரசு படுமெத்தனமாக இருந்துள்ளது! பாசனவசதி வழங்குதல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல் மற்றும் கடல்நீர் ஊடுருவலைத் தடுப்பது போன்ற நோக்கங்களில் பெரும் பின்னடைவு என இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை அறிக்கை 2018ல் குறிப்பிடப்பட்டுள்ளது

மாநிலத்திற்குள் ஓடும் நதிகளை இணைப்பதன் மூலம் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தலாம் என கொள்கை வகுக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள 8 நதிகளை இணைக்கும் 2008ல் அன்றைய திமுக அரசால் கொண்டு வரப்பட்டது.  இதில் 2 திட்டங்களுக்கு 2008ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளதோடு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை..

மீதம் இருக்கும் 6 திட்டங்களான தாமிரபரணி- கருமேனி ஆறு நம்பியாறு இணைப்பு திட்டம்

காவிரி- அக்னி ஆறு – தெற்கு வெள்ளாறு – மணிமுத்தாறு இணைப்பு திட்டம்

பெண்ணை ஆறு – பாலாறு இணைப்பு திட்டம்

வெள்ளாறு – சுவேதா நதி – போனேரி – காவிரி இணைப்பு

சோலையாறுப்பட்டி – அக்னி ஆறு இணைப்பு

தாமிரபரணி – கடானா – சித்தாறு – உப்போடை – கல்லாறு இணைப்பு திட்டம்

ஆகிய திட்டங்கள் நில ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்தல் போன்ற ஆரம்ப நிலையிலேயே உள்ளது! 6 திட்டங்களில், 3 திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது முந்தைய அரசு எவ்வளவு தூரத்திற்கு ஒரு செயல்பாடற்ற அரசாக இருந்துள்ளது என தெரியவருகிறது.!

“அதிமுக ஆட்சியில் 2013ஆம் ஆண்டு 2018ஆம் ஆண்டு வரை கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ 14 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மத்திய மின் உற்பத்தி திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக டான்ஜெட்கோவுக்கு (TANGEDCO) கூடுதல் செலவாக ரூ 2,381.54 கோடி ஏற்பட்டுள்ளது. உரிய காலத்தில் திட்டம் நிறைவேறாததால் பற்றாக்குறையைச் சமாளிக்க மின்சாரம் வாங்கியதில் கூடுதல் செலவு ரூ.2,099.48 கோடி ஏற்பட்டுள்ளது

தகுதி இல்லாத மின் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ 493.74 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் டான்ஜெட்கோவுக்கு ரூ 349.67 கோடி இழப்பு. ஒப்புக் கொண்ட அளவில் மின்சாரத்தை வாங்காததால் டான்ஜெட்கோ கூடுதலாக அளித்த தொகை ரூ.122.8 கோடியாக உள்ளது. மின் கொள்முதல் ஒப்பந்தங்களை முறையாக புதுப்பிக்காதால் ஏற்பட்ட நஷ்டம் ரூ 39.48 கோடியாகும்.

வெளிமாநிலங்களில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தை பெறாததால் ரூ.1,055.8 கோடி நஷ்டம்! ஒப்பந்தபடி செயல்படாத நிறுவனங்களிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில் ரூ.712 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்துக்கு வந்து சேராத மின்சாரத்திற்கு பணம் கொடுத்த வகையில் ரூ 242.9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.ரூ.3 மின்சாரத்தை ரூ.5.50 க்கு முறைகேடாக வாங்கியதில் ரூ.1687 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது” என விலாவாரியாக கூறப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் 55 கோடி இழப்பு ஏற்ப்பட்டுள்ளது! இதெல்லாம் அந்த அறிக்கையின் சிறு துளிகள் தான்! இன்னும் பக்கம்,பக்கமாக உள்ளது!

ஒரு அரசாங்கமே கொள்ளையில் மூழ்கி திளைத்து இயங்கியதை துல்லியமாக காட்டும் இப்படிப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கை பற்றி விவாதிக்காமல் தினமலர் போன்ற பத்திரிகைகள்

”ஒன்றிய அரசு என்று ஏன் குறிப்பிடுகிறார்கள்..?”

”ஏன் ஜெய்ஹிந்த் சொல்லவில்லை”

”திமுக ஒரு பிரிவினை சக்தி..”

என்றெல்லாம் பக்கம்,பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time