அழிந்து கொண்டிருக்கும் நெல்மூட்டைகளும், அதிகாரப்பகிர்வின் அவசியமும்!

-நந்தகுமார் சிவா

தமிழகத்தில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நெல்கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பின்றி அழிவது வாடிக்கையாகவுள்ளது! காவிரிப் பாசன மாவட்டங்களிலும், வட மாவட்டங்களின் சில இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல்  நிலையங்களில் நெல் கொள்முதல் எந்தவித காரணமும் இல்லாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகளோடு தயாராக காத்துக் கொண்டிருக்கும் நிலையில்,  நெல்கொள்முதல் நிறுத்தப்பட்டதை அடுத்து நெல் மூட்டைகள் மழையில் வீணாவதைக் கண்டு மனம் பதறுகிறது!

இடப்பற்றாகுறை காரணமாகவே  நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் தினசரி குறைந்தது 2,500 முதல் 5,000 மூட்டைகள் வரை வருகின்றன என்பது அதிகாரிகளுக்கு புதிதல்ல! ஆனால், அதற்கேற்ப திட்டமிடல் இல்லாததால் கடந்த சில நாட்களாக  ஏகப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில், தலா 10 ஆயிரம் மூட்டைகள் முதல் 20 ஆயிரம் மூட்டைகள் வரை தேக்கமடைந்துள்ளன!

அதனால் புதிதாக நம் உழவர்களிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்முதல் செய்து வருகின்றன அரசின் நூற்றுக்கணக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்.

அஸ்திவாரம்

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம்,மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பிரதானமாக இருக்கும் நூற்றுக்கணக்கான நெல் கொள்முதல் நிலையங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு முன்னோடியாக இயங்கி வரும் பொது விநியோக முறையின் அஸ்திவாரம் என்று சொல்லலாம்.

இந்த அஸ்திவாரம் பற்றி அடிக்கடி வரும்  செய்திதான் நம்மை வேதனைக்கு உள்ளாக்குகிறது.

தொடர்கதையாகி வரும் அவலநிலை

திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய கவனிப்பு இல்லாததால் மழையில் நனைந்து கிடக்கும் நெல் மூட்டைகளைப் பற்றிய செய்தி புகைப்படங்களுடன் அடிக்கடி ஊடகங்களில் வருகின்றன!

ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாகி வரும் இந்த நிலை பற்றி நிர்வாக ரீதியாக அணுக வேண்டியுள்ளது.

தமிழகத்தில் சுமார் 1500 சொச்சம் நெல்கொள்முதல் நிலையங்கள் உள்ளன! ஆண்டுக்கு 20 லட்சம் டன்னுக்கும் அதிகமாக நெல் உற்பத்தியாகிறது! உற்பத்திக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்களில்லை. ஆகவே, நீண்ட நெடிய காத்திருப்புகள், ஈரப்பதம் உள்ளிட்ட சில காரணங்களை சொல்லி உழவர்களை திருப்பி அனுப்புதல் போன்றவை நடக்கின்றன! பல நேரங்களில் காத்திருப்பதில் உள்ள பிரச்சினைகள் காரணமாக உழவர்கள் அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு நெல்லை விற்கும் நிலைமையும் ஏற்படுகிறது. இந்த வகையில் அரசால் மொத்த நெல்மூட்டைகளில் 55 முதல் 60 சதவிகிதம் மட்டுமே கொள்முதல் செய்யமுடிகிறது.

உயர்நீதிமன்றத்தின் கேள்வி

சென்னை உயர்நீதிமன்றம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாகப் பராமரிக்கப்படாமல் மழையில் நனைந்து வரும் நெல் மூட்டைகள் பற்றி தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கில் அரசிடம் இது குறித்து அறிக்கை கேட்டிருக்கிறது!

அதற்கு பதில் தந்த புதிய அரசு விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல் மூட்டைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருக்க  விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல்  செய்யும் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில்  தெரிவித்தது. ஆனால், நிலைமையோ மிகவும் மோசமாக உள்ளது!

உழவர்கள் படும் பாடு

திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களின் இந்த நிலை குறித்து நாகப்பட்டினம் மாவட்ட விவசாயி திரு.சிவச்சந்திரனிடன் கேட்ட போது, எங்கள் ஊர் நூலகத்தின் ஒரு பகுதியில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டு பக்கத்தில் இருக்கும் திறந்த வெளியில்தான் நெல்லை கொள்முதல் செய்து அடுக்குகிறார்கள். நேற்று இரவு கூட நல்ல மழை. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மட்டுமல்லாமல் செய்யப்படாமல் காத்திருக்கும் உழவர்களின் நெல்லும் திறந்தவெளியில் அப்படியே நனைந்தது. முறையான கட்டமைப்பு இல்லாத காரணத்தால் உழவர்கள் படும் சிரமம் கொஞ்ச நஞ்சம் இல்லை, என்றார்.

இது பற்றி மேலும் ஒரு விவசாயியிடம் பேசும்போது, நாங்கள் அறுவடை செய்து எடுத்து வரும் நெல்லை கொள்முதல் நிலையங்களில் வாசலிலேயே வைத்துக் காத்திருப்போம். வாடகை வண்டியைத் திருப்பி அனுப்பிவிட்டு இறக்கு கூலி கொடுத்து விட்டு கொள்முதல் நிலையத்தின் ஒரு ஓரத்தில் எங்கள் மூட்டைகளை அடுக்கி வைப்போம். எத்தனை நாளைக்குப் பிறகு எங்கள் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்பது தெரியாது. ஒருவாரம் கூட ஆகலாம். அதுவரை வீட்டுக்கு செல்லமுடியாமல் வீதியிலேயே படுத்துறங்கி பாதுகாத்து வர வேண்டியதுதான் என்றார், ஆதங்கத்துடன்!

கூடுதல் சிக்கல்கள்

போதிய கட்டமைப்பு இல்லாதது மற்றும் நாள் கணக்கான காத்திருப்பு ஆகியவற்றோடு கூடுதலான சில சிக்கல்களும் சேர்ந்து கொள்கின்றன.

விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் சிலர் அதனை அரசு கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் கூடுதலான கமிஷன் கொடுப்பார்கள் என்பதற்காகவே பல சமயங்களில் வரிசையில் காத்திருக்கும் உழவர்களின் நெல்லை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உடனடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளின் காத்திருப்பு நீடிக்கிறது. மேலும், உள்ளூர் கட்சி பிரமுகரின் தலையீட்டிற்குப் பஞ்சம் இருப்பதில்லை.  ஆளுங்கட்சிக்குச் சாதகமாகப் பிரமுகர்கள் குறிப்பிடும் இடங்களுக்குத் திறந்தவெளி கொள்முதல் நிலையங்களை ஒவ்வொரு முறையும் மாற்றிக் கொண்டிருப்பது பல பகுதிகளில் வாடிக்கையான ஒன்று.

இவ்வாறு; வியாபாரிகள், உள்ளூர் கட்சி பிரமுகர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரின் கூட்டுச் சேர்ந்த நிர்வாக முறைகேடுகளைத் தட்டிக் கேட்க வேண்டிய உழவர் அமைப்புகளும் பல சமயங்களில் வேடிக்கை பார்த்த வண்ணமே இருக்கிறது.

உழவர்களுக்குத் தேவைப்படும் தகவல்

குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் எவ்வளவு, ஒரு நாளைக்கு எத்தனை மூட்டைகள் கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு வந்தால் விவசாயிகளைக் காத்திருக்க வைக்காமல் பணிகளைச் சிறப்பாக முடிக்க முடியும் என்பது குறித்த தகவல்கள் அனைத்தும் ஆண்டுக்கு ஆண்டு கொள்முதல் செய்யும் அரசுக்கு  தெரியும். அதற்கேற்ப திட்டமிடாமல் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளை அலைகழிக்கிறது அரசாங்கம்! வட்ட அலுவலர்கள் உழவர்களோடு இணைந்து செயல்பரும் போது இந்த தவறுகள் களையப்படும்.

வேண்டும், நிரந்தர கொள்முதல் நிலையங்கள்!

ஒவ்வொரு ஊராட்சியிலும் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர குடோன் நிச்சயமாக ஏற்படுத்தமுடியும். எடை பார்த்து வாங்கும் தற்காலிக ஊழியர்கள் ஒரு மூட்டைக்கு உழவரிடமிருந்து 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை லஞ்சம் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. உழவர் சங்கங்களும், மக்கள் குழுக்களும் இதனை வேடிக்கை பார்க்காமல் தடுத்து நிறுத்து வேண்டும். இந்த வேலையை தன்னார்வத் தொண்டாக செய்ய உழவர்களில் சிலரே தயாராக உள்ளனர். ஆகவே, உள்ளூர் மக்களின் பங்களிப்பு தொகை மற்றும் அரசின் பங்களிப்பு தொகை ஆகியவற்றைக் கொண்டு நிச்சயமாக ஒவ்வொரு ஊராட்சியிலும் நிரந்தர கொள்முதல் நிலையங்களை கட்டி அவர்களையே நிர்வகிக்க செய்யவும் வேண்டும்!

பொறுப்பற்ற நிர்வாகமே காரணம்! -சவுண்டையா

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் தேங்குவது, வீணாவது குறித்து தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் முன்னாள் உயர் அதிகாரியான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சவுண்டையா அவர்களிடம் பேசிய போது, இது முற்றிலும் நிர்வாகத் திறமையின்மையால் ஏற்படுவதேயாகும். ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது, எவ்வளவு விளையும்,எப்போது கொள்முதலுக்கு வரும் என்பதெல்லாம் அரசுக்கு நன்றாகத் தெரியும்.அதற்கேற்ப நெல்கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒன்றும் சிரமான காரியமல்ல. எந்த ஒரு பகுதியில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் வீணானது என்று தகவல் வந்தாலும் அங்கு உடனே அதிகாரிகள் குழுவை அனுப்பி தவறுகளைக் கண்டறிந்து மீண்டும் அவ்வாறு நடக்காமல் செய்வது நிர்வாகத்தில் இருப்பவர்களின் பொறுப்பாகும்! அது தற்போது முறையாக நடக்கிறதா எனத் தெரியவில்லை என்றார்.

கட்டுரையாளர்; நந்தகுமார் சிவா

பொதுச் செயலர், தன்னாட்சி இயக்கம்

மின்னஞ்சல் : [email protected]

செல்பேசி; 90032-32058

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time