‘அஜ்னபி’ : பளபளக்கும் அரபு நாடுகளில் பரிதவிக்கும் தமிழர்கள்!

-பீட்டர் துரைராஜ்

கடும் உழைப்பால் ஆயிரக்கணக்கில் அந்நியச் செலவாணியை ஈட்டித் தரும் இந்த எளிய மனிதர்கள் அரபு நாடுகளில் படும் அல்லல்கள் அசாதாரணமானது! வயிற்றுப்பாட்டுக்காக வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் பலதப்பட்ட சுவாரஷ்யமான அனுபவங்கள், அரபு நாட்டவர்களின் விசித்திரமான குணாம்சங்கள், பல நாடுகளில் இருந்து சென்று சம்பாதிப்பவர்கள் சந்திக்க நேரும் சவால்கள்..எனப் பல விஷயங்கள் இந்த நாவலில் மிக தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

‘கொட்டிக்கிடக்குது சௌதியிலே’ என்ற ஆடியோ கேசட் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. துபாய், சௌதி போன்ற நாடுகளில் பணிபுரிபவர்களின்  வாழ்க்கையை  அதில் படம் போல காட்டியிருப்பார்கள். ‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்ற சோகப் பாடலைக் கேட்டால் இப்போதும் எனக்கு அழுகை வரும். அந்த வரிசையில் மீரான் மைதீன் எழுதிய ‘அஜ்னபி’  நாவல், தமிழ் இலக்கிய உலகம் இதுவரை பதிவு செய்யாத, வளைகுடா நாடுகளில் பணிபுரியும் மக்களின் வாழ்வியலைச்  சொல்கிறது; வலிகளை, மனக் கிலேசங்களைச்  சுவாரசியமாகச் சொல்லுகிறது.

முகமது ஃபைசல் என்ற  இளைஞன் ஜெட்டா, தமாம், ஷரஃபியா, அல் பலது போன்ற நகரங்களில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் இருக்கிறான். நாஞ்சில் நாட்டுப் பகுதியைச் சேர்ந்த ஃபைசல்  தன் நாட்டிற்குத்  திரும்ப வேண்டும். அவனுடைய பாஸ்போர்ட் அரபியிடம் மாட்டிக் கொண்டது. அவனிடம் இருந்து தப்பி ஏசி கடை, சூப் கடை, டைலர் கடை என ஏதோ வேலை செய்து வாழ்க்கையை ஓட்டுகிறான். இதற்கிடையில் ஊரில், ஜாஸ்மீன் என்ற  பெண்ணை திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, பெண்ணின் புகைப்படத்தை, அவனுடைய வாப்பா அனுப்பி வைக்கிறார். அந்தப் புகைப்படத்தோடு வாழ்க்கையை ஓட்டுகிறான்.

அஜ்னபி’ என்பது அரபு நாடுகளில்  பணிபுரியும் பாகிஸ்தானி, ஆப்கானிஸ்தானி, பங்களாதேஷி, ஸ்ரீலங்கன், சோமாலி, தக்ரோனிகள் (ஆப்பிரிக்காகாரர்கள்), சோமாலி, மிஷிரி(எகிப்து), சூடானியர்களைக் குறிக்கும் அரபுச்சொல்.அதற்கு அந்நியர் என்ற   பொருள்.இது அஜ்னபிகளைப் பற்றிய நாவல் என்று  நாம் சுருக்கமாகச் சொல்லலாம். அஜ்னபிகள் இல்லையென்றால் அரபிகளின் பொருளாதாரம் நிலைகுலைந்துவிடும். ‘அஜ்னபிகள் இல்லாத நாடுகளில் பலவிதமான உள்நாட்டுப் பிரச்சினைகள் உண்டு். நாகர்கோவிலைச் சார்ந்த மீரான் மைதீன், சிலகாலம் அரபுநாட்டில் பணிபுரிந்தவர். அந்த அனுபவங்களின் வழியே இந்த நாவலைப் படைத்துள்ளார்  என்று கூறலாம்.

அவர்கள் வியாழக்கிழமை இரவுகளில்  ஒன்று கூடுகிறார்கள். சீட்டு ஆடுகிறார்கள்; குடிக்கிறார்கள்; சினிமாவிற்கு என்ன கதை எழுதுதலாம் என பேசுகிறார்கள்; ரஜினிகாந்தை பள்ளிவாசல் மோதினாராக நடிக்க வைக்கிறார்கள்; 37 வது மாடியிலிருந்து நிலாவைப் பிடிக்கிறார்கள்; ஊரிலிருந்து வந்தக் கடிதங்களை வாங்கிச் செல்கிறார்கள்; நீலப்படம் பார்க்கிறார்கள்; அரசியல் பேசுகிறார்கள் (அதாவது கலைஞரைப் புகழ்கிறார்கள்); குரங்கு டோக்கன் கதை கேட்கிறார்கள். இப்படி பல சம்பவங்களை உயிரோட்டமாக நமக்கு காட்டுகிறார் நாவலாசிரியர்.

கதையின் போக்கில் அந்நாட்டு அரசியல், அரபிகளின் உளவியல், அதிகார நிலைகள், விசா, தொழுகை என பலவும் வருகின்றன. ஒரு தேர்ந்த பத்திரிகையாளனைப் போல, எல்லா சம்பவங்களையும் கோர்த்து கதையாக சொல்லுகிறார் மைதீன். பல அரபிச் சொற்கள் கதையில் இயல்பாக வருகின்றன. அதன் பொருள் தெரியாததால்,  புரிந்துகொள்ளச்  சற்று சிரமம் ஏற்படுகிறது.

வருடத்திற்கு ஒருமுறை ஊருக்கு போனாலும், அங்கு நாடகம் போடும் குமரி இக்பால் ஓர் உன்னதமான பாத்திரம். பேசிக் கொண்டே இருக்கும், குமரி இக்பால் போன்றவர்கள்,  ஃபைசல் போன்றோரின் ஊன்றுகோலாக இருக்கிறார்கள். தெரிந்தும், தெரியாமலும் அன்பை பொழிகிறார்கள். ஜாஸ்மீனை முன் வைத்து கிண்டல் செய்யும் அவர்கள்தான், ஊரில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டு அவனை ஆற்றுப்படுத்துகிறார்கள். சிறு பிராயத்தில் இருக்கும் ஃபைசலை கைவிட யாரும் தயாராக இல்லை. லிமோசின் (வாடகைக்கார்) ஓட்டும் பிரபுவிடம்தான் தனது அந்தரங்கத்தை ஃபைசலால் பகிர்ந்து கொள்ள முடிகிறது (இங்கு மதம் முக்கியமல்ல).இந்த  மனிதம்தான் நாவல் முழுதும் இழையோடும் ஆதார சுருதி.

எண்பத்து ஆறு  நாள் மட்டுமே அரேபியாவில் இருக்கும் கருத்தான் காதர் வெகு சுவாரசியமான பாத்திரம். குடிபோதையால்  சிறைக்குச் செல்லும் இவன் மூலமாக, அந்நாட்டு குற்றவியல் நடைமுறையை நாம்  ஓரளவு புரிந்துகொள்ளமுடிகிறது. சிறையில் 12 நாட்கள் இருந்தும் தகவல் தெரியவில்லை. இவனுக்கு விசா தருவதாகச் சொல்லி வரவழைத்த மம்மனிபாவிற்கு விசா, மேசைக்காசு(சீட்டு), துணைப்பலகாரம் என பலவழிகளில் வருமானம் வருகிறது.

அரபிச் சிறுவர்களுக்கு, அஜ்னபிக்கள் மீது பாட்டில், கல், குப்பி்வீசுவது ஒரு பொழுதுபோக்கு. சாவுக்கு  கூட விடுப்பு அளிக்காத நாசரின் கபில்(முதலாளி) ஒரு ரகம்; பூஃபியா(டீக்கடை) மூலம் நல்ல வருமானத்தைப் பெரும் மம்மலிக்கு கிடைத்துள்ள கபில் வேறு ரகம். மம்மிலியை அவனுடைய கபிலான ஹைபா தன்னுடைய சகோதரனாக பாவிக்கிறாள்.

மீரான் மைதீன் கூர்ந்த அரசியல் பார்வை உள்ளவர். ‘இன்ஷா அல்லா’ என்று நாவலை முடித்தாலும்,  மக்களை மையப்படுத்திதான் நாவலை நகர்த்துகிறார்.  ‘இவர்கள்(அரபிக்கள்) பேசுவதற்கு அரசியல் கிடையாது. சினிமா கிடையாது. சீரியல் கூட எகிப்து, லெபனானில் இருந்து வரக்கூடியதுதான்’ என்கிறார். அரபிகளுக்கு புரட்சி பயம்; விஞ்ஞானத்தைக் கண்டு பயம் என்கிறார். கலை, இசை, ஊடகம் இவற்றை இஸ்லாம் சமூகம் வசப்படுத்திக் கொள்ளவில்லை. எனவே வரும் அவதூறுகளுக்கு  பதில் சொல்ல முடியவில்லை என்கிறார்.

இரண்டு ரியால் தனியார் வாகனத்தில் பயணிக்கும், அனுமதி இல்லாத அஜ்னபிகளைக் காவலர்கள்  கைது செய்கிறார்கள். ஆனால் ஊருக்குப் போக வேண்டும் என்பதற்காகவே தெரிந்தே மாட்டிக் கொண்ட ஃபைசலை, பச்சாதாபம் பார்த்து  விட்டுவிடுகிறார்கள். தன்னுடைய முதல் முதலாளியான துவைஜியால் பட்ட கஷ்டத்தை அவன் மறக்கவில்லை. அங்கிருந்த இந்தோனேசியக்காரியான அரூஷாவின் காதலையும் ஃபைசல் மறக்கவில்லை. கதாப்பாத்திரங்கள் முன்னும், பின்னும் தொடர்ந்து வருகின்றன. துவைஜியிடமிருந்து தப்பித்துப் போகும் பிலிப்பைனி,  இறுதிநாளில் அவனைத் தழுவி முத்தமிடுவதில் வெளிப்படுவது அன்புதானே ! சூப் கடையில் ஃபைசலை  கசக்கிப் பிழிந்து வேலை வாங்குகிறான் ஒரு பாகிஸ்தானி. ஆனால் வியர்வை அடங்கும் முன்னரே (நபி சொன்னதுபோல), எழுபது ரியாலை கூலியாக அன்றாடம் தருகிறான். சூப் வியாபாரியான பாகிஸ்தானி என்னதான் தர்க்கம் செய்தாலும், அவனை  ஃபைசலால் மறக்க முடியுமா !

அரபுதேசம் அவனுக்கு பலவிதமான அனுபவங்களைத் தந்துள்ளது. நல்லவிதமாக ஊருக்குப் போய்விடுவானா! பதட்டம் வாசகர்களுக்கும் வருகிறது. மீண்டும் உழைக்க அங்கு வருவானா ?  வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்லாதவர்களை முத்தவ்வாக்கள் (மதச் சட்டங்களை அமலாக்குபவர்கள்)  தண்டிக்கலாம். ஆனால், அமெரிக்கர்கள் விஷயத்தில் அரபிகள் அதே வேகத்தை  காட்டுவார்களா ?

இந்த நாவலுக்கு ஒளிப்பதிவாளர் செழியன் முன்னுரை எழுதியிருக்கிறார். இதனை திரைப்படமாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வெற்றிமாறன் இதனை இயக்கப் போகிறார்;இயக்கட்டும். இதிலிருந்து பல படங்களை எடுக்க முடியும்.

காலச்சுவடு பதிப்பகம்

பக்கங்கள்; 335, விலை; ரூ.180 / ( மலிவுப் பதிப்பு )

தொடர்பு எண் ; 94434 50044.

 

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time