தடுப்பூசி; சர்வதேச நிறுவனங்களின் சந்தைக்காடாகும் இந்தியா!

-சாவித்திரி கண்ணன்

எங்கெங்கும் தடுப்பூசி பற்றாகுறை! பெருந்தொற்று காலத்திலும் தனியார் நிறுவனங்கள் வளம் பெற வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கை கொண்ட ஒன்றிய அரசு! சீரம், பாரத் பயோடெக் ஆகிய இரு தனியார் நிறுவனங்களைக் கொண்டு தடுப்பூசி தேவைகளை சமாளிக்க முடியவில்லை. அதே சமயம் பொதுத் துறை நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரிக்க அனுமதி மறுப்பு! அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் நிறுவன தடுப்பூசிகளுக்கு தாரள அனுமதி..! இந்திய தடுப்பூசி சந்தையில் என்ன நடக்கிறது..?

கொரானா தடுப்பை கையாளும் விதத்தில் குளறுபடிகளின் உச்சத்தை தொட்டுவிட்டது இந்திய அரசு! தடுப்பூசி நிர்வாகத்திலோ ஏகத்துக்கும் தள்ளாடுகிறது! தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று சொல்லி மக்களை உசுப்பேற்றிவிட்டார்கள். தடுப்பூசி போடாவிட்டால் வேலைக்கு வராதே போன்ற நிர்பந்தங்கள் வேறு! சரி எதுக்குடா சாமி வம்பு போட்டுவிடுவோமே..என்று மருத்துவமனை போனால் பற்றாகுறை ‘’இன்று போய் நாளை வா’’ என்கிறார்கள்!

ஒவ்வொரு நாளும் கிலோமீட்டர் கணக்கில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் அரசு மருத்துவமனைகளின் முன்பு காத்துக் கிடக்கிறார்கள்! பல மணிநேர காத்திருப்புக்கு பிறகு ஸ்டாக் தீர்ந்துவிட்டது என்ற அறிவிப்பால் மக்கள் ஏமாந்து, கோபப்பட்டு பல இடங்களில் போராட்டங்கள் கூட நடந்துள்ளன.

உண்மை நிலவரம் என்ன என்பதை முதல்வர் ஸ்டாலின் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்துவிட்டார்! மிகக் குறைந்த பயன்பாடே உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அதிக தடுப்பூசிகளை அள்ளிக் கொடுக்கும் ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கோ கொஞ்சமாக கிள்ளிக் கொடுத்து சமாளித்து வருகிறது.

‘’தமிழகத்தில் இது வரை பயன்படுத்தப்பட்ட ஒரு கோடியே 43 லட்சம் தடுப்பூசியில் தனியார் மருத்துவமனைகளில் வெறும் ஆறரை லட்சம் தடுப்பூசிகளையே கையாண்டுள்ளனர். ஆக, தனியார் மருத்துவமனைகளின் பயன்பாடு வெறும் 4.5 சதவீதமாக இருக்கும் போது, தனியாருக்கு ஏன் 25% சதவிகித தடுப்பூசிகளை கூடுதலாக கொடுக்கிறீர்கள்’’ என ஸ்டாலின் கேட்டுள்ளார்!

‘’அரசு மருத்துவனைகள் ஒரு நாளுக்கான தடுப்பூசிகளை மட்டுமே கைவசம் வைத்துக் கொண்டு திணறும் போது, தனியார் மருத்துவமனைகளோ ஒரு மாதத்திற்கான தடுப்பூசிகளை வைத்துள்ளன.’’என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதை பார்க்கும் போது அரசு மருத்துவமனை வருகின்றவர்களை வலிந்து தனியார் மருத்துவமனைகளுக்கு தள்ளும் சூழ்ச்சியை மத்திய அரசு செய்கிறதோ என நமக்கு சந்தேகம் வருகின்றது!

எனவே, தான் மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மக்கள் தொகை அடிப்படையில் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும்,அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி  ஒதுக்கீடு 75 சதவீதமாக இருப்பதை 90 சதவீதமாகவும்,  தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி  ஒதுக்கீடு 25 சதவீதம் என்பதை, 10 சதவீதமாகவும் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். ஆனால், இதற்கு மத்திய அரசு இசைந்து கொடுக்குமா என்பது சந்தேகம் தான்!

ஏனென்றால், தனியார் நிறுவன நலன்களை காப்பாற்றுவதே தலையாய கடமையாகக் கொண்டுள்ளது ஒன்றிய பாஜக அரசு! தனியார்கள் மட்டுமே தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதிலும் பிடிவாதம் காட்டி வருகிறது! சுமார் 800 கோடிகளுக்கும் அதிகமாக செலவு செய்து சகல வசதிகளுடன் தயாராக இருக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் தமிழக அரசு உற்பத்தியை தொடங்க விருப்பம் தெரிவித்தது. ஒரு வாரத்தில் பதில் சொல்வதாக சொன்ன ஒன்றிய பாஜக அரசு., ஒன்றரை மாதங்களாகியும் பதில் சொல்லாமல் இழுத்தடிக்கிறது. இது மட்டுமின்றி இதே போல குன்னூர்,கிண்டி உள்ளிட்ட இந்தியாவின் ஏழு இடங்களில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் கைகளையும் மத்திய அரசு கட்டிப் போட்டுள்ளது. இதனால் போதுமான அளவு தடுப்பூசிகள் போடமுடியாத நெருக்கடிகளை மாநில அரசுகள் சந்திக்கின்றன!

தடுப்பூசி போட ஆரம்பித்து 163 நாட்களைக் கடந்துள்ள நிலையில் இது வரை இந்தியாவில் முதல் கட்ட தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை 27 கோடியே 27 லட்சமாகும்! இதில் இரண்டாம் கட்ட தடுப்பூசியை எடுத்துக் கொள்ள முடிந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 5 கோடியே  84 லட்சமாகும். ஆக மொத்தமாக பார்க்கும் போது, முழுமையான தடுப்பூசி கடமையை செய்யமுடிந்தவர்கள் ஆறு கோடிக்கும் குறைவாகவே உள்ளனர்! கிட்டதட்ட அரை ஆண்டை கடந்த நிலையில் ஒரு மாபெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் இவ்வளவு தான் முடிந்துள்ளது என்றால், இவர்களின் நிர்வாக லட்சணத்தில் அனைத்து மக்களுக்குமான இலக்கை அடைய பற்பல ஆண்டுகள் தேவைப்படும் என்பதே நிதர்சனமாகும்! இந்த யதார்த்தம் தெரியவந்த போதும் கூட, பொதுத் துறை நிறுவனங்களின் கட்டப்பட்ட கைகளை விடுவிக்கமாட்டேன் என்பது தான் ஒன்றிய பாஜக அரசின் நிலைபாடாக உள்ளது.

ஆனால், இப்படியே போனால், தடுப்பூசியின் ஆற்றல் எட்டுமாதத்திற்குள் முடிந்த நிலையில், அடுத்தகட்ட தடுப்பூசிக்காக மக்கள் வரிசை கட்ட நேரிடும்! ஆக, தடுப்பூசிகளை வாங்கும் செலவுகள், அதற்கான  வணிகம், அதை செலுத்துவதற்கான மாபெரும் மனித உழைப்பு என்பதாகவே நாட்கள் நகருமா தெரியவில்லை.

இதற்கிடையில் இன்று அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர சிப்லா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது! அமெரிக்காவின் பைசரும் பயன்பாட்டு வரலாம் என சொல்லப்படுகிறது. இதை ஏன் மத்திய அரசோ, மாநில அரசோ நேரடியாக அந்த நிறுவனத்திடமிருந்து வாங்க கூடாது? எதற்கு ஒரு தனியார் இடைத் தரகரை அனுமதிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. சென்ற மாதம் தமிழ்நாடு அரசே நேரடியாக கொள்முதல் செய்வதாக அறிவித்து பின் அமைதியானது நினைவுக்கு வருகிறது.

ஏற்கனவே ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுபூசியை இங்கே பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்! ரஷ்யாவில் இந்த ,ஸ்புட்னிக் தடுப்பூசியால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது என கடும் விமர்சனத்திற்கு உள்ளானது!

பிரிட்டனின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வர இன்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதுவும் நடைமுறைக்கு வந்தால் பல்வேறு அணுகுமுறைகள் கொண்டு உருவாக்கப்பட்ட பலதரப்பட்ட தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ள ஒரே நாடாக இந்தியா தான் இருக்கும் என தோன்றுகிறது!

இப்படி வெளிநாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்கள் கேட்டவுடனே இந்திய சந்தையை திறந்துவிட தயாராக இருக்கும் மத்திய அரசு தமிழக அரசு கேட்டும் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்படுத்த ஏன் அனுமதி மறுக்க வேண்டும்?

சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தைக்கான வேட்டைக்காடாக இந்தியாவை அடமானம் வைக்கிறது ஒன்றிய அரசு! ஆக, பெருந்தொற்று காலத்தை பெரும் கொள்ளையர்களுக்கான வாய்ப்பாக்குவது தான் ஒரு மக்கள் நல அரசு செய்யும் காரியமா..? நம்முடைய ஆற்றல், நம்முடை அறிவு, நம்முடைய உழைப்பு எல்லாவற்றையும் முடக்கி வைத்து, நம்முடைய உடலையும், உயிரையும் தனியார் நிறுவனங்களுக்கும், அந்நிய நிறுவனங்களுக்கும் விலை பேசி ஆதாயம் அடைவதற்கு தான் நாம் இவர்களை ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுத்தோமா..?

நம்மை அடிமைப்படுத்தி தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஒன்றிய பாஜக அரசு இயங்குகிறது என்பது பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time