கண்ணீரை வெளிப்படுத்த நீதிமன்றத்தின் அனுமதி வேண்டுமா..?

-சாவித்திரி கண்ணன்

இதற்கே இப்படி அரண்டு போனால் எப்படி?

என்ன நடந்துவிட்டது என்று பாஜகவினர் பதைபதைத்து நீதிமன்றம் சென்றனர்..?

நீட் தேர்வால் பாதிப்பே கிடையாதாம்!

பாதிப்பே இல்லை என்றால், ஏன் நீங்கள் பாய்ந்து தடை கேட்க வருகிறீர்கள்..?

ஏழை எளிய மாணவர்களுக்கு இதில் என்ன பாதிப்பு? என்று ஆராய்ந்து உண்மை சொல்வதற்கு தானே நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ளனர். பாதிப்பே இல்லை என்று நீங்கள் நீதிபதி குழுவை சந்தித்து விளக்கம் சொல்லுங்கள் அல்லது விரிவாக மனு கொடுங்கள். அதைத் தானே செய்ய வேண்டும்!

கடந்த சில நாட்களாக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட குழுவை நோக்கித் தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் கவனமும் சென்றுள்ளது! இந்தக் குழுவினரை பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் ,கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் சந்தித்து பல தரப்பட்ட தரவுகளை தந்து கொண்டுள்ளனர்.. இதுவரையில் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து தரவுகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் தரவுகளைக் கொடுங்கள் என நடிகர் சூர்யா போன்றவர்கள் களம் இறங்கினர்.

பாதிப்பே இல்லையென்றால் இவ்வளவு பெருந்திரளான மக்கள் இதில் ஈடுபாடு காட்டி இருப்பார்களா..?

ஏற்கனவே நீட் தேர்வின் பாதிப்பால் தானே சுமார் அனிதா உள்ளிட்ட 14 மாணவர்கள் தமிழகத்தில் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்! அந்த நீட்டுக்கு எதிராக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பொங்கி எழுந்து போராட்டங்கள் நடந்துள்ளன! இது உலகறிந்த உண்மை தானே!

நல்லவேளையாக கொரொனா வருவதற்கு முன்னால் அவர்கள் உயிர் மாய்த்துக் கொண்டனர். இல்லையென்றால், அவர்கள் கொரொனாவில் தான் செத்தார்கள் என்று வாதம் வைத்திருப்பீர்கள். காஞ்சி  வரதராஜ பெருமாள் கோயிலில் சங்கரராமன் வெட்டிக் கொல்லப்பட்டார்! ஆனால் அவர் சாவுக்கு யாருமே காரணமில்லை என வழக்கு முடித்துவைக்கப்பட்டதையும் நாம் பார்த்திருக்கிறோம் தானே!

`தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்தினால் அதற்கான மாற்று வழி என்ன?’ என்பது குறித்து ஆராய்வதற்கான ஆலோசனைகளை இன்னும் ஒரு மாதத்துக்குள் ஏ.கே.ராஜன் குழு அளிக்க உள்ள நிலையில், உண்மைகள் உலகறிய வெளியே தெரிந்துவிடக் கூடாது என்ற பதைபதைப்பு தான் பாஜகவினரை கோர்ட் படி ஏற வைத்துள்ளது. ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரான அணுகுமுறையாக –  குறுக்கு வழியைக் கையாண்டு – மக்களின் பாதிப்புகள் கூட வெளியில் தெரியாமல் முடக்க வேண்டும் என நினைக்கிறார்கள்! ஏ.கே.ராஜன் குழுவினரை நியமித்த அரசாணைக்கு தடை கோரி பா.ஜ.க சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியதே முதலில் அபத்தமாகும்!

இந்தக் குழு என்பது தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க ஏற்படுத்தப்பட்ட குழு தானே தவிர உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து போடப்பட்டதல்ல. எங்கள் பாதிப்புகளை கொஞ்சம் ஏறெடுத்துப் பாருங்கள் என முறையிடுவது தான் நோக்கம். ஜனநாயகத்தில் இதற்கு சுதந்திரம் உண்டா இல்லையா..?

நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது நாடு முழுவதற்கும் பொதுவானது. என்பது ஜல்லிக்கட்டு விஷயத்தில் மாற்றிக் கொள்ளப்பட்டதா இல்லையா..? இந்தியா என்ற ஒன்றியத்தில் பலதரப்பட்ட கலாச்சாரம் கொண்ட மக்கள் வாழும் போது, ஒற்றுமையின் அவசியம் கருதி ஒரு பிரதேச மக்கள் ஒன்றை ஏற்க மறுக்கிறார்கள் என்றால், அதை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதே குற்றமாகாது. மக்கள் அதற்காகத் தான் ஒரு ஆட்சி மாற்றத்தையே மாநிலத்தில் உருவாக்கியுள்ளனர். தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் இதில் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தி உள்ளன!

மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்து என்று சொல்லி 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. ஆனால், அப்படி தரத்தை உயர்த்துவதற்காக இல்லாமல் தனியார் கல்லூரிகள் மிக அதிக கட்டணம் பெறுவதை சட்டபூர்வமாக்கவே அது அமைக்கப்பட்டுள்ளது என்பதும், அதில் மிக கேவலமான மார்க் வாங்கியவர்கள் பணம் இருந்தால் வாய்ப்பு பெறலாம் என்பதும் உறுதியாகியுள்ளதே! இப்படி கோடிக்கணக்கில் பணம் தந்து மருத்துவம் கற்று வருவதை ஊக்கப்படுத்த ஒரு திட்டம் போட்டு, சட்டமாக்கினால் அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் சாத்தியமில்லை.

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வால் பாதிப்பு என்பதால் தானே அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாக 7.5% இட ஒதுக்கீடு தேவைப்பட்டது! 7.5% சதவிகிதத்தை எதிர்க்கும் தைரியம் பாஜகவிற்கு இருந்தால் அதையும் எதிர்த்து கோர்ட்டுக்கு போக வேண்டியது தானே!

மக்கள் மன்றம் நீட்டிற்கு எதிராக இருந்தால் அதை மண்டியிட்டு காது கொடுத்து கேட்க வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருக்கிறது! மக்களின் குரலை முழுமையாக தொகுத்து வழங்க மட்டுமே நீதிபதி ராஜன் குழு அமைக்கப்பட்டது! இதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டி உள்ளது…? கண்ணீரையும்,கதறலையும் வெளிப்படுத்த  நீதிமன்றத்தின் அனுமதி தேவையா..?  மக்கள் குரலையே ஒலிக்கவிடாமல் நசுக்குவேன் என்பதும், அதற்கு நீதிமன்றத்தையே துணைக்கழைப்பதும் எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை!

தமிழ் நாட்டில் அதிமுகவின் முதுகில் ஏறி நான்கு சட்டமன்ற இடங்களை எட்டிப்பறித்துள்ள பாஜக இது போன்ற மக்கள் விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த முறை கண்ணுக்கே தெரியாமல் காணாமல் போய்விடும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time