எளிய மனிதர்கள் வாழ்வியலை ஆவணப்படுத்திய பத்திரிகையாளர் சாய்நாத்!

-சாவித்திரி கண்ணன்

பத்திரிகை பணியை மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டமாக வைத்துக் கொள்பவர்கள் மிகச் சிலரே! அவர்களில் முக்கியமானவர் பி.சாய்நாத்! எளிய மனிதர்களின் பாடுகளை சொல்வதற்கும், கிராமப்புற ஏழை எளிய விவசாயிகள் வாழ்க்கையை பதிவு செய்யவும், மூலை முடுக்கெல்லாம் பயணித்து எழுதியுள்ளார்! பரபரப்பு, மலினமான ரசனைகள்,அரசியல் சார்பு நிலை,லாப நோக்கம் ஆகிய அம்சங்களாக பத்திரிகைதுறை வீழ்ந்துபட்டுள்ள நிலையில் சாய்நாத் போன்ற முன்னோடிகளே இன்று நமக்கு நம்பிக்கை ஊட்டுகின்றனர். தற்போது ஜப்பான் நாட்டின் சர்வதேச விருதான ஃபுகுவோகா கிராண்ட் விருதுக்கு தேர்வாகி உள்ளார் பி.சாய்நாத்!

தற்போது 64 வயதாகும் பலகும்மி சாய்நாத் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட சென்னைவாசி. இந்தியாவின் ஜனாதிபதியான வி.வி.கிரி இவரது தாத்தா! அந்த வகையில் ஒரு வசதியான மேல்தட்டு குடும்பத்தில் பிறந்தவர் லயோலா கல்லூரியிலும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்திலும் பயின்றார்! படித்தது வரலாறு. பிரபல வரலாற்று ஆசிரியர் ரொமிலா தப்பாரின் மாணவர் என்பது கவனத்திற்கு உரியது.

முதலில் யு.என்.ஐயில் நிருபராகத் தான் பத்திரிகை பணியை ஆரம்பித்தார். பிறகு பிளிட்ஸ் (Blitz) என்ற ஆங்கில வார பத்திரிகையில் வேலை பார்த்தார்.

ஆனால், 1990 களுக்கு பிறகு தான் தன் இதழியல் பணியை அர்த்தமுள்ளதாக்குகிறார் சாய்நாத். அதற்கு முக்கிய காரணம் இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தான் இந்தியா தாரளமயம், உலகமயப் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டு நிறம் மாறத் தொடங்குகிறது.

1990 களில் இவர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு காலம்னிஸ்டாக எழுதும் வாய்ப்பு பெற்ற போது பலரது கவனத்தையும் பெற்றார். இந்திய கிராமங்களில் விவசாயிகள் படும் துயரங்கள் ,விவசாயத்தின் வீழ்ச்சிகள்,கிராபுற பொருளாதார சரிவு,சிறு,குறுந்தொழில்களின் அழிவு,வறட்சி மற்றும் பேரிடர் காலங்களில் விவசாயிகள் சந்திக்கும்பிரச்சினைகள் ஆகியவற்றை தன் எழுத்தில் கவனப்படுத்தினார்.அப்போது தான் இந்திய கிராமங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் ஆரம்பித்தன! அதை உலக அளவில் கவனம் பெற வைத்தார். அப்போது கூட கிராமத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயக் கூலியான ஏராளமான பெண்களை விவசாயிகள் பட்டியலில் அரசாங்கம் சேர்ப்பதில்லை என சுட்டிக் காட்டினார்.

விவசாயம் குறித்து நான் அதிகமாக எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் தான் சாய்நாத் கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. எளிய மக்கள் பால் அவர் காட்டும் அக்கறை உண்மையானது. தி இந்து ஆங்கில பத்திரிகையிலும் இவர் பத்தாண்டுகாலம் பணிபுரிந்தார். ஆனால், ஏதோ கருத்து வேறுபாட்டால் 2014 ல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.அடிப்படையில் இவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே தான் அவர் அரசாங்கம் தரும் எந்த விருதுகளையும், பரிசுகளையும் ஏற்பதில்லை என்பதில் உறுதிபாட்டுடன் இருந்தார். ஒரு பத்ம ஸ்ரீ விருது வாங்கிவிட்டால், பிறகு அரசாங்கத்தை நாம் நேர்மையாக விமர்சிக்கமுடியுமா..? என்பதை உத்தேசித்தே அவர் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்.

இந்தியாவின் குறுக்கும், நெடுக்குமாக பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணப்பட்டு பலதரப்பட்ட எளிய மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தியது தான் இவரது சாதனைகளில் முக்கியமானது. டெல்லியில் சுமார் இரண்டு லட்சம் ஜார்கண்ட் மாநில விவசாயக் கூலி பெண்கள் வீட்டுவேலை செய்து பிழைக்க நேர்ந்ததை பற்றி உருக்கமாக விவரித்தார். பொருளாதார சமமின்மை, உணவு நெருக்கடி, எளிய மனிதர்கள் வேலை தேடி புலம் பெயரும் அவலங்கள் ஆகிவற்றை சலிக்காமல் எழுதி வந்தார்! ஒவ்வொரு நாளும் ஆயிரமாயிரம் விவசாயக் குடும்பங்கள் விவசாயம் பொய்த்து நகரங்களை நோக்கி பயணிப்பதை யாருமே பொருட்படுத்தவில்லையே என வருந்தினார்.

பத்திரிகைகள் தேவையற்ற விவகாரங்களுக்கு தான் முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால்,தேவைப்படும் விவகாரங்களில் மிக அரிதாகவே கவனம் கொள்கின்றனர் என்றார்.

தற்போது நமது ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண்சட்டங்கள் பற்றி துல்லியமாக மதிப்பீடு செய்து இவர் வேளாண் சட்டமும், உணவு பாதுகாப்பும் என்ற ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார். அந்த புத்தகத்தை கமலாலயன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.பாரதி புத்தகலாயம் வெளியிட்டுள்ளது.

2014ம் ஆண்டில் இருந்து ‘கிராமப்புற இந்தியா மக்களை குறித்த தகவல் பெட்டகம்’ என்ற அர்த்தத்தில் ‘People’s Archive of Rural India (PARI)’-ஐ என்ற இணைய ஊடகத்தை நடத்தி வருகிறார். இதில் கிராமபுற கலைஞர்கள், தொழில் விற்பன்னர்கள் ஆகியோர் குறித்த மிக அற்புதமான,அரிய தகவல்களை  தந்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே மகசேசே விருது, ஐரோப்பிய ஒன்றியத்தின் லொரன்சோ நடாலி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர் சாய்நாத். ,தற்போது ஜப்பானின் ஃபுகுவோகா பரிசின் உயரிய பரிசு பெறுவதற்கு பொருத்தமானவரே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time