சினிமாவை சிறைபடுத்த ஒரு சட்ட மசோதா..!

-சாவித்திரி கண்ணன்

சினிமாவையும் விட்டு வைக்கவில்லை பாஜக அரசு! இனிமேல் அரசியல் பேசும் சினிமாக்களையோ.., விழிப்புணர்வு தரும் சினிமாக்களையோ கற்பனை கூட செய்யமுடியாது! அப்படி ஒரு Cinematograph Act ஐ பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. எத்தனை திரைப் படைப்பாளிகளுக்கு இதை எதிர்க்கும் திரானி உள்ளது என்பதை பார்ப்போம்.

ஏற்கனவே இருந்த Cinematograph Act 1952 வில் இருந்த சில அம்சங்களை மாற்றி தற்போது Cinematograph Act 2021ஐ மத்திய அரசு கொண்டுவரவுள்ளது! இதன்படி சென்ஸார் போர்டு சர்டிபிகேட் தந்துவிட்டாலும் கூட ஒரு படத்தை அரசு நினைத்தால் தடை செய்யலாம் என திருத்தம் கொண்டு வந்துள்ளனர். அதாவது ஒரு படத்தில் ஒரு போலிச் சாமியார் பற்றி எடுக்கப்பட்டிருந்தால் அது இந்து மதத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது என ஏதாவது அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தால் போதும் அரசாங்கம் தடை செய்துவிடக் கூடிய அதிகாரத்தை இந்த புதிய மசோதா அரசுக்கு வழங்குகிறது. இதன் மூலம் சென்ஸார் போர்டையும் மத்திய அரசு செல்லாக்காசான ஒரு பொம்மை அமைப்பாக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்!

சுதந்திர இந்திய வரலாற்றில் எந்த ஒரு அரசும் செய்யாத அளவுக்கு தொடர்ந்து விவசாயம், தொழிற்சங்க உரிமைகள், ஊடக சுதந்திரம், பொதுத்துறை, கல்வி என அனைத்திலுமிருந்த ஜனநாயக அம்சங்களை அடியோடு பறித்து வந்து கொண்டுள்ள பாஜக அரசு, தற்போது திரைத் துறையிலும் தன் அடக்குமுறை அணுகுமுறையை அமல்படுத்த தொடங்கிவிட்டது!

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், பாஜக அரசின் மதவாத பிற்போக்கு அம்சங்களை பரப்பும் திரைப்படங்களை மட்டும் அங்கீகரித்து, சுதந்திர சிந்தனை போக்குள்ள சினிமாக்களை சிறை படுத்திவிட வேண்டும். அப்போது தான் தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தாக திரைப்படங்கள் கூட வரமுடியாமல் செய்யலாம் என பாஜக அரசு திட்டமிடுகிறது.

ஏற்கனவே திரைப்படச் சான்றிதழ் தீர்ப்பாயத்தை பாஜக அரசு காலியாக்கியது நினைவிருக்கும்! சென்ஸார் போர்டு ஒரு திரைப்படத்தை அனுமதி சான்றிதழ் கொடுக்க மறுத்தால் இந்த தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்து தன் படைப்புக்கு நியாயம் கேட்க முடியும் என்ற அம்சத்தை இல்லாமல் ஆக்கியது பாஜக அரசு.

சென்ற ஏப்ரலில் மத்திய அரசு கொண்டு வந்து  தீர்ப்பாயங்கள் திருத்த மசோதா, 2021- ன் கீழ், விமான நிலைய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் , வர்த்தக சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மேல்முறையீட்டு வாரியம், வருமான வரிச் சட்டம் தொடர்பான முன்கூட்டியே அதிகாரமளிக்கும் தீர்ப்பாயம் மற்றும் திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஆகிய நான்கு தீர்ப்பாயங்களும் களைக்கப்பட்டது. இந்த முடிவுக்கு அப்போது பாலிவுட் இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், ஹன்ஸல் மேத்தா, நடிகை ரிச்சா சட்டா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்!இது தொடர்பாக நமது அறம் இதழில் ஏற்கனவே கவனப்படுத்தி கட்டுரை வந்துள்ளது.

கலைத் துறை மீது காவி அரசுக்கு கோபம் ஏன்..?

அப்போது வட இந்திய படைப்பாளிகள் சிலர் மட்டுமே அதை எதிர்த்தனர். தமிழகத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பிரபல இயக்குனர்கள் அனைவரும் அமைதி காத்தனர். அதனால் தற்போது இன்னும் ஒரு படி மேலே ஏறி, திரைப்படத்திற்கு சென்ஸார் சான்றிதழ் கிடைத்தாலுமே கூட அரசுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒரு படத்தை தியேட்டருக்கே செல்லாமல் நிறுத்திவிட முடியும்! இதனால் துணிச்சலாக அநீதியை தட்டிக் கேட்கும் படங்களை யாரும் எடுக்க வாய்ப்பில்லாமல் போகும் நிலை தான் உருவாகும்.

ஒரு பாசிஸ அரசு எப்போதுமே சுதந்திரமான கலை,கலாச்சார செயல்பாடுகளை அனுமதிக்காது என்பது பாஜக விஷயத்தில் உறுதிப்பட்டுள்ளது!

தற்போதைய இந்த  மசோதாவிற்கு எதிராக மக்கள் நீதி மையம் கட்சித் தலைவரான கமல்ஹாசன் தனது எதிர்ப்பை  ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‘கண், வாய், காதுகளை மூடிக் கொண்டு இருக்கும் மூன்று குரங்கு சின்னங்களாக ஒரு போதும் சினிமா, ஊடகம் மற்றும் கல்வி இருக்காது. அதன் சுதந்திரத்தை நசுக்க முனைந்தால் அது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். இந்த சட்டத்திருத்தை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்’ என்று ஒற்றை மனிதனாக டிவிட்டரில் பதிவிட்டதோடு விட்டுவிட்டார்.

ஆனால், வட இந்தியாவிலோ சுமார் 1400 படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு இந்த சட்டத்தை ஆட்சேபித்து ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அனுராக் காஷ்யப், பர்கான் அக்தர், ஜோயா அக்தர், ஹன்சால்மேத்தா, நந்திதாதாஸ், ஷபனா ஆஷ்மி, ஆகியோரோடு தமிழகத்தின் வெற்றிமாறனும் கையெழுத்திட்டுள்ளார்!

பிரிட்டிஷ் அரசையே எதிர்த்து, சுதந்திரத்தை வலியுறுத்தி ஒரு காலத்தில் நமது திரைத்துறை படமெடுத்துள்ளது! ஆனால், இப்போது சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டம் மக்களுக்கு தந்துள்ள பேச்சுரிமை,எழுத்துரிமை மீதே கைவைக்கத் துணிந்த பாஜக அரசை எதிர்ப்பது தான் உண்மையான வீரமாகும். சும்மா சினிமாவில் ஒரே நேரத்தில் ஐம்பது,அறுபது பேரை தூக்கி போட்டு வீசி எறிந்து சண்டை போடுவதும், அப்படியாக படம் எடுப்பதும், நடிப்பதும் வீரமல்ல! நம் கருத்து சுதந்திரத்தை களவாடத் துடிக்கும் ஆட்சியாளர்களின் சட்டத்திற்கு உடன்படமாட்டோம் என அட்லீஸ்ட் ஒரு வார்த்தையாவது சொல்வது தான் வீரமாகும்.

இந்த மசோதாவை எதிர்க்க திரானியில்லாவிட்டால், வருங்காலத்தில் சினிமா துறையினர் நல்ல திரைப்படங்களை மக்களிடம் சேர்க்கமுடியாது. தடை செய்யப்பட்ட ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் தனிப்பட்ட முறையில் கோர்ட்டு படிக்கட்டு ஏறி இறங்கி ஆண்டுக்கணக்கில் பலரும் அலைய வேண்டி வரலாம்! ஆகவே, ஒன்றுபட்டு அனைத்து திரைத்துறையினரும் கட்சி, சாதி, மத எல்லைகளைக் கடந்து கலைத்துறை சுதந்திரத்தை காப்பாற்ற களம் காண வேண்டிய காலகட்டம் உருவாகிவிட்டது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time