ஊழல்புகார்கள்; ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லையே..!

-ஜீவா கணேஷ்

அதி மோசமான கடந்த அதிமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தனர். பத்தாண்டுகளுக்கு பிறகு வந்துள்ள திமுக ஆட்சியாளர்கள் ஒரு பக்குவத்தை பெற்றிருப்பார்கள் என மக்கள் நம்பினார்கள்! ஒரு பக்கம் மக்கள் விரோத – மாநில உரிமைகளை பறிக்கும் பாஜக ஆட்சியை எதிர்க்க வேண்டிய சரித்திர கடமையையும் திமுக சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் எப்படி இந்த ஊழல்களுக்கு துணை போகிறது? முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு இது போனதா எனத் தெரியவில்லை.

இந்த ஆட்சியில் சில நல்ல முன்னேற்றங்கள், பாசிட்வ்வான அணுகுமுறைகள் நிதித் துறை, சுகாதாரத் துறை, இந்து சமய அற நிலையத் துறை ஆகியவற்றில் காண முடிந்தாலும் பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின் துறை ஆகியவற்றில் ஆட்சி மாறினாலும், காட்சிகள் அப்படியே மாற்றமின்றி தொடர்கின்றன..என்ற அதிர்ச்சியான பதில்களே கிடைக்கின்றன.

பொதுப் பணித்துறையை பிரித்து நீர்வளத்துறைக்கு அமைச்சர் துரைமுருகன் நியமிக்கப்பட்டார். அவரது துறையில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள வேலைகளின் காண்டிராக்டர்களிடம், ”கடந்த ஆட்சியாளர்களுக்கு கமிஷன் கொடுத்ததைக் கொண்டு தற்போது நீங்கள் எப்படி வேலையை தொடர முடியும்? ஆட்சி மாறி இருக்குது இல்ல, அதனால குறைந்த பட்சம் ஒரு நான்கு சதவிகிதம் தாங்க. மற்றபடி புது ஆர்டர் எடுத்து பண்ணும் போது சென்ற ஆட்சியாளர்களுக்கு தந்ததை கொடுத்தாலே போதுமானது” என கேட்கப்பட்டுக் கொண்டுள்ளதாக அத் துறையில் புலம்ப தொடங்கியுள்ளனர். அது போல என்ஞினியர்கள்,அதிகாரிகளின் இடமாறுதலுக்கான கட்சிக்காரர்களின் சிபாரிசுகள் வந்து குவிந்துள்ளதாம்! எல்லாவற்றும் ரேட் நிர்ணயித்து கல்லா கட்டத் தொடங்கிவிட்டனர் என்கிறார்கள்!

இதே நிலைதான் அச்சு பிறழாமல் எ.வ.வேலுவின் நெடுஞ்சாலைத்துறை, செந்தில் பாலாஜியின் மின்துறை ஆகிவற்றிலும் நடந்து கொண்டுள்ளது. சென்ற ஆட்சியாளர்களுக்கு ஸ்கெட்ச்  போட்டு காசு பண்ண கற்றுக் கொடுத்த அதே அதிகாரிகளே அப்படியே இந்த ஆட்சியாளர்களுக்கு தற்போது வேண்டப்பட்டவர் ஆகிவிட்டனர் என்பது தான் கொடுமை. அதற்கான ஒரு சின்ன சாம்பிள் தான் இது!

நெடுஞ்சாலைத்துறையில் அண்மையில் தலைமைப் பொறியாளர் நிலையிலேயே  இரண்டு அதிகாரிகள்  அரசுக்கு விருப்ப ஓய்வு விண்ணப்பங்கள் அனுப்பி, பின்னர் இரண்டு தலைமைப் பொறியாளர்களுமே விருப்ப ஓய்வு பெறாமலேயே முடிந்திருக்கிறது.

நெடுஞ்சாலைத்துறையில் சுமதி என்ற தலைமைப் பொறியாளர் ஊழலுக்கு பேர்போனவர்! அவர் ஆட்சி மாறினால் தண்டிக்கப்படுவோம் என பயந்து விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை கடந்த அதிமுக ஆட்சியில் கொடுத்துவிட்டு, அனுமதிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் – அதாவது திமுக ஆட்சிக்கு வருவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பு – எப்படியோ ஒரு தைரியத்தில் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.  தலைமைப் பொறியாளர் விஜயா என்பவரும் விருப்ப ஓய்வு விண்ணப்பம் கொடுத்திருந்தார்.  அவர் விருப்ப ஓய்வில் செல்லத் திட்டமிட்ட அன்று அதை நிராகரித்து அரசு ஆணையிட்டது.  அடுத்தடுத்து  மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள். அதில் பல ரகசியங்கள் மறைந்திருக்கின்றன.

தனது தவறுகள் கண்டுபிடிக்கப்பட முடியாது என்கிற உறுதியில் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்ற  தலைமைப் பொறியாளர் சுமதி சென்னை பெருநகர எல்லைக்குள் நடைபெறும் பாலங்கள் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்பவர். தேர்தல் நெருங்குகிற சமயத்தில் பணிகள் வேகமாக முடிவடைந்து அதிமுக ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதால் ஒப்பந்ததாரர்களுக்கு பல்வேறு நன்மைகளை விதிகளுக்குப் புறம்பாக செய்து கொடுத்து அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பாராட்டுப் பெற்றவர். தேர்தல் நெருங்க நெருங்க, திமுக ஆட்சிக்கு வந்து இந்தத் தவறுகள் எல்லாம் தெரிந்து நம் மீது நடவடிக்கை பாய்ந்துவிடுமோ என்று பயந்து விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் செய்தார்.  ஆனால், தற்போது விண்ணப்பத்தைத் திரும்பப் பெறுகிறேன் என்று சொல்லி பதவியில் நீடிக்கிறார். கடந்த ஆட்சியில் தான் செய்த தவறுகளையே இந்த ஆட்சியாளர்களும் எதிர்பார்க்கிறார்கள்  என்பதால் தான் இந்த மாற்றம்!

குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதால் விருப்ப ஓய்வு விண்ணப்பம் நிராகரிப்புக்குள்ளான தலைமைப் பொறியாளர் தலைமைப் பொறியாளர் விஜயா துறையில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். தஞ்சாவூர் சாந்த பிள்ளை கேட் பாலம், புதுக்கோட்டை பேயாடிக்கோட்டை பாலம், ஈரோடு டெண்டர் வழக்கு என்று பல குற்றச்சாட்டுகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.  திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால்  அவற்றையெல்லாம் விசாரிக்கத் தொடங்கும்பட்சத்தில் தனக்கு பிரச்சினை ஏற்படும் என்று எண்ணி விருப்ப ஓய்வில் சென்றுவிட முயன்ற அவரை புதிய அரசு விருப்ப ஓய்வு கொடுக்காமல் விண்ணப்பத்தை நிராகரித்து துறையில் தலைமைப் பொறியாளராகத் தொடர அனுமதித்திருக்கிறது.

இது எவ்வளவு பெரிய அபத்தம்?

தலைமைப் பொறியாளர் விஜயா திருச்சி கிராம சாலைகள் வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளராக இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணியாற்றினார். அப்போது ‘குட்கா’ விஜயபாஸ்கர் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே செய்து வந்தார்.  ஒரு முறை விஜயபாஸ்கரின் தந்தை போட இருந்த டெண்டரில் வேறொருவர் போட முயற்சி செய்தார் என்பதற்காகவே விஜயா அவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்து வழக்கு பதிய வைத்தார். பிறகு அந்த ஒப்பந்ததாரர் முன் ஜாமின் கேட்டு மனு போட்டுவிட்டு ஊர் ஊராக ஓடிக் கொண்டிருந்தார் என்பது தனிக்கதை.

திருச்சியில் உள்ள தனது அலுவலகத்துக்கே வராமல் தனது குடும்பம் இருக்கும் கோயம்புத்தூரிலிருந்து எப்பொழுதாவது வந்து எந்தப் பணியையும் ஆய்வு செய்யாமல் அமைச்சர்களின் தயவு மட்டும் இருந்தால் போதும், நெடுஞ்சாலைத்துறையில் எல்லா வசதிகளோடும் வாழலாம் என்று இருந்தவர் இந்த விஜயா. அதனால்தான் அவர் கண்காணிப்புப் பொறியாளராக இருந்தபொழுது கட்டப்பட்ட பாலங்கள் பல திறந்து வைத்த இரண்டு, மூன்று மாதங்களுக்குள் இடிந்து விழுந்தன. ஆனாலும் அவர் மீது இவ்வளவு கரிசனம் ஏன் இப்பொழுதும் காட்டப்படுகிறது என்று புரியவில்லை.

விருப்ப ஓய்வு விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றதும், நிராகரிக்கப்பட்டதும் தவறுகளுக்கான  ஆதாரத்தை மறைப்பதற்கும் அழிப்பதற்குமே வழி வகுக்கும்!

பொதுவாக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கிற அதிகாரியிடம் உள்ள பொறுப்புகளை பறித்துவிட்டு அவருக்கு நோட்டீஸ் கொடுத்து இந்த நேரம் விசாரணை நடந்திருக்க வேண்டும். அதிகபட்சம் நான்கு மாதத்திற்குள் தண்டனை  கொடுக்க வேண்டும். மாறாக அதே பதவியில் தொடர வைத்தால், நல்ல சம்பளத்துடன்  இருக்கிற நேரத்தை எல்லாம் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக விளங்கும் ஆவணங்களை  மறைக்கவும், அழிக்கவுமே வழி வகுக்கும். அது ஒட்டுமொத்தமாக சென்ற ஆட்சியாளர்களையும் சேர்த்து காப்பாற்றிவிடும் என்பதே உண்மை!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time