ஓலா, உபரின் கொத்தடிமைகளாய் உழலும் வாகன ஓட்டிகள்!

-சாவித்திரி கண்ணன்

வாகனம் எங்களுடையது. அதன் மெயிண்டன்ஸும் எங்களுடையது, உழைப்பும் எங்களுடையது. ஆனால், பலன்களோ ( ஓலா, உபர்) அவர்களுடையது! பாதிப்போ எங்களுடையது. இதை எத்தனை நாளைக்கு வேடிக்கை பார்க்க போகின்றன மத்திய மாநில அரசுகள்? என்று கேட்கும் – விரக்தியின் விளிம்பில் இருக்கும்  – வாகன ஓட்டிகள் பக்கம் அரசின் கவனம் திரும்புமா…?

ஓலா உபர் நிறுவனங்களின் பகாசூரக் கொள்ளையை தெரிந்தும் தெரியாதது மாதிரி வேடிக்கை பார்க்கும் அரசின் அலட்சியத்தால் ஆயிரக்கணக்காக வாகன ஓட்டிகள் வீதி இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது தான் அண்ணா சாலையில் இவர்கள் வாகனங்களை அப்படியப்படியே நிறுத்திவிட்டு கோஷம் போட்டு போராடியதாகும்!

இன்னும் அடிமைத்தனமும், சுரண்டலும் வெவ்வேறு வடிவங்களில் நம்மை ஆட்சி செய்கிறது என்பதற்கு ஓலாவும், உபருமே சாட்சி! வாடகை வாகன நிறுவனம் என்றால், இது வரை ஒருவர் பெரும் முதலீடு செய்து ஆட்டோக்களோ,கார்களோ வாங்கி அலுவலகம் அமைத்து டிரைவர்களை வேலைக்கமர்த்தி செயல்பட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது. வாகனத்திற்கான எந்த முதலீடும் இல்லாமல் லட்சக்கணக்கான வாகனங்களையும், லட்சக்கணக்கான டிரைவர்களையும் வேலைக்கு வைத்து உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கும் செயலைத் தான் ஓலாவும் உபரும் செய்கின்றன!

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை என்பது பசுமை புரட்சி என்ற ரசாயண உரக் கம்பெனிகளை கொழுக்க வைக்க  ஏற்படுத்தப்பட்ட திட்டத்தில் இருந்து தான் தொடங்கியது. அது போல கடந்த சுமார் ஐந்தாண்டுகளாக டிரைவர்களின் தற்கொலைகள் என்பது ஓலா, உபர் நிறுவன வருகையில் இருந்து தான் ஆரம்பித்துள்ளது.

தொழில் நுட்ப வளர்ச்சி என்பது உழைக்கும் மனிதர்களை கெளரவிப்பதற்கும், மேன்மை படுத்துவதற்கும் மாறாக மனிதாபிமானமின்றி சுரண்டுவதற்கும், விரக்தியின் விளிம்பிற்கே தள்ளுவதற்குமே பயன்பட்டு வருகிறது என்பது ஓலா, உபர் நிறுவன செயல்பாடுகளால் தெரிய வருகிறது.

தற்போதை நிலவரப்படி இந்தியாவில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கார்களும்,60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் பைனான்சியர்களிடமும், மார்வாடிகள் வசமும் சென்றுள்ளன! விரக்தியில் தன்னையே மாய்த்துக் கொண்ட டிரைவர்களின் எண்ணிக்கைக்கு கணக்கு வழக்கில்லை!

சொந்த முதலீடு, பல மணி நேரக் கடுமையான உழைப்பு ஆகியவற்றுக்கு பிறகும் கூட அடிமை முறையில் லாபத்தை பறிகொடுத்து வாழ்கின்ற இந்தியாவின் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளின் வாழ்க்கை பரிதாபகரமானது. இந்தியா அன்னியர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரம் என்பது யாருக்கு பயன்பட்டு வருகிறது! யாருக்கு பயனற்றுப் போனது என்பது குறித்து நாம் அனைவருமே சிந்திக்க வேண்டியுள்ளது.

இது குறித்து தமிழ் நாடு டாக்சி தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ) பொதுச் செயலாளர் பூபதியிடம் பேசும்போது, ”2016 ல் இந்த நிறுவனங்கள் நுழைந்த புதிதில் திட்டமிட்டு டிரைவர்களை இழுக்கும் நோக்கத்தில் அதிக இன்சண்டிவ் மற்றும் பல சலுகைகளை தந்தன! வாடிக்கையாளர்களுக்கும் அவ்வாறே முதல் சவாரி இலவசம் என்பதாக ஆரம்பித்தன! இந்த வலையில் விழுந்து ஓலா,உபர் மூலம் மட்டுமே மக்கள் தங்கள் பயணத்தை செய்ய முடியும் என்ற நிலையை தோற்றுவித்த பிறகு டிரைவர்களை சுரண்டவும், பீக் நேரங்களில் இஷ்டத்திற்கும் ரேட் உயர்த்தவுமான பித்தலாட்டங்களை செய்தன.

கார் டிரைவர்களுக்கு தற்போது டீசல் 95 ரூபாயும் பெட்ரோல் 100 ரூபாயும் விற்கும் நேரத்தில் இவை கிலோ மீட்டருக்கு வெறும் எட்டு ரூபாய் மட்டுமே தருகின்றன! சில நாட்கள் முன்பு வரையிலும் 11 ரூபாய் தந்த இவர்கள் இப்படி அதிரடியாக ரேட்டை குறைத்தனர். ஒரு கார் வைத்திருக்கும் டிரைவர் இன்சுரன்ஸ்க்கு வருடத்திற்கு 24,000 செலுத்துகிறார். இன்ஜீனுக்கு 90,000 செலவழிக்கிறார். டயர் மாற்றுவதற்கு 20,000 ஆயிரம் செலவழிக்கிறார். எப்.சி எடுக்க 40,000 செலவழிக்கிறார்.அத்துடன் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை சஸ்பென்சருக்கு 40,000 செலவழிக்கிறார் என்ற நிலையில் ஒரு கீ.மீட்டருக்கு 18 ரூபாய் தந்தால் தான் கட்டுப்படியாகும். இதுவே கடனுக்கு கார் வாங்கி இருந்தால் அந்த வட்டியையும், அசலையும் அடைக்க வேண்டும்.

இந்த சிரமங்களை பற்றி சிறிதும் கவலைப்படாத இந்த நிறுவனங்கள் தாங்கள் வசூலிக்கும் தொகையில் டிரைவர்களிடம் 26 சதவிகிதம் பிடித்துக் கொள்கின்றன! மனைவி நகைகளை அடமானம் வைத்து கார் வாங்கி ஓட்டும் டிரைவர்கள் கடைசி வரை நகைகளை மீட்காமலே போகிறார்கள் என்பது மட்டுமல்ல, உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்தாலும் கூட ருபாய் 500 அல்லது 600 மட்டுமே சம்பாதிக்கும் நிலையுள்ளதால் நாங்கள் படும் துன்பங்கள் சொல்லும் தரமில்லை’’ என்றார்.

ஆட்டோ தொழிற்சங்கத்தின் தலைவரான(சி.ஐடியு) தமிழ் செல்வனிடம் பேசும் போது ”கொத்தடிமைகளை போல தான் இன்று ஆட்டோ டிரைவர்கள் ஓலா மற்று உபரை சார்ந்து உள்ளோம். அறுபத்தியோரு ரூபாய் சவாரி கட்டணத்தில் 32 ரூபாய் தான் எங்களுக்கு தருகிறார்கள்! இதுவும் வேண்டாமென்றால் நாங்கள் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு வாழ்வதாகிவிடும். இவர்களை எந்த அரசாலும் கட்டுப்படுத்த முடியாதா..?”என்றார்.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டாலுமே கூட, இரண்டரை லட்சம் ஆட்டோக்களும், ஒரு லட்சத்து 19,000 கால் டாக்சிகளும் உள்ளன. இவற்றில் கணிசமானவை இந்த இரண்டு நிறுவனங்களை சார்ந்தே உள்ளன. இங்கு மட்டுமே இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பல நூறு கோடி லாபம் ஈட்டுகின்றன. எனில் இந்தியாவின் 250க்கு மேற்ப்பட்ட நகரங்களில் இவர்களின் வலை பின்னல் உள்ள நிலையில் ஒவ்வொரு நாளுமே பல ஆயிரம் கோடிகளை இந்த நிறுவனத்தினர் சம்பாதிக்கின்றனர். இந்த நிறுவனங்களை எல்லா இடங்களின் டிரைவர்களும் வயிறு எரிந்து சபிக்கின்றனர், போராடுகின்றனர். ஆனால், அரசுகளுக்கு தான் உரிய நடவடிக்கை எடுக்க துப்பில்லை.

மத்திய அரசு 2019 ஆம் ஆண்டு வாடகை நிறுவனங்கள் தங்கள் சர்வீசிற்கு 10 சதவிகிதம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றது! அது நடைமுறைக்கு வரவில்லை.பிறகு மத்திய அரசே 20 சதவிகிதமாக்கிவிட்டது. அத்துடன் ஜி.எஸ்டி என்ற வரி விதிப்பையும் டிரைவர்கள் தலையில் தான் கட்டுகின்றனர்.

பீக் அவர்சில் வாடிக்கையாளர்களிடம் மூன்று மடங்கு நான்கு மடங்கு கட்டணங்களை வசூலிக்கும் நிறுவனங்கள் அந்த கூடுதல் கட்டணத்தை அப்படியே முழுமையாக தாங்களே அபேஷ் செய்து கொள்கின்றன! ஆனால், வாடகைக் கார் நிறுவனங்கள் மிகவும் பரபரப்பான நேரத்தில் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 1.5 மடங்கு அதிகமாக வசூலித்துக் கொள்ள தான் அரசு அனுமதித்தது. உண்மையில் எந்த சட்டங்களும் இவர்களை கட்டுபடுத்துவதில்லை..

மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மோட்டார் வாகன நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சாதாரண எளியவர்களிடம் தான் செல்லுபடியாக்குகிறது.

ஓலா, உபர் போன்ற வாடகைக் கார் நிறுவனங்கள் என்ன செய்தாலும் காவல்துறையும் சரி,அரசின் மற்ற துறைகளும் சரி வாய் பொத்தி மெளனம் காக்கின்றன..!

இந்த நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் 250 க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு சில லட்சம் கோடிகளை சம்பாதிகின்றன. ஏன் நமது மாநில அரசே இந்த மாதிரி ஆப்பை ஏற்படுத்தி கட்டணங்களை முறைப்படுத்தி, 10 சதவிகிதம் லாபம் பார்த்தாலே கூட பல்லாயிரம் கோடி வருமானம் அரசுக்கு கிடைக்கும். டாஸ்மாக் பணம் அரசுக்கு தேவையே இல்லை. மேலும் கூட்டுறவு முறையில் இதை தொழிலாளர்களே செய்ய வைத்தால் லாபத்தை தொழிலாளர்கள் பகிர்ந்து கவுரவமான வாழ்க்கை வாழ்வார்கள்!

ஒரு சில குறிப்பிட்ட தனியார்கள் கேட்பாரின்றி சுரண்டிக் கொழுக்க, அரசும் அரசு சார்ந்த நிறுவனங்களும் துணை போவது தான் வேதனை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time