ஜூலை 26ஆம் தேதியுடன் ஏழு மாதங்களை நிறைவு செய்கிறது, மூன்று வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராகவும், குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம் கோரியும்,டெல்லி நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம்!
யாருக்கும் தெரியாமல் ஊரடங்கிய நேரத்தில் 2020 ஜூன் 6ஆம் தேதி, மூன்று அவசரச் சட்டங்களாகப் கொண்டுவரப்பட்டு,செப்டம்பர் 3வது வாரத்தில்,அனைத்து சனநாயக விதிகளையும், மரபுகளையும் காற்றில் பறக்கவிட்டு, நாடாளுமன்றத்தில் சட்டங்களாக இவை நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவசர அவசரமாக கொண்டுவருவதால் பெரியளவிற்கு எதிர்ப்பு இருக்காது,அப்படியே இருந்தாலும் சமாளித்து விடலாம்’ என்ற மூடநம்பிக்கையில் ஒன்றிய அரசு,முன் யோசனையில்லாமல் செய்த செயல்பாடுகளால் ,உலகில் எந்த அரசும் இதுவரைக் கண்டிராத எதிர்ப்பை,தற்போது மோடி அரசு சந்தித்துக் கொண்டிருக்கிறது.
விவசாயப் போராட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள்
# உலகஅரங்கில் மோடியின் மரியாதை அதளபாதாளத்திற்குச் சென்றுவிட்டது.
# சர்வதேசஅளவில் சனநாயக சக்திகள் இந்திய விவசாய எழுச்சிக்கு ஆதரவான நிலையை எடுத்திருப்பது, போராட்டத்திற்கு இன்னும் அதிக வலுசேர்த்திருக்கிறது.
# ஏழு மாத உறுதிமிக்க போராட்டத்தால் எதிர்க்க முடியாத இரும்புக் கோட்டையாக கட்டமைக்கப்பட்ட மோடி அரசின் பிம்பம் நொறுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இது போராடும் மனோபாவத்தை இந்தியாவின்தொழிலாளர்கள்,மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற பல்வேறு பிரிவினரிடையே உருவாக்கியுள்ளது.
விவசாயிகள் வகுத்த அரசியல் வியூகம்;
# அறவழியில்போராட்டத்தை நடத்தி வருகின்ற விவசாயிகளின் குரலுக்குச் செவிசாய்க்காத மோடி அரசுக்கு என்ன செய்தால் வலி ஏற்படும் என்ற வகையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்; விவசாயிகளின் மாபெரும் போராட்டத்தை உதாசீனப்படுத்தும் மோடி அரசுக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளில் போதுமான பிரதி நிதித்துவம் கிடைக்காமல் செய்வதே சிறந்த பாடமாக அமையும் என விவசாய அமைப்புகள் முடிவெடுத்தன. அதற்கேற்ப, நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களிலும் பாஜக மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற பிரச்சாரத்தை விவசாயிகளின் அமைப்புகள் மேற்கொண்ட பிரச்சாரம் கணிசமாக பலனளித்தன! வேறு வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால் விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக உள்ள பாஜக அரசு தோற்கடிக்கப்பட்டாக வேண்டும். அதற்குரிய செயல்பாடுகளை விவசாயிகளின் போராட்டக் குழு செய்து முடித்தது.
உற்சாகம் அடைந்த சனநாயக சக்திகள்
# தமிழகத்தில் பாஜக-அதிமுக-பாமக கூட்டணி தோற்கடிக்கப்பட தமிழ்நாடு AIKSCC யின் விவசாயிகள் போராட்டக் குழு கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதன் விளைவை தமிழகம்கண்டது. மேலும், விவசாயிகள் பிரச்சாரத்தால் மேற்கு வங்கம்,கேரளா ஆகிய மாநிலங்களிலும் பாஜக கூட்டணி தோல்வியைத் தழுவியது.
# தொடர்ந்துநடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தினால் சனநாயக சக்திகள், நம்பிக்கை பெற்றுள்ளன. இது 5 மாநிலத் தேர்தல்களின் முடிவில் உறுதிபட்டுள்ளது.
# விவசாயிகளின்,எதேச்சதிகாரத்திற்கு எதிரான, சனநாயகத்தை நோக்கிய பயணத்தில் தொழிலாளர்கள், மாணவர்கள்,உள்ளிட்டசிவில் சமூகங்களிடம் ஓர் உந்துதலை ஏற்படுத்தியிருக்கின்றது. மூச்சுவிட முடியாத திக்குமுக்காடிய சூழலில் ,சனநாயகக் காற்று வீசுவதற்கான போராட்டமெனும் சாளரங்களை விவசாயிகள் திறந்திருக்கிறார்கள். என்றுமில்லாத அளவுக்கு விவசாயிகள்-தொழிலாளர்களிடையே ஒற்றுமை ஏற்பட்டிருக்கின்றது. இது மட்டுமல்லாமல் அரசுக்கு அனுசரணையாக இயங்கி வந்த நீதித்துறையின் அணுகுமுறையிலும் கூட சில மாற்றங்களை விவசாயிகள் போராட்டம் சாத்தியப்படுத்தி உள்ளது!
நீதித்துறையின் அணுகுமுறையில் மாற்றம்.
விவசாயிகளின் போராட்ட காலகட்டமான 2021 ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பேற்றது முக்கிய நிகழ்வாகும். தலைமை நீதிபதி மாற்றம் உச்ச நீதிமன்றத்தின் ஒரு சில தீர்ப்புகளில் முற்போக்கானதாக இருந்தாலும்,இந்திய நீதித்துறையில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் குறித்துதான் இப்போது நாம் விவாதிக்கிறோம். அந்த வகையில் விவசாயிகளின் போராட்டம் மற்றும் அது நாட்டில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கங்கள்; போராட்டத்தின் பிரதிபலிப்புகள் நீதித் துறையிலும் பார்க்க முடிகிறது! தற்போது இந்திய நீதித்துறை மக்களின் பிரச்சினைகளைப் பார்க்கின்ற புரிதலில் மாற்றம் தெரிகிறது.
சமீபத்திய மாதங்களில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் வழங்கியிருக்கும் பல தீர்ப்புகளிலிருந்து, நம்மால் இதை உணரமுடிகிறது.
# கேரளாவைச்சேர்ந்தஊடகவியலாளர் சித்திப் கப்பன் , உ.பி.யில் உள்ள ஹத்ராஸில் தலித் சிறுமியின் கூட்டுப் பாலியல் சம்பவத்தின் போராட்டங்களை செய்தி சேகரிக்க சென்ற போது, அங்கு அவர் உபா சட்டத்தின் கீழ் சிறையில் அநீதியாக அடைக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்காக உ.பி.யில் இருந்து அவரை டெல்லிக்கு மாற்றுவதற்கு உ.பி. அரசு கடுமையாக எதிர்த்தது. ஆனால், அரசின் எதிர்ப்பைத் தள்ளுபடி செய்து, சித்திக்கப்பனை உடனடியாக டெல்லிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. . சித்திக் கப்பன் விவகாரத்தில் உ.பி.அரசின் அணுகுமுறையையும் நீதிமன்றம் கண்டித்தது
# கொரானா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசி மற்றும் மருந்துகள் விவகாரத்தில் மத்திய அரசின் நிர்வாக மேலாண்மையை ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் கேள்விக்கு உள்ளாக்கியது.
தேசத்துரோக சட்டத்தை மறுஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
# தேசத்துரோகசட்டமான உபாவில் பாஜக அரசு ஏராளமான சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் பிணையில் வரமுடியாமல் சிறையில் அடைத்துள்ளது. இதை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டமை மிக மிக முக்கியமான விடயம். மூன்றுமாதத்திற்கு முன்பு ,தேசத்துரோக சட்டத்தை மறு ஆய்வு செய்ய சில வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்த போது அன்றைய தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்தது. ஆனால், தற்போது தேசத்துரோக சட்டத்தை மறுஆய்வு செய்ய உச்சநீதி மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது!
# ஏப்ரல்24,தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவி ஏற்றபில் பேசும்போது,“பின்தங்கிய சமூகத்தின் மனித உரிமைகளை, அரசு மற்றும் சமூக விரோதிகளின் கொடுங்கரங்களில் இருந்து காப்பாற்ற வேண்டிய கடமை சட்டவியலாளர்களுக்கு உள்ளது” என்றார்.
# கொரானாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் ஆக்சிஜன் தேவை என்று சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்ததை கவுரவப் பிரச்சினையாக்கி. யோகி தலைமையிலான உபி அரசு, ஆத்திரப்பட்டது. இதனால், தங்களுடைய குறைகளை, இன்னல்களை யாராவது பொது வெளியில் தெரிவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தது. பலர் மீது வழக்குகளும் போடப்பட்டன! இது போன்ற விஷயங்களுக்கு எந்த அரசாவது, யார் மீதாவது நடவடிக்கை எடுத்தால், சம்மந்தப்பட்ட அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் தொடரப்படும் என்று எச்சரித்தது உச்ச நீதிமன்றம்.
ஐந்து மாநிலத் தேர்தல்களும்,கொரானா பரவலும்!
கொரானா பரவலுக்கு முக்கிய காரணமாக இருந்தது, தேர்தல் நடைமுறைகளைச் சரியாக அமல்படுத்தாததே. எனவே, தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் சுமத்தலாம் (Election Commission is singularly responsible for all covid deaths ) என்று சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் பதிவு செய்தது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றம் சென்றது. ஆனால் உச்சநீதி மன்றமோ ‘தேர்தல் ஆணையத்தைப் பற்றி நீதிமன்றங்கள் குறைகூறும் கருத்துக்களைத் தடை செய்ய முடியாது’ என்றது. இது ஒன்றிய அரசுக்கு ஆதரவான வகையில் செயல்பட்ட தேர்தல் ஆணையத்திற்குக் கொடுக்கப்பட்ட சவுக்கடியாகும்.
பொது மக்களுக்கு இலவச தடுப்பூசி வந்த கதை
# கோவிட்தடுப்பூசிகள்,ஒன்றிய அரசுக்கு ஒரு விலையும்,மாநில அரசுக்கு ஒரு விலையும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு விலையும் என ஒன்றிய அரசு விலை நிர்ணயம் செய்தது. ஒன்றிய அரசின் இந்த கோவிட் கொள்கை மற்றும் நடவடிக்கைகள் பற்றி உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது.
# மாநிலங்கள் ஏன் தனித்தனியாக தடுப்பூசிகளை வாங்க வேண்டும்? எல்லா மாநிலங்களுக்குமாக ஒன்றிய அரசு ஏன் மொத்தமாக வாங்கக் கூடாது?
# ஓன்றிய அரசு வெவ்வேறு விலைகளைத் தடுப்பூசிகளுக்கு நிர்ணயம் செய்தது தவறானது, பாரபட்சமானது.
# பட்ஜெட்டின்போது ஒன்றிய அரசு இலவச தடுப்பூசிக்காக ஒதுக்கீடு செய்த ரூ.35,000 கோடியில்,இதுவரை தடுப்பூசிக்காக எவ்வளவு செலவழிக்கப்பட்டிருக்கின்றது? அது குறித்த விபரத்தை அறிக்கையாகத் தர வேண்டும்.
# 18 வயதிலிருந்து 44 வயது வரையிலானவர்களுக்கு,ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்தப் பணத்திலிருந்து இலவசமாகத் தடுப்பூசி போட முடியாதா?
# தடுப்பூசி பற்றிய ஒன்றிய அரசின் கொள்கை எதேச்சதிகாரமானது, பகுத்தறிவற்றது என்று உச்ச நீதிமன்றம் விளாசித் தள்ளியது.
இதற்குப் பின்னால்தான் நம்முடைய பிரதமர் அனைவருக்கும் ஜூன் 21 முதல் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று அறிவித்தார்.
மனிதாபிமானமற்ற ஒன்றிய அரசுக்குப் பளார்.
# கோவிட் பெருந்தொற்றினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி எதுவும் அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் ஒன்றிய அரசு வாதிட்டது. ஒன்றிய அரசின் வாதத்தைப் புறந்தள்ளிய உச்சநீதிமன்றம் ‘தேசிய பேரிடர் சட்டத்தின் விதிகளின்படி ஒன்றிய அரசு,கோவிட் பெருந்தொற்றினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டும்’ என்று ஆணையிட்டது. இந்த உத்தரவின் மூலம் பெருந்தொற்றினால் இறந்த இலட்சக்கணக்கானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
விளைபொருளை MSP விலையில் வாங்க நீதிமன்றம் உத்தரவு
பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களின் விளைவாக தெலங்கானாவில் சோளத்தின் விலையை குவிண்டாலுக்கு ரூ.900 முதல் ரூ.1200வரை நிர்ணயித்தனர் சந்தையில் தனியார் கொள்முதல் வியாபாரிகள்! ஆனால், சோளத்தின் குறைந்தபட்ச ஆதார விலையானது குவிண்டாலுக்கு ரூ.2620 ஆகும். இந்த அடிமாட்டு விலையால், விவசாயிகள் பெருநட்டத்திற்கு ஆளாகின்ற சூழலில் AIKSCCயுடன் இணைந்துள்ள ஒரு விவசாய சங்கம், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. நீதிமன்றம் தெலங்கானா அரசைக் கண்டித்தது. இதனால், அரசு கட்டுப்பாட்டில் உள்ள கொள்முதல் நிறுவனங்கள் மூலமாக ரூ.2620 க்கு சோளம் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1500 வரை ஏமாற்றப்பட இருந்த விவசாயிகள், இழப்பு இல்லாமல் குறைந்தபட்ச ஆதார விலையில் சோளத்தை விற்க முடிந்தது.
அமைதியாகப் போராடுவது பயங்கரவாத நடவடிக்கையல்ல!
# டெல்லிகலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் வழங்கும்போது , “எதிர்ப்பைத் தெரிவிக்கும் நடவடிக்கை என்பது பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்றும், ஆயுதமில்லாமல் அமைதியாகக் கூடுவது அடிப்படை உரிமையாகும்.” என்று கூறி, அவர்களுக்குப் பிணை வழங்கியது. அவர்கள் 2020ஆம் ஆண்டு மே மாதம் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு,300 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைத்தது.
மக்களைக் கொன்றுவிட்டு பணத்தை வீசுவது நாகரீகமான சமூகத்திற்கு அழகல்ல;
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக மக்கள் உரிமை ஆர்வலர் ஹென்றி டிபாங்டே பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் போட்டு இருந்தார்.
இதை விசாரிக்கும் போது ‘மக்களைக் கொன்றுவிட்டு அவர்கள் முன் பணத்தை விட்டெறிந்ததுடன் நமது பணி முடிவடைந்துவிட்டதா? இப்படிப்பட்ட சமுதாயத்தைதான் நாம் கட்டமைக்க விரும்புகிறோமா? நிராயுதபாணிகளான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு,மூன்று ஆண்டுகள் வரையிலும் எவர்மீதும் வழக்கு நடத்தாமல் இருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி நடக்கின்ற ஒரு நாகரீகமான சமூகத்திற்கு இது அழகல்ல” என்று தமிழக அரசிடமும்,தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் நீதிமன்றம் கேட்டது. அவற்றின் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
Also read
விவசாயிகள் போராட்டத்தின் அடுத்த பரிமாணம்.
# ஜூன்26ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில ஆளுநர் மாளிகைகளை நோக்கி நடந்த பேரணிகள் மற்றும் தர்ணாக்கள் மற்றும் அன்றைய தினம் பேரூர்கள்,தாலுக்கா தலைநகரங்கள்,நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தர்ணா போராட்டங்கள், ‘விவசாயத்தைக் காப்போம்,சனநாயகத்தைக் காப்போம்’ என்ற செய்தியை மையமாகக் கொண்டு நடைபெற்றன. அதில் தொழிலாளர்களை பாதிக்கும் 4 தொகுப்பு தொழிலாளர் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக விவசாயப் போராட்டக்குழு வைத்தது. இந்தப் போராட்டத்தை நாடு முழுவதும் விவசாயிகளும்,தொழிலாளர்களும் ஒன்றிணைந்து நடத்தினர். போராட்டம்,வெற்றிபெற வேண்டுமானால் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து போராடவேண்டியது அவசியம் என்றும் அதற்கு நாட்டில் சனநாயக சூழல் நிலவ வேண்டும் என்ற அதிமுக்கியமான கட்டத்தை விவசாயிகள் அனுபவப்பூர்வமாக வந்தடைந்துள்ளனர். எனவே, இவையெல்லாம் போராட்டத்தின் ஒரு புதிய பரிணாம வளர்ச்சியாகும்.
விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றால் மட்டுமே நாட்டில் சனநாயகத்தை மீட்டெடுக்க முடியும். எனவே நாட்டின் சனநாயகத்தை மீட்டெடுக்க,விவசாயிகளுடன் இணைந்து போராடுவோம். விவசாயிகளுடன் இணைந்த போராட்டமே நாட்டைக் காக்கும்!
கட்டுரையாளர்; கே.பாலகிருஷ்ணன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
AIKSCC தமிழ்நாடு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு
சுய ஆட்சி இயக்கம் (Swaraj Abhiyan).
‘வாழ்க விவசாயி இயக்கம்’ (Jai Kisan Andolan) Tamilnadu:
Cell: 9444627827
சிறப்பான ஆதாரப்பூர்வமான அறிவார்ந்த அலசல்!
வெல்லட்டும் விவசாயி
yes