யார் பக்கம் ஸ்டாலின்? – நீதிபதி ஆறுமுகச்சாமியா? அப்பல்லோவா..?

-சாவித்திரி கண்ணன்

நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்திற்கு இது வரை சம்பளமாக மட்டும் சுமார் 30 கோடி ரூபாய் செலவாகியுள்ளது! இது தவிர ஆணையத்திற்கான நிர்வாக செலவுகளுக்காக மேலும் சில கோடிகள் செலவாகியுள்ளது! ஏறத்தாழ ஒன்பது முறை ஆறுமுகச்சாமி ஆணையத்திற்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 25, 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இந்த கமிஷன் மூன்று மாதத்திற்குள் விசாரித்து உண்மைகளை வெளிக்கொணரும் என அன்றைய அதிமுக ஆட்சி கூறியது.

ஆனால், எப்போது உண்மைகள் வெளியாகும் என்பது மட்டுமல்ல, உண்மை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா..? என்பதற்கான உத்திரவாதமும் கிடைத்தபாடில்லை!

இந்தச் சூழலில் புதிய அரசு பதவி ஏற்று சுமார் இரண்டு மாதம் ஆகியுள்ள நிலையில் நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணைத்தின் காரணமாக மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என ஒரு வழக்கு வருகிறது. ஆறுமுகசாமி ஆணையத்தை கலைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்பிரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து, ”நீதிபதி  ஆறுமுகச்சாமி ஆணையம் மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது” என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி, ஆறு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளது!

”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மர்ம மரணத்தில் உள்ள உண்மைகளை வெளிக் கொணர்வோம்” எனக் கடந்த நான்கரை ஆண்டுகளாக மேடைதோறும் பேசினார் ஸ்டாலின்! அவர் மட்டுமல்ல, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன்..உள்ளிட்ட திமுக முக்கியஸ்தர்கள் பலரும் பேசினார்கள்!

உண்மையிலேயே ஜெயலலிதா மரணம் என்பது இன்று வரை ஒரு மர்மமாகவே உள்ளது. சர்வ அதிகாரத்துடன் வலம் வருவது போல தோற்றமளித்த ஜெயலலிதா நோயில் விழ்ந்தவுடன் அவருக்கு என்ன நடந்தது..? எப்படி இருக்கிறார்? என்ன சிகிச்சை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது..? என்பதை யாருமே அறிய முடியாதவாறு அவரைச் சுற்றிலும் மன்னார்குடி மாபியா கும்பல் ஒரு சதிவலைப் பின்னல் அமைத்து, அப்பல்லோ நிர்வாகத்தையே தன் பொறுப்பில் கொண்டு வந்தது. தமிழக அரசின் முக்கிய அமைச்சரோ, ஆளுனரோ, மருத்துவத்திற்கான அமைச்சரோ யாருமே ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. பிரதமரும் இதில் தலையிட ஆர்வம் காட்டவில்லை. ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபாவும் மருத்துவமனை வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டார். ஆக, ஜெயலலிதாவின் இறுதிகாலம் யாரும் அறிய முடியாத, ஆறுதல் கூற முடியாத, அனாதையாக்கபட்ட நபராக அவரை மரணிக்க வைத்தது.

‘ஒரு ஜனநாயக நாட்டில் இப்படியும் கூட நடக்க முடியுமா..?’ என்று ஒட்டுமொத்த மக்களும் அதிர்ந்தனர்!

இது குறித்த மக்களின் கொந்தளிப்பை உணர்ந்த இ.பி.எஸ்ஸும், ஒ.பி.எஸ்ஸூம் இணைந்து ஆறுமுகசாமி கமிஷனை அமைத்தனர். நீதிபதி ஆறுமுகச்சாமி தீவிர அக்கறை காட்டி சுமார் 154 பேரை விசாரித்தார். ஆறுமுகச்சாமி விசாரணை சமரசமின்றி நேர்மையாக நடக்கிறது என அறிய வந்ததால், எட்டு முறை சம்மன் அனுப்பியும் ஒ.பி.எஸ் ஆணையத்தில் ஆஜராகவில்லை. இந்த ஒ.பி.எஸ் தன் ஆர்.கே நகர் தேர்தலில் ஜெயலலிதா பிணமாக இருக்கும் பேனரை வைத்து சசிகலாவை குற்றம் சாட்டி தினகரனுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அப்போது ஜெயலலிதா மரணத்தில் ஒ.பிஎஸ்சுக்கும் தொடர்பிருக்கிறது என்று தினகரன் தரப்பில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சரும் தன் தலைவியின் மரணம் தொடர்பான விசாரணைக்கு கடைசி வரை ஆஜராகவில்லை.

கிட்டதட்ட 90 சதவிகித வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை மட்டும் சரியாக ஆஜராகமலும், ஒழுங்காக பதில் சொல்லாமலும் போக்கு காட்டி வந்தது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட இடத்தின் வீடியோ புட்டேஜ்களை இல்லை எனக் கூறி தர மறுத்துவிட்டது.

ஆனால், அரசு மருத்துவர்கள் 12 பேர், ஐந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அகியோரிடம் தீவிரமாக விசாரித்த வகையில் ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சை விபரங்களை நன்கு கிரஹித்துக் கொண்டார் நீதிபதி.இது தவிர சில சிறந்த மருத்துவ நிபுணர்களையும் அழைத்து அப்பல்லோவின் சிகிகிச்சை, அவர்கள் தந்ததாக சொல்லப்படும் மருந்து,மாத்திரைகள் பற்றிய தன் சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொண்டார் ஆறுமுகச்சாமி! அந்த வகையில் அவர் அப்பல்லோ மருத்துவ குழுவிடம் கேள்விகள் எழுப்பிய போது அதிர்ந்தது! பிறகு சுதாரித்துக் கொண்ட அப்பல்லோ நிர்வாகம், ’’நீதிபதிக்கு மருத்துவம் பற்றி என்ன தெரியும்? அவர் பலதுறை நிபுணர்களை நியமித்துக் கொண்டு தான் எங்களிடம் கேள்வி கேட்க வேண்டும்’’ என உயர் நீதிமன்றம் சென்றது. ஆனால், உயர் நீதிமன்றம் அப்பல்லோ மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் சென்று, ”மருத்துவ சிகிச்சை பற்றி விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரமில்லை. ஆணையம் தன் வரம்பை மீறுகிறது” என முறையிட்டது, அப்பல்லோ!

அதாவது எதற்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டதோ, அதையே கேள்விக்கு உள்ளாக்கியது அப்பல்லோ நிர்வாகம். இந்தச் சூழலில் தமிழக அரசின் நிலைபாட்டை உறுதியாக எடுத்துரைக்காமல் விட்டுவிட்டனர் அரசு வழக்கறிஞர்கள். ஒரு வேளை அதிமுக அரசே தடையை விலக்க விரும்பவில்லையோ என்னவோ..?

அதனால், உச்ச நீதிமன்றம் ஆணையத்தின் விசாரணைக்கே தடைவிதித்து விட்டது. 27 மாதங்கள் கடந்தும் அதிமுக அரசு அந்த தடையாணையை விலக்க எந்த உருப்படியான முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அப்பல்லோ பிரதாப் ரெட்டியும், அவள் மகள் பிரிதாவும் அன்றைய முதல்வர் பழனிச்சாமியிடமும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.

இதனால்,`’அப்போலோ தரப்பு நீதிமன்றத்தில் வழக்கை ஒத்திவைக்கக் கோரும்போது, குறைந்தபட்சம் ஆட்சேபனையைக்கூட தெரிவிக்காமல், வழக்கு விசாரணை தாமதம் ஆவதை அரசு வழக்கறிஞர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தனர். இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரும் மனு மற்றும் நீதிமன்றத்திலுள்ள தடை ஆணையை நீக்குவதற்கான மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை’ என்று நீதிபதி ஆறுமுகசாமியே வருத்தப்பட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார்!

நீதிபதி ஆறுமுகச்சாமி கடிதம் வெளியான போது ஸ்டாலின் விடுத்த அறிக்கையை அப்படியே இங்கே தருகிறோம்;

”ஊரை ஏமாற்ற ஒரு விசாரணை கமிஷன் அமைத்தார்கள். தற்போதுள்ள அதிமுக அமைச்சர்களோ,  ஜெயலலிதா மறைவால் முதல்வரான ஓ.பன்னீர்செல்வமோ, இப்போது முதல்வராக இருக்கும் பழனிசாமியோ தங்கள் பதவி சுகத்திற்கு இந்த விசாரணை ஆணையத்தை முடக்கி வைத்திருக்கிறார்களே தவிர, அந்த அம்மையாரின் மரணத்தில் உள்ள சதியைக் கண்டுபிடித்து வெளிக் கொண்டுவரத் தயாராக இல்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது.

இவர்கள், ‘ஜெயலலிதா’ மரணத்தையும், விசாரணை ஆணையத்தையும், அர்த்தமற்றவையாக ஆக்கியிருக்கிறார்கள். தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று, திமுக ஆட்சி அமைந்ததும், நான் ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரங்களில் கூறியபடி, மறைந்த ஜெயலலிதா மரணத்தில் உள்ள சதியை விசாரித்து, மர்மக் குற்றவாளிகளின் முகத்திரையை விலக்கி, அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று மீண்டும் உறுதி கூறுகிறேன்.

இந்தச் சதி பற்றி விசாரித்தால், போயஸ் தோட்டம், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ராஜ்பவன் என ஒரு நீண்ட அத்தியாயமாக மாறி விடும்; அதுதான் அதிமுக அரசு காட்டும் தயக்கத்திற்கான காரணம் எனப் பொதுமக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்…” என்றும் ஸ்டாலின் அறிக்கையில் கூறி இருந்தார்.

அதாவது, ஆறுமுச்சாமி ஆணையத்தின் விசாரணை தடைபட்டதைக் கண்டித்துள்ளதோடு, அதன் விசாரணை முழுமையடையும் பட்சத்தில் அது யார்யாரையெல்லாம் பாதிக்கும் என்று பட்டியலை தந்து அதனால் தான் அதிமுக அரசு தயக்கம் காட்டுகிறது என தெளிவாக சொல்லி இருந்தார்.

ஆனால், திமுக வெற்றி பெற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் அப்பல்லோ ஏற்படுத்திய தடையை விலக்க தமிழக அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் எதுவும் முயற்சித்ததாகத் தகவல் இல்லை.

உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகச்சாமி ஆணையம் பற்றி கேட்ட கேள்விக்கான பதில் ஏற்கனவே ஸ்டாலின் பல தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வழங்கப்பட்ட உறுதி மொழியாக இருக்கும் போது, அதை உடனடியாகவோ அடுத்த நாளோ நீதிமன்றத்தில் தமிழக அரசு சொல்வதற்கு என்ன..?

திமுக வெற்றி பெற்ற செய்தி வெளியான அன்றே அப்பல்லோ பிரதாப் ரெட்டியின் மகள் பிரிதா ரெட்டி ஸ்டாலினை அவரது இல்லம் வந்து சந்தித்து வாழ்த்து கூறினார்! தமிழ்நாட்டில் எத்தனையோ தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அப்பல்லோ மட்டும் வந்து சந்திக்க வேண்டிய அவசியம் என்ன..? இதன் பிறகு அப்பல்லோ மருத்துவமனை நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியம் கலந்து கொண்டுள்ளார்.

அப்பல்லோவின் செல்வாக்கு திமுகவையும் திசைமாற்றிவிடுமா..? அல்லது தீர்க்கமாக திமுக, தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுமா..? என்பதை மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time