உண்மைகளை நீண்ட காலம் உறங்க வைக்க முடியாது! அதிகார பலத்தால் பொய்களை நிலைத்திருக்கச் செய்யவும் முடியாது என்பது மீண்டும் ரபேல் விமான ஊழல்கள் பிரான்சில் தோண்டி எடுக்கபடுவதில் இருந்து உணரமுடிகிறது. ஜீலை 2 ல் பிரான்ஸ் அரசு ஒரு நீதி விசாரணையை தொடங்கியுள்ளது. மோடி அரசின் முகத் திரையை கிழிக்கும் இந்த ஊழல் விவகாரத்தை மீடியாக்கள் ஏன் பேச தயங்குகின்றன,,?
சர்சைக்குள்ளான 5,85,000 கோடி ரூபாய் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், பணப் பரிவர்த்தனை, சாதகமாக நடந்து கொள்ளுதல் போன்ற குற்றங்கள் நடந்தேறியுள்ளன என்பதற்கு முகாந்திரம் இருப்பதால் பி என் எப் PNF என்றழைக்கப்படும் பிரெஞ்சு அரசு வழக்காடு துறையின் கோரிக்கையை ஏற்று -இந்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, பிரான்ஸ் அரசு!
மீடியா பார்ட் (Mediapart) என்ற பிரெஞ்சு ஆன்லைன் பத்திரிக்கையில் வந்த (ஏப்ரல் 2021) மிகத்துல்லியமான குற்றசாட்டுகள்,சான்றுகள், ஆய்வுகளின் அடிப்படையில் இவ்விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இந்த புகார்கள் அரசு வழக்காடுதுறைக்கு வந்தபோது விசாரணைக்கு மறுக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது மேலும் பல புலனாய்வு தகவல்களும் சான்றுகளும் மீடியாபார்ட் பத்திரிக்கையில் வந்ததை அடுத்து , மீண்டும் ஊழலுக்கெதிரான தொண்டு நிறுவனம் -ஷெர்பா-அளித்த புகாரை புதிதாக பதவியேற்றுள்ள வழக்காடுதுறை தலைவர் ழான் பிரான்காய் பானட் ஏற்று, நீதி விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை விரைவில் உண்மையை வெளிக்கொண்டுவரும், பல விஷயங்கள் தெளிவாகும் என்று ஷெர்பாவின் வழக்கறிஞர் கூறுகிறார்.
நண்பேண்டா…….
காங்கிரஸ் ஆட்சியில் இந்திய அரசுக்கும் பிரெஞ்சு தசால்ட் நிறுவனத்திற்கும் பல வருடங்களாக 126 ரஃபேல் விமானங்கள் வாங்குவது- 18 விமானங்களை வாங்குவது மீதமுள்ள 108 விமானங்களை தொழில்நுட்ப பகிர்வு நடவடிக்கை மூலம் இந்தியாவிலேயே – இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் லிமிட்டெட்( HAL ) என்ற புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனத்தில் உற்பத்தி செய்வது என்று பேச்சுவார்த்தை நடந்துமுடிந்த நிலையில், திடீரென்று 36 விமானங்களை மட்டும் நம்பமுடியாத அதிக விலை கொடுத்து இந்தியா வாங்க முடிவெடுத்துள்ளதாக 2015 ஏப்ரல் மோடி பாரீஸில் அறிவித்தார்.
இதன்மூலம் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விழுந்தது மரண அடி..!
மேக் இன் இந்தியா என்ற மோடியின் கோஷமும் கோவிந்தா ஆனது.
மக்களின் வரிப்பணமோ சூறையாடப்பட்டது (5.2 பில்லியனிலிருந்து 8.2 பில்லியனாக)
தற்சார்பு நிலை தகர்க்கப்பட்டது; தளவாடங்கள் வாங்கும் சட்டவிதிகள் மீறப்பட்டன!
நேர்மைக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் சாவுமணி அடிக்கப்பட்டது.
மறைந்துபோன மனோகர் பரீக்கர் என்ற அன்றைய ராணுவ அமைச்சருக்கும் தெரியாமல் இந்த ஒப்பந்தம் “திடுமென்று” அறிவிக்கப்பட்டது மோடியால்!
தசால்ட் நிறுவனத்திற்கும் HAL நிறுவனத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை 94% முடிந்த நேரத்தில் தசால்ட் நிறுவனம் அனில் அம்பானி நிறுவனத்துடன் கூட்டுத்தாயாரிப்பில் ஈடுபடவும்,விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கும் ஒப்பந்தம் போடுகிறது என்றால் அதன் பொருள் என்ன?
இந்த கேள்விக்கு முன்னாள் பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹோலன்டேவின் பதில்: “எங்களுக்கு ரஃபேல் விமானங்கள் விற்க வேண்டுமென்றால் , இந்திய அரசு சொல்வதை கேட்பதை தவிர்த்து வேறு வழி இல்லை..” என்பதுதான்.
இராணுவ ரகசியத்தை விட அம்பானியின் நட்பே பெரிது!
ராணுவ மந்திரி மனோகர் பரிக்கருக்கு தெரியாத விஷயம், அன்றைய வெளியுறவு செயலர் ஜெய்சங்கருக்கு தெரியாத ரகசியம் அனில் அம்பானிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே -2012 ஒப்பந்தம் முறியப் போகிறது என்ற விஷயம்- தெரிகிறது! அதற்காகவே அவர் முன்னதாக பிரான்ஸ் நாடு செல்கிறார் மார்ச்26,2015ல் தசால்ட் நிறுவனத்துடன் – வெறுங்கையை வைத்துக்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார்.
இரண்டு வாரங்கள் கழித்து அதாவது, ஏப்ரல் 10,2015ல் மோடி பாரீசில் அறிவிக்கிறார். 2012 ல் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது! புதிதாக இரண்டு நாட்டு அரசுகளுக்கு இடையே 36 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.ஏற்கனவே ஒத்துக்கொண்ட விலையை விட மூன்று மடங்கு அதிகம் கொடுத்து வாங்க இந்தியா முழுமனதுடன் (மகிழ்ச்சியுடன்?) ஒத்துக்கொண்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அம்பானிக்காக மோடி தந்த நிர்பந்தம்
இந்த மாற்றத்திற்கு காரணம் மோடியின் மிரட்டலும் அழுத்தமுமே காரணம் என்று மீடியாபார்ட் சான்றுகளுடன் முறையிடுகிறது. அந்த ஆன்லைன் இதழ் மேலும்கூறுகிறது:” நாங்கள் பார்த்த அந்த ஒப்பந்தம்(தசால்ட்–அனில் அம்பானி ஒப்பந்தம்) ஒரு விஷயத்தை தெளிவாக கூறுகிறது, அம்பானி பெரிய தொழில்நுட்பத்தையோ, பணத்தையோ முதலீடாக கொண்டிருக்கவில்லை. அவர் கொண்டுவந்ததெல்லாம் இந்திய அரசிடம் நெருங்கி காரியம் சாதிக்கக்கூடிய அதன் செல்வாக்கு மட்டுந்தான்.
மார்ச் 26ல் இவ்விரு கம்பெனிகளும் இவ்வாறு ஒப்பந்தம் போடுகிறார்கள் என்றால் இவர்களுக்கு 2012 ஒப்பந்தம் முறிக்கப்பட போகிற விஷயம் எப்படி முன்கூட்டியே தெரிந்தது என்பதுதான்.
ஏனெனில், 126 விமானங்களுக்காக ஹால் H A L நிறுவனத்திடம் பேசிக்கொண்டிருக்கும் போதே ஏற்பட்ட இந்த ஒப்பந்தம் HAL பற்றியோ அதன் பங்கு பற்றியோ குறிப்பிடாமல் புறக்கணித்தது ஏன் என்பது சந்தேகத்தை கிளப்பவில்லையா?
அதனடிப்படையில் மேலும் பல முக்கியமான ஆவணங்களை மீடியாபார்ட் ஆராய்ந்த பொழுது, அவர்களுக்கு தெளிவாக ஒரு விஷயம் புரிந்தது என்றும் அது தசால்ட் ரிலையன்ஸ், அம்பானியுடன் ஒப்பந்தம் போட ஒரே காரணம் அவர் பிரதமருக்கு மிகவும் வேண்டிய நெருக்கமான நபர், அவரை வைத்து காரியங்களை சாதிக்கலாம் என்ற எண்ணம்தான்.
இதற்காக, டி ஆர் ஏ எல் DRAL Dassault Reliance Aerospace Limited என்ற கூட்டு தாபனத்தை மார்ச் ஒப்பந்தம்மூலமாக நாக்பூரில் நிறுவினர். அந்த நேரத்தில் நாக்பூரில் அனில் அம்பானிக்கோ ஒரு சென்ட் இடம்கூடக்கிடையாது.
அனிலுடன் தசால்ட் செய்துகொண்ட ஒப்பந்தம் அனிலுக்கு பலவழிகளில் உதவியது,குறிப்பாக நாக்பூரில் நிலம் வாங்கக்கூட தசால்ட் பணம்தான் உதவியது மட்டுமன்றி, அவருக்கு பெருமளவு கடனும் கொடுத்தது என்கிறது மீடியாபார்ட்.
முதல் இல்லாமல் துவங்கப்பட்ட மோசடி..!
பங்குதாரர்கள் சம்மாக முதல் போட்டு தொழில் துவங்குவது தான் உலக நியதி . ஆனால் மொத்த முதலீட்டுத்தொகையான 169 மில்லியன் யூரோவில் 159 மில்லியன்களை தசால்ட் நிறுவனமே தன்கையில் இருந்து வழங்கியுள்ளது. 94% முதலை தானே போட்டு ஒன்றுக்கும் உதவாத அனில்அம்பானியுடன் கூட்டுசேர்ந்து தொழில் தொடங்க தசால்ட் ஏன் முற்பட்டது?
ரிலையன்ஸ் அம்பானியை பங்குதார்ராக தேர்ந்தெடுத்ததில் இந்திய அரசின் பங்குதான் அதிகமுள்ளது, எங்களுக்கு வேறு வழி ஏதுமில்லை என்ற பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலேன்டேயின் கூற்றுக்குப்பிறகு மீடியபார்ட் நிருபர் வெளிக்கொணர்ந்த இந்த தகவல்கள் மீண்டும் பிரச்சினையை அலச வைக்கின்றது.
2015 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட 36 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒருவழியாக செப்டம்பர் 2016ல் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இடையே கையெழுத்தாகிற்று.
அதற்கு இரண்டு மாதங்கள் கழித்து தசால்ட் ஏவியேஷன் நிறுவனமும் ,அனில் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனமும் பங்குதாரர் ஒப்பந்தத்தை போட்டனர். இதுவே இவர்கள் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று வகைப்படுத்தும் உடன்பாடாகும்.
சுருங்கக்கூறின் அனில் அம்பானி தன் அரசியல் செல்வாக்கினால் இந்திய அரசை தசால்ட் நிறுவனத்திற்கு சாதகமாக நடக்க வளைக்கவேண்டும்.
இந்த வெட்கக்கேடான செயலின் மூலகர்த்தாவான மோடி இதற்காக சட்டங்களையும், விதிகளையும், மரபுகள் மற்றும் மாண்புகளையும் மீறி தான்தோன்றிதனமாக நடந்துள்ளார். இதை கண்டித்து முதலில் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குரலெழுப்பினார். அவரை வசைபாடி ஏளனம் செய்தனர் ஆளுங்கட்சியினரும் அவரது அடிவருடிகளும்.
தொடர்ந்து இந்த பிரச்சினையை முறைகேட்டை எதிர்த்து பா ஜ க வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் பிரபல பத்திரிக்கையாளருமான அருண் ஷோரி, பிரபல பொதுநல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சரும் பா ஜ க தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்கா ஆகிய மூவரும் இணைந்து குரலெழுப்பினர், உச்ச நீதி மன்றத்தில் பொதுநல வழக்கை தொடுத்தனர்.
Also read
முதலில் ராகுல் காந்தியும் பின்னர் அருண் ஷோரி, யஷவந்த் சின்கா போன்றோரும் மற்றும் எண்ணற்ற ஆர்வலர்களும் முன்னாள் அதிகாரிகளும், நல்லெண்ணம் கொண்டோரும் எழுப்பிய கேள்விகள் இவைதான்.
பாஜக அரசால் பதில் தர முடியாத கேள்விகள்
# எதற்காக ஒத்துக்கொண்ட விலையை விட மூன்றுமடங்கு அதிக விலை கொடுக்க வேண்டும்?
# பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் திட்டம் (2012) ஏன் மீறப்பட்டது?
#ஆப்செட் OFFSET AGREEMENT ஒப்பந்தத்தில் இந்திய அரசிற்கு உரிய கண்காணிக்கும் பங்கை மறுதலித்து திறமையற்ற, அனுபவமற்ற இந்திய பங்குதார்ரை ஏன் அனுமதித்தீர்கள்?
# பொதுத்துறை நிறுவனமான H A L நிறுவனத்தை- எழுபது ஆண்டு வரலாறும், இந்திய பாதுகாப்பு துறையில் பெருத்த அனுபவமிக்க, மிக் மற்றும் சுக்காய் ரக விமானங்கள் தயாரிக்கும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தை புறக்கணித்தது ஏன்?
# இன்டர் கவர்மென்ட்டல் அக்ரிமன்ட் IGA என்று சொல்லக்கூடிய ஒப்பந்தப்படி ஏன் சாவரீன் கேரன்டீ பெறப்படவில்லை?
# சட்டத்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் எழப்பிய சந்தேகங்களும் ஆட்சேபனைகளும் ஏன் பதிலளிக்கப்படாமல் அமுக்கப்பட்டன?
# நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல்,நாட்டு நலன்களை முன்னெடுத்து செல்லாமல் எந்த உத்தரவாதமும் இன்றி தசால்ட் நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடி பணம் முன்பணமாக ஏன் கொடுக்கப் பட்டது?
அனில் அம்பானிக்கு கொடுத்து உதவுதற்கா இந்த நாடகமெல்லாம்? இன்று வெளியாகும் ஆவணங்கள் இந்த கள்ள உறவை(Nexus) வெளிச்சம் போட்டு காட்டவில்லையா?
அதிகாரபலத்தால் மறைக்கப்பட்ட நீதி!
அன்று உச்ச நீதிமன்றத்தில் இம்முறைகேட்டை தீர விசாரணைக்கு உட்படுத்தக்கோரிய மனுவை தீர விசாரிக்காமல், தவறான தீர்ப்பை வழங்கி மோடி அரசை இக்கட்டிலிருந்து காப்பாற்றியது உச்ச நீதிமன்றம்.
இந்திய கணக்கு மற்றும் தணிக்கை தீர்ப்பாயமும் தன்பங்கிற்கு, உண்மை விவரங்களை மூடிமறைத்து நாடாளுமன்றத்தையே ஏமாற்றியது நம்மால் மறக்க இயலுமா?
தவறான தகவல்களை கோர்ட்டில் சமர்ப்பித்து நீதிமன்றத்தை ஏன் நீதியையும் கூட திசை திருப்பும் முயற்சிக்கு தலைமை நீதியரசர் துணை போனதும் நாம் மறக்கவில்லை. அதற்காகத் தான் அவருக்கு ராஜ்ய சபா உறுப்பினராகும் வெகுமதி கிடைத்தது என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டது உண்மைதானே.
பல்வேறு வழிகளில் உண்மை வெளிவராமல் பாதுகாக்க மோடிஅரசு முயன்று அதில் பெருமளவு வெற்றியும் பெற்ற நிலையில் – பாறையை பிளந்து வரும் செடி போல – உண்மைகளை வெளிக் கொணரும் முயற்சிகள் பிரான்சில் நடப்பது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்மை நீண்டநாள் உறங்காது என்பதற்கு இந்த நீதி விசாரணை தொடக்கமாக அமையும் என்பதில் ஐயமில்லை.இங்கும் ஒரு பொது விசாரணை , நியாயமான விசாரணை தேவை என்ற கோரிக்கைக்கு இது மேலும் வலு சேர்க்கிறது
-ச.அருணாசலம்
Leave a Reply