ஆவின் ஊழல்; ராஜேந்திர பாலாஜியை காப்பாற்றும் அமைச்சர் நாசர்!

-இராமசாமி

எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்கள் கொடி கட்டிப் பறந்தன!அந்த வகையில்,  பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நடந்த ஊழல்கள் ‘அடேங்கப்பா’ ரகம் !

கமிஷன் , கலெக்‌ஷன், கரப்ஷன் ஆகிய முழக்கங்களை எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக மக்கள் முன்பு முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்தது திமுக !. இந்த சூழலில்தான், அதிமுக அரசில் முடக்கி வைக்கப்பட்டிருந்த சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையை பேரவையின் தாக்கல் செய்தது திமுக அரசு..

அதில் பொதுத் துறை நிறுவனமான ஆவினில் ஆடம்பரமாக பல்வேறு விசயங்களில் தேவையற்ற செலவினங்களை செய்து ஆவினுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருப்பது ஆவின் தணிக்கைத்துறையின் 1000க்கும் மேற்பட்ட பக்கங்களில் அறிக்கையாக உள்ளது!

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியின் அலுவலக அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு 2019-20நிதியாண்டில் மட்டும் தீபாவளி பரிசு வழங்க லெதர் பேக் வாங்கிய வகையில் சுமார் 49லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பதாக கணக்கு காட்டியிருப்பது அந்த ஆண்டு தணிக்கைத்துறையின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது!

வருடத்திற்கு சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் வரவு செலவுகளுடன் இயங்குகிறது ஆவின் நிறுவனம் ! ஆனால், ஆவின் நிறுவனத்துக்கு பால் சப்ளை செய்யும் விவசாயிகளோ இப்போதும் வறுமையின் பிடியில் தான் இருக்கிறார்கள். அதேசமயம், ஆவினில் கோலோச்சும் அதிகாரிகளோ கோடி கோடியாய் கொள்ளையடித்து குவித்துக் கொண்டிருக்கிறார்கள் !

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜியின் ஊழல் லீலைகள் கொஞ்சநஞ்சமல்ல ! தனது வலதுகரமான பலராமனை ஆவின் நிறுவனத்திலேயே இருக்க வைத்து தினம் தினம் கல்லா கட்டியவர் ராஜேந்திரபாலாஜி. அவருடைய கல்லா கட்டும் ஆசைக்கு வசதியாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத்தான் ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக (எம்.டி.) கொண்டு வந்தார் ராஜேந்திர பாலாஜி. அந்த வகையில், ஆவின் எம்.டி.களாக இருந்த காமராஜ், வள்ளலார், நந்தகோபால் ஆகிய மூன்று ஐ.ஏ.எஸ்.களும் பாலாஜிக்காக வசூல் வேட்டை நடத்திய அசகாய சூரர்கள் ! மேலும், துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த கோபால் ஐ.ஏ.எஸ்., எடப்பாடி பழனிச்சாமியின் செயலாளராக இருந்த விஜயகுமார் ஐ.ஏ.எஸ். ஆகிய இருவரும் ராஜேந்திரபாலாஜியின் எதிர்பார்ப்புகளுக்கு எல்லாமுமாக இருந்தனர். இந்த இரண்டு உயரதிகாரிகள் மற்றும் ஆவின் எம்.டி. ஆகிய மூவரின் பின்னணியில் ஊழலில் உண்டு கொழுத்தார் ராஜேந்திர பாலாஜி !

ஆவின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தமிழக முழுவதும் 25 மாவட்ட பால் ஒன்றியங்களுக்கு மேனேஜர்,  டெபுடி மேனேஜர்,  டெக்னிசியன்,  ப்ரைவேட் செக்ரட்டரி,  இளநிலை பொறியாளர் என 15-க்கும் மேற்பட்ட  பணியிடங்களுக்கு  236 நபர்களை  நியமிக்க  ராஜேந்திரபாலாஜி   திட்டமிட்டார்.  உண்மையில் இவை எல்லாமே தேவையற்ற பணியிடங்களே!

இந்த பணி நியமனங்களில் கணிசமாக கோடிகளை சம்பாதிக்க தோதாக நந்தகோபாலை ஆவின் எம்.டியாக்கி ,நினைத்தை நிறைவேற்றிக் கொண்டார் ராஜேந்திர பாலாஜி!

இந்தநிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வந்ததால் பணம் வசூலிக்கப்பட்டிருந்த 236 நபர்களுக்கும் முன் தேதியிட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 8 மாவட்ட பால் ஒன்றியம் மற்றும் ஆவின் தலைமையகத்தில் 236 பேரும் பணியில் அமர்த்தப்பட்டனர். 236 பேர் பணியில் அமர்த்தப்பட்டதற்கு பிறகும், மேலும் வசூல் ஆசையில் தேவைப்படாத நூற்றுக்கு மேற்பட்ட பணி இடங்களை உருவாக்கி, அந்த இடங்களுக்கும் பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது!        இந்த நிலையில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மே 7-ந்தேதி பதவியேற்பதற்கு சற்று முன்பாக மே-4 மற்றும் மே-5 ஆகிய தேதிகளில் சில பணி நியமனங்களையும், வேகவேகமாக பணி நியமனத்துக்கான ஒப்புதலையும் வழங்கினார் நந்தகோபால்.

இதற்கிடையே இந்த நியமனங்கள் மூலம் திரட்டப்பட்ட சுமார் ஊழல் பணம் ராஜேந்திரபாலாஜி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான விஜயகுமார், கோபால், நந்தகோபால், மாவட்ட ஒன்றியங்களின் சேர்மன்கள், பொது மேலாளர்கள் என அவரவர்களின் பதவியின் அடிப்படையில் பங்குகள் பிரிக்கப்பட்டன. இந்த பணி நியமனங்களில் நடந்துள்ள ஊழல்களும், முறைகேடுகளும் முதலமைச்சர் ஸ்டாலினிடமும், தலைமைச் செயலாளர் இறையன்புவிடமும் குவிந்திருக்கின்றன. சட்டரீதியிலான நடவடிக்கையை எடுக்க இறையன்புவுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது.

இது தவிர, சென்னையில் தினசரி வர்த்தக இடங்களுக்கு சப்ளை செய்யப்படும் 6 லட்சம் லிட்டர் பாலை விற்கும்  டீலர்களிடம் தினசரி சட்டத்திற்கு புறம்பாக லஞ்சம் பெற்று வந்துள்ளார் ஆவின் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் ரமேஷ்குமார்!    இதில் பல கோடி ஆதாயம் அடைந்துள்ளார்.

இதற்கிடையே, ரமேஷ்குமாரின் நிர்வாகத்தில் 61 கோடி ரூபாய் ஆவினுக்கு நட்டம் ஏற்பட்டிருப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது கூட்டுறவு துறை குறித்த கணக்கு தணிக்கை ரிப்போர்ட்! பொது மேலாளராக கடந்த 4 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கும் ரமேஷ்குமாரின் இத்தகைய ஊழல்களை அறிந்தும் அவரை யாரும் அசைக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட சூழல்களின் பின்னணியில்தான் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு, தமிழக பால்வளத்துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த கோபாலை மாற்றிவிட்டு, அந்த பொறுப்பில் டி.எஸ்.ஜவஹரையும், ஆவின் நிர்வாக இயக்குநர் நந்தகோபாலுக்கு பதிலாக கந்தசாமியையும் நியமித்தது !

இந்த மாற்றங்களின் மூலம் ஆவின் ஊழல்கள் தடுக்கப்படும் என்றும், ஊழல்களுக்கு காரணமான ராஜேந்திரபாலாஜி மற்றும் ஆவின் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்,முறைகேடான பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு,வசூலிக்கப்பட்ட பணம் திருப்பி அளிக்கப்படும் என்றெல்லாம் ஆவின் நிறுவன ஊழியர்களும், பால் உற்பத்தியாளர்களும் பெரிதும் எதிர்பார்த்தனர். இன்றும் கூட பால் விவசாயிகள் பாலுக்கு கொடுக்கும் பணம் கட்டுபடியாகவில்லை என்றும், முறையாக ஆவினில் பால் கொள்முதல் செய்யப்படுவதில்லை என்றும் தமிழகத்தில் ஆங்காங்கே போராடிக் கொண்டு தான் உள்ளனர்!

இந்த நிலையில்தான், அரசிடம் புகார்கள் குவிந்த நிலையில், நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார் தலைமை செயலாளர் இறையன்பு.

ரமேஷ்குமார் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நிறைய ஆதாரங்கள் உயரதிகாரிகளிடம் இருக்கிறது. அதன்படி அவரை சஸ்பெண்டோ, இடமாற்றமோ செய்துவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

தனக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் ரெடியாவதை அறிந்த கொண்ட ரமேஷ்குமார், விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவனின் உதவியை நாடியதில், அவரது தலையீட்டால் ரமேஷ்குமாரின் இடமாற்றல் உத்தரவை கந்தசாமி. தவிர்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னணியில் என்ன பேரங்கள் பேசப்பட்டன எனத் தெரியவில்லை!

இது மட்டுமின்றி , நான்காண்டு கால ஊழல்களை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பரிந்துரைக்கும் அறிக்கையை  ரெடி செய்த கந்தசாமி பிறகு, துறை அமைச்சரின் அறிவுறுத்தல் காரணமாக அவற்றை ஆவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள விஜிலென்ஸே விசாரிக்கும் என்ற நிலைபாட்டுக்கு வந்துள்ளார்!  இதில் நிச்சயமாக உண்மை வெளிவராது என்பது மட்டுமல்ல, வெளிவரக் கூடாது என்பதற்கு தான் இந்த அணுகுமுறையே!

நடைபெற்ற ஊழல்களை அறிக்கையாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு பரிந்துரைக்கும் அளவுக்கு கூட ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளை  இந்த ஆட்சியில் நகர்த்த முடியவில்லை என்பது தான் மிகப் பெரிய வேதனை. மேலும் தற்போதைய அமைச்சர் ஆவடி நாசரும், ஆவினில் மற்றுமொரு ராஜேந்திரபாலாஜியாக தான் வலம் வர விரும்புகிறார்!

கடந்த நான்காண்டுகளாக ஆவினில் நடந்த பல நூறு கோடி ஊழல்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்களா என்பது இப்போதே கேள்விக் குறியாகிவிட்டது. காரணம், கந்தசாமியை அரசியல் தலையீடுகள் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பார்களா எனத் தெரியவில்லை.

தற்போதைய அமைச்சர் ஆவடி நாசரும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் ஏதோ ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கிற்கு வந்துள்ளதாக பாலவளத் துறையில் பேசப்படுகிறது. ராஜேந்திர பாலாஜி பின்பற்றிய பல வழிமுறைகளை தானும் பின்பற்றி பணம் சம்பாதிப்பது குறித்த ஆர்வமே இன்றைய அமைச்சரிடம் மேலோங்கி உள்ளதாக தெரிகிறது! அதிமுக ஆட்சியில் பால் கொண்டு வரும் டேங்கர் லாரியைக் கடத்தி அதில் தண்ணீரை கலந்ததற்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட அதிமுக புள்ளியான வைத்தியநாதனின் சகோதரருடன் மிக அணுக்கமாக சுற்றி வருகிறார் அமைச்சர் நாசர். இதையடுத்து ஏதோ சொல்ல வேண்டுமே  என்பதற்காக ராஜேந்திர பாலாஜி தீபாவளிக்காக 1,500 கிலோ மில்க் ஸ்வீட்டை ‘லபக்’ செய்த விவகாரத்தையும்,பொத்தாம் பொதுவாக ஊழல்கள் நடந்துள்ளன என்று மட்டும் பேசி, மற்ற பல பெரிய ஊழல்களை பேசாமல் தவிர்த்து விட்டார் நாசர்.

இப்படியாக அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் அனைத்தையும் பூசி மெழுகி, மறைக்க தற்போதைய அமைச்சர் ஆவடி நாசர் முயற்சிப்பது தான் தற்போது ஆவினில் பெரிய பேச்சாக உள்ளது!

தலைமைச் செயலக உயரதிகாரிகளின் உத்தரவை அமைச்சர் நாசர் நிர்பந்தத்தால் இப்படி நீர்த்துப் போக வைத்திருப்பதையறிந்த நேர்மையான அதிகாரிகள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஆவினில் இப்போதும் திமுக ஆட்சியின் பேரால், அதிமுக ஆதிக்கமே நிலவுகிறது. காரணம், அதே போல பணம் சம்பாதிக்கும் நோக்கமுள்ளவர் துறையின் பொறுப்பை ஏற்று இருப்பதே!

இந்த நிலையில், அ.தி.மு.க ஆட்சியில் தினசரி 36 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு உற்பத்தியிலும், விற்பனையிலும் தலா மூன்று லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது.சென்னையைப் பொறுத்தவரையில் தினசரி பால் விற்பனையின் அளவு 13 லட்சம் லிட்டரில் இருந்து 15 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.

இந்த நல்ல செய்தியுடன், ஒரே ஆறுதல் சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகள் முறையை ரத்து செய்து பழைய நடைமுறையை அமல்படுத்த ஆணைப் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஆவின் நிறுவனத்தில் கூட்டுறவு சங்க விதிகளை மீறி கடந்த அதிமுக ஆட்சியில் இடைத்தரகர்களாக நியமனம் செய்யப்பட்ட C/F ஏஜென்ட் (சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்) எனும் இடைத்தரகர்கள் முறையை ரத்து செய்து உத்தரவிட்டு, ஆண்டுக்கு சுமார் 18 கோடி ரூபாய் வரை ஏற்பட்ட இழப்பை தடுத்து நிறுத்தி உள்ளார் கந்தசாமி! ஆயினும் அந்த 25 பைசா கமிஷன் இன்றும் தொடர்கிறது.

ஆவின் நிறுவனத்தின் எம்.டி.யாக நியமிக்கப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மட்டும் மாற்றினால், நேர்மையான நிர்வாகத்தை தந்து விடமுடியாது. ஆக்டோபஸ் மாதிரி நீண்ட வருடங்களாக ஆவினை ஆக்ரமித்திருக்கும் ஊழல் பெருச்சாளிகளான பொது மேலாளர்கள் தொடங்கி அத்தனை அதிகாரிகளையும் குற்றச்சாட்டுகளின் தன்மைக் கேற்ப தற்காலிக பணி நீக்கமும், இடமாறுதலும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு துறையிலும் ஊழல் செய்த அதிகாரிகள் 4 பேரை சஸ்பெண்ட் செய்து அவரது சொத்துக்களை பறிமுதல் செய்தால் தான் ஊழல் செய்ய அதிகாரிகள் தயங்குவார்கள். அப்படிப்பட்ட துணிச்சலான நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் அரசுக்கு உறுதிப்பாடு இருக்கிறதா எனத் தெரியவில்லை.

இது குறித்து தமிழ் நாடு பால் முகவர்கள், நலச் சங்கத்தின் தலைவர் சு.பொன்னுசாமியிடம் பேசிய போது, ‘’தொழிலாளர்கள் லட்சக்கணக்கான ஏழை,எளிய பால் விவசாயிகள் கஷ்டப்பட்டு மாட்டுக்கு தீவனம் தந்து பால் கறந்து கொண்டு தரும் பாலுக்கான பணம் அவர்கள் கைக்கு இரண்டு மூன்று மாதங்கள் கடந்தே கிடைக்கிறது! அதிலும் சாக்கு,போக்கு சொல்லி பணத்தை குறைத்து தருவார்கள்! அந்த எளியவர்கள் தரும் பாலை விற்பனை செய்வதற்கு 25 ஒன்றியங்கள், அதற்கான அலுவலங்கள், நிர்வாக செலவுகள் இத்தனை அதிகாரிகள், அலுவலர்கள், அவர்களுக்கான சலுகைகள், கார், பெட்ரோல் செலவுகள், நல்ல சம்பளம் இத்தனையும் ஆடம்பரம் தான்! ஐந்து மார்கெட்டிங் அலுவலகம் போதுமானது! கூடுதல் அதிகாரிகள்,பணியாளர்களைத்  தவிர்த்தாலே பல கோடிகள் மிச்சமாகும்! ஆவின் நிர்வாகத்தை கூட்டுறவு முறையில் குஜராத்தின் அமுல் போலவோ, கர்நாடகத்தின் நந்தினி போலவோ செய்தால் பலன் முழுவதுமாக உழைப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.’’ என்றார்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time