எப்படி, எந்த தகுதியில் மத்திய அமைச்சரானார்.. எல்.முருகன் ?

-சாவித்திரி கண்ணன்

தமிழ்நாட்டை விட்டுவிடக் கூடாது இந்தியாவின் மிக முக்கிய மாநிலமான தமிழ் நாட்டிற்கும் அமைச்சரவைரையில் ஒரு பிரதிநிதித்துவம் வேண்டும் என்று பாஜக மேலிடம் முடிவெடுத்த போது, அவர்கள் தோழமை கட்சியான அதிமுகவிற்கு தான் அதை முதலில் கொடுக்கத் திட்டமிட்டனர். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

ஒன்று எந்த காரணத்தைக் கொண்டும் பாஜகவை மீறி அதிமுக செயல்படாது என்பது மட்டுமல்ல. பாஜகவின் மீதான அதிமுக விசுவாசத்தை நிலைபெறச் செய்யவும் இது உதவும்.

இரண்டாவது அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் – குறிப்பாக பன்னீர் மற்றும் எடப்பாடி பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் தமிழ்கத்தின் பாஜகவிற்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தொடர்ந்து அது போஷகராக இருந்து நிதி உதவியில் தாராளம் காட்டியது.

ஆனால், அதிமுகவில் மிக சீனியராக இருக்கும் தம்பித்துரையா? இளைஞரான ரவீந்திரநாத்தா? என்பதில் கட்சிக்குள் ஒருமித்த முடிவை எட்டமுடியவில்லை. நியாயப்படி சீனியரான தம்பித்துரைக்கு தந்துவிடுவோம் என எடப்பாடி உள்ளிட்ட பெரும்பாலோர் நினைத்தனர். ஆனால்,ஒ.பி.எஸ் தன் மகனைத் தான் மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று பிடிவாதம் காட்டவே முடிவுக்கு வரமுடியவில்லை! சசிகலா பக்கம் செல்லாமல் இருக்க ஒ.பி.எஸ்ஸை சமாதானப்படுத்தும் விதமாக ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சராக்கலாம் என்றால் கூட, அவர் டெல்லியில் அதிமுகவையே பாஜகவிற்கு அடகு வைத்துவிடுவார் என்ற அச்சமும் அனைவர் மனதிலும் இருந்தது.

ஆனால்,என் மகனுக்கு கிடைக்காத மத்திய அமைச்சர் பதவி அதிமுகவிற்கே வேண்டாம் என்ற ரீதியில் பன்னீர் உறுதி காட்டவே அதிமுக மேலிடம் தவிர்த்துவிட்டது.

எனவே, தமிழக பாஜகவில் யாருக்காவது கொடுக்கலாம் என்ற போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பெயர்கள் ஹெச்.ராஜா, அண்ணாமலை, கே.டி.ராகவன் ஆகியோரே!

ஹெச்.ராஜா உணர்ச்சிகரமானவர், கடுஞ் சொற்களை உதிர்ப்பவர் மட்டுமல்ல. சமயங்களில் அவரை கட்டுப்படுத்துவது சிரமம் என்பதால் அவர் கைவிடப்பட்டார்.

அண்ணாமலை புதியவர் இன்னும் அனுபவம் வரட்டும் என்று முடிவெடுத்தனர்.

கே.டி.ராகவன் கடுமையாக லாபி செய்தார். மேலிடத்தில் பாஜக பொதுச் செயலாளர் சந்தோஷ் மூலமாக பெருமுயற்சி செய்துள்ளார். இருவருமே பிராமணர்கள்! ஆனால், ராகவன் களத்தில் இறங்கி செயல்பட ஆர்வம் காட்டாதவர். பேசுவாரே தவிர, செயல்பாடுகள் போதாது என நிராகரிக்கப்பட்டார்.

ஆனால், யாரும் எதிர்பாராவிதமாக எல்.முருகன் ஜனாதிபதி ராம்நாத் மூலமாக மிக நுணுக்கமாக காய் நகர்த்தியுள்ளார். முருகன் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்தவர். தேசிய எஸ்.டி.எஸ்.சி கமிஷனின் துணைத் தலைவராக மூன்றாண்டுகள் இருந்துள்ளார். அந்த சமயம் தன்னுடைய டெல்லி தொடர்புகளை நன்கு வலுப்படுத்திக் கொண்டார். ராம்நாத் கோவிந்த் 1998 முதல் 2000 ஆண்டு வரை பாரதீய ஜனதாக் கட்சியில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர் பிரிவின் தலைவராக இருந்தவர். 1998 முதல் 2002 ஆம் ஆண்டு வரை பாஜக தலித் மோர்ச்சா தலைவராகவும் செயல்பட்டவர். அந்த காலகட்டங்களில் அவர் தமிழ் நாட்டிற்கு வந்த போது அன்றைக்கு தமிழக பொறுப்பில் இருந்த இல.கணேசன் உள்ளிட்டவர்கள் அவரை மிகவும் அலட்சியமாக நடத்தியுள்ளனர். தமிழக பாஜகவில் இருந்த ஒரு வலுவான பிராமண அதிக்கம் அன்றே அவருக்கு சில கசப்பான அனுபவங்களை தந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே, தமிழ்நாட்டில் இருந்து ஒரு தாழ்த்தப்பட்டவர் மத்திய இணைஅமைச்சர் ஆவதற்கு அவரது ஆசிர்வாதமும் இருந்ததாக சொல்கிறார்கள்!

இதற்கு முன்னதாக எல்.முருகனை தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகற்றவும் ஒரு லாபி நடந்துள்ளது. கடந்த ஓராண்டாக அவர் தலைமையில் கட்சிக்கு எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. நிறைய ரவுடிகளையும், நடிகர், நடிகைகளையும் தான் கட்சியில் சேர்த்தாரேயன்றி, கட்சிக்குள் பொது மக்கள் பல தளங்களில் இருந்தும் வந்ததாக சொல்ல முடியவில்லை. சட்டமன்ற தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்டு வெறும் நான்கு இடங்களில் மட்டுமே கட்சி வெற்றி பெற்றது. இது மட்டுமின்றி பெண்கள் விஷயத்தில் அவர் மிக பலவீனமாக மட்டுமீறிச் சென்ற குற்றச்சாட்டுகளும் மேலிடத்திற்கு ஏராளமாக சென்றுள்ளது. இதன் காரணமாக தமிழக பொறுப்பில் இருந்து அவர் கண்டிப்பாக விடுவிக்கப்பட்டால் தான் கட்சி உருப்படும் என முயற்சிகள் நடந்து கொண்டிருந்ததன!

எல்.முருகனை பொறுத்த வரையில் தலைமைக்கு அவரிடம் பிடித்த விஷயம்! அவர் சொல்லுகின்ற கட்டளைகளை கேள்விக்கு இடமின்றி கேட்டு நடப்பவர். எஸ்.டி.எஸ்.சி கமிஷன் தேசிய தலைவராக இருந்த போது, இதை அவர் ஆர்.எஸ்.எஸ்சுக்கும், பாஜக தலைமைக்கும் நிருபித்து காட்டியுள்ளார். அவர்களுக்கு தேவை ரப்பர் ஸ்டாம்பாக சொல்வதை செய்யும் ஒரு நபர். கண்ணியமான, அறிவார்ந்த – திறமைக்குரிய நபரல்ல! எல்லா அமைச்சரவை முடிவுகளையும் பிரதமர் அலுவலத்தில் உள்ள உயர் அதிகாரிகள் தான் எடுக்கின்றனர். எடுக்கப்பட்ட முடிவுகளை கையெழுத்திட்டு அங்கீகரிப்பதை தவிர பெரிதாக அமைச்சர்களுக்கு வேறு பொறுப்பில்லை. இதற்கு பல வகையிலும் எல்.முருகன் தான் இன்றைய சாய்ஸ் என்பதே பாஜக மேலிடத்தின் கணக்கு!

சாவித்திரிகண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time