சென்னைக்குக் கூடுதல் குடிநீர் வழங்கிட, காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டுவர ரூ.5000 – ரூ6000 கோடியில் சிறப்புத் திட்டம் ஒன்று விரைவில் செயற்படுத்தப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். ஆனால், நீர்வள வல்லுநர் டாக்டர் எஸ்.ஜனகராஜன் ‘இது ஒரு தேவையற்ற வீண் செலவுத் திட்டம்” என்றும் ‘சென்னை மாநகரப் பகுதியில் ஆண்டுதோறும் பெய்யும் மழையினை (1350 மிமீ) முறையாகச் சேமித்து வைத்தாலே கூடுதலாகச் சுமார் 50 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்; சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையினை இதைக் கொண்டே நிறைவு செய்யலாம்” என்றும் தெரிவித்தார்.
சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலுள்ள 4100 சிறிய மற்றும் பெரிய ஏரிகளை ஒழுங்காகத் தூர்வாரி சிறிது ஆழப்படுத்தினாலே போதும். சென்னைப் பகுதிகளில் சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மாவட்டங்களில் மூன்று, நான்கு ஆண்டுகளுக்கொரு பெருமழை பெய்து பெரு வெள்ளம் ஏற்படும்போது ஏறக்குறைய 100 டி.எம்.சி தண்ணீரை வீணே கடலில் விடுகிறோம். இதைத் தடுத்து குறைந்த செலவில் ஆக்கபூர்வமான திட்டங்களைத் தயாரித்து காலக் கெடுவுடன் நிறைவேற்றினாலே சிறந்த பயனைப் பெறலாம் என்றும் அவர் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
இதில் என்னுடைய கருத்துக்கள் சிலவற்றை தெரிவிக்கிறேன்;
# சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கிட பூண்டி நீர்த்தேக்கம்,புழல் ஏரி,சோழவரம் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள்அமைந்துள்ளன. இந்த நான்கு ஏரிகளையும் தூர்வாரி மேலும் ஒரு மீட்டர் அளவுக்கு ஆழப்படுத்தினாலே கூடுதலாக மூன்று டி.எம்.சி தண்ணீர் பெற முடியும் இதற்கு சுமார் ரூ 300 கோடி செலவழித்தால் போதுமானது!
# மேலும் சென்னைக்கு ஆந்திராவின் கிருஷ்ணா நதி கால்வாயிலிருந்து 12 டி.எம்.சி தண்ணீர் வர வேண்டியுள்ளது! ஆனால், இது வரை கிடைத்த புள்ளி விவரங்களைப் பார்த்தால் ஆண்டுக்கு 5 டி.எம்.சி கூட நமக்குத் தருவதில்லை.
# வீராணம் ஏரியிலிருந்தும் (காவிரியாற்று நீர் தான்) ஆண்டுக்கு 2 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கிறது. இந்த நீர் குறையும் போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்களிலிருந்து நிலத்தடி நீரும் நீரேற்றம் மூலமாகச் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.
# இவை தவிர மீஞ்சுர் நெம்மேலி முதலியவற்றிலிருந்து கடல் நீரைக் குடிநீராக்கி 300 எம்.எல்.டி அளவு தண்ணீர் சென்னை மக்களுக்கு நாள்தோறும் வழங்கப்படுகிறது. இத்துடன் சென்னை மாநகருக்கு வெளியிலுள்ள நூற்றுக்கணக்கான விவசாயக் கிணறுகளிலிருந்து நீரை இறைத்து சென்னைக் குடிநீர் வாரியம் லாரிகளின் மூலமாகச் சென்னை மக்களுக்கு வழங்குகிறது.
# எனவே, இதற்கு மேலும் சென்னைக்குக் குடிநீர் வழங்கிடக் காவிரியிலிருந்து நீரேற்றும் திட்டம் தேவையற்றது. ஏதோ சென்னை நகர மக்கள் மட்டும் தான் முதல்தரக் குடிமக்கள் எனக்கூடுதல் சலுகைக் கொடுப்பது சரியன்று. காவிரி பாயும் பல பகுதிகளில் சேலம், நாமக்கல், துறையூர், பெரம்பலூர், அரியலூர்) சிற்றூர்களில் வாரத்திற்கு ஒரு முறை கூட குடிநீர் கிடைக்காத நிலைமை இருக்கிறது. இந்நிலைமை மாற்றப்பட வேண்டும். இத்தகைய ஊரகப்பகுதிகளுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது இந்த அரசின் – அமைச்சரின் முதற்கவனமாக இருக்க வேண்டும்.
# கடந்த கால அதிமுக அரசில் மாநகர மற்றும் நகரப் பகுதிகளுக்கு முன்னுரிமை தந்து சிற்றூர்ப் பகுதிகளைத் திட்டமிட்டே தவிர்த்தனர். இது சரியான அணுகுமுறையன்று. பெரிய நகர மக்கள் ஊரகச் சிற்றூர் மக்களிடையே பாகுபாடு பார்க்க கூடாது.
# மேலும் காவிரி மிகை வெள்ள நீரைப்பயன்படுத்தி பல்வேறு திட்டங்கள் காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் மற்றும் சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் ஆகிய பல திட்டங்கள் நபார்டு வங்கியின் நிதி உதவியோடு செயற்படுத்திட தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் ஒப்புதலுக்காக பல ஆண்டுகளாகக் காத்திருப்பில் உள்ளன. எனவேஇ காவிரியிலிருந்து மிகை நீரை மேற்குறிப்பிட்ட ஊரகப்பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும் திட்டங்களுக்குப் புதிய அரசு முன்னுரிமை தந்து விரைவாகச் செயற்படுத்திட வேண்டுகிறோம்.
# சென்னையில் இனி, பன்மாடி அடுக்குக் கட்டடங்களைக் கட்ட அனுமதிக்கக்கூடாது.
i. 1960 இல் சென்னை நகரின் மக்கள் தொகை 6.00 லட்சம்.
ii. 2020 இல் சென்னை மாநகரின் மக்கள் தொகை 70.00 லட்சம் கட்டிய கட்டடங்கள் பரப்பு 85 சதவீதமாகவும் காலியான நிலப்பரப்பு 15மூ சதவீதமாகவும் இருந்தது. சென்னை மாநகரில் மக்கள் நெருக்கம் மிக,மிக அதிகம்.
iii. சாலைகளில் செல்லும் ஊர்திகள் கடந்த 20 ஆண்டுகளில் 15 மடங்குக்கு மேல் கூடுதலாகியுள்ளன. இவற்றில் பாதிக்கு மேல் நிறுத்த இடமில்லாமல் வீதிகள் மற்றும் சாலைகளின் இரு ஓரங்களிலும் நிற்கின்றன. இப்பொழுதே சென்னையின் முக்கிய சாலைகளில் ஊர்ந்து செல்லும் நிலைமை உள்ளது. எனவே சென்னை மாநகரை வாழுமிடமாக்க கீழ்க்கண்ட எச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும்.
Also read
1. சென்னை மாநகரப் பகுதிகளில் புதிதாக யாரையும் குடியேற (புலம் பெயர் தொழிலாளர்கள் உட்பட) அனுமதிக்கக் கூடாது.
2. சென்னை மாநகரப் பகுதிகளுக்குள் புதிதாகப் பன்மாடிக் கட்டடங்களைக் கட்ட அனுமதிக்கக் கூடாது.
3. வாகன நிறுத்துமிடம் தனியாக உள்ளவர்களுக்கே வாகனங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்; வீதி நிறுத்தங்கள் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் .
4. குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்றல் முறைகள் நவீனப்படுத்தப்பட்டு- நீர் நிலைகளுக்குள் கழிவுநீர்க் கலப்பதை முற்றிலும் தடுத்திட வேண்டும்.
5. நீர்நிலைகளுக்குள்ளும் அரசுப் பொதுச் சொத்திடங்களிலுமுள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்
இவற்றை முறையாக விரைவாகச் செய்தால் தான் 2030 ஆம் ஆண்டில் சென்னை மாநகரம் வாழத்தக்கதாக இருக்கும். இல்லாவிடில், நெரிசலில் சிக்கிச் சிரமங்களை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது. சென்னையை மற்றொரு பெங்களூருவாகவோ,பேங்க்காக வோ சென்னையை மாற்றாதீர்கள்.
கட்டுரையாளர்;
பொறிஞர் முனைவர் அ.வீரப்பன்
முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளர் ,
பொதுப் பணித் துறை
கைபேசி 94444 04774
மின்னஞ்சல்: [email protected]
நேசமணி
ஆறாயிரம் கோடியில் சென்னைக்கு காவேரி தண்ணீர் தேவையா..?
-பொறியாளர் அ.வீரப்பன் – நன்றி அறம் சாவித்திரி கண்ணன்