ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்த அதிமுக அரசு!

-சாவித்திரிகண்ணன்

வெறும் சம்பிரதாயத்திற்காக,

ஒரு சடங்கை நிறைவேற்றுவது போல,

நாங்களும் சட்டமன்றத்தில் ஜனநாயக பூர்வமாக எதிர்கட்சியோடு விவாதித்து மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து தான் செயல்படுகிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக மூன்று நாட்கள் கலைவாணர் அரங்கத்தில் கூடவுள்ளது சட்டமன்றம்!

இதில் முதல் நாள் இறந்த சட்டமன்ற உறுப்பினர்கள்,தலைவர்களுக்கான இரங்கல் நிகழ்வில் போய்விடும்! அடுத்த இரண்டு நாட்களில் ஏராளமான சட்ட மசோதாக்கள் அவசர கதியில் அறிவிக்கப்பட்டு விவாதமின்றி நிறைவேறவுள்ளது.

முக்கியமாக எட்டுமாதத்திற்கான துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன விடுபட்டுள்ளது,எவற்றை கூடுதல் கவனப்படுத்த வேண்டும் என்றெல்லாம் விவாதம் நடத்தவே வாய்ப்பில்லை! மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்டமசோதா அதிரடியாக அறிமுகப்படுத்தப்பட்டு விவாதமின்றி நிறைவேறிவிடும்! அவ்வளவு தான்!

இன்றைக்கு மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் ஏராளமான பிரச்சினைகளைப் பற்றி விவாதம் நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரியவில்லை! முக்கியமாக கொரானாவை எடப்பாடி அரசு கையாண்ட விதம் பற்றிய எந்த விமர்சனத்தையும் கேட்க ஆட்சியாளர்கள் தயாரில்லை!

# மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுசூழல் மசோதா.

# மாநில அரசின் அதிகாரத்தை முற்றிலும் பறித்து, ஏழை குழந்தைகளை கல்விக் கூடத்திலிருந்து வெளியேற்றும் மோசமான கல்விக் கொள்கை.

# சாத்தான்குள இரட்டை கொலை விசாரணையில் உள்ள தடங்கல்கள்.

# ஸ்டெர்லைட் தொடர்பாக நீதிமன்றம் கொடுத்த தடையை சாதகமாகக் கொண்டு அரசின் கொள்கை முடிவாக ஆலை மூடலை ஏன் அறிவிக்கமறுக்கிறீர்கள் என்பதற்கான விளக்கம்

# கொரானாவை காரணம் காட்டி நடக்கும் அத்துமீறல்கள்,ஊழல்கள்,சுருட்டல்கள்..!

# கடந்த ஐந்தரை மாதமாக மக்கள் சந்திக்கும் பொருளாதார பிரச்சினைகள்,வேலை இழப்புகள்

# நெல் கொள்முதல் நிலையங்கள் போதுமான அளவில் இல்லாததால் விவசாயிகள் சந்திக்கும் இழப்புகள், பிரச்சினைகள்

# பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் நடந்த 120 கோடி ஊழல்.

# மழைகாலம் வரவுள்ளதால் எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்…!

இப்படி எதையுமே விவாதிக்க வழியில்லை என்றால் எதற்கு பல கோடிகளை செலவழித்து சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்?

கொரானா காலம் தான் காரணம் என்றால்,கர்நாடகத்தில் எப்படி எட்டு நாட்கள் நடத்த முடிவெடுத்துள்ளனர்.அதுவே போதாது என்று சித்தராமையா கொந்தளிக்கிறார்.

மார்ச்சில் நடந்து கொண்டிருந்த சட்டமன்ற கூட்டத்தொடர் கொரானா காரணமாக சுமார் 15 நாட்கள் முன்பாகவே அதிரடியாக நிறுத்தப்பட்டது. அப்போதே பல விவகாரங்களை விவாதிக்க முடியாமல் போனது!

சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனும், ‘’நாங்கள் கூடுதல் நாட்கள் நடத்த எவ்வளவோ கேட்டோம், மறுத்துவிட்டார்கள்’’ என்று சொல்லியதோடு அமைதியாகிவிட்டார். தமிழக எதிர்கட்சிகள் இந்த விசயத்தில் அரசை காட்டமாக விமர்சிக்க வேண்டும். அரசின் பேச மறுக்கும் கோழை தனத்தை அம்பலப்படுத்த வேண்டும். நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்று மோடி அரசு செய்த முடிவைப் போல கேள்விக்கு நேரமில்லாமல் தமிழக அரசு சட்டசபையைக் கூடுகிறது.

ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் தந்த வாய்ப்பு என்பதை மறந்து ஏதோ தாங்கள் முதல் போட்டு நடத்தும் பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல செயல்படுகிறது அதிமுக அரசு! எங்கே விவாதத்திற்கு அனுமதித்தால் தாங்கள் அம்பலப்பட்டுவிடுவோமோ என்ற அச்சமே சட்டசபையை மூன்றே நாட்களில் முடிவுக்கு கொண்டு வரும் அவசரத்திற்கு காரணமாகும்!

எந்த வெளிப்படைத் தன்மையுமற்று, கமுக்கமாக,கள்ளத்தனமாக செயல்படுவதற்கு பெயர் அரசாங்கமல்ல! அராஜகம்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time