தீமைகளின் திருவடிவே தினமலர்!

-சாவித்திரி கண்ணன்

வன்மமே வடிவமாக, வெறுப்பே வேலை திட்டமாக, ஒரு குறிப்பிட்ட சாதி மேலாதிக்கத்தை உறுதிபடுத்துவதையே உள்ளார்ந்த இயக்கமாகக் கொண்டு வெளிவரும் ஒரே நாளிதழ் உலகத்திலேயே தினமலராகத் தான் இருக்கும். உள் நோக்கங்களுக்கு கற்பனை வடிவம் தந்து தலைப்பு செய்தியாக்கும் – இதழியல் தர்மத்திற்கே எதிரான – போக்குகளை அனுதினமும் செய்து மக்களிடையே குழப்பத்தையும்,கொந்தளிப்பையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது தினமலர்!

சுருங்க சொல்ல வேண்டுமென்றால், உலகில் உள்ள தீமைகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து பார்த்தால் அது தினமலராக வெளிப்படுவதை உணரலாம்.

விலை போகக் கூடிய அரசியல் தலைவர்களை தங்கள் வேலை திட்டத்திற்கு தக்க அறிக்கை வெளியிட வைத்து செய்தி போடுவதும் இவர்கள் வாடிக்கை!

யார் கேட்டது கொங்கு நாடு..?

கொங்கு நாடு என்ற விருப்பமோ, கோரிக்கையோ மக்களிடமிருந்து எழவில்லை!

அப்படி அறிவிப்பதற்கான எந்த தேவையும் மக்களிடம் இல்லை.

மொழியின் பெயரால் ஒன்றுபட்டிருக்கும் மக்களை பிரித்து, அவர்களை நீர் பங்கீடு உள்ளிட்ட பல விவகாரங்களில் முட்டிமோத வைத்து ஆதாயம் அடையத் துடிக்கும் உள் நோக்கத்தை என்னென்பது?

கொங்கு நாடாம்! யூனியன் பிரதேசமாம்! இதை கொங்குவில் போய் சொல்லிப் பார்க்கட்டும் தினமலர்- நொங்கு எடுத்துவிடுவார்கள் மக்கள்!

இப்படி ஒரு யோசனை ஒரு பத்திரிகைக்கு தோன்றினால் அதற்கான நியாயங்களைக் கூறி எழுதலாம்!

ஆனால், ஸ்டாலினுக்கு விளையாட்டுக் காட்ட பலே திட்டமாம்!

ஸ்டாலின் என்பவர் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்! அவருக்கு விளையாட்டு காட்டுவதற்கான விளையாட்டுப் பொருளா தமிழ் நிலப்பரப்பு..? ஒரு தனி நபர் சார்ந்த சொந்த விருப்பு, வெறுப்பில் ஒரு பெரு நிலப்பரப்பின் மக்கள் வாழ்வாதாரத்தையே அழிக்கத் துணியும் கயமைத்தனத்தை என்னென்பது…?

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நாளிதழ் தன் சொந்த அஜந்தாவையே அல்லது கற்பனையையே தலைப்பு செய்தியாக்குவதா..?

”கொங்கு மண்டலத்தை உருவாக்கப் போகிறோம்” என  ஒன்றிய அரசு எங்கேயும், எப்போதும் குறிப்பிடவில்லை. ஆனால், அந்த அரசு சம்பந்தப்பட்ட கட்சியில் அந்த கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் அமைச்சராக்கப்பட்டுள்ளாராம். மற்ற ஒருவர் தலைவராக்கப்பட்டுள்ளாராம். இன்னொருவர் மகளிர் அணியின் தலைவாராக நியமிக்கப்பட்டுள்ளாராம். பாஜக என்ற கட்சி இந்த குறிப்பிட்ட நிலப்பரப்பில் காலூன்ற வேண்டும் என்பதற்காகத் தான் இந்த நியமனங்களும், தமிழகத்தை பிரிக்கும் முயற்சியுமாம்! இந்த வியாக்கியானங்களையும் தினமலரே எழுதுகிறது!

அதாவது, தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் ஒரு கட்சி, தன்னால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை என்பதற்காக தன்னிச்சையாக தமிழகத்தை பிரித்துவிடவுள்ளது என்பது தான் தினமலர் பட்டவர்த்தனமாக சொல்லியுள்ள கருத்தாகும்.

மேற்கு வங்காளத்தை இரண்டாக பிரிப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது! ஏனென்றால், கொஞ்சம் பொறுத்தால்  வங்கத்தை முழுசாக முழுங்க முடியும் என்ற நம்பிக்கை அதற்கு ஏற்பட்டுவிட்டது!

தமிழ்நாட்டை விட, இரண்டரை மடங்கு பெரிய உத்திரபிரதேசத்தை முழுமையாக ஆட்சி செய்வார்களாம். ஏனென்றால், அங்கு அவர்களால் வெற்றி பெற்று ஆட்சி செய்யமுடியும்!

தமிழ்நாட்டை பாஜக முழுதாக ஆட்சி செய்யும் வாய்ப்பை கனவில் கூட காணமுடியாது என்பதால், ஏதோ இரண்டே இரண்டு  எம்.எல்.ஏ வாய்ப்பு கிடைத்த மண்ணை முழுதாக அபகரிக்கலாமென நினைத்து பிரிக்கத் துடிக்கிறார்கள் போலும்!

பக்கத்து மாநிலமான ஆந்திரத்தில் இருந்து தெலுங்கானாவை பிரித்து தனி மாநிலம் காண வேண்டும் என்ற போராட்டம் கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து பல கலவரங்கள், துப்பாக்கிச் சூடுகள், உயிரிழப்புகள்..எல்லாம் நிகழ்ந்து இறுதியாக இரண்டானது. இதனால் தெலுங்கானா வளர்ந்ததா என்றால் இல்லை தேய்ந்தது தான் கண்ட பலன்! ஆனால், அங்கு அப்பகுதி வாழும் மக்களிடம் அந்த அபிலாஷைகள் இருந்தது! தவிப்பு இருந்தது. அது வெளியில் இருப்பவர்களால் திணிக்கப்பட்ட பிரிப்பல்ல!

ஆயினும், இன்று தண்ணீர் பங்கீடு தொடங்கி பல்வேறு விவகாரங்களை தீர்க்கமுடியவில்லை. சந்திரசேகரராவ் என்ற தனி நபரின் குடும்ப சொத்தாக மாறிப்போனது தெலுங்கானா. அவர் இன்று பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறார். அப்படியாக கொங்கு மண்டலத்தில் ஒரு கைப்பாவையை முதலமைச்சராக்கி யூனியன் பிரதேசம் என்ற பெயரில் உரிமைகள் அற்ற – ஒன்றிய அரசின் நேரடி நிர்வாகத்தில் – தமிழகத்தின் ஒரு பகுதியை கொண்டு வர, ஒரு கட்சி நினைத்தால் நடந்துவிடக் கூடியதல்ல இந்த ஆசை!

இதற்கெல்லாம் காரணம் திமுகவின் ஒன்றிய அரசுக்கு எதிரான போக்கு என்று தங்கள் கெடு நோக்கத்திற்கு திமுகவின் மீது பழி போடுகிறது தினமலர்! அப்படி என்ன திமுக ஒன்றிய அரசை எதிர்த்தது என்றால், ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய உரிய நிதியை ஏன் தர மறுக்கிறீர்கள் என கேட்டு தகராறு செய்தார்களாம்.

அத்துடன் மத்திய அரசு என்று அழைக்காமல் ‘ஒன்றிய அரசு’ என அழைத்து வெறுப்பு ஏற்றுகிறார்களாம்! தமிழ்நாடு சட்ட சபையில் கவர்னரது உரையில் ‘ஜெய்ஹிந்த்’ என்ற வாசகம் விடுபட்டுவிட்டதாம்! இது தேச விரோத போக்காம்! திமுகவின் பிரிவினைவாத நோக்கமாம்!

அப்படியானால், இது குறித்து பாஜக அரசின் முக்கியஸ்தர்கள் அல்லவா தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு இருக்க வேண்டும். அல்லது கவர்னர் அந்த கோஷத்தை இணைக்கும்படி கேட்டு இருக்கலாமே! கவர்னருக்கு அந்த பொறுப்பு இல்லையா? தமிழக சட்டமன்றத்தின் வேண்டுகோள்கள் பலவற்றையே நிராகரிக்க துணியும் கவர்னரால், இதை கேட்டு இருக்க முடியாதா..? அது, இல்லாதது ஒரு குறையல்ல என அவர் முடிவெடுத்திருந்தால் மட்டுமே அவர் இசைந்திருப்பார்! இது ஒரு எளிய விஷயம்!

இந்த ஒன்றியம் என்ற சொற்பிரயோகம் மற்றும் ஜெய்ஹிந்த் என்ற சொல் கவர்னர் உரையில் விடுபட்டது என்ற இந்த இரு அம்சத்தையே தினமும் பல்வேறு செய்திகளாக ஆதங்கமாக, வசைபாடலாக, திமுகவின் மீதான துர்பிரச்சாரமாக பக்கத்திற்கு பக்கம் தினசரி வரிந்துகட்டி, எழுதிக் கொண்டு வருகிறது தினமலர். தற்போது அதன் உச்சமாக தமிழ் நாட்டை பிரித்தாளத் துடிக்கும் கெடு நோக்கத்தையும் தன்னிச்சையாக வெளியிட்டு தமிழக மக்கள் மத்தியில் குழப்பத்தையும், கொந்தளிப்பையும் தோற்றுவிக்கிறது! இந்த நாளிதழ் மீது தமிழக அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றிய அரசு என்ற வார்த்தை சட்டப்படி மிகவும் சரியானது. பொருத்தமானது என்று பஜகவில் உள்ள பலரே ஏற்றுக் கொண்டனர். ஆனால், அப்படிப்பட்டவர்களை திராவிட பாஜக என திட்டுகிறது தினமலர். தமிழ்நாடு என்று அழைப்பதே தவறு! அது தனி நாடு கோரிக்கை போல இருக்கிறது.. என்று உள் நோக்கத்துடன் எழுதிவரும் தினமலர் தமிழ் நாட்டின் ஒரு சிறு பகுதியை இன்று ‘கொங்கு நாடு’ என அழைத்து அதை தமிழ் நாட்டில் இருந்து பிரிக்கத் துடிக்கிறது. ‘தேசியம், தேசபக்தி என்பதெல்லாம் முழுக்க, முழுக்க அவர்களின் ஆதாய அரசியல் சார்ந்தது தானேயன்றி வேறல்ல’ என நமக்கு நன்கு விளங்க வைத்த வகையில் இந்த வில்லங்க நாளிதழ் நன்மையே செய்து வருகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணையை இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time