இங்கே அரசியலுக்கு ஆள் சேர்க்கப்படுகிறார்கள்..!

-சாவித்திரி கண்ணன்

கட்சிமாறிகளின் கைலாயமாக மாறிக் கொண்டுள்ளது திமுக! எதற்காக மக்கள் திமுகவிற்கு வாக்களித்தார்கள்..? அதிமுக ஊழல் ஆட்சிக்கு மாற்று வேண்டும் என்று தானே..?

அந்த ஊழல்களுக்கு காரணமான அதிமுகவினர் பலரே திமுகவில் வந்து ஐக்கியமானால், திமுகவின் நிறம் மாறாதா..?

ஏதோ ஸ்டாலின் முன்னிலையில் சேர்கிறார்கள் என்பதைக் கடந்து, ஆங்காங்கே மாவட்டங்களிலும் அங்குள்ள முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள்! முன்னாள் எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.சுந்தரம் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி, அமமுக நெல்லை மாவட்ட தலைவர் பரமசிவன் அய்யப்பன்…இப்படிப் பலர் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

அதிமுக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் அதிகபட்ச கரப்ஷன்களை நிகழ்த்திகாட்டியவர் பழனியப்பன். அவர் ஊழல் வழக்கில் தண்டிக்கட்ட டி.டி.வி.தினகரனின் அமமுகவில் இருந்தார்! அந்தக் கட்சிக்கு எதிர்காலத்தில் வாய்ப்பில்லை என்றவுடன் திமுகவிற்கு வந்துவிட்டார்!

ஈரோடு மாவட்டத்தில் மணல் மாபியாவாகத் திகழ்ந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். அவர் நியாயப்படி விசாரிக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அளவுக்கு குற்றச்சாட்டுகள், வழக்குகளை கொண்டவர். அவர், ஈரோடு மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளோடு பெருந்திரளான கூட்டத்துடன் வந்து திமுகவில் சேர்கிறார். அப்படியானால் அவர் அரசியல் ரீதியாக திமுகவால் பாதுகாக்கப்படுவார் என்பது தானே அர்த்தம்!

ஊழலில் சாதனை படைத்த ஜெயலலிதாவை போற்றி நோபல் பரிசும், பாரத ரத்னாவும் வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே பேசியவர் விஜிலா சத்தியானந்த்! ”தேர்தல் நேரத்தில், தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மகளிரை ஏமாற்றும்  திமுகவை தோற்கடிப்போம்” என்று அவர் தேர்தல் மேடைகளில் விஜிலா சத்தியானந்த் பேசிய வார்த்தைகள் காற்றில் கரையும் முன்பே திமுகவில் சேர்கிறார்.

இப்படியாக பொழுது, விடிந்து எழுந்தால், இன்றைய நாளிதழில் யார் திமுகவிற்கு வந்துள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பே மக்களிடம் வந்துவிட்டது.

இப்போது தானே தனிபெரும் பலத்துடன் திமுக ஜெயித்து வந்துள்ளது. அதற்குள் அந்தக் கட்சிக்கு தன் நம்பிக்கை குறைந்துவிட்டதா..? தான் பலவீனப்பட்டு உள்ளதாக உணர்கின்றதா..? மாற்று கட்சியினர் வந்தால் தான் பலம் பெற முடியும் என்று நம்புகிறதா..?

எந்த கட்சியையும் சாராத பொது மக்கள் பலர் முதலமைச்சரின் அறிவிப்புகள் ஆட்சியின் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பார்த்து நம்பிக்கை வைத்து திமுகவிற்குள் சாரி சாரியாக வருகிறார்கள் என்றால், அதை வளர்ச்சியாகப் பார்க்கலாம். ஆனால், பத்தாண்டுகளோ, பல்லாண்டுகளோ அதிமுக ஆட்சியில் அள்ளிச் சுருட்டியவர்கள் அணியணியாக திமுகவில் சேர்க்கப்படுவது எதற்காக..?

அங்கே சுருட்டியது போதாது என்று இங்கேயும் வந்து சுருட்டுவார்களா? இல்லையா..? இப்படிப்பட்ட ஊழல் பேர்வழிகளுக்கு அடைக்கலம் தரும் இடம் அறிவாலயமாக இருக்க போகிறது என்பது தேர்தலுக்கு முன்பே மக்களுக்கு தெரியாமல் போய்விட்டதே..!  இப்படிப்பட்ட திமுகவின் மீது புதிய இளம் தலைமுறைக்கு எப்படி நம்பிக்கை வரும்…? இந்த காட்சிகள் அவர்களை பின்னுக்கு இழுத்துவிடும் அல்லவா?

அதிமுகவிலோ, அமமுகவில் இருந்தோ வருபவர்கள் அனைவருக்குமே திமுகவில் இடம் தருவதற்கு மாற்றாக குறைந்தபட்சம் ஊழல் கரை படியாதவர்களாக பார்த்து சேர்க்கலாம் அல்லவா..? இப்படி வருபவர்களுக்கு எல்லாம் இடம் தந்து கொண்டே இருந்தால் காலம்காலமாக திமுகவில் பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் அப்படியே ஒரம் ஒதுங்கி வேடிக்கை பார்க்க வேண்டுமா..? அவர்களில் திறமையாளர்கள், யோக்கியமானவர்களின் வாய்ப்புகளை புதியவர்கள் பறித்துக் கொள்வார்களே! மாற்றான் தோட்டத்து மல்லிகை மீது மட்டும் ஏன் உங்களுக்கு அதிக நாட்டம்? அவை மட்டுமே மணக்குமோ..? சொந்த தோட்டத்தில் உற்றார், உரிமையுள்ளவர்கள் ரத்தம் சிந்தி உருவாக்கிய மலர்களில் மணம் இல்லையோ..?

மக்கள் நீதி மையத்தில் இருந்து அதன் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் வந்துள்ளார்! அந்தக் கட்சி திமுகவை எதிர்ப்பதற்காகவே உருவான கட்சி. அதுவும் அதிமுகவின் ஊழல்களை விமர்சிப்பதை தவிர்த்து, திமுக என்ற இயக்கத்தையே தீமையாக பார்த்த கட்சி! அந்த கட்சித் தலைமையில் கமலுக்கு அடுத்தபடியாக இயங்கிய ஒருவர் திமுகவிற்கு பொருந்தி வருவாரா..? அவருடன் சேர்ந்துள்ள பத்மபிரியா என்ற பெண்ணோ இட ஒதுக்கீடு போன்ற திராவிட இயக்கத்தின் அடி நாதமான கொள்கைக்கு எதிராக தன்னை வெளிப்படுத்தியவர். இவர்களிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டுவிட்டதா..? அல்லது திமுக தன் கொள்கையை மாற்றிக் கொண்டதா..? இதே போல நாம் தமிழர் கட்சியில் இருந்து ராஜிவ்காந்தி திமுகவில் சேர்ந்துள்ளார்! இவர்களை எல்லாம் கூட ஒரு வகையில் ஏற்பதில் தவறில்லை. காரணம் ஊழல் கரை படியாதவர்கள். புதிய மாற்று அரசியலை நோக்கி இயங்கி, பிழையான தலைமையால் ஏமாற்றத்திற்கு உள்ளாகி, வருந்தி திமுகவிற்கு வந்துள்ளார்கள் என புரிந்து கொள்ளலாம்!

ஆனால், அதிமுகவில் பழம் தின்று கொட்டை போட்ட ஊழல் பெருச்சாளிகளை ஏன் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்! இன்னும் எத்தனை பேர் சேரப் போகிறார்களோ!

எதிர்முகாமை ஆட்டம் காண வைக்கவே இந்த ஆள் சேர்ப்புகள்! எதிர்கட்சிகளை பலவீனமாக்கும் யுத்தியே இது என வாதம் வைக்கிறார்கள். உண்மையில் நடப்பது என்னவென்றால், தேவையற்ற ஆட்களை இட்டு நிரப்புவதால் சொந்த கட்சியின் முகமும், இயல்பும் மாறிவிடும். கூடுதல் ஆட்கள் சேருவதால் கட்சி பெருத்தது போல் தோற்றம் தெரியலாம். ஆனால், அது வளர்ச்சியல்ல, வீக்கம்!

அறிவாலய வளாகத்தின் மையத்தில் அண்ணா கை உயர்த்தி நிற்கிறார் சிலையாக! அந்த சிலைக்கு கீழே கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்று உள்ளது! ஆனால், அறிவாலயத்தின் கேட்டில் சூட்சுமமான  கண்ணுக்கு தெரியாத ஒரு போர்டு மாட்டப்பட்டுள்ளது. அதில், ‘’இங்கு புதிய ஆட்சிக்கு காரணமான பழைய கட்சிக்கு நிர்வாகப் பதவிகளுக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறார்கள்!’’  என எழுதப்பட்டுள்ளது.

தகுதி ; ஏதாவது ஒரு கட்சியில் அரசியல் அனுபவம்.

கூடுதல் தகுதி; அதிமுக, அமமுகவில் இருந்து வருவது.

சிறப்பு தகுதி; கரப்ஷன், கலெக்‌ஷன், கமிஷனில் முன் அனுபவம்!

அங்குள்ள இந்த போர்டு நம்மை போன்ற சாதரண பொது மக்களின் கண்களுக்கோ, அரசியல் சமூக ஆர்வலர்களின் பார்வைக்கோ தெரிவதேயில்லை. அது பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம், விஜிலா சத்தியானந்த் போன்றவர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது. அதுவும் அவர்கள் எங்கு இருந்தாலும் தெரிகிறது. திமுக ஆளும் கட்சியாக இல்லாவிட்டால், தற்போது சேர்ந்தவர்கள் எவருமே திமுகவில் சேர்வதை நினைத்து கூட பார்த்திருக்கமாட்டார்கள்! அவ்வையாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும்  நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு “

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time