அதிமுக ஆதிக்கமே அரசு கேபிளில் தொடர்கிறதா..?

-சாவித்திரி கண்ணன்

அலங்கோலமாகமாக்கப்பட்ட அரசு கேபிள் நிறுவனம் இன்னும் அதிமுகவின் கட்டுப்பாட்டிலே இருப்பது போன்ற தோற்றம் தருகிறது! உடுமலை ராதாகிருஷ்ணன் உருக்குலைத்து வைத்த நிர்வாக கட்டமைப்பையும், கையூட்டு கலாச்சாரச்சாரத்தையும் அப்படியே பின்பற்றதக்க வகையில் தான் புதிய தலைவரின் நியமனம் அமைந்துள்ளதோடு, மீண்டும் மாறன் பிரதர்ஸ் தலை தூக்கும் அபாயமும் தெரிகிறது என்கிறார்கள் கேபிள் இண்டஸ்டிரியில்! உண்மையா..?

மலிவான கட்டணத்தில் தருகிறோம் என்று அரசு கேபிள் மீதான மக்களின் ஈர்ப்பை பெற்று செயல்பட்ட வகையில், முறைகேடுகளில் உச்சமாகவும், சுரண்டலில் மூர்க்கமாகவும் செயல்பட்டவர் உடுமலை ராதா கிருஷ்ணன்.

தனியார் டிவிக்களை அரசு கேபிளில் காட்டுவதற்கான கேரேஜ் கட்டணம், முக்கியமான இடத்தில் அவற்றை வைப்பதற்கான பிளேஷ்மெண்ட் கட்டணம், கேபிள் ஆபரேட்டர்களுக்கான லைசன்ஸ் தருவதில் கையூட்டு… என எல்லாவற்றிலும் பணம் பண்ணுவதிலேயே குறியாக இருந்தவர் உடுமலை ராதாகிருஷ்ணன். இதனால், தன்னை பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக்கிக் கொண்டார். பல நூறு கோடி வருமானம் வந்திருக்க வேண்டிய அரசு கேபிளை பெரும் நஷ்டத்தில் தள்ளிவிட்டார்.

தமிழகத்தில் சுமார் 1,84,000 கேபிள் உள்ளன. இதில் தனியார்களான எஸ்.சி.வி, டி.சி.சி.எல்…, மற்றும் டி.டி.ஹெச் போக அரசு கேபிள் இணைப்பு வைத்திருப்பவர்கள் சுமார் 40 லட்சம் பேர்!

எங்கே போயின 3,500 கோடிகள்..? 

சாதாரணமாக ஒரு லட்சம் இணைப்பு வைத்துள்ள ஒரு சிறிய மல்டி ஆப்பரேட்டரே ஒரு மாதத்திற்கு தனியார் சேனல்கள் தரும் வருமானமாக ரூபாய் குறைந்தபட்சம் நான்கு லட்சம் லாபம் பெறுகிறார். அப்படி என்றால் அரசு கேபிள் மாதம் 160 கோடிகள் லாபம் பெற்று இருக்க வேண்டும்.

அதே போல மக்கள் தரும் கட்டணமாக ஒரு இணைப்புக்கு கேபிள் ஆபரேட்டர் பங்கு போக அரசுக்கு ரூ 63 முதல் 75 வரை செல்கிறது. அந்த வகையில் 40 லட்சத்திற்கு ஒரு இணைப்புக்கு ரூ65 என்று வைத்து பார்த்தாலே மாதம் 26 கோடிகள் லாபம் வந்திருக்க வேண்டும்.

சுமார் 900 உள்ளூர் சேனல்கள் மூலமாக கிடைக்கும் ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் 100 கோடிகள் என்ற வகையில் வருகிறது! இப்படி குறைந்தபட்ச மதிப்பீடு என்ற வகையிலேயே ஆண்டுக்கு சர்வ சாதாரணமாக 570 கோடி வருமானம் தருகிறது அரசு கேபிள்! இதில் கட்டணச் சேனல்களுக்கு தர வேண்டிய தொகை நிர்வாகச் செலவுகள் என்று பார்த்தாலும் செலவுகள் போக 350 கோடிகள் லாபம் கிடைக்கும். அந்த வகையில் பத்தாண்டுகளில் 3,500 கோடிகள் அரசு கேபிளுக்கு லாபம் வந்திருக்க வேண்டும். இந்தப் பணமெல்லாம் எங்கே போனது? ஆனால், 170 கோடி நஷ்டக் கணக்கு காட்டியுள்ளார் ராதாகிருஷ்ணன்!

ஒரு அரசாங்க மந்திரி, தான் சம்பந்தப்பட்ட துறையில் தொழில் செய்யக் கூடாது என்ற விதியையும் மீறி அக்சயா மல்டி கேபிளில் பங்குதாராகவும் இருந்தார்.

இந்த வகையில் இவர் கையில் அளப்பறிய பணம் புரண்டதால் தான், கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுக்க எடப்பாடி இவரிடம் லம்பாக கடன் வாங்கினார். அப்படி வாங்கிய கடனுக்கு பிரதியுபகாரமாக இவரிடம் 2016 ல் பிடுங்கப்பட்ட அரசு கேபிள் தலைவர் பதவியை மீண்டும் வழங்கினார். இதற்கு பிறகு தான் அரசு கேபிளில் முறைகேடுகள் உச்சத்தை தொட்டன!

அந்த வகையில் தற்போது இந்த ஆட்சியில் ஒரு விடிவு ஏற்பட்டு அரசு கேபிள் கார்ப்பரேசனை ஜனநாயக பூர்வமாகவும், நேர்மையான நிர்வாகத்துடனும் இயக்குவார்கள் என்ற நம்பிக்கை கேபிள் இண்டஸ்டியிலும், தொலைகாட்சி ஊடகங்களிடமும் இருந்தது. ஆனால், ”நேர்மையானவர் ஒருவர் கையில் நிர்வாகம் ஒப்புவிக்கப்படாமல் போனது துரதிர்ஷ்டமே” என்ற புலம்பல் அனைத்து மட்டத்திலும் வெளிப்படுகிறது.

இந்தச் சூழலில் ஒரு சின்ன பிளாஷ் பேக் போகலாம்.

அரசு கேபிள் ஏன் தோன்றியது?

கேபிள் இண்டஸ்டிரி வேகமாக வளர்ந்து கொண்டிருந்த 2003 ஆம் ஆண்டு சுமங்கலி கேபிள் விஷன் என்ற பெயரில் ஒரு எம்.எஸ்.ஒவை ஆரம்பித்தனர் மாறன் பிரதர்ஸ்! அப்போது இந்த கேபிள் ஒளிபரப்பில் எம்.எஸ்.ஓக்களாக கோலோச்சிக் கொண்டிருந்த ஹாத்வே, சிட்டி கேபிள், ஏ.எம்.என், பாலிமார், ஆகாஷ் கேபிள், வெப் கேபிள்,,பி,பி.எல்..உள்ளிட்ட பல நிறுவனங்களை – திமுக ஆட்சியில் இருப்பதை சாதகமாக கொண்டு – அழித்து ஒட்டுமொத்த கேபிள் இண்டஸ்டிரியின் பெரும் பகுதியை தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வந்தனர் மாறன் பிரதர்ஸ்!

அந்த மாறன் பிரதர்ஸ் திமுகவில் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் சிண்டு முடிக்கும் வகையில் செய்திகளை போட்டு அதன் விளைவாக மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு களேபரமானது. இதற்கெல்லாம் காரணமான மாறன் பிரதர்ஸ் திமுகவில் இருந்து விலக்கப்பட்டு – திமுகவிற்கென்று ஒரு தொலைகாட்சி வேண்டும் என்ற நிலையில் – கலைஞர் தொலைகாட்சி உருவாக்கப்பட்டு – அது தடையில்லாமல் ஒளிபரப்பாகுவதற்காக உருவானதே அரசு கேபிள்.

அதன் பிறகு ஒரு அரசாங்கமே கேபிள் ஒளிபரப்பில் ஈடுபடக் கூடாது என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சொல்லியது. அப்படி ஈடுபடும் போது அது காட்சி ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என்றது டிராய்! இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அரசியல் அழுத்தங்களை தமிழகம் தற்போது சந்திப்பதற்கு காரணம் டிராய் அறிவுறுத்தலை மீறியது தான்! இதனால் அப்போதே அரசு கேபிள் நிறுவனத்தை கிட்டதட்ட கைவிட்டார் கலைஞர். ஆனால், அடுத்து வந்த ஜெயலலிதா மாறன் பிரதர்ஸின் மேலாதிக்கத்தை தடுக்கவும், அரசு கேபிளில் அதிமுகவினர் ஆதிக்கம் பெறவும் கருதி அதை கலைக்க மறுத்தார். டிராய் தமிழக அரசின் மீது வழக்கு தொடர்ந்தது. ஆயினும் அராஜகமாக அரசு கேபிளை நடத்தச் செய்தார் ஜெயலலிதா.

அரசு கேபிளால் ஏற்பட்ட பிரச்சினைகள்

# அரசு கேபிளால் தனியார் தொலைகாட்சி சேனல்கள் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும் போது சேனல்களை ஒளிபரப்ப மறுத்து இருட்டடிப்பு செய்து தண்டிக்கப்பட்டனர்!

# இளவரசன் படுகொலை, அனிதா தற்கொலை போன்ற எண்ணற்ற அரசுக்கு எதிரான செய்திகளை விலாவாரியாக காட்டக் கூடாது என எச்சரித்தனர்.

# மாதாமாதம் சட்டபூர்வமாக அரசு கேபிளுக்கு ஒரு கட்டணத்தை செலுத்துவது போக சட்டபூர்வமற்ற முறையில் உடுமலை ராதா கிருஷ்ணனுக்கு ஒரு கட்டணமும், ஒவ்வொரு தொலைகாட்சி சேனல்களும் ரூ 15 லட்சம் முதல் 30 லட்சம் வரை தர நிர்பந்திக்கப்பட்டனர்!

# ஏழை, எளிய சிறிய ஆப்பரேட்டர்களின் உரிமங்களை ரத்து செய்து போட்டியாக வேறொரு ஆளை களத்தில் இறக்கி இரு தரப்பிலும் பணம் பறித்தனர்.

# அரசு கேபிள் வாடிக்கையாளர்களுக்கு இலவச செட் ஆப் பாக்ஸ் தருவதாகச் சொல்லி சுமார் 40,லட்சம் செட் ஆப் பாக்ஸ்களை கொள்முதல் செய்வதில் பல நூறு கோடி மிகப் பெரிய ஊழலை செய்துள்ளனர்.

# மொத்தத்தில் அரசு கேபிளை கட்டப் பஞ்சாயத்துக் களமாக்கி கல்லா கட்டவே ஆளும் கட்சியினர் பயன்படுத்தினர்.

அரசு கேபிளால் ஏற்பட்ட ஒரே நன்மை மாறன் பிரதர்ஸின் ஆதிக்கத்தில் இருந்த தமிழக கேபிள் உலகம் பெருமளவு விடுபட்டு மூச்சுவிட முடிந்தது மட்டுமே!

மாற்றமா..? ஏமாற்றமா..?

புதிய தலைவர் குறிஞ்சி சிவா உடுமலை ராதாகிருஷணின் நெருங்கிய நண்பர்! கிட்டதட்ட ஒரு தொழில்முறைக் கூட்டாளி என்றும் சொல்கிறார்கள். நியாயப்படி செட் ஆப் பாக்ஸ் வாங்குவதில் நடந்த மிகப் பெரிய ஊழல் ஒன்றை வெளிக் கொண்டு வந்தாலே கூட, ராதா கிருஷ்ணன் கண்டிப்பாக சிறை செல்ல வேண்டியிருக்கும். ஆனால், புதிய தலைவர், தன் நெருங்கிய நண்பரின் அரசு கேபிள் ஊழல்கள் எதுவும் வெளிவராமல் செய்வார் என்றே ஆபரேட்டர்கள் சொல்கிறார்கள். உடுமலை ராதாகிருஷ்ணனின் அன்றைய நெருங்கிய கூட்டாளிகள் தற்போது புதிய தலைவர் குறிஞ்சி சிவாவை அட்டை போல ஒட்டிக் கொண்டு வளம் வருவதை பார்க்கும் போது அதிமுக ஆட்சியின் அதே சூழலலே தற்போதும் தொடர்வதாகத் தான் புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார்கள்.

சிவா மாறன் பிரதர்ஸ்க்கும் நெருக்கமானவரே! ஒரு வகையில் அவர்களின் நெருங்கிய பழைய தொழில் முறை கூட்டாளியாவார். அவர்களால் பலன் அடைந்தவர். ஆகவே, தற்போது  அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க நிர்பந்திக்கபடலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

அரசு கேபிளின் அதிமுக கால தவறுகளே மீண்டும் தொடரும் என்றால், மீண்டும் மாறன் பிரதர்ஸ் அராஜகங்கள் தொடர்வதற்கு புதிய தலைவரின் செயல்பாடுகள் துணையாகும் என்றால், அரசு கேபிளை அரசாங்கம் நடத்தி மக்கள் பணத்தை விரயமாக்குவதை தவிர்த்து, திறமையான நல்ல தனியாரிடம் லாபகரமான விலைக்கு விற்று, நஷ்டத்தையும், கெட்ட பெயரையும் தவிர்க்கலாம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time