நீதிபதிக்கு தானும் ஒரு ஹீரோவாக திடீர் ஆசை ஏற்பட்டுவிட்டது போலும்! நடிகர் விஜய்க்கு வரி விலக்கு தர மறுத்திருந்தால் அதை யாரும் விவாதிக்க இடமில்லை. ”வரி கட்டத் தகுதியானவர் தான், சட்டப்படி அவர் வரி தந்துவிட்டு போகட்டுமே’’ என்று தான் மக்கள் நினைத்திருப்பார்கள். ஆனால், வரி விலக்கு கேட்டதைக் கொண்டே, அவர் வரி ஏய்ப்பு செய்வதாகக் கூறி நீதிபதி அவர்கள் மிக காட்டமாக பேசியுள்ளார். இது ஏதோ தனி நபர் தாக்குதல் போன்ற தோற்றத்தை தருகிறது.
”லட்சோபலட்சம் ரசிகர்களைக் கொண்டுள்ள பிரபல நடிகர்கள் திரையில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் உண்மையான ஹீரோக்களாகத் திகழ வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் அவர்களை ரீல் ஹீரோக்கள் என நினைத்துவிடுவர். யார், குறித்த நேரத்தில், முறையாக வரியைசெலுத்துகிறார்களோ அவர்களே உண்மையான ஹீரோக்கள்.
நடிகர்களுக்கு திரைப்படம் மூலமாகக்கிடைக்கும் பணம் ஒன்றும் வானத்தில் இருந்து தானாகக் கொட்டவில்லை. ஏழை, எளியவர்கள் ரத்தம் சிந்தி, கடின உழைப்பின் மூலமாக சம்பாதித்த பணத்தைக் கொடுத்து பார்க்கும் திரைப்படங்களின் மூலமாக கிடைத்த தொகையில் இருந்துதான் அவர்கள் வசதி வாய்ப்பாக உள்ளனர். அந்த தொகை மூலமாக, தான் வாங்கிய காருக்கு மனுதாரர் வரி செலுத்த மறுப்பது சரியல்ல. ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள மனுதாரர் தனது திரைப்படங்களில் லஞ்சத்துக்கு எதிராகவும், பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுப்பவராக தன்னை பிரதிபலிக்கும் அதே நேரத்தில் இதுபோல வரி ஏய்ப்பில் ஈடுபடுவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று” என்கிறார் நீதிபதி.
வரி விலக்கு கேட்பதும், அதை பரிசீலித்து தருவதும், மறுப்பதும் நீதிமன்றத்தில் சில ஆண்டுகளாக கடைபிடிக்கும் வழக்கமாக இருந்துள்ளது. அதுவும் குறிப்பாக சச்சின் டெண்டுல்கருக்கு ரோல்ஸ்ராய் கார் அன்பளிப்பாக கிடைத்த போது அவருக்கு முழு வரி விலக்கு அரசாங்கமே ( ஒரு கோடியே 13 லட்சம்) தந்ததைக் கொண்டு பலரும் இப்படி கேட்கத் தொடங்கினார்கள்.
மோட்டார் வாகன சட்டத்தின் ஒரு பிரிவிலேயே வரிவிலக்கு கேட்பது பொது நலன் தொடர்பானதாக கருதப்படுமானால், முழுமையாகவோ பகுதியாகவோ வரியை தள்ளுபடி செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது என்று சட்ட வல்லுனர்கள் சொல்கிறார்கள்! அதில் இன்ன காரணத்திற்கு மட்டுமே என்பதாக இல்லை. அதாவது இலவச மருத்துவ சேவைக்கு மட்டும் என்பதைப் போன்ற குறிப்புகள் இல்லை. ஆகவே தான் பலரும் இந்த வரிவிலக்கை கேட்கிறார்கள்!
இயக்குனர் ஷங்கரும் கிட்டதட்ட விஜய் கார் வாங்கிய காலகட்டத்திலேயே ரோல்ஸ்ராய் கார் வாங்கினார். அவர் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்த போது நிகழ்ந்தவற்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.
இயக்குனர் ஷங்கர் தன்னுடைய மனுவில் கூறி இருந்ததாவது; இங்கிலாந்து நாட்டில் இருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காரை வாங்கினேன். இதற்கு ரூ.1 கோடியே 72 லட்சத்து 61 ஆயிரம் சுங்கக்கட்டணமாக செலுத்தினேன். பின்னர், இந்த காரை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்த போது, வட்டார போக்குவரத்து அலுவலர், காரை பதிவு செய்ய மறுத்துவிட்டார். அவர், ‘நுழைவு வரியை செலுத்திவிட்டு, வணிக வரித்துறை முதன்மை செயலாளரிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே, காருக்கு பதிவு எண் வழங்கி, அவற்றை பதிவு செய்ய முடியும் என்று கூறிவிட்டார்.
ஆனால் கேரளா ஐகோர்ட்டு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டும் ஏற்று கடந்த 2000-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே, நுழைவு வரி மற்றும் தடையில்லா சான்றிதழ் இல்லாமல், என் காரை பதிவு செய்ய கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறாக இயக்குனர் ஷங்கர் கேட்டிருந்தார்!
இந்த வழக்கு செப்டம்பர் 2019 ல் நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்த போது சென்னை உயர் நீதிமன்றம், ”காருக்கு நுழைவு வரி சுமார் ரூ.44 லட்சம் செலுத்த கேட்டதற்கு மாற்றாக, அதில் 15 சதவிகிதம் கட்டி காரை எடுத்துக் கொள்ளலாம்” என இடைகால உத்தரவு பிறப்பித்தது. இந்த இடைக்கால உத்தரவின்படி, ரூ.6 லட்சத்துக்கு 60 ஆயிரத்து 175 மட்டுமே ஷங்கர் செலுத்திவிட்டு காரை பதிவு செய்து கொண்டார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் வி.சண்முகசுந்தர், நீதிபதியிடம், ”இதுபோல ஏராளமான வெளிநாட்டு சொகுசு கார்கள் முழு வரியையும் செலுத்தாமல், பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம் கிடைக்கவில்லை” என்று வாதிட்டார்!
ஆக, ஒரே மாதிரியான வழக்கில், ஒரு நீதிபதி வரிவிலக்கு தந்துள்ளார். ஒரு நீதிபதி கடுமையாக கண்டித்து வழக்கு போட்டதற்கு அபராதமே விதிக்கிறார். ஆனால், முன்னதாக விசாரித்த நீதிபதி வரிவிலக்கு தந்ததால் தான் அது தங்களுக்கும் கிடைக்கலாம் என மற்றவர்களும் கேட்கும் தைரியம் தருகிறது.
Also read
ஆக,சென்னை உயர் நீதிமன்றம் இது போன்று பலரும் விண்ணப்பிக்கும் சூழலில், திட்டவட்டமாக ஒரு நியாயமான வரியை நிர்ணயித்து ”இது அனைவருக்கும் பொதுவானது” என்று தீர்ப்பு தந்திருந்தால், விஜய் வழக்கும் என்றோ முடிவுக்கு வந்திருக்கும். 2012 ல் விண்ணப்பித்த வழக்கு 2021 ல் தான் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படுகிறது என்பதே விஜய்க்கு பெருத்த நஷ்டம் தானே! தற்போது பயன்படுத்தப்படாத அந்த கார் ஓட்டுகின்ற கண்டிஷனில் இருக்குமா என்பதே சந்தேகமாகும். கால தாமதமான தீர்ப்பே மிகப் பெரிய அநீதி. இவ்வளவு கால தாமதம் செய்யும் நீதிமன்றத்தை நாம் கேள்வி கேட்க முடியாது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அவர்கள் நேர்மைக்கு பேர் போனவர்! ஆனால், நடிகர் விஜய் ரோல்ஸ்ராய் காருக்கு வரி விலக்கு கேட்ட விவகாரத்தில் அவர் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு பேசிய வாசகங்கள் மூலம் தன்னை ஹீரோவாக்கி கொள்ள முயற்சித்திருக்கிறாரோ எனத் தோன்றுகிறது! மொத்ததில் இந்த வரிவிலக்கு விவகாரத்தில் திட்டவட்டமாக அரசோ, நீதிமன்றமோ முடிவு எடுக்க வேண்டிய அவசியத்தை இந்த வழக்கு தந்துள்ளது என்று எடுத்துக் கொள்வோம்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
விஜய் அந்த காரை உபகயோகப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்.
20% வரி கட்டி ஓட்டலாம் என்று முன்னரே இடைக்கால தீர்ப்பு உள்ளது
நடிகர் விஜய்
சொகுசு காருக்கான வரிவிதிப்பை விலக்க கோரவில்லை …
எல்லா இறக்குமதி வரியும் கட்டி வாகனம் இறக்குமதியும் செய்யப்பட்டு RTO அலுவலகத்தில் பதியும் போது மீண்டும் நுழைவு வரி என்ற புதிய வரி கேட்டுள்ளார்கள் அப்போதைய ஜெ.ஆட்சியில்…
அதை எதிர்த்து 2012 ல் போட்ட வழக்கு இது… அத்துணை கோடி கொடுத்து வாங்கி 9 வருடமாக சிலகோடி வரிக்காக காரை ஓட்டாமல் வைக்க அவர் முட்டாளா? இந்த வழக்கை வைத்து தீர்பளித்தவர் தான் ஹீரோவாக பார்க்கிறார்…
பொதுவாக நடிகர்களை தூக்கி பிடிப்பது நல்லதல்ல… நிழல் கோமாளிகள்…
ஆனால் அவர் பேசிய சில சமூகநீதி விடயங்களை கேள்விக்குறியாக்குவது நல்லதல்ல… அதனால் இப்பதிவு
தோழமையுடன்
பேரளம் பேரொளி
வரியைக் கட்டிவிட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்று நகராட்சி
சட்டங்களில் உள்ளது.வரிவிதிப்பு என்பது அரசின் வேலை; வசூலிப்பதும் அரசின் வேலை. இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்.நல்ல கட்டுரை