அரிய குணாதிசியங்களின் ஆளுமையே சங்கரய்யா..!

-சாவித்திரி கண்ணன்

அவரது கம்பீரம் வசீகரமானது!

அந்த கணீர் குரல் நம்மை ஈர்த்து, செயல்படத் தூண்டுவது!

கொள்கை உறுதியோ அசாத்தியமானது!

போராட்ட வாழ்க்கையோ சாகசமானது!

சிறுமதி என்பதே, சிறிதும் இல்லா பெருமனம் கொண்ட பெருந்தகையாளர்!

சுயநலமில்லா பொது வாழ்க்கையின் அடையாளக் குறியீடே அவர் தான்!

”இவரைப் போல வாழமாட்டோமா…’’ என நம்மை ஏக்கப்பட வைப்பவர்..!

இப்படிப் பல வகைகளில் நம்மைக் கவர்கிறார் தோழர். சங்கரய்யா.

1980 களில் இருந்து அவரது உரைவீச்சை கேட்பதென்றாலே எனக்கு உற்சாகம் தான்!

1980 களின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு பொதுக் கூட்டம்! சென்னை பெரியமேடு பகுதியில் நடந்த அந்த நிகழ்ச்சியை போட்டோ கவரேஜ் செய்ய போயிருந்தேன். தோழர் சங்கரய்யாவும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் சிவாஜி பேசுவதற்கு முன்பாக தோழர் பேசுகிறார்! பேச்சில் அனல் தெறிக்கிறது! அந்தக் குரல் அடிவயிற்றில் இருந்து அறச் சீற்றத்துடன் வெளிவருகிறது! எள்ளளவும் ஜோடனைகளோ, பகட்டுத்தனமோ இல்லாத பொது நலன் சார்ந்த பேச்சு! நான் சிவாஜியை அடிக்கடி பார்த்தேன். அவர் சிலிர்ப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் சங்கரய்யாவை! சங்கரய்யா பேசி முடித்து திரும்பும் போது, சிவாஜி எழுந்து பணிவோடு வணங்கினார்! அதன் பிறகு சிவாஜி பேசும் போது சொன்னார், ”படங்களில் நான் பேசும் வீர வசனங்களை கேட்போர் என்னை சிம்மக்குரலோன் என்பார்கள். என் வாழ்க்கையில் உண்மையான சிங்கத்தின் கர்ஜனையை இன்று இங்கு கேட்டேன்! சுதந்திர போராட்டத் தியாகி, ஒப்பற்ற தலைவர், ஐயா, சங்கரய்யா பேசியபடி நாம் செயல்பட வேண்டும்’’ என்றார்.

இந்த சம்பவத்தை ஒரு ரீல் ஹீரோ, ரியல் ஹீரோவை அடையாளம் கண்டுணர்ந்த சம்பவமாக உணர்ந்தேன்!

போலித்தனமே சங்கரய்யாவிடம் இருக்காது. எதையும் நேர்படப் பேசுபவர், புறம் பேசுவது பிடிக்காது. தனக்கென்று ஆதரவாளர்கள், விசுவாசிகள் வைத்துக் கொள்ளாதவர். எல்லோருக்கும் பொதுவாக இருப்பதையே விரும்புவார். அவரிடம் ஒரு சில முறை தான் நேர்காணல் செய்துள்ளேன். அவரோடு நெருங்கி பழகியதில்லை. ஆனால், அவர் மீதான ஈர்ப்பால் அவரை ஆழமாக உள்வாங்கி கொண்டேன்!

தோழர் நல்லகண்ணுவிற்கும் தோழர் சங்கரய்யாவிற்கும் பொது வாழ்க்கை பண்பு நலன்களில் சுயநலம் துறப்பு, சிறை வாழ்க்கை, தலைமறைவு வாழ்க்கை, தியாகம் போன்றவற்றில் நிறைய ஒற்றுமைகள் உள்ளதைப் போலவே, சில அடிப்படை வித்தியாசங்களையும் பார்க்கலாம் நல்லகண்ணு பசு போல மென்மையானவர், சமரசவாதி! ஆனால், சங்கரய்யா அறச் சீற்றத்தில் சிங்கம் போன்றவர், சமரசமற்றவர்!

சங்கரய்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளராக இருந்த காலங்களில் அவரது பிரஸ் மீட் எல்லாமே வெகு சிறப்பாக இருக்கும். என்ன கேட்டாலும் தயக்கம் இல்லாமல் பதில் பளிச்சென்று வரும்.சுற்றி வளைத்து பேசுவது அவருக்கு வராது. எல்லா கேள்விகளுக்கும் நேர்பட பொட்டில் அடித்தது போல பதில் உரைப்பார். சிலரைப் பற்றிப் பேசு போது அடைமொழிகளோடு தான் பேசுவார். அதில் ஒன்று ’’ஓடுகாலி மோகன் குமார மங்கலம்’’

‘தி மேன் ஆப் பிரின்சிபிள்’ என்று ஒருவரை சொல்ல வேண்டும் என்றால், அதற்கு முற்றிலும் பொருத்தமானவர் சங்கரய்யா தான். கட்சிக் கட்டுப்பாட்டில் இருந்து எள்ளளவும் தடம் புரள மாட்டார். தன்னைப் போலவே அனைவரையும் சமமாக மதிப்பார். தலைவர் என்ற பார்வையில் தனக்கு விஷேச அக்கறை காட்டப்படுவதை அனுமதிக்கமாட்டார். இதை மீறி அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் தந்தால். ”அனைவருக்கும் என்னவோ.., அதுவே எனக்கும், அதற்கு மீறி இதெல்லாம் என்ன..? தேவை இல்லை.” என்று அதட்டலாகவே சொல்லிவிடுவார்.

மனிதர்களை எடை போடுவதில் வல்லவர்! மற்றவர்களை பேசவிட்டு கூர்ந்து கேட்பார். யார் அர்ப்பணிப்புள்ளவர், யார் வெறும் வாய்ச்சவடால் பேர் வழி..என துல்லியமாக கணித்து விடுவார். அந்த கணிப்பின் அடைப்படையில் அவரவருக்கு தக்க மரியாதையை, முக்கியத்துவத்தை தருவார்.

அதிகப் பிரசங்கித்தனமாக பேசுபவர்கள், புறம் பேசுபவர்கள் அவர் பக்கத்தில் நிற்க முடியாது.

அவர் பிறந்த 1921 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் எல்லோரும் இன்று கிட்டதட்ட உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சிலர் இருக்கலாம். அவர்களில் எத்தனை பேருக்கு மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், சிங்கார வேலர், பி.டி.ரணதிவே..போன்ற எண்ணற்ற ஆளுமைகளோடு தொடர்பு கொண்டு பழகும் வாய்ப்பு அமைந்திருக்கும்? தோழர் சங்கரய்யா இன்று நம்முடன் இருக்கும் இருப்பு என்பது அரிதினும் அரிது!

எத்தனையெத்தனை போராட்டக் களங்கள், களப் பணிகள், எவ்வளவோ இடையறாத பயணங்கள், எட்டாண்டு சிறை வாசம், ஐந்தாண்டு தலைமறைவு வாழ்க்கை! பசி, களைப்பு, அவமரியாதைகள் போன்றவற்றை பொருட்படுத்தாமல் இயங்கிய நீண்ட நெடிய பொதுவாழ்க்கை இவற்றையெல்லாம் கடந்து ஒரு மனிதரால் நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முடிகிறதென்றால்..இது ஒன்றே போதும் அவரது ஒழுக்கமான வாழ்க்கைக்கான அத்தாட்சிக்கு! இன்று ஐம்பதை கடந்தாலே உடலில் ஆயிரம் உபாதைகளோடு தான் மக்கள் நடமாட முடிகிறது. ஆனால், இன்றும் கூட திட சித்தத்துடன் வாழ்கிறார் சங்கரய்யா! வறியவர்களிலும், வறியவர்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட கொள்கை உறுதியே அவரை உயிர்ப்புடன் வைத்துள்ளது.

வாழ்க நீ எம்மான்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time