கிளப்ஹவுஸ் செயலி வெளிநாடுகளில் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூன் மாதம் முதலாக இந்தியாவிலும் பயன்பாட்டில் உள்ளது. கிளப்ஹவுஸ் செயலி, குரல்கள் மூலமாக கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள உதவும் சமூக ஊடகப் பயன்பாடு ஆகும். இந்தச் செயலியில், தட்டச்சு செய்திகள், எமோஜிகள், வீடியோக்கள், வெளிவட்ட இணைப்புகள் போன்றவற்றை பரிமாற்றம் செய்ய இயலாது.
யாஹு மெசஞ்சரில் ஆரம்பித்து, பிளாக்கர், ஆர்குட், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூக ஊடகங்களின் பரிணாம வளர்ச்சி மிக நெடிய வரலாறு கொண்டது. ஒவ்வொரு சமூக வலைத்தளத்துக்கென்றும் தனிப்பட்ட வசதிகளும் சிற்சில போதாமைகளும் உள்ளன. ஒவ்வொன்றின் வசதிக்கேற்ப, மக்களின் விருப்புகளுக்கு ஏற்ப, இப்படியான சமூகஊடகங்களின் பிரபலம் வேறுபட்டு உள்ளது. பேஸ்புக், ட்விட்டர், வாட்சப், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் போன்ற ஊடகங்கள் மிகப்பரவலான பயன்பாட்டில் இருக்கும் நேரத்தில், திடுமென அறிமுகமாகி, மிகக்குறிப்பாக இந்தியாவில் சடுதியில் பிரபலத்தையும், லட்சக்கணக்கான மக்களின் ஈர்ப்பையும் பெற்றுள்ள கிளப்ஹவுஸ் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு ஊடகமே.
கிளப்ஹவுஸ் செயலி, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ போன்களிலும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தற்போதைக்கு ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் தரவிறக்கம் செய்துள்ளனர். இலவச சேவைதான். ஆனால், கிளப்ஹவுஸில் தற்போதைக்கு எடுத்த எடுப்பிலேயே கணக்கு துவக்கி விடமுடியாது. கொஞ்சம் வழிமுறைகள் உள்ளன. காத்திருப்பில் வைத்திருந்து, யாராவது பயனாளர்கள் அங்கீகரித்த பிறகே, கணக்கு துவங்க அனுமதி கிடைக்கிறது. இந்தக் கிளப்ஹவுஸ் மூலமாக, யாரெல்லாம் ஆன்லைனில் உள்ளார்கள் என்பதையும் அவர்களை பின்தொடர்வதையும் செய்யலாம். ஒத்த கருத்துடைய அல்லது ஒத்த விருப்புடைய பயனாளர்களையும், நண்பர்களையும், குழுமங்களையும் (கிளப்புகள் என்று சொல்கிறார்கள்) தேடிக்கொள்ள முடிகிறது.
தனிப்பட்ட விவரக்குறிப்பு பகுதியில் ஒவ்வொரு கணக்காளரும் தனது படத்தையும், தன்னைப்பற்றியும், தன் விருப்புகள் பற்றியும் அறிமுகம் செய்து கொள்ளலாம். இந்தப் பகுதியில் ஒருவர் என்னென்ன குழுமங்களில் உறுப்பினாராக உள்ளார் என்பதையும் அறியலாம். ஹால்வே எனப்படும் அரங்க நிகழ்வரிசையில் அப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரங்க நிகழ்வுகள் வரிசையிடப்பட்டிருக்கும். பிடித்தமான அரங்கில் நாம் இணைந்து கொள்ளலாம். ஒவ்வொரு அரங்கினுள்ளும் மூன்று விதமான பகுதிகள் இருக்கும். ஸ்பீக்கர்ஸ் எனப்படும் பேச்சாளர்கள், காத்திருக்கும் பேச்சாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மூன்று விதங்களில் உறுப்பினர்கள் பிரிக்கப்பட்டு இருப்பார்கள். இணைந்த உடனே நாம் பார்வையாளர்கள் பகுதியில் இருத்தப்படுவோம். பேசுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் கையை உயர்த்தும் குறியை அழுத்தினால், மாடரேட்டர்கள் எனப்படும் அரங்க நிர்வாகிகள் அனுமதிக்கும் பட்சத்தில், நாமும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
கிளப்ஹவுஸ் அனைத்து அரங்குகளிலும், பேச்சை மட்டுமே தான் பரிமாறிக்கொள்ள முடியும். பேச்சுகளும் அரங்க நிகழ்வுகளும் சேமிக்கப்படுவதில்லை. ஆனால், அரசு கேட்கும் பட்சத்தில் பரிமாறிக்கொள்ளப்பட்ட பேச்சுகளையும் அதன் வரிவடிவத்தையும் அரசுக்கு கொடுக்கப்படும் என்று அறிய முடிகிறது. அரங்கில் நிகழ்வனவற்றை, அரசு விரும்பினால் உள்ளே நுழைந்து கண்காணிக்க முடியும் என்றும் அறிகிறோம். ஆக, நமது பேச்சுகள் கிளப்ஹவுஸால் சேமிக்கப்பட்டாலும் நமக்குக் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அரங்கில் இணைந்த பிறகு, தொடர்புடைய பிற நண்பர்களை நாம் இணைக்க முடியும். பேசுவதற்கு விரும்பினால் கையை உயர்த்த முடியும். பேசி முடித்த பிறகு நாம் மீண்டும் பார்வையாளர் அரங்கிற்கு வரவும் முடியும். பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதும் நமது ஒலிபெருக்கியை மவுனிக்கவும், உயிர்ப்பிக்கவும் நம்மால் முடியும்.
இவை போக, இனி வரப்போகும் விவாத அரங்குகள் பற்றிய தகவல்களையும் நாம் அறியமுடியும். அதில் இருக்கும் மணிக்குறியை அழுத்துவதன் மூலம் நமக்கு நிகழ்வு நடக்கும் நேரத்தில் நினைவூட்டல் பெற முடியும். பேஸ்புக்கில் உள்ளது போல ஆக்டிவிட்டி லாக் எனப்படும் நமது செயல்களின் தொகுப்பையும் பார்த்துக்கொள்ள முடியும். நமது நண்பர்கள் இணைவது, அவர்கள் நம்மைத்தொடர்வது போன்றவற்றை இதன் மூலமாக அறிய முடியும். எக்ஸ்ப்ளோர் எனும் தேடுதல் வசதியும் உள்ளது. பயனாளர்களையும், குழுமங்களையும், தேடமுடியும். இவ்வாறு தேடிக்கண்டடையும் புதிய பயனாளர்களை பின்தொடரவும், குழுமங்களில் இணையவும் முடியும். குழும உறுப்பினர்களை பின்தொடரவும் முடியும்.
மேலும் செட்டிங்க்ஸ் எனப்படும் அமைப்புகள் பகுதியில் கணக்கு உபயோகத்துக்கான நமது விருப்பங்களை சரி செய்து கொள்ள முடியும். இதில் உள்ள உள்ள இண்ட்ரெஸ்ட் எனப்படும் விருப்பப்பகுதியில் நமது விருப்பங்களை தொட்டு வைப்பதன் மூலம் அப்படியான அரங்க நிகழ்வுகள் நமது ஹால்வேயில் பரிமாறப்படும். அக்கவுண்ட்ஸ் எனப்படும் கணக்குப் பகுதியில், உள்ள வசதிகள் மூலமாக, நமது ட்விட்டர் இண்ஸ்டாகிராம் கணக்குகளை இணைத்துக்கொள்ள முடியும். மேலும், கணக்கை முறித்துக்கொள்ளவும் வசதி உள்ளது.
தற்போது கிளப்ஹவுஸை அதிகப்படியாகவும், முறையாகவும் உபயோகிப்பவர்களாக இண்ஸ்டாகிராம் பயனாளர்கள் உள்ளனர். அங்கேயுள்ள நட்பு வட்டத்தை இங்கேயும் தொடர்கின்றனர். நிறைய ஆக்கப்பூர்வமான விவாத அரங்குகளும், அரசியல் கருத்துப் பரிமாற்றங்களும், கலை இலக்கிய உரையாடல்கள், வெற்று அரட்டைகள், இரட்டை அர்த்த கச்சேரிகள், பாலியல் விழைவு உரையாடல்கள், பாட்டு மன்றங்கள், தொழில் நுணுக்கங்கள், வியாபாரத்தொடர்புகள் என்பதாக நினைத்துப் பார்க்கவும் முடியாத அளவுக்கு பரந்த தளங்களில் கிளப்ஹவுஸ் பயன்படுத்தப்படுகிறது. கணக்கற்ற பன்பலை வானொலிகளின் தொகுப்பு போல கிளப்ஹவுஸ் உள்ளது. இரவு பகல் பாராது எல்லா நேரங்களிலும் பரபரப்பாகவே உள்ளது.
Also read
எல்லா சமூக ஊடகங்களைப் போலவே கிளப்ஹவுஸிலும் சர்ச்சைகள் ஆரம்பித்துள்ளன. எதிர்பார்த்ததைப் போலவே குழுஅரசியலும் மேலோங்கி வருகிறது. பயன்பெறவும், பொழுதுகழிக்கவும், ஏமாறவும், ஏமாற்றவும் மேலுமொரு சமூக ஊடகம் வந்துள்ளது என்பதைக் காட்டிலும், மற்றெல்லா ஊடகங்களைக் காட்டிலும் அசுர வேகத்தில் பயனாளர்களை ஈர்த்து வருவதை உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது.
பாட்காஸ்ட் எனப்படும் ஒலிவடிவ கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்கனவே பல்வேறு செயலிகள் வழியே இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த கிளப்ஹவுஸ் செயலியில், கிளப்கள் எனப்படும் குழுமங்களை ஏற்படுத்திக்கொள்வதும், அதில் உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதும், அதன் மூலம் நினைத்த நேரத்தில் கருத்துப்பரிமாற்ற அரங்கங்களை ஏற்படுத்திக்கொள்ளவுமாக பல்வேறு செயல்பாடுகளை ஒரே செயலிக்குள் செய்ய முடிகிற படியால் கிளப்ஹவுஸ் உடனடி ஈர்ப்புக்கு ஆளாகி உள்ளது. கிளப்ஹவுஸ் மோகம் வெளிநாடுகளில் வடிந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இந்தியாவில் இதன் மீதான மோகம் குறையுமா அல்லது தொடருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கட்டுரையாளர்; டாக்டர். மணி ஜெயபிரகாஷ் வேல்
இது எனக்குப் புது தகவல். புதிய தொழில் நுட்பங்கள் வரும்போது நல்லதும் உண்டு கெட்டதும் நடக்கும்.எப்படிக் கையாளப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் எல்லாமே!
Required information is provided. Thanks, useful to me.