அண்ணாமலை யாருக்கு தலைவலியாவார்..? பாஜக திட்டம் பலிக்குமா?

-சாவித்திரி கண்ணன்

வன்முறைக்கு அஞ்சாத மனோபாவம்!

பஞ்சமா பாதகமென்றாலும்,பயப்படாமல் செய்யும் துணிச்சல்!

தெருச் சண்டைக்கு முஸ்தீபு காட்டும் அஞ்சா நெஞ்சம்!

திராவிட இயக்கங்களின் மீதான தீராத வன்மம்!

இந்த தகுதிகள் போதாதா தமிழக பாஜக தலைவராக அண்ணமலை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு?

ஆக, இதைத் தான் ஆகப் பெரிய தகுதியாக பார்க்கிறது பாஜகவின் தேசியத் தலைமை!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது என்பது பாஜகவின் விரக்தி மன நிலையின் விளைவுக்கு ஒரு அத்தாட்சியாகும்!

எதையாவது செய்தாக வேண்டும் என்ற தவிப்பில் எல்.முருகன் என்ற தலித்தை கட்சித் தலைவராக்கி அதன் மூலம் மேல்சாதிக்கான கட்சி என்ற இமேஜை உடைக்க நினைத்தது. ஆனால் அவரோ ஆடாத ஆட்டமெல்லாம் போட்டு கட்சியை டேமேஜ் செய்ததால் அவரை தூக்க வேண்டிய கட்டாயத்தில்,அப்படி தூக்கினால் கெட்ட பெயர் வருமே என்ற நிர்பந்ததில், மத்திய அமைச்சர் பதவி தந்து, அந்த இடத்தை காலியாக்கி அண்ணாமலைக்கு தந்துள்ளனர்.

அண்ணாமலையோ கட்சியில் சேர்ந்து ஒரு வருடம் கூட பூர்த்தியாகவில்லை.கட்சித் தலைவருக்கான பக்குவம் பெற்றதாகவும் தெரியவில்லை. பல சீனியர்கள் தமிழகத்தில் இருக்க, அவர்களை புறக்கணித்து அண்ணாமலை திணிக்கப்படுவதன் மூலம் உட்கட்சி ஜனநாயகமே முற்றலும் இல்லாத ஒரு கட்சியே பாஜக என்பது உறுதியாகிறது.

ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்புகளின்படி காவேரியில் தமிழகத்திற்கான தண்ணீரை தருவதில்லை கர்நாடகா!

மேகதாது அணைகட்டுவதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கவும், அடிப்படை தயாரிப்புகளுக்கு போகவும் கர்நாடகத்தை அனுமதித்த தேசியம் பேசும் பாஜக, கர்நாடக ஆர்.எஸ்.எஸ் தலைவரான சந்தோஷின் கண்டுபிடிப்பான அண்ணாமலையை தமிழகத் தலைவராக்கியுள்ளதை கவனிக்க வேண்டும்.

அண்ணாமலையை பொறுத்தவரை அவருக்கு தமிழகத்தின் அடிப்படை பிரச்சினைகள் பற்றியோ, தேவைகள் பற்றியோ ஆர்வமோ, கவலையோ கிஞ்சித்தும் இல்லை. அப்படிப்பட்ட ஆர்வம் இருந்திருந்தால் அண்ணாமலையை முதலில் பாஜக அங்கீகரித்தே இருக்காது!

திமுக எதிர்ப்பை கடுமையாக வளர்த்தெடுக்க வேண்டும். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் திமுக அரசுக்கு தலைவலி தர வேண்டும் என்பதை இலக்காக வைத்தே அண்ணாமலை பாஜகவின் தமிழக தலைவராக்கப்பட்டுள்ளார். திமுகவுடன் கடுமையாக மோதும் அரசியலை செய்வது ஒன்றே தமிழகத்தில் கட்சியை வளர்க்கும் என்பது அவர்கள் மேற்கு வங்கத்தில் கற்ற அனுபவமாகும்.

அண்ணாமலையின் பேச்சுக்களும் அதையே காட்டுகின்றன!

”மோடி தடுப்பூசி தருகிறார். ஆனால், அது திமுக குடும்பத்திற்கு போகிறது. திமுககாரர்கள் துண்டு போட்டு அபகரித்துச் செல்கிறார்கள்.. ”

திமுக இந்துக்களின் எதிரி என்ற பிம்பத்தை தேர்தலுக்கு முன்பு தீவிரமாக செய்தனர். அதற்காக ஜக்கி போன்ற சாமியார்களையும் பயன்படுத்தினர். அது எடுபடவில்லை என்பது மட்டுமல்ல, தற்போது கோவில்  நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும், வாடகைபாக்கியை வசூலிப்பதிலும் கோவில் பாதுகாப்பிலும் திமுக அரசின் தீவிர செயல்பாடுகள் பாஜகவை வாயடைத்துப் போக வைத்துவிட்டன!

”திமுகவை எதிர்த்து நிற்கின்ற ஒரே கட்சி பாஜகதான். கடந்த 69 நாட்களில் திமுகவை பலமுறை எதிர்த்துள்ளோம். டாஸ்மாக் திறந்ததிலிருந்து தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இது ஆரம்பம் தான். அடுத்த மூன்று வருடம் மக்களுக்காக வீதியில் தான் இருப்போம். போராட்டம் நடத்திக் கொண்டிருப்போம். திமுகவின் ஊழலை தட்டிக் கேட்போம்” என்று அண்ணாமலை திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது கவனத்திற்கு உரியதாகும்.

ஆனால், திமுக என்ற கட்சியே தடம் புரண்டாலும், பாஜகவை ஆதரித்தாலும் தமிழக மக்கள் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள் தமிழக மக்கள் என்பதையும் அண்ணாமலை புரிந்து வைத்திருக்கிறார். ஆகவே, தான் சித்தாந்த பரப்புரையை செய்ய வேண்டும்.அதன் மூலம் தான் கட்சிக்கு அடித்தளம் போட முடியும் என நம்புகிறார். அதை ஒட்டியே அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

”தமிழத்துல 13,000 கிராமங்கள் இருக்கு. ஒவ்வொரு கிராமத்துக்கும் நம்முடைய கட்சியை எடுத்துட்டுப் போகணும். வீடு வீடாக நம்முடைய கொள்கையை எடுத்துச் சொல்லிப் பேசணும். இனியும் நாம் பொறுத்திருக்க முடியாது. ஆட்சிக்கு வந்தாக வேண்டும். நம்முடைய நல்ல சித்தாந்தங்களை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதிரடியாக, அசுரத்தனமாக இந்தக் கட்சி இனி வளர்ச்சி பெறும். வரும் காலம் பாரதிய ஜனதா கட்சியின் காலம”

தேர்தலின் போது மோடி,அமித்ஷா போன்றவர்களின் பெயர்களை சுவற்றில் எழுதிவிட்டு,பிறகு ஓட்டு விழாமல் போய்விடுமோ என்றபயத்தில் அதை அழித்துவிட்டவர் அண்ணாமலை. இப்ப எப்படி யார் பெயர் சொல்லி கட்சியை மக்களிடம் எடுத்துச் செல்வாரோ தெரியவில்லை.

மத்திய அரசிடம் உள்ள மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்டு தமிழகத்தில் கட்சியை வளர்க்கலாம் என்பதும் அண்ணாமலை திட்டங்களில் ஒன்றாகும். ஆனால், அந்த மட்டுமீறிய அதிகாரங்கள் தான் அவர்களுக்கு தமிழக மக்களிடம் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது என்பதை அவர்கள் உணரவில்லை.

கட்சித் தலைவாரவதற்கு முன்பே, ”ஊடகங்களை ஆறுமாததிற்குள் கண்ரோல் பண்ணப் போகிறோம், கட்டுப்படுத்த போகிறோம்” என்ற சொல்லாடல்களே அவர்களின் அதிகாரமே அவர்களை அழித்துவிடும் என்பதற்கான அத்தாட்சியாகும். இது எவ்வளவு சிறுபிள்ளைததமான பக்குவமற்ற பேச்சு என்பதை கூட உணர முடியாத ஒருவரை தமிழக பாஜகவிற்கு தலைவராக்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்சின் அழுத்தம்! ஆர்.எஸ்.எஸ்சை பொறுத்த வரை இன்னொரு யோகி ஆதித்தியநாத் போன்ற முரட்டுத்தனமான தலைவர் தான் தேவை என கருதுகிறார்கள்!

அண்ணாமலையின் முரட்டு சுபாவங்கள், அதிரடிப் பேச்சுகள் ஆகியவற்றால் தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி  எப்படியாவது பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்ற கனவு பலிக்குமா..? எனத் தெரியவில்லை.

அவசரக்குடுக்கைத் தனமாக பேசுவது, ஆத்திரப்படுவது, மிரட்டல் விடுப்பது, பொருந்தாத வார்த்தைகளை அள்ளிவிடுவது ( நான் கன்னடனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் ) போன்ற செயல்பாடுகளால் அண்ணாமலை திமுகவிற்கு தலைவலியாக இருப்பாரா அல்லது சொந்தக் கட்சிக்கே தலைவலியாக மாறப் போகிறாரா..? என்று தெரியவில்லை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time