தேச பக்த அரசுகளும், தேச துரோகச் சட்டங்களும் !

-கே.பாலகிருஷணன்

தேசத்துரோக சட்டம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் 

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த சம்மட்டி அடி !

இன்னும் சுதந்திர நாட்டில் தான் வாழ்கிறோமா அல்லது அடிமை இந்தியாவில் வாழ்கிறோமா என சந்தேகப்படும்படி பிரிட்டிஷ் அரசு இந்திய சுதந்திரப் போராட்டத்தை அடக்க 1870 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேச துரோக வழக்கை தற்போதும் மத்திய,மாநில அரசுகள் எடுத்ததற்கெல்லாம் பயன்படுத்தி வருவதை உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதன் பின்னணியில் அதிமுக, பாஜக அரசுகள் ஆடிய ஆட்டங்கள் கொஞ்சமா.. நஞ்சமா..?

கடந்த 4 மாதங்களாக இந்திய நீதித்துறையின் கண்ணோட்டதில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பது, உச்ச நீதிமன்றம் மற்றும் பல மாநில உயர் நீதிமன்றங்கள் கொடுத்து வரும் தீர்ப்புகள் மற்றும் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆகியவை நிரூபித்திருக்கின்றன. இதற்கு இந்திய விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியும், உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியின் நியமனமும் பெரும் காரணங்களாக அமைந்துள்ளன.

இந்தப் பின்னணியில் நேற்று (15.07.2021) இந்திய அரசியல் சட்டப்பிரிவு 124A தேசத்துரோக சட்டம் பற்றி, மிகமுக்கியமான கருத்துக்களை, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.வொம்பாட்கெரே, தேசத்துரோக சட்டத்திற்கு எதிராகப் போட்டிருந்த  வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி N.V.ரமணா தலைமையிலான அமர்வு  பதிவு செய்தது. அப்போது தலைமை நீதிபதி ரமணா கூறியதாவது : “இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பிரிட்டிஷ் அரசு பயன்படுத்திய இந்த தேசத்துரோக சட்டம், மகாத்மா காந்திக்கும், பாலகங்காதர் திலகருக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டது.  நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னும் இச்சட்டம்  தேவைதானா” என்று  கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “ காலத்திற்குப் பொருந்தாத பல பழைய சட்டங்களை இரத்து செய்து வருகிற ஒன்றிய அரசு, இந்தச் சட்டத்தை இன்னும் ஏன் நீக்குவது குறித்து பரிசீலனை செய்யவில்லை? 1962ல் பீகார் அரசு, கேதாரிநாத் என்பவர் மீது போடப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 124A சட்டப்பிரிவை உறுதிசெய்தது. ஆனால் அன்றிருந்த அந்தக் கருத்து பழமையானது; நவீன இந்தியாவுக்குப் பொருந்தாது” என்றார்.

“தேச துரோக சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்யப்பட்டவர்களில் தண்டிக்கப்பட்டவர்கள் 3.3% மட்டுமே”. இந்தச் சட்டப்பிரிவு தவறாகப்  பயன்படுத்தப்படுவது குறித்து தலைமை நீதிபதி N.V.ரமணா கூறுகையில், “ஒரு மரப்பொருளைச் செய்வதற்காக ஒரு ரம்பத்தை ஒரு தச்சன் கையில் கொடுத்தால், அவன் தேவையான ஒரு மரத்தை வெட்டுவதற்குப் பதிலாக ஒரு காட்டையே வெட்டுவதைப் போல அதிக அதிகாரங்களையுடைய இச்சட்டம், வரைமுறையின்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.

மேலும் “இந்த 124A சட்டமானது அதன் காலத்தைத் கடந்து விட்டது. அரசுக்கு எதிராகக் கருத்து கூறுகிறவர்கள் மீது இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மாநிலத்தில் ஒரு கட்சி ஆட்சியில் இருந்தால், மாற்றுக் கட்சியினரை இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்கின்றனர். காவல் துறை மற்றும் அரசிடம் பொறுப்பேற்றல் இல்லை (accountability)”  என்றும் தலைமை நீதிபதி N.V. ரமணா கூறியிருக்கிறார். அதன் பின், தேசத்துரோக வழக்குகள் குறித்த அனைத்து விவரங்கள் அடங்கிய ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள், விரும்பத்தகாத படுகொலைகள், கூட்டு வன்முறை தாக்குதல்கள், இஸ்லாமிய மற்றும் தலித் மக்களுக்கு எதிரான கூட்டுக் கும்பல் தாக்குதல்கள் குறித்து  தெரிவித்து இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபால கிருஷ்ணன், நடிகைகள் ரேவதி, அபர்னாசென்,அனுராக் காஷ்யப், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49  பிரபலங்கள் கடந்த 2019 ஜூலை மாதம் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் ஒன்றிணைந்து இந்தக் கடிதத்தை எழுதியதற்காக அவர்கள் மீது மோடி அரசு தேசவிரோத சட்டத்தை பயன்படுத்த முனைந்த போது நாடே கொந்தளித்ததால் பின்வாங்கி கொள்ளப்பட்டது.

இதே போல தமிழகத்தில் வைகோ,திருமுருகன் காந்தி,கூடங்குளம் சுப.உதயகுமார் உள்ளிட்டோர் மீதும் இந்த வழக்கு பாய்ந்ததை நாம் மறக்க முடியாது.அதுவும் கூடங்குளத்தில் அமைதி வழியில் போராடிய மக்கள் மீது அதிமுக அரசு கண்ணை மூடிக் கொண்டு தேசவிரோத வழக்கு பதிந்ததை மறக்க முடியாது. இப்படியாக எளிய மக்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை போராளிகள், அரசியல் செயல்பாட்டாளர்கள், கன்னையா குமார் உள்ளிட்ட மாணவர்கள், பேராசிரியர்கள்..என பலர் மீது இந்த வழக்கு மிக அநீதியாக போடப்பட்டது.

மாற்று கருத்துள்ளவர்களையும், அரசாங்கத்தின்  கொள்கைகளை விமர்சிப்பவர்களையும், ஊடகவியலாளர்களையும், மாணவர்களையும், சிவில் சமூகத்தினரையும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, பல்வேறு மாநில அரசுகள் சிறையில்  அடைத்திருக்கின்றன. இவ்வாறு 2010 க்குப் பின், 10,938 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவற்றில் 816  பேர் மீதான வழக்குகளில் மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளன.  இந்தச் சட்டத்தை  அதிகமாகப் பயன்படுத்திய 5 மாநிலங்களாக பீகார், கர்நாடகா,உ.பி, ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாடு இருக்கின்றன. இதில் பீகார் முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன. அதாவது, இந்தியாவிலேயே இந்த சட்டத்தை பீகாருக்கு அடுத்தபடியாக அதிமுக அரசு தான் மிக அதிகமாக துஷ்பிரயோகம் செய்துள்ளது!

பீகார் – 168

தமிழகம் – 139

உத்திரபிரதேசம் – 115

ஜார்கண்ட் – 52

கர்நாடகா – 50

பாஜக, அதிமுக ஆட்சியில் அதிகமான வழக்குகள்

இந்தச் சட்ட விதி 124Aவை பயன்படுத்திய எந்த அரசையும் உச்ச நீதிமன்றம் குறை சொல்லவில்லை என்றாலும், இது ஒன்றிய பாஜக அரசுக்கு மிகவும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில்,

2014 பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பின்தான்,  தேசத் துரோகம் என்ற சொல்லாடல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டும்,   பதியப்பட்டுள்ள மொத்த தேசத் துரோக வழக்குகளில், 96 விழுக்காடு வழக்குகள் பாஜக ஆட்சியில்  பதிவு செய்யப்பட்டுள்ளன. டில்லியில் பிரபல சுற்றுச் சூழலியலாளர் திஷா ரவி இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதில் நேரடியான பொறுப்பு உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சாரும்.

பாஜக ஆட்சி செய்த மாநிலங்களிலும் அதனுடன் கூட்டணி வைத்திருந்த அதிமுக ஆட்சியின் போதும்தான் ஏராளமானோர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை போடப்பட்ட 139 தேசத்துரோக வழக்குகளில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகப் போராடியதற்காக மட்டுமே  130 பேர் மீது தேச துரோக வழக்குப் போடப்பட்டுள்ளது.

போராடும் விவசாயிகள் மீது தேசத்துரோக வழக்கு

உச்ச நீதிமன்றம் தேசத் துரோக வழக்கிற்கு எதிரான இந்தக் கருத்தைப் பதிவு செய்திருக்கின்ற அதே நாளில் (15.07.2021) போராடும் 100 விவசாயிகளுக்கு எதிராக பாஜக ஆளும் அரியானா மாநிலத்தில், தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதியின், தேசத்துரோக சட்டத்திற்கு எதிரானதும், அது பயன்படுத்தப்படுகிற முறைபற்றியும் கூறப்பட்ட கருத்துக்களுக்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரிடத்தில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது; ஒன்றிய அரசாங்கத்திற்கு ஒரு வலுவான செய்தியையும் இது அனுப்பியுள்ளது.

கட்டுரையாளர்;கே.பாலகிருஷ்ணன்

சுயஆட்சி இந்தியா.

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time