சகலமும் சபரீசன் தானா..? என்ன நடக்கிறது..?

-சாவித்திரி கண்ணன்

அவருக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கட்சியில் ஒருவர் எந்த பொறுப்பில் இருந்தாலும் அல்லது  தொடர்ந்து இருக்க வேண்டும் என்றாலும் அவர் தயவு தேவை என்கிறார்கள்!

அவர் ஆட்சியில் எம்.எல்.ஏவும் இல்லை, அமைச்சரும் இல்லை, ஆனால், யாரும் எம்.எல்.ஏவோ அமைச்சரோ ஆக வேண்டும் என்றால், அவர் கடைக் கண் பார்வை தேவை என்கிறார்கள்.

அதிகாரிகள் முக்கிய பதவிகளை அடைவதற்கும் அவரையே நாடுவதாகத் தெரிகிறது.

பெரும் தொழில் அதிபர்கள் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் அவர் வழியே அணுகுவதாக சொல்லப்படுகிறது.

அதாவது அதிகாரம் கொடுக்கபடாத அதிகார மையமாக சபரீசன் வலம் வருகிறார்!

இன்றைய அவரது பிறந்த தினத்திற்கு அதி முக்கியத்துவத்தை அமைச்சர்களும், அதிகாரிகளும், வி.வி.ஐபிக்களும் தந்தனர்.

திமுக என்ற ஒரு மாபெரும் ஜனநாயக இயக்கத்தில் இந்த அளவுக்கு சபரீசன் முக்கியத்துவம் பெறுவதற்கு அவர் ஸ்டாலின் மருமகன் என்பது தான் காரணம் என்றாலும், அந்த வாய்ப்பை அதி சாமார்த்தியமாகப் பயன்படுத்தி வரும் அவரது அறிவும், திறமையும் கூட காரணமாக இருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.

ஆனால், அரசியலுக்கோ, பொது வாழ்க்கைக்கோ அறிவும், திறமையும் மட்டுமே போதுமானதல்ல, எளிய மக்கள் மீதான அன்பும், கரிசனையும், அவசியம். அவர்களின் வலி தெரிந்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கட்சியின் சித்தாந்தத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பு இருக்க வேண்டும்.

கடந்த 15 ஆண்டுகளாகவே அவர் திமுகவில் ஒரு முக்கிய மனிதராக வளம் வந்திருக்கிறார். திமுகவின் 2006-11 வரையிலான ஆட்சியின் போதும் அரசின் மருந்து, மாத்திரை கொள்முதலில் இவரது பெயர் அடிபட்டது.

அதன் பிறகு 2016 தேர்தலின் பின்னணியில் இவர் செயல்பட்டதாக பேச்சும் அடிபட்டது. ஆனால், கலைஞர் மறைவுக்கு பிறகு தான் இவர் மிகவும் பேசப்படுகிறார்.

”மாமனாரை முதல்வர் ஆக்கிய மருமகன்”

”திமுக வெற்றியின் சூத்திரதாரி”

”ஸ்டாலினை பின்னிருந்து இயக்கும் சக்தி”

என்றெல்லாம் இவர் பெயர் அடிபடுகிறது. தேர்தல் ஆலோசகர்களாக சுனில், பிரசாந்த் கிஷோர் ஆகியவர்களை கட்சிக்குள் நுழைத்து, திமுகவை ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக மாற்றி அமைத்ததில் இவருக்கு தான் பெரும்பங்கு உண்டு என்கிறார்கள். கட்சி சீனியர்களின் எதிர்ப்பை மீறி பிரசாந்த் கிஷோரை 400 கோடி செலவில் வேலைக்கு அமர்த்தியதோடு, அவரது வழிகாட்டுதலிலேயே ஸ்டாலினின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இருப்பது போல, திட்டமிட்டு செயல்படுத்தியவர் சபரீசன் என்பது கட்சியினர் அனைவரும் அறிந்தது.

”இதற்கிடையில் பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா..?’’ என்பது குறித்தும் சபரீசன் ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தலைவர்களுடன் நாக்பூர் சென்று பேசி வந்ததாக 2020 ஜனவரியில் செய்திகள் வெளியாயின. அமித்ஷாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பவராகவும் சபரீசன் பேசப்பட்டார்! பிறகு கொள்கை ரீதியாக அந்த வாய்ப்பு இல்லை என்று உறுதியானதும், உடனே சோனியா, ராகுல் ஆகியோரை தொடர்பு கொண்டு, ஸ்டாலின் பேசுவதற்கான முன்களப் பணிகளையும் ஆற்றியுள்ளார்! அந்த சந்திப்பில் ஸ்டாலினை ஓரம் தள்ளி சோனியாவும், ராகுலுக்கும் இடையில் நின்று புகைப்படம் எடுக்கும் அளவுக்கு தன்னை அவர் முன்னிலைப்படுத்திக் கொண்டது தான் இங்கு நாம் கவனிக்க வேண்டியதாகும்.

சோனியாவை சந்திக்கும் ஏற்பாடுகளை எம்.பியாகவுள்ள கனிமொழி செய்யமுடியாதா? டி.ஆர்.பாலுவோ, ஆ.ராசாவோ செய்ய முடியாதா..? அவர்களை பின்னுக்கு தள்ளி கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத மருமகனிடம் ஏன் ஒப்படைக்கிறார் ஸ்டாலின்..? கட்சியில் பல்லாண்டுகளாக இருக்கும் சீனியர்களை விடவும் மருமகனை பெரிதும் நம்புகிறார் ஸ்டாலின் என்றே நாம் எண்ண வேண்டியுள்ளது.

ஒரு கட்சியின் பண்பாட்டு விழுமியங்களுக்கு இது உகந்ததல்ல! இது சீனியர்கள் தங்களை தலைவர் சற்று அலட்சியப்படுத்தியதாகவோ அல்லது அவமானப்படுத்தியதாகவோ கருத கண்டிப்பாக இடமளித்திருக்கும். ஆனால்,அதை அவர்களால் வெளியில் சொல்லமுடியாது.

பாஜகவின் சித்தாந்த எதிர்ப்பே திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சாக இருக்க முடியும்..! அப்படி இருக்க, லட்சோப லட்சத் தொண்டர்களின் உணர்வுகளுக்கு முற்றிலும் எதிராக, ஒரு தனி நபர் – நெருங்கிய உறவினர் என்ற ஒரு அந்தஸ்த்தை மட்டுமே கொண்டு – கட்சியின் எதிர்காலத்தை சூனியமாக்க முயற்சித்ததை எப்படி புரிந்து கொள்வது..?

ஒரு ஜனநாயக இயக்கத்தில் ஒரு மறைமுக அதிகார மையம் என்பது மிக ஆபத்தானது! அப்படித் தான் சசிகலாவும், அவரது குடும்பமும் சென்ற ஆட்சியை ஆட்டி வைத்தனர். ஒரு மக்கள் தலைவர் தனக்கு யாரை பக்கத்தில் வைத்துக் கொள்வது, தவிர்ப்பது என்பது மிக முக்கியம். முதலமைச்சர் ஆசனத்திற்கு பின்பாக தனிப்பட்ட வகையில் நின்று அவர் புகைப்படம் எடுத்தது பொதுவெளியில் வரும் போது அவரை ஒரு நிழல் முதல்வாராகவே அது தோற்றம் காட்டும் என்பது ஸ்டாலினுக்கு தெரியாதா…? உண்மையிலேயே ஸ்டாலின் தன் மருமகனை எல்லா விதத்திலும் சார்ந்து செயல்படுகிறார் என்பது உண்மையா..?

ஜெயலலிதா என்ற தனிநபரின்  பலவீனம் அவர் சசிகலாவை சார்ந்து வாழும்படியாக நேர்ந்தது. அதற்கு சென்ற ஆட்சி காலத்தில் தமிழகம் கொடுத்த விலை அதிகம்! காலப் போக்கில் ஜெயலலிதாவே சசிகலாவால் இயக்கபடுபவராக மாறிப் போனார் என்பதும் ஆட்சி நிர்வாகத்தில் சசிகலாவின் தலையீடுகள் எப்படி கொடிகட்டிப் பறந்தன என்பதும் தமிழகம் கண்ட அனுபவங்களாகும்.

சபரீசன் எந்த மேடையிலும் தோன்றி பேசியவரல்ல. அவர் எண்ணங்கள், போக்குகள் எப்படிப்பட்டவை என்பது மக்களுக்கோ, கட்சித் தொண்டர்களுக்கோ தெரியாது. நாளைக்கு எந்த ஒரு பிரச்சினை வந்தாலும், அதற்கு அவரை யாரும் பொறுப்பாக்க முடியாது. முதலமைச்சர் என்ற வகையில் அதை ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

எனவே, தவிர்க்க முடியாத முக்கியத்துவம் கொண்டவராக சபரீசனை ஸ்டாலின் உணரும் பட்சத்தில், அவருக்கு வெளிப்படையாக ஒரு பொறுப்பை தந்துவிடட்டும். அவர் திறமைகள் இந்த நாட்டுக்கோ, மக்களுக்கோ பயன்படும் என்று நம்பும் பட்சத்தில் சட்டப்படி அவர் இயங்க அனுமதிப்பதே உத்தமமாகும்!

இதோ உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக வெளிப்படையாக இயங்குகிறார். அவரது செயல்பாடுகளை பார்க்கவும், மதிப்பிடவும் மக்களுக்கு வாய்ப்புள்ளது! அவரும் உள்ளபடியே நன்றாக ஈடுபாட்டுடன் இயங்கி தனக்கு கிடைத்த வாய்ப்பை நேர்மையுடன் பயன்படுத்துகிறார்.

இது மன்னராட்சி காலமல்ல, மக்களாட்சி காலம்! எதிலும் வெளிப்படைத் தன்மை எதிர்பார்க்கப்படும் காலம். எதுவும் உடனே வெளிப்பட்டுவிடும் டிஜிட்டல் யுகம்! மக்களுக்கு தெரியாமல் அரசியல் செய்ய முடியாது. எப்படியும் அம்பலப்பட்டுவிடும்.

சர்வ பலம் உள்ளவராக – சகலகலா வல்லவராக – சர்வமும் அவரே என்பதாக – சித்தரிக்கப்படும் சபரீசன் வெளிப்படையாக இயங்கட்டும். இல்லாவிட்டால் வில்லங்கமானவராகவே மக்களால் பார்க்கப்படுவார். எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்படுவார்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time