மறைக்கப்பட்ட வீரப்பன் வாழ்வையும்,மரணத்தையும் சொல்கிறார் சிவசுப்பிரமணியம்!

-செழியன்.ஜா

வீரப்பனை பற்றி தெரிந்த நமக்கு வீரப்பன் குழுவில் உள்ள சாகசமான நபர்களையும்,அவர்களின் குணாதிசியங்களையும் பற்றி தெரியாது. வீரப்பனை, அவர் குழுவின் பல்வேறு அங்கத்தினர்களை, இவர்களுடன் தொடர்பிலிருந்த மக்களை, போலீசின் தேடுதல் வேட்டைகளை பற்றியெல்லாம், மிகவும் விலாவாரியாக, துல்லியமாக எழுதப்பட்ட நூல்களே இவை!

ஒரு மனிதனைப் பற்றி 2000 பக்கங்களுக்கு சலிப்பேயின்றி, விறுவிறுப்பாக எழுத முடியுமா? ஆம் முடியும் என்பதை நிருபிக்கிறது பத்திரிகையாளர் சிவசுப்ரமணியம் எழுதி வெளிவந்து உள்ள புத்தகங்கள்! அவரது “வீரப்பன் வாழ்ந்ததும்-விழுந்ததும்”  மொத்தம் 4 பாகங்களாக  வெளிவந்துள்ளன!

தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸார் அனைவரும் அறிவர்; வீரப்பன் முதல் குற்றவாளி இல்லை. சேத்துக்குழி கோவிந்தன் தான் முதல் குற்றவாளி.

வீரப்பன் குழுவில் இருந்த அன்புராஜ்  சொல்கிறார்; நூறு வீரப்பனுக்கு ஒரு சேத்துக்குளி கோவிந்தன் சமம்! காட்டில் போலீசால் வைக்கப்படும் அனைத்து கன்னிகளையும் உடைத்தெறியும் களவீரராக கோவிந்தன் இருந்திருக்கிறார். வீரப்பனை சேதாரமில்லாமல் முழுமையாயாக பாதுகாத்தது சேத்துக்குழி கோவிந்தன் தான்.

இறப்பிற்கு முன்பு நடந்த மனம் பதைபதைக்கும் சம்பவம். வீரப்பனை காட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுடன் வீரப்பன் அறியாமல் பேசுகிறார். அருகில் கோவிந்தன் இருக்கிறார்.  இவரால்தான் சாகப்போகிறோம் என்று வீரப்பனுக்கு தெரியாது. ஆனால், அந்த உரையாடலில் கோவிந்தனுக்கு அந்த மனிதர் மீது சந்தேகம் உறுதிப்பட்டு விடுகிறது. இவர் போலீஸ் உளவாளி என்பதால் தீர்த்துக்கட்ட துப்பாக்கி எடுத்து சுட போகிறார் கோவிந்தன். உடனே பாய்ந்து வீரப்பன் அதை தடுக்கிறார்.

கோவிந்தா எப்பொழுதும் உனக்கு சந்தேகம்தான். இவர் அந்த மாதிரி செய்யமாட்டார். இவர் நம்ம ஆளு என்று கோவிந்தனை தடுக்கிறார். அந்த தவறான கணிப்பே வீரப்பன் சாவுக்கு காரணமாகிறது! அந்த மனிதரால் தான்  போலீசில் மாட்டுகிறார் வீரப்பன். கடைசி நேரத்திலும்  சரியாக கணித்த போதிலும், வீரப்பனுக்கு கட்டுப்பட்டு அமைதியாகி விடுகிறார் கோவிந்தன்.

இப்படி வீரப்பனை சுற்றி பல காலங்களில் பல மனிதர்கள் சூழ்ந்து  இருந்தாலும் சேத்துக்குழி கோவிந்தன் தான் தளபதி போல் செயல்பட்டு வீரப்பனை காத்து இருக்கிறார்.

# முதல் பாகமாக, வீரப்பன் இளமை காலம் முதல் 1990 வரையான நிகழ்வுகள் சொல்லப்பட்டுள்ளன!

# இரண்டாவது பாகமாக 2000 ஆண்டு வரையிலான சம்பவங்கள் சொல்லப்பட்டுள்ளன!

# மூன்றாவது பாகமாக, ராஜ்குமார் கடத்தல் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளது.

# நான்காவது பாகமாக வீரப்பனின் கடைசி காலம் – அவரது மர்மமாக்கப்பட்ட மரணம் வெளிப்பட்டுள்ளது.

நூலாசிரியர் சிவசுப்ரமணியம் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்திவிடுகிறார். இந்த புத்தகத்தில் எந்த இடத்திலும் என்னுடைய சொந்தக் கருத்தை திணிக்கச் செய்யவில்லை. வீரப்பன் கூட வாழ்ந்தவர்கள், வீரப்பனை தெரிந்த பழங்குடி மக்கள், வீரப்பன் உறவினர்கள், நண்பர்கள், வீரப்பன் எதிரிகள், வீரப்பனை தேடி சென்ற காவல்துறை தரப்பினர், வீரப்பனை காட்டி கொடுத்தவர், ஊர் மக்கள்,  மற்றும் கடைசி சில வருடங்கள்  விரப்பனுடன் இருந்த தமிழ் விடுதலை படை, மீட்சி படையை சேர்ந்தவர்கள் ..போன்றவர்களை வருடக்கணக்கில் தேடிக் கண்டடைந்து  பேசி உண்மைகளை உள்வாங்கி,பொய்களை விலக்கி எழுதிய புத்தகமாகும்.  சிவசுப்பிரமணியத்திற்கே நேரடியாக வீரப்பனுடன்  அனுபவங்கள் உண்டு என்றாலும், அவர் தன்னை முன்னிலைபடுத்தி நூல் எழுதவில்லை.

எல்லாம் தெரிய வந்தும் ஏன் புடிக்க முடியவில்லை?

கடைசிவரை வீரப்பனை நேரடியாக பிடிக்க முடியாது என்று போலீசுக்கு நன்றாக தெரிந்திருந்தது.  வீரப்பன் எங்கெங்கு சென்றார், தங்கினார்.? எவ்வளவு நாட்கள் இருந்தார், யாருடன் தொடர்பில் இருந்தார் என்றெல்லாம் போலீசுக்கு துல்லியமாக தெரிந்துவிடுகிறது என்றாலும்,அவர்களால் ஏன் வீரப்பனை பிடிக்க முடியவில்லை?

ஒரு முறை நூலாசிரியர் சிவசுப்ரமணியம் வீரப்பனை சந்தித்து வந்தது பற்றி பிறகு அவரிடமே போலீஸ் துல்லியமாகச் சொல்கிறது. அவர் சென்றது, பார்த்தது, திரும்பிவந்தது எல்லாம். போலீஸ் சொல்லும் தகவல்கள் முற்றிலும் உண்மையாக  இருப்பதை நினைத்து சிவசுப்ரமணியமே ஆச்சரியப்படுகிறார்.

வீரப்பன் இருக்கும் இடம் தெரிந்த  பிறகு போலீஸ் அங்கு சென்று பிடிக்க வேண்டியதுதானே  என்ற கேள்வி எழும்? அதற்கு நூலாசிரியர் இப்படி குறிப்பிடுகிறார்.

வீரப்பன் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு போன பிறகு கடைசியாக வீரப்பன் இருந்த இடத்தை பற்றிய தகவல் இரண்டு நாட்களிலோ அல்லது ஐந்து நாட்களிலோ இல்லையெனில், அதிகபட்சம் ஒரு வாரத்திற்குளோ போலீசுக்கு தெரிந்து விடும். ஆனால், இப்பொழுது வீரப்பன் எங்கு உள்ளார், என்ன செய்கிறார்  என்று தகவல் மட்டும் கடைசி வரை போலீசால் அறிய முடியவே இல்லை..

கடைசி வரை எவ்வளவு முயன்றும் போலீசால் வீரப்பனின் நிகழ்கால இடத்தை கண்டறியவே முடியவில்லை என்று சிவசுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். அதனால் தான் வீரப்பனை நேரடியாக போலீசால் பிடிக்க முடியவில்லை.

யானை முதல் சந்தன மரம் வரை

தொடக்க காலத்தில் யானை வேட்டை, பங்காளி சண்டையில் தொடங்கிய வீரப்பன் வாழ்க்கை பிறகு பங்காளிகளை கொல்வதில்  முடிகிறது! பங்காளிகளிடம் இருந்து விலகி, பிறகு வீரப்பன்-போலீஸ் என்று வாழ்க்கை மாறுகிறது. போலீஸ் பக்கம் நிறைய நபர்கள் பலி ஆகிறார்கள். வீரப்பன்  குழுவிலும் நிறைய நபர்கள் இறக்கிறார்கள், போலீஸிடம் மாட்டுகிறார்கள். இதற்கு நடுவில் திருமணம், குழந்தை, துரோகிகள், எதிரிகள் என்று நகர்கிறது வீரப்பன் வாழ்க்கை. இடையில் சாதரண அரசு ஊழியர்கள் கடத்தல் நடக்கிறது. அது நடிகர் ராஜ்குமார்  கடத்தல் வரை சென்று உலகளவில் வீரப்பனை அடையாளப்படுத்துகிறது.

ஆனால், தன் வாழ்க்கையில் இரண்டு முறை மட்டுமே சந்தனமரத்தை வெட்டிய வீரப்பன், கடைசி வரை சந்தனக்கடத்தல் வீரப்பன் என்பதாக பெயர் பெற்றார். அதிலும் அந்த இரண்டு முறையில் ஒரு முறை மட்டும் தான் பணம் வந்தது. இரண்டாவது முறை சந்தனக்கட்டைகளை போலீஸ் பிடித்துவிட்டது என்று நகைச்சுவையாக குறிப்பிடுகிறார்! எனில், வீரப்பனை சாக்காக வைத்து, பல அரசியல் செல்வாக்கான புள்ளிகள் சந்தன மரங்களை கடத்தி இருக்கிறார்கள் என்பதும் வெளிச்சத்திற்கு வருகிறது!

2004 வருடத்திற்கு பிறகு வீரப்பன் வாழும் வாய்ப்புகளை அறிவியல் கண்டுபிடிப்புகள் அரிதாக்கி இருக்கக் கூடும்! கொல்லபடாவிட்டாலும் வீரப்பனால் நீண்ட வருடம் நடமாடி இருக்க முடியாது! என்று தெரியவருகிறது. சி.சி.டி.வி கேமரா, செல்போன் மூலமாக நடமாட்டத்தை அறியும் வசதிகள் ஆகியவை வீரப்பனுக்கு பெரும் சவால் ஆகியிருக்கக் கூடும்!

ஒரு முறை காட்டில் ஒரு இடத்தில் கேமரா வைத்து அதை போலீஸ் அதிகாரி விஜயகுமார் ஒரு அறையில் இருந்து பார்க்கிறார். அந்த கேமரா இருக்கும் இடத்திற்கு  வீரப்பன் வருவதும் பின்னல் சேத்துக்குழி கோவிந்தன் வருவதும் பார்க்கிறார். கேமரா வைத்து இருப்பது  வீரப்பனுக்கு தெரியாது. அதுவரை வீரப்பன் நடமாட்டத்தை போலீஸ் பார்த்தது இல்லை.

2004 வருடத்திற்குப் பிறகு இப்படி நவீன தொழில்நுட்பங்கள் வழியாக வீரப்பன் நடமாட்டத்தை நெருக்கமாக தெரிந்து கொள்ள வழி இருந்தது. ஆனால் அதற்கு முன்பே வீரப்பன் இறக்கிறார்..!

 நன்றிக்கு இலக்கணமாக இருந்த வீரப்பன்!

வீரப்பன் தனக்கு உதவும் காட்டு வாழ் எளியவர்களை  எந்த காரணம் கொண்டும்  யாருக்கும் அறிமுகப்படுத்தி வைப்பதில்லை. வெளியில் இருந்து வந்து அவர் குழுவில் இணைந்துள்ள புதியவர்களுக்கு – குறிப்பாக தமிழ்நாட்டு மீட்சி படை போன்ற இயக்கத்தவர்களுக்கு அறிமுகப்படுத்துவதோ, அவர்களை அழைத்து கொண்டு உதவுபவர்கள்  வீட்டிற்கு செல்வதோ கிடையாது.

விடுதலை படைத் தோழர்கள் பின்னொரு நாள் போலீசில் மாட்டினால் தனக்கு உதவும் நபர்களைக் காட்டி கொடுத்துவிடும் ஆபத்து உள்ளது,  அதனால் அவர்களை பிடித்து போலீஸ் சித்திரவதை செய்ய வாய்ப்புண்டு என்பதால் கடைசிவரை இந்த அணுகுமுறையை வீரப்பன் கடைபிடித்துள்ளார். குழுவில் உள்ள அவசியப்படும் ஒரு சிலருக்கு மட்டுமே உதவும் கிராமவாசிகளைப் பற்றி தெரியும்.

அப்படி தெரிந்த சிலரும் உதவுபவர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் அவர்களையும் மன்னிப்பதில்லை வீரப்பன். அப்படி ஒரு சம்பவம் வீரப்பன் கூட்டாளி மேய்க்கான் ரங்கசாமி விஷயத்தில் நடந்தது.

மேய்க்கான் ரங்கசாமி ஒரு நாள் விடுதலை படையை சேர்ந்த ஒருவரை அழைத்து கொண்டு இரவு வேட்டைக்கு செல்வதாக விரப்பனிடம் சொல்லிவிட்டு செல்கிறார்.  அப்படி சென்றவர் காலையில் தான் திரும்பி வருகிறார். சந்தேகம் ஏற்பட்டு வீரப்பன் விசாரித்தார். முன்னுக்கு பின் முரணான தகவல்களை ரங்கசாமி சொல்கிறார். அதனால் ரங்கசாமியுடன் சென்ற விடுதலை படை தோழரிடம் விசாரிக்கிறார்.  ’’என்னை ஒரு இடத்தில் நிற்கவைத்து ரங்கசாமி மட்டும் வேறு எங்கோ சென்று வந்தார்’’ என்று அவர் சொல்கிறார்!

அந்த இடத்திற்கு கோவிந்தன் சென்று விசாரிக்கிறார். அங்கு இருந்த வீடு  வீரப்பனுக்கு உதவும் ஒரு குடும்பம். அங்கே மேய்க்கான் ரங்கசாமி சென்று அந்த விட்டு பெண்மணியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்து இருக்கிறார். என்பது தெரிய வருகிறது. இதை தெரிந்து கொண்டு நேராக வந்து வீரப்பனிடம் சொல்லி விடுகிறார் கோவிந்தன்.

வீரப்பனால் பாதுகாக்கப்பட்ட காடு- சிவ சுப்பிரமணியம் பேட்டி

ரங்கசாமியை விசாரிக்கிறார் வீரப்பன். வாக்குவாதம் நடைபெறுகிறது. ’இது, சரிப்படாது ரங்கசாமி செய்தது தவறு’ என்று கோவிந்தன் துப்பாக்கி எடுத்து ரங்கசாமியை சுட்டு கொல்கிறார். வீரப்பன் அதை தடுக்கவில்லை. அந்த அளவு தங்களுக்கு உதவிய குடும்பங்களை பாதுகாத்து உள்ளனர், வீரப்பனும், சேத்துக்குளி கோவிந்தனும்!

வீரப்பனை தாக்கிய ஒரே மனிதன்

வெளியே நமக்கு தெரிந்த வீரப்பனின் செயல்களை விட, வீரப்பனின் சில குணாதிசியங்கள் வியப்பை தருகின்றன!

வீரப்பன் தூங்கிவிட்டால் அவரை யாரும் சுலபமாக எழுப்பிவிட முடியாது. ஏன் யாராவது வீரப்பனை தூக்கி கொண்டு சென்றாலும், விழித்துக் கொள்ளமாட்டார். கும்பகர்ணன் போல் தூங்கக்கூடியவர் என்பது வீரப்பன் கூட இருக்கும் குழுவினருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இரண்டு மாதங்களுக்கு மேல் வீரப்பன் கூட இருந்த பிணையக் கைதி நாகப்பாவுக்கு இது தெரிய வருகிறது.

ஒரு நாள் பின் இரவு கொடுவாள் எடுத்து கொண்டு வீரப்பன் கூடாரத்திற்கு நாகப்பா செல்கிறார். கடுங்குளிர் காரணமாக மூன்று போர்வைகள் போர்த்தி தூங்கிக் கொண்டிருந்த வீரப்பனை மூன்று முறை  தலையில் வெட்டுகிறார். குறைந்த தூரத்தில் இருந்து வெட்டுவதால் வெட்டு பாதிதான் வீரப்பன் மீது படுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வீரப்பன் எழுந்தபாடில்லை. வீரப்பன் நெஞ்சின் மேல் குனிந்து நின்றபடி பத்து வெட்டு வெட்டிய பிறகுதான் வீரப்பன் கண் விழித்து பார்க்கிறார்.

வீரப்பன் தலையில் வெட்டு விழுந்துள்ளது. கை விரலில் காயம். இந்த சம்பவம் இரண்டு விஷயத்தை உணர்த்துகிறது..! வீரப்பனை தாக்கிய ஒரே மனிதர் நாகப்பா தான்! ஆழ்ந்த தூக்கத்தில் பல  வெட்டுகள் விழுந்தும் எழுந்து கொள்ளவியலாத வீரப்பன்.

இப்படி தூங்கும் வீரப்பனால் எப்படி எந்த நேரமும் பாதுகாப்பாக இருக்க முடியும்  என்ற கேள்வி எழும்?

இந்த இடத்தை நிரப்புவதுதான் சேத்துக்குழி கோவிந்தன் வேலை. வீரப்பன் குழுவை சேர்ந்த அன்புபுராஜ் சொல்கிறார். ஒரு நாள் நள்ளிரவு. அன்புராஜ் எழுந்து பாத்ரூம் செல்லும்பொழுது, அருகில் இருந்த மிக உயர்ந்த மரத்தின் உச்சியில் இருந்து ஒரு இலை முறிந்து கீழ் விழுகிறது.

இலை முறிந்த அந்த நொடியே படுத்திருந்த சேத்துக்குழி கோவிந்தன் கண் திறந்து அந்த மரத்தின் உச்சியை பார்க்கிறார். இலை கீழ் நோக்கி வருவதை பார்த்துவிட்டு பிறகு தூங்குகிறார்.  இது போல அசாதாரணமான விழிப்புணர்வு கொண்ட தளபதியை வீரப்பன் பெற்று இருந்தார்! சேத்துக்குழி கோவிந்தன் பாதுகாப்பில் தான் வீரப்பனால் நிம்மதியாக தூங்கமுடிந்துள்ளது.

INDIA – APRIL 29: Veerappan, forest brigand with his Younger brother Arjunan (Photo by Shiva Subramaniam/The The India Today Group )

இந்த அளவுக்கு விழிப்புணர்வுள்ள கோவிந்தன், நாகப்பா வீரப்பனை வெட்டிய பொழுது ஏன் எழுந்து கொள்ளவில்லை? தடுக்கவில்லை? இதை தெரிந்து கொள்ள புத்தகத்தை படித்து பாருங்கள் சுவாரசியமாக இருக்கும்.

வீரப்பனின் வாழக்கைக்கு நிகராக விறுவிறுப்பு நிரம்பிய சிவசுப்ரமணியம் நாட்கள்…

 வீரப்பனை சந்தித்தது பேசியதில் என்ன விறுவிறுப்பு இருக்கப்போகிறது..?  அதுவல்ல, விறுவிறுப்பு..! இவருடைய அசராத உழைப்பை நான்காம் பாகம் நமக்கு நன்றாக உணர்த்துகிறது.

முதல் மூன்று பாகம் எழுத இவருக்கே போதுமான அனுபவமும், அவை தொடர்பான மனிதர்களை நேரிடையாக சந்திக்கவும் முடிகிறது. ஆனால், வீரப்பன் வாழ்க்கை முடிந்த நிகழ்வை நான்காம் பாகம் விவரிப்பதால் அந்த இறப்பு எப்படி நிகழ்ந்துள்ளது என்ற உண்மையை கண்டுபிடிப்பது சுலபமாக இல்லை. பல நாட்கள் அலைச்சல், பல மனிதர்கள் சந்திப்பு ஆகியவற்றாலும் கூட முழு உண்மையை அறிய முடியாத சவால்களை இறுதியில் வெற்றிகரமாக மீட்டுள்ளார் சிவசுப்பிரமணியம்!

போலீஸ் அதிகாரி விஜயகுமார் – ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் – மிகமிகக் கச்சிதமாக – எந்தவிவகாரங்களும் வெளித் தெரியாத வகையில் வீரப்பன் இறப்பு சம்பவத்தை நிகழ்த்தினார்.

வீரப்பன் இறப்பில் தொடர்புடைய போலீஸ், தனிநபர்கள் போன்றவர்களிடம் நீங்கள் விசாரித்தால் அவர்களால் ஒரு சில செய்திகளை மட்டுமே சொல்ல முடியும்! அதன் பிறகு என்ன நடந்தது என்ற தொடர்ச்சி அவர்களுக்கே தெரியாது. அவர்கள் சொல்லும் தகவலை வைத்து நாம் ஒரு முடிவுக்கும் வரமுடியாது. அந்த ஆப்ரேஷனில் பங்குபெற்ற எந்த போலீஸ்காரர்களுக்குமே கூட முழு தகவல் தெரியாது. அதனால் தான் விஜயகுமார் சர்வசாதாரணமாக பொய் சொல்ல முடிகிறது, ”கண் சிகிச்சை எடுக்க வீரப்பன் வந்தபொழுது சுட்டுப்பிடித்தோம்’’ என்று!

அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் சொன்னது முற்றிலும் உண்மைக்குமாறானது என்பதை மக்களால் அனுமானிக்க முடிந்தாலும், உண்மையில் வீரப்பன் எப்படி இறந்தார் என்ற உண்மையை அறிய இயலவில்லை! ஏராளமானவர்கள், போலீஸ்காரர்கள் சொல்லும் அனைத்து தகவல்களை உள்வாங்கி நூல் பிடித்து கொண்டு சென்றாலும், ஒரு இடத்தில் நூல் அறுந்துவிடுகிறது. இப்படித் தான் வீரப்பன் இறப்பு நடந்து உள்ளது என்று முடிவுக்கு வரமுடியாமல் பல தடுமாற்றங்கள்,அலைச்சல்களை சந்திக்கிறார் சிவசுப்பிரமணியன்!

இந்த சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு இருக்குமா என்று சந்தேகமே வராத அளவுக்கு பல மனிதர்களை  பல கட்ட அலைச்சல்களுக்கு பிறகு சந்தித்து, அவர்களிடம் உண்மையை வரவைக்க பல மாதங்கள் பொறுத்திருந்து, உரையாடி,  கடைசியில் அனைத்தையும் இணைத்து வீரப்பன் இறப்பை அடையாளப்படுத்தி, உள்ளது உள்ளபடியே எழுதி இருக்கும் சிவசுப்பிரமணியம் உழைப்பை என்ன சொல்லி பாராட்டுவது என தெரியவில்லை!

புத்தகத்தை பற்றி வீரப்பன் மகள் விஜயலஷ்மி!

அப்பாவின் இறப்பை தெரிந்து கொள்ள நான்காவது பாகத்தில் குறிப்பாக 369 ஆம் பக்கத்திலிருந்து கடைசி பக்கமான 448 வரை இரண்டு முறை வாசிக்கவும்..

அப்பா இறப்பின் மீது சந்தேகம் உள்ள அனைவரும் இந்த நூலை வாங்கி படித்து வரலாற்றை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்…

வீரப்பன் அவர்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டார் என்பது முற்றிலும் பொய் என உடைத்தெறியும் வகையில் இந்த நூல் மிகவும் தெளிவான விளக்கங்களை தெரிவிக்கிறது…!

இந்த வரலாற்று நூலை எழுதுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து ஆதாரங்களுடன் கூறிய பத்திரிக்கையாளர் சிவசுப்பிரமணியம் அண்ணன் அவர்களுக்கு நன்றிகள்..’’ இப்படி செல்கிறது வீரப்பன் மகள் விஜயலக்ஷ்மி பதிவு…!

வீரப்பனால் 33 ஆண்டுகால முடிவிலா சிறைவாசம்!

முழு புத்தகம் படித்து முடித்தால் 95 சதவிகிதம் வீரப்பன் சரியான முறையில் வாழ்கை வாழ்ந்ததாக தெரிகிறது. தேவையில்லாமல் ஆட்களை சுடுவது என்பது அவ்வளவாக இல்லை. போலீஸ் மற்றும் தன்னை காட்டிக் கொடுக்கும் உளவாளிகளை கொல்வது என்பது வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் செய்து உள்ளார். ஆனால் இரண்டு இடங்களில் அப்படி தோன்றவில்லை. அவரது செயலை ஏற்க முடியவில்லை!

 வீரப்பன் செய்த ஏற்க முடியாத இரண்டு அநீதிகள்!

 அவசியம் இல்லாமல் ஆட்களை கொல்லாத வீரப்பன் சின்னப்பொண்ணு கொலை விஷயத்தில் தவறு செய்துள்ளார் என்றே தோன்றுகிறது.

வீரப்பனுக்கு தெரிந்த சேவி என்பவரை SP கராத்தே கோபாலகிருஷனிடம் சின்னப்பொண்ணு என்பவர் மாட்டிவிடுகிறார். கோபாலகிருஷ்ணன் சேவியை கொன்று விடுகிறார். இது வீரப்பனுக்கு தெரிந்து சின்னப் பொண்ணை பிடிக்க அவர் வீட்டுக்கு வந்து அவரது ஒட்டு மொத்த குடும்பத்தையும் பிடித்து கொண்டு செல்கிறார்.

அதில் 12 வயது மகன், 16 வயது மகன், 18 வயது மகன், சின்னப்பொண்ணு மற்றும் அவர்   மனைவியும்  அடங்குவர். மொத்தம் 5 பேர்!.  அதில் 18 வயது மகன் முத்துசாமி சுதாரித்துக் கொள்கிறான். நம் குடும்பத்தை கொல்ல போகிறார்கள் என்று உணர்ந்து அங்கிருந்து தப்பித்து ஓடிவிடுகிறான். பிறகு அந்த குடும்பத்தில் உள்ள சின்னப்பொண்ணு, அவர் மனைவி, இரண்டு மகன்கள்  இறந்ததாக செய்தி வருகிறது.

சின்னப்பொண்ணு என்ற ஒரு மனிதன் செய்த தவறுக்கு எதற்கு அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை கொல்ல வேண்டும் வீரப்பன்? இது தப்பித்த முத்துசாமியின் கேள்வி. படிக்கும் நமக்கும் அதே கேள்வி தோன்றுகிறது.

தப்பியோடிய முத்துசாமி பிறகு, போலீஸ் வேலைக்கு சேர்ந்து வீரப்பன் தேடுதல் படையில் இணைகிறார். இந்த முத்துசாமிதான் வீரப்பன் இறந்த பிறகு இதுதான் வீரப்பன் போலீசுக்கு அடையாளம் காட்டினர்.

காவல்துறை அதிகாரியும், மனித நேயருமான DCF சீனிவாஸை அந்த ஊர் மக்கள் அனைவரும் கொண்டாடும் பொழுது அவர் தலையை வீரப்பன் வெட்டி கொண்டு சென்றது ஏன்? யாருமே அவரை பற்றி தவறாகவே சொல்லாத பொழுது வீரப்பனுக்கு ஏன் அதிகப்படியான கோபம் ஏற்பட்டது? அப்படி யார் விரப்பனிடம் சீனிவாஸை தவறாக சொல்லியிருப்பார்கள்..?

இன்றும் அந்த பகுதி மக்கள் வீட்டில் DCF சீனிவாஸ் படத்தை வைத்து  உள்ளனர். அர்ஜுன் வெளிவருவதற்கும் சீனிவாஸ்தான் உதவி உள்ளார். ஆனால் அதே அர்ஜுனன் தான் வீரப்பனிடம் சீனிவாஸை அழைத்து சென்றவர். அப்பொழுதான் சுடப்பட்டு, அவர் தலை வெட்டி எடுக்கப்பட்டது!

இந்த இரண்டு கொலைகளை தவிர மற்ற கொலைகளில் வீரப்பனுக்கு-வீரப்பனால் இறந்தவர்களுக்கும் நேரடியாக மோதல், பகை, காட்டி கொடுத்தல் போன்ற சம்பவங்கள் இருந்து உள்ளன.

இந்த நூலில் போலீஸ் செய்துள்ள அட்டுழியங்களை படிக்கும்பொழுது வீரப்பனைவிட போலீஸ் செய்துள்ள கொலைகள் அதிகமாக இருப்பது தெரிய வருகிறது.

எந்தவித முறையான ஆயுத பயிற்சியும் விரப்பனுக்கோ, அவரது குழுவுக்கோ .கிடையாது.  துப்பாக்கி, நவீன ஆயுதங்கள், ஆட்கள் பலம், உணவு  இவை எதுவும் முழுமையாக இல்லை வீரப்பன் குழுவினருக்கு!

வீரப்பனுக்கும்,அவரது குழுவினருக்கும் தெரிந்தது எல்லாம் காடு மட்டுமே! அனைத்துவித ஆயுதங்களும், ஆட்கள் பலமும் எல்லாம் இருந்தும் போலீசால் நேரடியாக வீரப்பனை கடைசி வரை பிடிக்க முடியவில்லை. போஸீக்கு தண்ணி காட்டி, காட்டில் மிக விழிப்புணர்வுடன் செயல்பட்டுள்ளார் வீரப்பன். வீரப்பன் குழுவில் உள்ள பலரை போலீசார் நேரடியாக பிடித்து இருந்தாலுமே கூட, கடைசிவரை வீரப்பன் இடத்தை கூட அவர்களால் நெருங்க முடியவில்லை.

நான்கு புத்தகங்களிலும் இதற்குமேல் சுவாரசியங்கள் நிரம்பி உள்ளன. காடு-நாடு இடையே நடந்த போராகவே (வீரப்பன்-போலீஸ்இடையே) வீரப்பன் வாழ்க்கை இருந்துள்ளது. படித்து பாருங்கள்.. ஆச்சரியம்  அடையும் தருணங்கள் அதிகமாகவே உள்ளன!

கட்டுரையாளர் ; செழியன். ஜா

சுற்றுச் சூழல் ஆர்வலர்

நூல்கள் வெளியீடு; சிவா மீடியா

489/A, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,

அண்ணா நகர்,ஆத்தூர்

சேலம் மாவட்டம்- 636102

தொலைபேசி; 94434 27327

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time