இன்றைய தினத்தந்தி , தினகரன் நாளிதழ்களில் முதல் பக்கம் அதிலும் முழு பக்கத்திற்கு கவர்ச்சிகரமான ஒரு விளம்பரம்!
வருடந்தோறும் முட்டை விலை ரூ 2.24 பைசா மட்டுமே! ரூ 700 கட்டினால் வாரம் தோறும் 6 முட்டைகள் வீட்டிற்கு நேரடியாக வந்து டெலிவரி செய்யப்படும்! ரூ1,400 கட்டினால், 12 முட்டைகள் டெலிவரி செய்யப்படும். ரூ 2,800 கட்டினால், வாரம்தோறும் 24 முட்டைகள் தரப்படும். பணம் கட்டி 15 வேலை நாட்கள் (அதாவது தோராயமாக 20 நாட்கள்) காத்திருக்க வேண்டும். பணத்தை ஆன்லைனில் மட்டுமே கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விலைக்கு முட்டை தருவது நடைமுறையில் சாத்தியமே இல்லை. இதில் ஏதோ சூது இருக்கிறது என முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சொல்கிறார்கள்! சென்னையில் தற்போது முட்டை சில்லறை விலை ரூ ஐந்து!
நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் அவர்களிடம் விசாரித்த போது, ”நாமக்கல்லில் முட்டையின் உற்பத்திக்கு ஆகும் செலவே ரூபாய் 3.50 பைசாவாகிறது. ஏனென்றால், கோழிக்கு வைக்கும் தீவனத்தின் விலை ரூ1,800 ஆகும்! இந்த தீவனத்தின் மூலம் 550 முட்டைகள் பெறலாம் என்பது கணக்கு! இப்படிப்பார்த்தால் ஒரு முட்டைக்கான தீவனத்திற்கு தோராயமாக ரூபாய் மூன்று வந்து விடுகிறது. அதன் பிறகு கோழி வாங்கியதற்கான மூலதனம், கோழி பண்ணை பராமரிப்புக்கான நடைமுறை செலவுகள், மின் கட்டணம்,வேலையாட்கள் கூலி எல்லாம் சேர்த்து 3.75 வரை வந்துவிடும்! சென்னைக்கு எடுத்து வரும் போக்குவரத்து செலவிற்கு ஐம்பது பைசா வைத்தால் நான்கு ரூபாய் மேல் வந்துவிடும். அத்துடன் இவர்கள் அட்டைப் பெட்டியில் வைத்து தருவதாக சொல்கிறார்கள்! ஒரு அட்டைபெட்டிக்கு குறைந்த பட்சம் ரூபாய் ஆறு ரூபாய் கூடுதல் செலவாகும்.
700 ரூபாய் என்பதாக ஐந்து லட்சம் பேர் பணம் கட்டினாலே 35 கோடி கிடைக்கும். அதுவே 14,00 ரூபாய் என ஐந்து லட்சம் பேர் கட்டினால் ரூ70 கோடி கிடைக்கும். 2,800 என ஐந்து லட்சம் பேர் கட்டினால் 105 கோடி வசூலாகும். இவ்வளவு பெரும் தொகையை பொது மக்களிடம் வசூலிப்பவர்கள் வெளிப்படையாக ஒரு திறப்பு விழாவை வைத்து இருக்கலாம். இவர்களுக்கு சொந்தமாக கோழிப்பண்ணை உள்ளதா? அது எங்குள்ளது..? எப்படி இந்த விலைக்கு தரப் போகிறார்கள் என்பதை தங்கள் முகத்தை காட்டிவிட்டு கேட்டு இருக்கலாம். யார் என்றே தெரியாமல் ஆன்லைனில் பணம் கட்டச் சொல்வது சரியாகப்படவில்லை!” என்றார்.
”முட்டை வியாபாரத்தில் முட்டை உற்பத்தியாளர்களோ,விற்பனையாளர்களோ மூன்று பைசா அல்லது அதிகபட்சம் ஐந்து பைசா லாபம் வைத்து தரமுடிகிறது. கடைக்காரர் அதை வாங்கி விற்கும் போது நூறு முட்டைகளில் இரண்டு அல்லது மூன்று சேதாரமாவது சகஜம்! ஆகவே, அவர்கள் இன்றைய நிலவரப்படி ஐந்து ரூபாய்க்கு விற்கிறார்கள்! இதையே வீடுவீடாக கொண்டு கொடுக்க வேண்டும் என்றால், ஒரு வேலையாளுக்கான தினக்கூலி குறைந்தபட்சம் ரூபாய் ஐநூறு கூடுதல் செலவாகும். அவர் பயன்படுத்தும் வாகனத்திற்கான பெட்ரோல் செலவு வேறு இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றை விலை மலிவு என்ற அதிரடி ஈர்ப்பை காரணமாகக் கொண்டு யோசிக்காமல் மொத்தமாக முன் கூட்டியே பணம் செலுத்துவது என்பது ஆபத்தானது” என முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சொல்கிறார்கள்.

தேக்கு மர வளர்ப்பிற்கு பணம் கட்டி ஏமாந்த அனுபவங்கள் நமக்குண்டு. ஈமு கோழி வளர்ப்பிற்கு பணம் கட்டி ஏமாந்த கதைகள் நமக்கு உண்டு. அந்த வகையில் எச்சரிக்கையோடு இந்த விளம்பரத்தை அணுக வேண்டும். சாதாரண ஒரு மளிகைக் கடை அண்ணாச்சி கடைக்கு தரும் ஐந்து அல்லது பத்து ரூபாயை மிச்சப்படுத்திவிடலாம் என்ற கணக்கில் நாம் இந்த கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடம் ஏமாந்துவிடக் கூடாது.” என்கிறார் பிரபல தமிழ் ஆய்வாளரும், நாமக்கல் முட்டை விற்பனையாளருமான பொ.வேல்சாமி!
உற்பத்தி விலையையும் விடக் குறைவாக ஒருவர் ஏன் ஒன்றை தர முன்வருகிறார். அப்படித் தருபவர் அதை மொத்தமாக மிகப் பெரிய ஓட்டலுக்கோ, வியாபார நிறுவனங்களுக்கோ விற்றுவிட்டுப் போகலாமே! தமிழக ( அதிமுக) அரசு சத்துணவு திட்டத்திற்கு கிறிஸ்டி நிறுவனத்திடம் தினசரி 80 லட்சம் முட்டைகள் வாங்கினார்கள்! ஒரு முட்டையின் விலை 4.75 முதல் ஐந்து என்ற விலைக்கு! ஆனால், மொத்த உற்பத்தியாளரிடம் 3.50 க்கு வாங்கமுடிந்த நிலையில், இதில் நாளொன்றுக்கு ஒரு கோடிக்கு மேலாக ஆட்சியாளர்கள் ஆதாயமடைந்தார்கள்! இன்னும் சில நாட்களில் பள்ளிக் கூடங்கள் திறக்கும்போது சத்துணவுக்கு ஏழைக் குழந்தைகளுக்கு இந்த விலையில் தினசரி 80 லட்சம் முட்டைகளை இந்த முட்டை விற்பனையாளர்கள் இந்த 2.24 காசுக்கு தருவார்களா..? என்று கேட்க வேண்டும்! அப்படி தரமுடிந்தால் மக்களின் வரிப்பணம் அரசுக்கு மிச்சமாகும்!
Also read
இப்படி பகிரங்கமாக விளம்பரம் செய்து முன்பணத்தை பொது மக்களிடம் சுளையாக வசூலிப்பவர்களை அரசாங்கம் முன் கூட்டியே இதை இவர்கள் எப்படி சாத்தியப்படுத்த முடியும் என விசாரிப்பது நல்லது! பின் நாளில் பணம் கட்டி ஏமாந்தோமென ஆயிரக்கணக்கானவர்களோ, லட்சக்கணகானவர்களோ புகார்கள் தரும் முன்பே அரசு இதில் தலையிட்டு எதிர்கால ஏமாற்றங்களை தவிர்க்கலாமே!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
இவர்களிடம் முட்டையும் இருக்காது. பண்ணையுமிருக்காது. பணத்தை திரட்டும் திட்டமே இது. நல்லவர்களாக இருந்தால் இந்த மூலதனத்தை திரட்டி பண்ணை வைக்கலாம். இல்லை மக்களுக்கு மொட்டை அடித்து மொய் வைக்கலாம். எதுவும் நடக்கும்.
இதற்கும் பணம் கட்ட நம் மக்கள் தயாராக இருப்பார்கள் ஈமூ கோழியில் ஏமந்ததை மறந்து இருப்பார்கள்
மலிவு விலை முட்டை பெயரில் மாபெரும் மோசடியா..?
-சாவித்திரி கண்ணன் – காவல் துறை இவர்களை தேடி விசாரிக்க வேண்டும். – எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அறம்