மதவாத அரசியலுக்கு மாற்று திமுகவா?  

சீலன்

இந்தியா முன்னெப்போதும் சந்தித்திராத ஜனநாயக விரோத,மதவாத மத்திய ஆட்சியாளர்களை கண்டு வருகிறது. இந்த அரசியலை எதிர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழக மக்கள் மட்டும் தான் முன்னணியில் உள்ளனர். அந்த தமிழ் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதான எதிர்கட்சியான திமுக பிரதிபலிக்கிறதா? என்ற காத்திரமான கேள்விகளை இக் கட்டுரை முன்வைக்கிறது.

இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்த அதிமுக கிட்டத்தட்ட தனது ஓட்டு வங்கியை பறிகொடுத்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜக உள்ளே வந்துவிடும் என்கிற நிலைப்பாட்டில் பல கட்சிகளும் திமுக கூட்டணியை ஆதரித்து திமுகவை வெற்றி பெறச் செய்தனர். திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கக் கூடும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் அமைந்த கூட்டணி அது. ஆகையால் தமிழகம் தனது வாக்குகளைச் சிதறவிடக் கூடாது என்பதன் அடிப்படையில் எப்போதுமில்லாத அளவில் திமுக வெற்றியை சுவைத்தது. ஆனால் வெற்றி பெற்று ஓராண்டுக்கும் மேலாக ஆன நிலையில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் கூட்டணி தமிழகத்திற்கு என்ன செய்தது என்கிற கேள்வி எழுப்பப்படவே இல்லை.

ஏன் நாடாளுமன்றச் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறுகிறது? NEET நுழைவுத் தேர்வை காங்கிரஸ் அறிமுகப்படுத்தியது. அப்போது திமுக அந்த அரசில் பங்கு பெற்றது. ஆனால் அதற்கு மாற்று கருத்தை அன்றே வலுவாக வைத்இருக்கலாம்! அதற்கு காங்கிரஸ் செவி சாய்க்கவும் வாய்ப்பிருந்தது. ஆனால்,திமுக காத்திரமான கருத்தை அன்று வெளிப்படுத்தவில்லை. திமுகவின் வாதம் என்னவென்றால் மாநிலங்களுக்கு NEET விலக்களிக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி தந்தது என்பது தான் அவர்களது விளக்கம். ஆனால் NEET தேர்வு தேசியத் தேர்வாக வரும் போது எப்படி ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு கிடைக்கும் என்று யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்று திமுக நினைக்கிறது. அதே போல் GSTக்கு ஆதரவாக திமுக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கலின் போது வாக்களித்தது. அப்போதும் எதிர்க்கவில்லை.

NIA என்கிற தேசிய விசாரணை ஆணைய சட்டம் பாஜக அரசால் கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் போதிய செய்திகள் இல்லை.. ஆனால் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் NIA சட்டத்திற்கு திமுக ஆதரவாக வாக்களித்ததாகவே ட்வீட் செய்தார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேசிய விசாரண ஆணையம் தமிழகத்தில் தேச விரோதிகள் ஊடுருவியுள்ளதாகக் கூறி பல இஸ்லாமியர்களை கைது செய்தது. இதில் இளந்தலைமுறையினர் பலர் முகநூலில் பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டவர்கள் மட்டுமே.

பாஜக இப்போதுள்ள சூழலில் நேரடிக் கூட்டணிகளை விட பிற கட்சிகளில் உள்ள மறைமுகக் கூட்டணிகளை உருவாக்கி வைத்துள்ளது. தமிழகத்தில் அதிமுகவை காலுக்கு கீழே மிதித்து வைத்துக் கொண்டாலும் திமுகவுடன் கை குலுக்கியே வருகிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 37 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, ’’ பியூட்டிஃபுல்காஷ்மீர்…’’ பாடிக் கொண்டிருந்தது நமக்கு பெரும் கோபத்தைத் தந்தது. ஆனால் திமுக இத்தனை முக்கியமான பிரச்சனைகளிலும் மாநில நலம் சார்ந்து அல்லது மதச் சார்பற்ற அரசியல் சார்ந்து என்ன செயல்பட்டது என்கிற கேள்விக்கு சரியான பதில் இல்லை. கனிமொழி அல்லது தமிழச்சி தங்கப்பாண்டியன் போன்றவர்களின் நாடாளுமன்ற உரைகளில் அவ்வப்போது பாஜகவை எதிர்த்து பேசினாலும்,பெரிதாக ஒன்றும் பாஜக எதிர்ப்பில்லை. நர்சரி பள்ளி ரைம் ஒப்புவிப்பது போன்ற சில எதிர்த்தோம் என்று பாவனை காட்டும் சடங்குகளை நாடாளுமன்றத்தில் திமுகவினர் செய்து வருகிறார்கள். டி.ஆர்.பாலு போன்றவர்கள் பல நேரங்களில் மோடிக்கு முகஸ்த்துதி செய்வதை எப்படி நியாயப்படுத்துவது?

முன்னர் 2G வழக்கு முடியும் வரை திமுகவின் கைகள் கட்டப்பட்டுள்ளது என்கிற தோற்றத்தைத் தந்தது. அது ஏதோ நடைமுறைச் சிக்கல் என்று விட்டுவிடலாம். ஆனால், பாஜகவிற்கு எதிராக பொதுவானவர்களும்,சமூக ஆர்வலர்களும்,சாதரண மனிதனும் சமூக ஊடகங்களில் வைக்கும் விமர்சனங்களைக் கூட திமுக வைப்பதில்லை.

சென்ற வாரம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் கூட பாஜகவிற்கு எதிராக இந்தி எதிர்ப்பையும் புதியக் கல்விக் கொள்கையையும் எதிர்க்கும் தீர்மானங்கள் மட்டுமே இருந்தன. உள்நாட்டு உற்பத்தி, பொருளாதாரச் சரிவு , வாழ்வாதார புனரமைத்தல், அல்லது PMCARES நிதி என்னவானது…உள்ளிட்ட பல விவகாரங்கள் முக்கியத்துவம் பெறவில்லை.

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஒன்று தான் மாற்று என்கிற நிலையில் அக்கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் வரை அமைதி காக்க வேண்டும் என்று பொதுவில் சொல்கிறார்கள். ஆனால், அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் ஆட்சியைக் காப்பாற்ற அமைதி காப்பது அவசியமில்லையா? என்று சமாதனம் பேசுவார்கள்!

திமுக விற்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக வந்துவிட்ட பிறகு,தலைவரான ஸ்டாலினும், குறுநில மன்னர்களான மாவட்டச் செயலாளர்களும் பாஜகவை எதிர்த்து எந்த அரசியலும் செய்யவில்லை. திமுகவில் இருந்து விலகுபவர்கள் பாஜகவில் தான் சேருகிறார்கள். முரசொலி மாறன் உயிரோடு இருந்த வரை திமுக பாஜக கூட்டணியில் இறுக்கமான நட்பு பாராட்டியது. இவ்வளவிற்கும் குஜராத் கலவரம் நடந்த போது கூட சலனமில்லாமல் பாஜக கூட்டணியில் தொடர்ந்தது திமுக.

தமிழகத்தில் காங்கிரசை திமுக எப்படி நடத்துகிறது என்பதும் கவனமாக பார்க்க வேண்டியுள்ளது. பாஜக தரும் அழுத்தத்தின் காரணமாக காங்கிரசை கழற்றிவிடலாம் அல்லது மிகக் குறைவான தொகுதிகளை கொடுத்து டம்மியாக்கலாம் என்ற பேச்சும் அக் கட்சிக்குள் நிலவுகிறது.பாஜகவை எதிர்ப்பதில் கங்கிரசுக்கும்,கம்யூனிஸ்டுகளுக்கும் கடைசி வரை ஒரு நம்பகமான தோழனாக திமுக இருக்குமா? என்ற கேள்வியும் வைக்கப்படுகிறது.

கொள்கை சார்ந்து திமுகவைத் தேடுபவர்களுக்கு ஏமாற்றமும்,விரக்தியும் தான் ஏற்படுகிறது! தமிழகத்தில் மாற்றுப் பாதைக்கான வெற்றிடம் தான் நம்மை பெரிதும் அச்சுறுத்துகிறது. திமுகவைப் பொருத்தவரை, இன்று அது ஒரு காலிப் பெருங்காய டப்பா … அதில வாசனை தான் இருக்கு..’’ என்பதே யதார்த்தம்! ஆனால்,அது தன் பழைய வீரியத்தை பெற வேண்டும் என்பதே நமது விருப்பம்!

அதிமுகவின் வெளிப்படையான பாஜக சரிவு மட்டும் தான் இப்போதைக்குள்ள வேறுபாடு. பிரதிநிதித்துவ அரசியல் என்பதைக் கூட திமுக இப்போதைக்கு சாதி பங்கீடு அல்லது பகுதிவாரி பங்கீடு என்று பதவிகளைப் அளித்து வருகிறது. மாநில சுயாட்சி அல்லது மாநில நலன் சார்ந்த அரசியல் என்பதை உதட்டளவில் பழைய திமுகவினர் பேசி வருகிறார்கள்.  சாமர்த்தியமாக அரசியல் செய்வதாக எண்ணி திமுக தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இளம் தலைமுறைகள் கேள்விகளோடு வரலாற்றின் வாசலில் நிற்கிறார்கள்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time