நாட்டுமக்களின் அரிய பாதுகாவலனாக, அரவணைக்கும் ரட்சகனாகத் திகழ வேண்டிய உச்ச நீதிமன்றம் சமீப காலமாக அதன் கடமையில் இருந்து நழுவுகிறதோ என்ற சந்தேகம் பெரும்பாலோர் மனதில் தோன்றியுள்ள சூழலில், உச்சநீதி மன்ற நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அவர்கள், ”பெரும்பான்மை மனப்போக்கின் அடிப்படையில் குற்றசெயல்களை பிரித்துப் பார்ப்பதும், குற்றவியல் நடைமுறைகளை எடுத்துச்செல்வதும் நீதியை நிலை நாட்டும் செயலல்ல! மாறாக, அவை நீதியையும் சமத்துவத்தையும் குழிதோண்டி புதைக்கும் செயலாகும்.” என்று பேசியுள்ளது சற்று ஆறுதல் தருகிறது!
சமீபகாலமாக நாட்டின் நீதி பரிபாலன அமைப்புகள், மக்களை பாதித்த பல்வேறு நிகழ்வுகளில் பாராமுகமாக இருந்துவிட்டன;
# ஆகஸ்ட் 5, 2019 ஜம்மு காஷ்மீர் மாநிலம் துண்டாடப்பட்டு, அரசியல் பிரிவு 370 ரத்தானதை எதிர்த்த வழக்கு
# இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் 2019 ஐ எதிர்த்த வழக்கு,
# விவசாய சட்ட திருத்தம் 2020 ( மூன்று விவசாய சட்ட திருத்தங்கள்) எதிர்த்த வழக்கு,
# ஹேபியஸ் கார்ப்பஸ் மனு (ஆள் கொணர்வு மனு) மீதான வழக்கு
ஆகியவற்றில் உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறை, மற்றும் வியாக்கியானங்கள் பல்வேறு ஒருவித நம்பிக்கையின்மையை மக்கள் மனதில் விதைத்தது.
ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட பொழுது, அதை கண்டிக்காதது மட்டுமல்ல, அந்த வழக்கை விசாரணைக்கே இன்றுவரை எடுத்துக்கொள்ளவில்லை உச்ச நீதிமன்றம்!
காரணமின்றி சிறையிலடைக்கப்பட்ட எண்ணற்ற காஷ்மீர் மக்கள் சார்பாக தொடுக்கப்பட்ட ஆள் கொணர்வு மனு வழக்கிலும் உச்ச நீதிமன்றம் – உலகமே இதுவரை கண்டிராத வினோதமாக – தலையை மண்ணில் புதைத்த நெருப்புக் கோழி போன்று பாராமுகமாக நடந்துகொண்ட விதம் அனைவரது மனதிலும் கலவரத்தை விதைத்தது.
இது போதாதென்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கெதிரான வழக்கை இன்றுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாத உச்ச நீதிமன்றம் – சமன் செய்து சீர் தூக்கும் துலாக் கோல் என்ற – நிலையில் இருந்து நழுவுகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
விவசாய சீர்திருத்த சட்டங்களுக்கு எதிரான வழக்கில், சட்டத்தை வளைப்பதில் ஆளும் கட்சி ஈடுபட்ட போதிலும் அமைதி காத்திருந்த உச்ச நீதிமன்றம் நியாயத்தையும், சட்டபூர்வமான தீர்வையும் விவசாயிகளுக்கு வழங்க, ஏனோ மறந்துவிட்டது!
இத்தகைய பாராமுகமும், கடமையில் இருந்து நழுவுதலும், ஒருதலைபட்சமாக நடப்பதும் நீதி பரிபாலன அமைப்புகள் மீதான மாண்புகளை சிதைப்பதோடன்றி, மக்களின் நம்பிக்கையையும் சிதறடிக்கிறது.
வி.ஆர் கிருஷ்ணய்யர், பி.என். பகவதி போன்ற சமூக அக்கறை உள்ள நீதிமான்களின் வழிகாட்டும் தீர்ப்புகளும் அதன் உள்ளார்ந்த அரவணைப்பும் எங்கே போயின..? என்ற ஏக்கம் மேலோங்குகிறது.
ஹெச்.ஆர். கன்னா, ஒய்.வி.சந்திர சூட் போன்ற – சட்ட மாண்புகளின் அடிப்படையில் நீதியை நிலைநாட்டிய – நீதியரசர்கள் காட்டிய அரசியல் சாசன வழியும் மறந்து போயிற்றா…? என கலங்க வைக்கிறது!
சமுதாயத்தில், பொதுவெளியில் அரங்கேறும் அநியாயங்களை எதிர்த்து எழுந்த பொது நல வழக்குகளில் Public Interest Litigation துடிப்புடன் நீதி வழங்கிய நீதிமான்கள் எங்கே?
தானே முன்வந்து அநீதிக்கும், அத்துமீறல்களுக்கும் எதிரான வழக்குகளை தொடுத்து (Sou- motu ) அவ்வழக்குகளில் அளித்த தீர்ப்பின் மூலம் ஆளும் அரசிற்கும், மக்களுக்கும் வழிகாட்டிய பெருமை எங்கே?
சட்டத்தின் மாண்பை தூக்கிப்பிடிக்க வேண்டிய நீதிபதிகள், தங்கள் கடமையை செய்யாமல், நீதி வழங்குவதை தாமதப்படுத்தலாமா? தாமதப்பட்ட நீதி மறுக்கப்படும் நீதி என்பது நீதியரசர்களுக்கு தெரியாதா?
ஆதார் வழக்கின் தீர்ப்பு முதல் தேர்தல் நிதி (Electoral Bonds) வழக்கின் தீர்ப்பு வரை வழங்கப்பட்ட நீதிகளின் (?) தன்மைபற்றி எல்லோரும் புரிந்துகொண்டுள்ளனர்.
கோவிட் காலத்தில் புறந்தள்ளப்பட்ட நீதி பரிபாலனம் , முடக்கப்பட்ட நீதி, பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சூ மோட்டா வழக்காக நடத்தி தண்டனை வழங்கியதையும் நாடு பார்த்தது!
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் அவர்களுக்கிழைக்கப்பட்ட அநீதி இந்த நீதிமன்றத்தின் கண்களுக்கு தென்படவில்லையே! ஏனெனில், இவர்கள் துஷார் மேத்தாவின் – இன்றைய தேதி வரை ஓர்உயிர்கூட பலியாக வில்லை- என்ற கூற்றை நம்பி ஒன்றிய அரசின் மேதாவிதனத்தில்(wisdom of the Executive) நம்பிக்கை வைத்து நீதிமன்றம் தன்கடமையில் இருந்து நழுவியதோ என நல்லோர் மனம் பதைபதைத்தனர்.
நாட்டில் உள்ள தன்னாட்சி அமைப்புகளின் இறக்கைகள் ஒடிக்கப்பட்ட நிலையில்,ஏனைய அமைப்புகளான பல்கலைகழகங்கள்,ஒழுங்குமுறை நிறுவனங்கள் மற்றும் ஆணையங்களில் ஆமாம்சாமிகளை நியமித்த அரசின் அராஜகத்தின் தொடர்ச்சி நீதிமன்றங்களையும் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்தது.
”எல்லாவற்றிற்கும் ஒருவிலை உண்டு, அதற்கான வலுவும் எங்களிடம் உண்டு’’ என்று ஆளுங்கட்சியினர் கொக்கரிக்கின்றனர்.
‘எல்லாம் விலை போய்விடுமோ..’ என்ற அச்சத்தில் நாட்டுமக்கள் இருக்கையில் உயர்நீதிமன்றங்களின் சில தீர்ப்புகளும், கூர்ந்த நோக்குகளும் ( தேர்தல் ஆணையத்தை இடித்துரைத்த சென்னை உயர்நீதிமன்ற நோக்கு, கொல்கத்தா நீதிமன்றத்தின் கண்டனம், உபா UAPA வழக்கில் டெல்லி உயர்நீதி மன்றம் வழங்கிய ஆணித்தரமான தீர்ப்பு) ஜனநாயக சக்திகளுக்கு ஆறுதலை தந்துள்ளன. நீதியும் நியாயமும் இன்னும் முற்றிலும் கைவிடப்பட வில்லை என்ற எண்ணம் மகிழ்ச்சியைத் தருகிறது.
இங்கொன்றும் அங்கொன்றுமாக வெளிப்படும் இந்த குரல்கள் பெருகி ஒலிக்குமா?
டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை தடை செய்யாவிட்டாலும் அதை முன்னுதாரணமாக ஆக்க கூடாது என்ற உச்சநீதிமன்ற விடுமுறைக்கால அமர்வின்(இதில் தமிழகத்தை சார்ந்த ஒரு நீதிபதியும் இருந்தார்) தீர்ப்பு நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகமுள்ளதை நினைவூட்டுகிறது.
ஸ்டேன் சாமி மரணம் அனைவர் மனதையும் உலுக்கியுள்ளது. குற்றமிழைத்தவர்களும், மத வெறியர்களும் , விரோதப்போக்கை மக்கள் மத்தியில் விதைப்போரும் சுதந்திரமாக உலாவுவதும் அப்பாவிகளும் , அறிஞர் பெருமக்களும் கொட்டடியில் விசாரணையின்றி வதைக்கப்படுவதும் என்று முடிவுக்கு வரும்?
என்பன போன்ற பல கேள்விகள் நாட்டு மக்கள் மனதில் எழுகின்றன!
நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அவர்கள் தனது தந்தையும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான திரு.ஒய். வி சந்திர சூட் அவர்களின் 101 வது பிறந்தநாளையொட்டி ஏற்பாடாயிருந்த விழாவில் பேசும் போது,
” இந்திய அரசியல் அமைப்பு சாசனம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஒரு உறுதிமொழியை வழங்குகிறது…. நமது நாடானது ஒன்றிணைக்கப்பட்ட( பல்வேறு சமூகங்கள்,தேசிய இனங்கள், குழுக்களை இணைத்து உருவாக்கப்பட்ட) தேசம் என்பதேஉண்மை. ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு சில வாக்குறுதிகளையும், ஒருசில உரிமைகளையும் கொடுத்தே இந்த ஒன்றிணைப்பு கட்டமைக்கப்பட்டது.”
”மத வழிபாட்டு சுதந்திரம் அளிக்கப்படும் என்ற உறுதிமொழி, ஜாதி மத மற்றும் ஆண் பெண் என்ற எவ்வித பேதமின்றி சமமாக வாழும் உரிமை உண்டு என்ற உறுதிமொழி, தேவையற்ற அரசின் தலையீடு ஏதுமின்றி அனைவருக்கும் அடிப்படை பேச்சுரிமை மற்றும் புலம்பெயர் உரிமை அளிப்பது என்ற உறுதிமொழி, தடைகளற்ற தனிமனித வாழ்வுரிமையும், தனிமனித சுதந்திரமும் அளிக்கப்படும் என்ற உறுதிமொழி . இவற்றின் -இவ்வுறுதிமொழிகளின் – அடிப்படையில்தான் நமது நாடு ஒன்றிணைக்கப்பட்டது. ஆகவே எங்கேயெல்லாம் ,எந்த இடத்திலெல்லாம் , எந்த ரூபத்தில் எல்லாம் பெரும்பான்மை மனப்போக்கும்,ஆதிக்க மனோபாவமும் ஓங்கும்பொழுது அவற்றை எதிர்கொள்வது இந்த அரசியல்சாசன வாக்குறுதிதான்.”
“அரசின் அடக்குமுறையும்,தனிமனித உரிமைகள் பறிப்பும்,மேலாதிக்கம் செலுத்துவதும், மற்ற மத்த்தினரை, சிறுபான்மையினரை தனிமைப்படுத்துவதும்,துவேஷத்தை விதைத்து பூசல்களை கிளப்புவதும் இவ்வுறுதிமொழிகளுக்கு எதிரான செயல்களாகும். அரசியல் சாசன உறுதிமொழிக்கு எதிரான நடவடிக்கைகளாகவே பார்க்கப்பட வேண்டும்.
மதத்தின் பெயராலும், வாழும் இடத்தின் (மாநிலம்) பெயராலும் பிரிவு படுத்துவது, தனிமைபடுத்துவது, சிறுமை படுத்துவது நமது மூதாதையர்களுக்கு கொடுக்கப்பட்ட -அரசியல்சாசன சட்டத்தின் அடிப்படையிலான குடியரசு இது என்ற- உறுதிமொழியை மீறுகின்ற செயலாகும். நாம் புதிதாக கட்டியமைக்கும் இந்திய நாடு சட்டத்தின் வழிப்பட்ட புதிய இந்தியா என்ற புனித உறுதிமொழியை குலைக்கின்ற செயலுக்கு நாம் ஒருபோதும் இடந்தரக்கூடாது.”
அரசியல் சாசனம்தான் நமக்கு இருக்கும் – பெரும்பான்மை மனப்போக்கிற்கு ( Majoritation tendency) எதிராக நமக்கிருக்கும்- ஒரே ஆயுதம் என்று அவர் பேசியுள்ளார்.
Also read
தேர்தலில் அதிக இடங்களில் வென்று அங்கீகாரம் பெற்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் , அவர்களுடைய ஒவ்வொரு செயலும்,சொல்லும் புனித உறுதிமொழியான அரசியல் சாசனம் என்ற உரைகல்லில் உரசி அதன் தரம் தீர்மானிக்கப்பட வேண்டும். ஏனெனில் நமது அரசியல் சாசனம் நமக்கு நம்பிக்கை தரும் ஒரு துருவ நட்சத்திரம் ! அது வெறும் வாசகங்களின் தொகுப்பு அல்ல, நாளை நாம் சந்திக்க இருக்கும் புதுப்புது சவால்களை எதிர்கொள்ள நமக்கு அது ஒளி விளக்காக வழிகாட்டவல்லது!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதியரசர் என்.வி. ரமணா அவர்களும் ஒரு கருத்தை வலியுறுத்தி உள்ளார். ‘’இந்திய உச்ச நீதிமன்றம் ஜனநாயகத்தின் மிகப்பெரும் பாதுகாவலனாகத் திகழ்கிறது என்றும், நீதிபதிகள் தீர்ப்பு பெரும்பான்மை மனப்போக்கை ஒட்டியோ, உணர்ச்சிகளை ஒட்டியோ இல்லாமல் , யதார்த்த சூழலையொட்டி, அரசியல் சாசனத்தின் அடிநாத்த்தை ஒட்டியே எழுதப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
இந்த தெளிவு , எதிர்கால தீர்ப்புகளில் வெளிப்படும் சூழலில், உண்மையில் உச்ச நீதிமன்றம் இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலனாக உள்ளது என்று நாம் பெருமை கொள்வதற்கான தருணங்களை அவை உருவாக்கும்!
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
Leave a Reply