சசிகலாவே அரசியல் வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் ஊடகங்களுக்கு சசிகலா வேண்டும். ஊடகங்களின் செய்திப் பசிக்கு தர்ம நியாயங்களே கிடையாது!
இன்றைக்கு எவ்வளவு பார்வையாளர்கள் கிடைத்தார்கள் என்பது காட்சி ஊடகங்களுக்கும், எவ்வளவு பத்திரிகை கூடுதலாக வாங்கப்பட்டன என்பது அச்சு ஊடகங்களுக்கும் ஒரு முக்கிய இலக்காக உள்ளன! அந்த அடிப்படையில் தான் அனைத்தையும் அணுகுகிறார்கள்! இந்த நோக்கங்களே அவர்களை வழி நடத்துகின்றன!
தந்தி டிவியில் என்னென்ன கேள்விகள் மக்கள் சார்பாக சசிகலாவிடம் வைக்கப்பட்டிருக்க வேண்டுமோ அவை எதுவுமே கேட்கப்படவில்லை. சசிகலாவிடம் பேச கிடைத்த வாய்ப்புக்காகவே அவர்கள் புளகாங்கிதம் அடைந்துவிட்டனர் போலத் தெரிந்தது, பேட்டியை கொண்டு போயிருந்த விதம்!
# ஏன் சொத்துகளுக்கு மேல் சொத்தாக வாங்கி குவித்தீர்கள்?
# சாதாரண ஒரு மத்தியதர வகுப்பு பெண்ணான உங்களுக்கு இன்று இவ்வளவு சொத்துகள் குவிந்துள்ளது எப்படி?
# ஜெயலலிதா இறந்ததும் ஏன் முதலமைச்சராக அவசரப்பட்டீர்கள்..?
# உங்களை கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடியும் ,கட்சி முக்கியஸ்தர்களும் பயப்படுவது ஏன்?
# ஜெயலலிதாவின் இறுதி காலத்தில் மற்ற அனைவரிடமிருந்து அவரை முற்றாக தனிமைப்படுத்தி, கவர்னரோ, பொறுப்பு முதல்வரோ, சுகாதாரத் துறை அமைச்சரோ கூட சந்தித்துவிட முடியாதபடி தனிமைப்படுத்தி வைத்தது ஏன்..?
இது போன்ற மக்கள் மனதில் அலைபாயும் எத்தனையோ கேள்விகள் உள்ளன! ஆனால்,தேவையான எந்த கேள்வியையும் அவரிடம் கேட்க முடியாமல் போனது ஏன்..?
இந்த கேள்விகளுக்கெல்லாம் தந்தி டிவியிடம் என்ன பதில் இருக்க முடியும்..?
இப்படியாகத் தானே சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்த் பற்றிய அரசியல் எதிர்பார்ப்புகளை ஊடகங்கள் ஏற்படுத்தி எதிர்பார்ப்புகளை கிளறிவிட்டு மக்களை முட்டாளாக்கி வைத்திருந்தன!
எம்.ஜி.ஆர் திமுகவைவிட்டு நீக்கப்பட்ட போது அவருக்கே தன் அரசியல் எதிர்காலம் பற்றி எந்த புரிதலுமற்று இருந்தார். அப்போது அவருக்கு கருணாநிதி மீது கோபம் இருந்தது. அதனால்,அவ்வப்போது கருணாநிதிக்கு எதிராக ஏதாவது அறிக்கை வெளியிடுவார். அவர் விடவில்லை என்றாலும், இவர்களே அவருக்கு சொல்லி எழுத வைத்து ஒரு அறிக்கை பெறுவார்கள்! அது தான் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வரும்! பெருந்தலைவர் காமராஜர் மக்கள் பிரச்சினைக்காக ஒரு அறிக்கை தந்திருப்பார். அது உள்ளே உள்ள ஏதாவது ஒரு பக்கத்தில் சின்னதாக மூன்றுகால தலைப்பாக பிரசுரிக்கப்பட்டிருக்கும். இது தான் தினத்தந்தியும்,மாலை மலரும் அன்றிலிருந்து கடைபிடித்து வரும் பத்திரிகை தர்மம்.
அற்ப விஷயங்களை முன்னிலைப்படுத்துவதும், அவசியமான தகவல்களை அலட்சியப்படுத்துவதும் தான் இங்கு வெற்றிகரமான ஜர்னலிசமாகிவிட்டது! கவர்ச்சிகரமான செய்திகள் காலப் போக்கில் மக்களிடம் கருத்தாக்கமாக உருப்பெற்று, வலுப்பெற்று தவறானவர்கள் எல்லாம் தலைவராகிவிடுகின்றனர் ! இது தமிழகத்தின் சாபக் கேடு.
சசிகலா விவகாரத்தில் என்ன நடந்தது என்றால், ஜெயா தொலைகாட்சிக்காக ஒரு மிக விரிவான நேர்காணல் ஒன்று தயாரிக்கப்பட்டு இருந்தது. அது எடிட்டிங் செய்யப்பட்டு வருகிற ஜூலை 23,24,25 தேதிகளில் மூன்று ஒரு மணி நேர ஒளிபரப்பாக வரவுள்ளது. இதைத் தெரிந்து கொண்டு தான் தந்தி டிவியினர் உட்பட ஏழெட்டு தொலைகாட்சி ஊடகத்தினர் அங்கு சென்று உள்ளனர். சசிகலா தரப்பிலோ, ஜெயா டிவியின் ஒளிபரப்பு வெளிவந்த பிறகு வாருங்கள் பார்க்கலாம் என கூறியுள்ளனர். ஆனால், தந்தி தொலைகாட்சியினர் மட்டும் காமிரா யூனிட்டை வைத்துக் கொண்டு வாசலிலேயே தவம் கிடந்துள்ளதை பார்த்து பரிதாபப்பட்டு உள்ளே அழைத்து கேட்டவுடன், நயந்தும், கெஞ்சியும் கேட்டுள்ளனர். ”சரி பேட்டி தருகிறேன். ஆனால், அதை ஜெயா பேட்டி வெளியான பிறகு ஒளிபரப்புவதாக உறுதி தந்தால் மட்டுமே தருவேன்” எனக் கூறியுள்ளார்.
சத்தியமாக, நிச்சயமாக அப்படியே செய்கிறோம் என சொல்லி பேட்டி எடுத்து அடுத்த நாளே தினத்தந்தியில், அன்றைக்கே ஒளிபரப்புவதாக விளம்பரம் செய்துவிட்டனர். அதைப் பார்த்து அதிர்ச்சியாகி, சசிகலா தரப்பில் கடுமையாக திட்டியுள்ளனர். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, ”இல்லையில்லை. இது முற்றிலும் வித்தியாசமாக உங்களுக்கு பெண்கள், பொதுமக்கள் தரப்பில் அனுதாபத்தை பெற்றுத் தரும்! ஜெயா டிவி வீயூவர்ஸ் வேற, தந்தி வியூவர்ஸ் வேற” என சமாதானப்படுத்தியுள்ளனர்.
சசிகலா பேட்டி வந்ததை அடுத்து அதற்கு எதிர்வினையாக எடப்பாடி பேட்டியையும் போட்டு சமன் செய்துவிட்டதாக காட்டிக் கொள்வது ஒரு தந்திரமாகும். மொத்தத்தில் தீய சக்திகளைப் பற்றியே மக்கள் சிந்தித்து கொண்டிருக்க வைப்பது தான் இவர்கள் நோக்கம்!
ஜெயா டிவி பேட்டி வந்த பிறகு வரிசையாக ஒவ்வொரு தொலைகாட்சி சேனல்களாக சசிகலா வீட்டுவாசலில் தவம் கிடப்பார்கள் என நம்பலாம். யூ டியூப் சேனல்கள் தங்கள் பங்குக்கு அந்த சசிகலா பேட்டிகளின் சாதக,பாதகங்களை அலசுவார்கள்! இவையாவும் அரசியல் ரீதியான பொழுது போக்கு அம்சங்கள்! இதன் மூலம், அரசியல் தெளிவில்லாத மக்களிடம் சசிகலா குறித்த ஒரு பிரமையை கட்டமைப்பார்கள்! அவர் தான் அதிமுகவின் எதிர்காலமாகவும், தமிழ்நாட்டின் எதிர்காலமாகவும் சித்தரிப்பார்கள்!
ஆனால், சசிகலாவுக்கென்று ஒரு அரசியல் விஷன் கிடையாது! அவரது முப்பதாண்டுகளுக்கு மேலான ஜெயலலிதாவின் நெருக்கத்தால், அவர் தன்னை அன்றைக்கெல்லாம் ஒரு வசூல் ராணியாக மட்டுமே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஜெயலலிதாவின் நெருங்கிய நட்பு தந்த தைரியத்தில் மற்றவர்களை அடிமைப்படுத்தி ஆதாயம் அடைந்தார்! அதனால் தான் அவர் இன்றைக்கு தன் அரசியல் எதிர்காலத்தை தொலைத்தவராக நிற்கிறார்.
Also read
இன்றைய நெருக்கடியான நிலையில், அதிமுக எந்த மாதிரியான அரசியல் நிலைபாட்டை எடுக்க வேண்டும் என்ற தெளிவோ, தொலை நோக்கு பார்வையோ சசிகாவிற்கு கிடையாது! சசிகலாவால் பாஜகவிற்கு எதிரான ஒரு அரசியலை நினைத்தும் பார்க்க முடியாது. ஆனால், பாஜகவை விலக்காமல் அதிமுகவிற்கு எதிர்காலமே கிடையாது.
இந்த புரிதல் கூட சசிகலாவிற்கு இருக்குமோ..என்னவோ..?
நாட்டுக்கும், மக்களுக்கும் எந்த விதத்திலும் பயனில்லாத உணர்ச்சிகளைத் தூண்டும் பரபரப்பான செய்திகளை உற்பத்தி செய்வது தான் ஊடகங்களின் பிழைப்பு என்றாகிவிட்டது. ஊடகங்களால் எவ்வளவு பயன்கள் உண்டோ… அதற்கு இணையான தீமைகளும் உள்ளன. நாம் தான் ஊடகங்களிடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
நீங்கள் கூறுவது எல்லாமே தவறு. சசிக்கலா என்ற தனி நபரின் மீதுள்ள கோபத்தில் இப்படி எழுதுகிறீர்கள். எல்லா மனிதர்களுக்கும் உள்ள பலவீனம் உங்களிடம் அதிகம் உள்ளது. மாற வேண்டியது நீங்கள்தான்.
கிட்டத்தட்ட ஜெயலலிதாவுடன் 35 ஆண்டுகள் நெருக்கமாக இருந்தவர் சசிகலா. ஆகையால் அவர் கூறுவது எல்லாமே செய்தியாளர்கள் கோணத்தில் மிக முக்கியமானதுதான். அது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. ஆனால் அது முக்கிய செய்திதான். இந்த சின்ன விசயம் கூட உங்களுக்கு தெரியாமல் போனது ஏன்? இனிமேல் சசிகலாவை பற்றி எழுதும் போது அந்த கருப்பு கண்ணாடியை கழட்டி விட்டு எழுதுங்கள். இல்லை என்றால் உங்கள் பார்வையில்தான் பிரச்சினை.
#ஊடகதர்மம்:
வர்த்தக ரீதியாக செயல்படும் ஊடகங்கள்.
கட்டுரையாசிரியர் குறிப்பிட்ட கேள்விகளான,
# ஏன் சொத்துகளுக்கு மேல் சொத்தாக வாங்கி குவித்தீர்கள்?
# சாதாரண ஒரு மத்தியதர வகுப்பு பெண்ணான உங்களுக்கு இன்று இவ்வளவு சொத்துகள் குவிந்துள்ளது எப்படி?
# ஜெயலலிதா இறந்ததும் ஏன் முதலமைச்சராக அவசரப்பட்டீர்கள்..?
# உங்களை கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடியும் ,கட்சி முக்கியஸ்தர்களும் பயப்படுவது ஏன்?
# ஜெயலலிதாவின் இறுதி காலத்தில் மற்ற அனைவரிடமிருந்து அவரை முற்றாக தனிமைப்படுத்தி, கவர்னரோ, பொறுப்பு முதல்வரோ, சுகாதாரத் துறை அமைச்சரோ கூட சந்தித்துவிட முடியாதபடி தனிமைப்படுத்தி வைத்தது ஏன்..?
போன்றவை போதாது.
கீழ்காணும் கேள்விகளையும் கேட்டிருக்கலாம்.
? பழனிச்சாமியை முதலமைச்சராக ஆக்கியமைக்கு வருத்தப்படுகிறீர்களா;
? என்ன காரணத்திற்காக ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்;
? சிறைக்கு செல்லும் முன் ஜெயலலிதா சமாதியில் மூன்று முறை அறைந்து சத்தியம் எடுப்பதுபோல் நடந்து கொண்டீர்கள் அதனுடைய விளக்கம் என்ன;
? சில வருடங்களுக்கு நீங்கள் தேர்தலில் நிற்க முடியாது அது குறித்து நீங்கள் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை என்ன;
? நீங்கள் அரசியலுக்கு வந்து இனிமேல் என்ன சாதிக்கப் போகிறீர்கள்;
? யாரை எதிர்த்து அல்லது எந்த கொள்கையை முன்னிறுத்தி நீங்கள் அரசியல் செய்ய போகிறீர்கள்;
? உங்கள் சொத்துக்களாக அறியப்பட்ட சொத்துக்கள் பினாமி சட்டத்தின்கீழ் முடக்கப்பட்ட நிலையில்,
மற்ற சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் தலைமேல் கத்திகளாக தொங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் ஜெயலலிதா போல் அரசியல் பண்ணுவதற்கு உங்களுக்கு வல்லமை உள்ளதா;
? யாருடைய அரசியல் தலையீடும் இல்லாமல் நிம்மதியாக செயல்பட முடியுமா;
? அதிமுக சாதிவாரியாக பிளவு பட்டிருக்கும் நிலையில் உங்கள் சாதியை மட்டும் நம்பி உங்களால் அரசியல் செய்ய முடியுமா;
? தாங்கள் எல்லா சாதிகளுக்கும் சமமானவர் பொதுவானவர் என்ற பிம்பத்தை உங்களால் கட்டமைக்க முடியுமா,
அதை நம்பிய அதிமுக தொண்டர்கள் உங்கள் கூற்றையும் மதித்து எல்லோரும் ஒன்று இணைவார்களா;
? உங்கள் சாதி சனத்தை தவிர உங்களுக்கு என்ன பலம் உள்ளது;
? அதிமுக பொதுச் செயலாளர் குறித்தான உங்கள் வழக்கை தொடர்வீர்களா;
? உங்கள் எதிர்கால அரசியல் திட்டம் என்ன;
இதுபோன்ற மக்கள் சார்ந்த இன்னும் பல கேள்விகள் சசிகலாவிடம் கேட்பதற்கு உள்ளது.
யார் கேட்பார்கள். சசிகலா அவர்களே முன்வந்து இதுமாதிரியான கேள்விகளுக்கான பதில்களை உள்ளடக்கிய ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட்டால்தான் உண்டு.
இது போன்ற கேள்விகளை வர்த்தக ஊடகங்கள்
எவ்வாறு சசிகலாவிடம் கேட்பார்கள். அதை எதிர்பார்க்கலாமா?
எல்லாமே ஒரு நாடகம் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும், எப்படி எப்படி பதில்கள் பெற வேண்டும், என்பதெல்லாம் முன்கூட்டியே ரிகர்சல் செய்யப்பட்டு, படமாக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டு
பேட்டி வெளிவருவதை பார்வையாளர்கள் உணராமல் இருக்க மாட்டார்கள்.
பெருவாரியான மக்களின் எதிர்பார்ப்பை தான் ஊடகம் அச்சாக இருந்தாலும் காட்சியாக இருந்தாலும் வழங்குவார்கள்.
அதுவே ஊடக அறம் என்று எதிர்பார்ப்பதெல்லாம் மக்களில் ஒரு சதவீதம் மட்டுமே. அதுவே பெரிது!
எல்லோரும் ஏதோ முயற்சி செய்கிறார்கள் சூழலுக்கு தகுந்தவாறு வெற்றி வாய்ப்பு! வாழ்த்துகள்!
//சசிகலாவுக்கென்று ஒரு அரசியல் விஷன் கிடையாது! அவரது முப்பதாண்டுகளுக்கு மேலான ஜெயலலிதாவின் நெருக்கத்தால், அவர் தன்னை அன்றைக்கெல்லாம் ஒரு வசூல் ராணியாக மட்டுமே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.//
மிகவும் சரியான பதிவு. பத்திரிகைகள் தங்கள் பத்திரிக்கை தர்மம் என்ன என்பதை மறந்து, வியாபார நோக்கில் செயல்படுகின்றன.