வாட்டர்கேட் ஊழலும், வாய்ஜால இரட்டையர்களும்..!

- பசுபதி தனராஜ்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டு நாட்களாக உச்சகட்ட கொந்தளிப்பில் தகித்தன! அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த சினத்தால் அவைகள் முடங்கியதில் ஆளும்கட்சியினர் திகைத்தனர்!

1970 — களில் உலகையே உலுக்கிய அமெர்க்க அதிபர் நிக்சனின் “வாட்டர்கேட் ஊழலுக்கு, தற்போதைய “மோடிகேட் ஊழல்” சற்றும் சளைத்து அல்ல என சரித்திரம் தனது துயரை அழுத்தமாக உரைக்கிறது !

ஆளும் பொறுப்பில் இருப்போர்  எதிர்கட்சித் தலைவர்களையும்,பிற பிரமுகர்களையும்  முறையற்ற முறையில்  வேவு பார்ப்பதென்பது  “அநாகரிகமான குற்றம்” என நாகரிகமான சமூகம் கருதுகிறது !

அடுத்தவர் குளியலறையில் எட்டிப்பார்ப்பது போன்ற ஈனத்தனமான இழிசெயலாகக் கருதுகிறது.

இஸ்ரேல் நாட்டு”பெகாசஸ்” என்ற மென்பொருள் மூலம் 300 இந்தியப் பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் வாட்ஸ் அப் பதிவுகள்  வேவு பார்க்கப்பட்டதை  அறிந்து  இந்திய நாடாளுமன்றம் மட்டுமல்ல, நாட்டு மக்களும் கொதித்துப் போயுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா, முன்னாள் கர்நாடகா முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி, மற்றும் தேர்தல் வியூக விற்பன்னர் பிரசாந்த் கிஷோர்,மம்தாவின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி, இரு மத்திய அமைச்சர்களான அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் அளித்த பெண், மற்றும் அவரது  உறவினர்கள்,  ஊடகவியலாளர்கள்   டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களான உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா மற்றும் ரயில்வே யூனியன் தலைவர் பீலா பாட்டியா, தொழிலாளர்கள் உரிமை போராளி அஞ்சனி குமார் உட்பட 300 பேரின் பேச்சுகளை ஒட்டுக் கேட்ட மோடி-அமித்ஷா ஜோடியின் முகத்திரை முழுதும் கிழிந்து போயிருக்கிறது !

உலக பிரசித்தி பெற்ற வாட்டர்கேட் ஊழல்!

நிக்ஸன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கால கட்டத்தில்,1970–72 ல் தான் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதுவரை அரசியலாளர்கள் செய்திராத  ஒரு “திருட்டுத் தனத்தை” ரகசியமாக அரங்கேற்றினார் !

அதேபோன்ற இழிசெயலை இன்றைய பாஜக அரசு செய்தது அம்பலமாயிருக்கிறது!

அன்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்ஸன் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்.

“வாட்டர்கேட்” என்பது அன்றைய எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் தலைமையகம். (Democratic National Head Quarters at Washington )

அங்கு நடக்கும் உரையாடல்களை, விவாதங்களை தெரிந்து கொள்ள, யாரும் அறியாதபடி  பட்டன் சைசிலான உளவுக் கருவிகளை  அதன் சுவர்களில் வைத்து, அவர்கள் பேசுவதை கேட்கும் வேலையை செய்யத் துணிந்தார் ஜனாதிபதி நிக்ஸன் ! அந்த காரியத்தை செய்ய அவர் அனுப்பிய ஐந்து ரகசிய பேர்வழிகளை சந்தேகப்பட்டு பிடித்து விட்டனர் ஜனநாயக கட்சினர்!

ஆனால், அவர்கள் யாரால் அனுப்பட்டனர் என்ற உண்மையை ஆட்சியில் இருந்ததால் நிக்ஸன் அரசு தந்திரமாக திசை திருப்ப முயன்றது. ஆனால், வாஷிங்டன் போஸ்ட் அதை ஆகஸ்ட் 1972 ல் அம்பலப்படுத்தியது.

இது, அமெரிக்க மக்களை பெரும் அதிர்சிக்கு உள்ளாக்கியது! ஏனெனில் அமெரிக்க மக்கள் தனி நபர் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள். இது தொடர்பான விசாரணைகள் கோர்டில் நடந்த காலங்களில் நிக்ஸனின் மீதான மரியாதை தரைமட்டமானது! அமெரிக்க மக்கள் அவரை கடுமையாக வெறுக்கத் தொடங்கினர்.

இறுதியில் இந்த சதிதிட்டம் தொடர்பாக நிக்ஸன் தன் சகாக்களிடம் பேசிய ஆடியோ டேப் வாட்டர்கேட் ஊழலை சந்தேகத்திற்கு இடமின்றி நிருபித்தது. இது நிக்ஸனின் சகாக்கள் பலரை – அட்டர்னி ஜெனரல் உட்பட –  பலரை ராஜினாமா செய்ய வைத்தது!

வாட்டர்கேட் ஊழல் உறுதியான போது, அதில் ஈடுபட்டோர்  இரண்டரை ஆண்டு முதல் எட்டாண்டு வரை சிறை தண்டனை பெற்றனர் !

அதை நிறைவேற்றுவதில் நிக்ஸனுக்கு துணையாக இருந்தவர் ஹேவார்ட் ஹண்ட் என்ற சிஐஏ ஏஜண்ட்.

அவரது குற்றம் நிரூபிக்கப் பட்டபோது அவர் பெற்ற வெகுமானம் இரண்டரை ஆண்டு சிறை தண்டனை !

இதனால் அமெரிக்காவின் 37 -ம் ஜனாதிபதியாக இருந்த நிக்ஸன் 1974 ஆகஸ்ட் 9 -ம் நாள் தனது பதவியை ராஜினாமா செய்தார்! மக்களின் கோபம் வென்ற நாள்  அது !

பதவியை ராஜினாமா செய்தது போதாது ; நிக்ஸனை ” இம்பீச்” (Impeach) செய்ய வேண்டும் என்று அமெரிக்கா முழுக்க ஒரே குரலில் கேட்டது !

“குடியரசுத் தலைவரின் பதவி விலகலை ஏற்குமுன் அவர் பேரவையின் பொது மன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் !

அந்த உயர் பணியாளர் மீது அரசுப் பகைமைக்கான இழிவினை புரிந்த குற்றம் சுமத்தப்பட வேண்டும் !

அதையொட்டி  அவர் பதவியை பறிக்க வேண்டும் என்பது தான் “இம்பீச்மெண்ட் “( Impeachment)

நிக்ஸனை அந்த அவமானத்திலிருந்து தப்ப வைத்தார் ஜெரால்ட் ஃபோர்ட் !

அவர் நிக்ஸனின் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ! நிக்ஸன் ராஜினாமா செய்ததால் ஜனாதிபதியானவர் !

ஜனாதிபதியின் பிரத்யேக அதிகாரத்தை பயன்படுத்தி ஜெரால்ட் ஃபோர்ட்,

“அந்த அவமானகரமான கொடுங்குற்றத்தைப் புரிந்த நிக்ஸனுக்கு” மன்னிப்பு அளித்தார் !

ஆனால் நிக்ஸனை “மன்னித்த” ஜனாதிபதி  ஜெரால்ட் ஃபோர்டை அமெரிக்க மக்கள் ” மன்னிக்க மறுத்து ” அவரை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுறச் செய்தனர் !

அரை நூற்றாண்டுக்கு முன்னர் அமெரிக்காவில் அதிகாரத்தில் இருந்தோர் ” முறைகேடான முறையில்” உளவு பார்த்த கொடுங்குற்றத்தைப் போன்ற ஒரு முறைகேட்டை  இந்தியாவில்  பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து செய்துள்ளனர் !

யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்காக பணியாற்றும் ஒரு வர்த்தக ரீதியான நிறுவனம் பெகாசஸ் உளவு மென்பொருள் என்பது உலகம் அறிந்த உண்மை! அப்படியானால், இந்தியாவில் ஒட்டுகேட்பு நடவடிக்கை நடத்த யார் இஸ்ரேலிய நிறுவனத்துக்கு பணம் கொடுத்தார்கள் என்பது தவிர்க்க முடியாத கேள்வியாக மக்கள் மனதில் தொக்கி இருக்கிறது.

இந்திய அரசு பணம் செலுத்தவில்லை என்றால், வேறு யார் இஸ்ரேலிய நிறுவனத்துக்கு பணம் கொடுத்தார்கள். மக்களுக்கு இந்த உண்மையைச் சொல்ல வேண்டிய கடமையை மோடி அரசு செய்யுமா எனத் தெரியவில்லை. இதில் நீதிமன்றம் தலையிட்டு, உண்மையை வெளிக் கொணர வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பாகும்.

நம்மைவிட  இளைய நாடாக அமெரிக்கா இருப்பினும், ஜனநாயக பாரம்பரியத்தைக் காப்பதில் அவர்கள் மூத்தவர்கள் !

நிக்ஸனும்  அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப் பட்டது போல் மோடியும், அமித்ஷாவும் பிற கூட்டாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர்; பசுபதி தன்ராஜ்,

வழக்கறிஞர், எழுத்தாளர், மூத்த காங்கிரஸ்  தலைவர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time