தமிழ் ஆட்சி மொழி என்பது பகல்கனவா? வெற்று முழக்கமா?

-அ.செ.புவனேசுவரன்

இன்னும் எத்தனை காலம் தான் இப்படி சொல்லிக் கொண்டே இருக்க போகிறார்களோ..?

அரசு கோப்புகளை தமிழில் பயன்படுத்த வேண்டும்! தமிழ் அரசாங்க அலுவலக பயன்பாட்டில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும்’’ என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்!

இது ஏதோ ஒரு புதுத் தமிழ் மொழி புரட்சிப் போலத் தோன்றும். ஆனால், மெட்ராசு அலுவல் மொழி சட்டம் – 1956 என்பதன்படி தமிழ் நாட்டில் தமிழ்மொழி தான் ஆட்சி மொழி என்று 27.12.1956 லேயே சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் ஜனவரி – 23,1957 ல் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது. ஏற்கனவே இருந்த ஆங்கிலம் இந்த சட்டம் இயற்றப்படும் முன்னர் இருந்த ஒரு அலுவல் மொழியாக இருப்பதால் அது அவ்வாறே தொடரும் என்றும், இந்தச் சட்டம் கூறுகிறது! இந்த முன்முயற்சிகளின் பின்புலத்தில் காமராஜரும்,சி.சுப்பிரமணியமும் இருந்தனர்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அன்றைய காங்கிரஸ்  அரசு 1957 ஆம் ஆண்டு ஆட்சிமொழிக் குழுவை அமைத்தது. இதன் பிரிவுகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவல் குறிப்புகளும், அரசாணைகளும் தமிழில் இருக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதி மன்றத்திற்குக் கீழ் உள்ள அனைத்து குற்றவியல், உரிமையியல், வாடகை வழக்கு நீதிமன்றங்களின் மற்றும் தீர்ப்பாயங்களின் தொடர்பு மொழியாக, சாட்சிகளை விசாரணை செய்வது, குறிப்பெடுப்பது, உத்தரவு, ஆணை பிறப்பிப்பது என்று அனைத்து செயல்பாடுகளும் தமிழில் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

இக்குழு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் தொடர்பாக.அரசு அலுவலகங்களில் விதிகள், விதித்தொகுப்புகள், நடைமுறை நூல்கள், படிவங்கள் ஆகிய அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்ததை தமிழுக்கு மாற்றுவதில் முயன்றதில் நடைமுறை சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக இதை செம்மையாக செய்ய  தமிழ் வளர்ச்சித் துறை என்றத் தனித் துறையை உருவாக்கி, ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை நிறைவேற்றிட  காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்து உடன் இந்தச் சட்டம் தமிழ்நாடு அலுவல் மொழிச் சட்டம் என்று மாற்றப்படுகிறது 23.01.1968-படி. மேலும் அதே சட்ட மசோதாவில் இந்திய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இந்தி அலுவல் மொழியாக மாறியதற்கு எதிராக ஒரு தீர்மானமும் இயற்றப்பட்டது.

ஆனால், அது அண்ணா ஆட்சிக்கு வந்தும் கூட தமிழ் ஆட்சி மொழி என்பது நடைமுறைக்கு வரவில்லை. பிறகு 1971 ல் கலைஞர் ஆட்சியில் தமிழ் வளர்ச்சி இயக்ககம் என்ற தனித்துறை உருவாக்கப்பட்டது. ஆயினும்,.தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் செயல்படுத்துவதில் ஏன் வெற்றி பெற முடியவில்லை எனத் தெரியவில்லை.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சிகள், பற்பல வாரியங்கள், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட கழகங்கள்..என அனைத்திலும் இன்னும் ஆங்கிலப் பயன்பாடே அதிகம் உள்ளது. இதனால் பாமரமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நமது பக்கத்து மாநிலமான  ஆந்திரா,கேரளா,கர்நாடகா ஆகியவற்றின் அரசு அலுவலங்களில் அவரவர் தாய்மொழி கோலோச்சுகிறது. ஆனால், தமிழகத்தில் இப்படியான சட்டங்கள் போட்டு துறை உருவாக்கப்பட்டும் மக்கள் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவது, ஏனென்று புரியாத புதிராக உள்ளது.

சென்னை உயர்நீதி மன்றமும் ஒரு ஆணையின் வாயிலாக தமிழை அலுவல் மொழியாகவும், வாதாடும் மொழியாகவும் மாற்றலாம் என்கிறது.

ஆன போதிலும் இது வரை எதுவும் நடைமுறைக்கு வராமல் போனதன் விளைவே அமைச்சர் தங்கம் தென்னரசு இவ்வாறு அறிவிக்க வேண்டியதாகிறது!   சரி அறிவித்தால் போதுமா..? அறிவிப்பு செயல்வடிவம் பெற துறை ரீதியாக வழிகாட்டுதலும், கண்காணிப்பும் தொடர வேண்டாமா..? அமைச்சர் இப்படி ஒரு அறிவிப்பு தந்துவிட்டு அவரது மற்றொரு அமைச்சகமான தொழில்துறை பணிகளில் மூழ்கிவிடுவாரே!

தங்கம் தென்னரசு தமிழ் வளர்ச்சிதுறைக்கு தகுதியானவர் தான்! ஆனால், யாராலும் ஒரே நேரத்தில் இரு குதிரைகளில் சவாரி செய்ய முடியாது.

தமிழ் என்பதற்கு எப்போதுமே  முதல் கவனம் கொடுக்க மறுக்கிறார்கள் ஆட்சியாளர்கள்..? என்பது ஒரு புலப்படாத புதிராகவே உள்ளது. வாழும் நிலத்தின் பெயர் தமிழ்நாடு! அந்த  நிலத்தில் மக்களின் அடையாளம் தமிழர்கள், ஆளும் அரசின் அடையாளமே தமிழ்நாடு அரசு! அப்படி இருந்தும் அந்த மொழிக்கென்று தனி பொறுப்புடன் கூடிய ஒரு அமைச்சர் கிடையாது..!

ஆனால், இந்த மொழி அமைச்சகத்தின் வேலைகளோ விழிபிதுங்கும் அளவுக்கு அதிகமானவை!

தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ் சங்கம், செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம், சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம், அறிவியல் தமிழ் மன்றம், தமிழ் இணையக் கல்விக்கழகம், மத்திய செம்மொழி பூங்கா (பெருங்குடி – 16 ஏக்கர் ஏரியில் ஒதுக்கப்பட்டது) என்று பலத் தமிழ் துறைகள் உள்ள தமிழ்நாட்டில் தமிழ் பண்பாடு, கலை, தொல்லியல் துறை என்று ஒரு அமைச்சர் அமர்த்தப்பட்டது போய் தொழிற்துறையையும் ஒரே அமைச்சரிடம் தந்து இருப்பதால்,போதுமான கவனம் இன்றி தேக்க நிலையே மீண்டும் தொடர வாய்ப்புள்ளது.ஆனால், ஒன்று, தமிழ் ஆட்சி மொழி,அலுவல் மொழி என்பதை இப்போது செயல்படுத்த தவறினால், வருங்காலத்தில் வாய்ப்பிலாமலே போய்விடக் கூடும்!

தமிழ்நாட்டில் தொழிற்துறை என்பதே அதிக பணிச்சுமை கொண்ட துறை! ஆகவே, தமிழ் வளர்ச்சிக்கு என்று தனி அமைச்சர் நிர்வாக ரீதியாக இருப்பதுதான் சரியாகும்!.

எப்போதும் ஆட்சிகள் மாறியதும் துறைகள் படும் சிக்கல்கள் அதிகமாகும் என்பதற்கு தமிழ் வளர்ச்சித் துறை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக பணியாற்றிய கோ. விசயராகவன் முன்னாள் திருத்தணி நாடாளுமன்ற உறுப்பினரான அரியின் உடன் பிறந்த சகோதரர். 2016-ல் இந்தத் துறையில் பணியமர்த்தப்பட்ட விதமே பெரும் அரசியல் பின்ணனி கொண்டது. அவரும் ஒரு கல்விப் புலத்தை கட்சிக்களமாக மாற்றி, பெரிய சீரழிவுகளை உருவாக்கி சென்றுள்ளார். அது போன்ற சீரழிவு இனி ஒரு போதும் நடக்கக் கூடாது. துதிபாடிகளை எப்போதுமே தூரத்தில் தள்ளி வைத்ததால் தான் தமிழ் பிழைக்கும். இல்லையெனில் தமிழை  அவர்கள் பிழைப்பாக்கி கொள்வர்! தமிழகத்தில் அரசியல் பிழைப்புக்கு தான் தமிழ் அதிகமாக பயன்பட்டுக் கொண்டுள்ளது!

அறம் இணைய தளத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஜயராகவன் செய்த பல்வேறு முறைகேடுகள் பற்றி விரிவாக ஒரு கட்டுரை வந்துள்ளது.

ஒரு ஆட்சி நிறுவனம் அதிமுகவின் கிளையாக்கப்பட்ட வரலாறு!

கோ. விசயராகவனை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பதவியில் இருந்து விலக்கி விட்டு, தற்போது ச. சரவணன் இ.ஆ.ப என்ற இந்திய ஆட்சி பணியாளர் ஒருவரை (பொறுப்பு) அந்த பதவியில் இருத்தியிருப்பது ஒரு தவறான முன்னுதாரணம். காரணம், கல்வித் துறையில் பணியாற்றி, கல்விப்பணி அனுபவம் பெற்ற ஒருவர் தான் இயக்குநராக வேண்டும் என்பதே ஏற்கனவே இருந்து வரும் நடைமுறை. அதை முதல் முறையாக மாற்றி, அது நீதிமன்றம் சென்று, கொள்கை முடிவு என்று கூறிய காரணத்தால் நீதிமன்றமும் தலையிட முடியவில்லை. அது போல் இந்த தமிழ் வளர்ச்சித் துறையும் இந்திய ஆட்சிப் பணியாளர் ஒருவரிடம் செல்வது மிகுந்த வருத்ததிற்கு உரியதாகும்.

காரணம் என்னவெனில் இதற்கு முன்பு வரை முனைவர் பட்டம் பெற்றவர், துறைசார் வல்லுநர் அல்லது சமூகத்தில் புகழ் பெற்ற தமிழறிஞர் ஒருவர் என்று தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவின் படி ஒரு வழிகாட்டுப் புத்தகம் உள்ளது. இதை, சட்டமன்றத்தில் மசோதா இயற்றாமல் இவர்கள் ஒரு இந்திய ஆட்சிப் பணியாளர் ஒருவரை தமிழ் வளர்ச்சித் துறைக்கு இயக்குனராக அமர்த்துவது என்பது சட்டத்திற்கும், தமிழ் பேராசிரியர்களுக்கும் செய்கிற பெரும் அநீதியாகும்!

தமிழ் வளர்ச்சித் துறையில் பல முனைவர் பட்டம் முடித்த தமிழ் அறிஞர்கள் இருப்பது அரசின் கண்களுக்கு தெரியவில்லையா..?

செம்மொழியான தமிழ்மொழி ஏட்டுச் சுரக்காய் ஆக மாறி வருவதை அனுமதிக்கக் கூடாது.

கட்டுரையாளர்;அ.செ.புவனேசுவரன், வழக்கறிஞர்.

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time