சமூக அரசியல் புரட்சியாளரான ஆன்மீகவாதி! மதவாதிகளால் வெறுக்கப்பட்ட துறவி அக்னிவேஷ்!

-சாவித்திரி கண்ணன்

கடவுளை அரசியல் பிழைப்புக்கு பயன்படுத்துவதை கடைசி வரை எதிர்த்த ஒப்பற்ற துறவி சுவாமி அக்னிவேஷ்!

ஒரு உண்மையான ஆன்மீகவாதிக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் சுவாமி அக்னிவேஷ்!

’’கடவுளை கோயிலில் தேடாதீர்கள்…,அன்பு,கருணை, நீதி,கருணை ஆகிய வடிவங்களில் வெளிப்படுவதே கடவுள்…’’என்றவர் கடைசி வரை விளிம்பு நிலை மனிதர்களில் ஒருவனாகவே வாழ்ந்து மறைந்தார்.

’’அர்ச்சகர்களையெல்லாம் சாமியாக்கிவிடாதீர்கள்! அதுவும் பிழைப்புக்கான ஒரு தொழில்! அர்சகர்கள் என்பது வேறு,அருளாளர்கள் என்பது வேறு’’

’’இன்னினாரெல்லாம் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றால்,அங்கே ஆண்டவன் மட்டும் எப்படி நுழைந்து குடியிருக்க முடியும்…’’

இறைவனை வழிபட வேண்டும் என்று வருபவனிடம் சாதியை மட்டுமல்ல,மதத்தையும் கேட்கக் கூடாது. இந்துக்கள் அல்லாதவர்களும் சிவனைக் கும்பிடவிரும்பினால்,அவர் கோயிலில் இருந்து ஓடிவிடவா போகிறார்? நம்பிக்கையுள்ள அனைவரையும் பூரி ஜெகன்னாதர் கோயிலுக்குள் அனுமதியுங்கள்’’ என்றார்!

’’அமர்நாத் ஐஸ்கட்டியை லிங்கமாக்கி, பக்தியை வியாபாரமாக்குவதா?’’ என்றார்

சேற்றில் மலர்ந்த செந்தாமரையைப் போல, அக்கிரஹாரத்தில் பிறந்த அதிசயப் பிறவி இவர்!

படித்ததெல்லாம் வேதங்கள்,உபநிடதங்கள்,சாஸ்திரங்கள்!வளர்ந்தது ஆர்ய சமாஜத்தில்!

’அகம் பிரம்மாஸ்மி’ என்றால்,ஒவ்வொருவனுமே கடவுள் தானே! ஏற்றத் தாழ்வுகளை எப்படி நியாயப்படுத்த முடியும்? என்றார். அவரது மனோபாவம் அவரை ஆர்யசமாஜத்தில் தங்கவிடவில்லை.

பற்று அற்றவராக வாழும் சன்னியாச மனோபாவத்துடன் அரசியலுக்குள் நுழைந்தார்! 1977ல் ஹரியாணாவில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது.அக்னிவேஷ் கல்வி அமைச்சரானார். கொத்தடிமைத் தளையில் உழலும் குழந்தைகளை விடுவித்து பள்ளிக் கூடத்திற்கு கொண்டுவந்ததில் ஆலை முதலாளிகளின் கோபத்திற்கு ஆளானார். ஆட்சித் தலைமையால் சமரசத்திற்கு நிர்பந்திக்கப்பட்டார்.அதனால் பதவியை துறந்தார்.

’’ஆன்மீகவாதி ஒரு போதும் நமது அதிகார அரசியலில் இயங்கவே முடியாது!’’ என்பது அவரது அனுபவ வாக்கு!

குழந்தைகள் கொத்தடிமைகளாய் உழல்வதை அனுமதிக்கும் ஆட்சியில் கல்வி மந்திரியாக இருப்பதை அவமானமாகக் கருதி, பதவியை துறந்தார்..கொத்தடிமைத் தளையில் இருக்கும் குழந்தைகளை மீட்க களப் போராளியானார். அமைச்சராக இருந்தவர் கைதியாக்கப்பட்டு, சிறைச்சாலைக்கு அனுப்பட்டார்.சிறையிலிருந்து வெளி வந்தவர் கொத்தடிமைகளை மீட்பதையே லட்சியாமாகக் கொண்டு தன் வாழ்நாளில் இரண்டு லட்சம் கொத்தடிமைகளை மீட்டுள்ளார்.

கொத்தடிமை தளையை விடுவித்தலுக்கான ஐ. நா அமைப்பின் தலைவராக மூன்று முறை பொறுப்பேற்றுள்ளார்.

காந்தியத்தின் அனைத்துக் கூறுகளும் அவரிடம் மிக இயல்பாக வெளிப்பட்டன! எனவே ,அவர் மதங்களற்ற ஆன்மீகவாதியாகிப் போனார்.ஆன்மீகவாதிக்கு மதமேது? இந்து, முஸ்லீம், கிறிஸ்த்துவர்,சீக்கியர் என்ற பிரிவினையெல்லாம் ஆன்மீக உள்ளத்தை அண்டமுடியாது’’ என்றார்.

மதவாதிகள் அவரை வெறுத்தார்கள்! சாமியார்கள் அவரை தூற்றினார்கள்.ஆச்சார பிராமணர்கள் அவரை துஷ்டனாகப் பார்த்தார்கள்! ஆனால், நாடெங்குமிருந்த லட்சக்கணக்கான விளிம்பு நிலை எளியோருக்கு அவர் இனிய நண்பனாக,ஆபத்பாந்தனாக மாறிப் போனார்!

பழங்குடிகள்.தலித்துகள்,சிறுபான்மையினர்..போன்ற குரலற்ற விளிம்பு நிலை மனிதர்களுக்கானவனாக வாழ்வதையே லட்சியமாகக் கொண்ட அக்னிவேஷ்க்கு எந்த சொத்துமில்லை.எளிய குடிலில் தான் வாழ்ந்தார்.எளிய உணவையே உண்டார்.கடும், மழையையும்,வெயிலையும் எதிர்கொள்ளும் பிரதேசத்தில் வாழ்ந்த போதும் அவர் தன் அறையில் ஏசி மெஷினை மட்டுமல்ல,குளியலுக்கான ஹீட்டரையும் தவிர்த்தார்.

சுவாமி அக்னிவேஷ் நமது அன்றைய ஒன்றிணைந்த மதராஸ் ராஜதானியில் இருந்த ஸ்ரீகாகுலத்தில் பிறந்தவர் என்ற வகையில் நாம் கொஞ்சம் பெருமைபட்டுக் கொள்ளலாம்!

தன் மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி பேசுபவர் அக்னிவேஷ்! அமெரிக்கா தான் உலகின் நம்பர் ஒன் டெரரிஸ்ட் என்றார்.குரானையும்,இஸ்லாமியர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதைப் போன்ற பொய் வேறில்லை’’ என்றார்.கிறிஸ்த்துவர்களிடம் பரிவு காட்டினார்.கிறிஸ்த்துவ மிஷினரிகளிடமிருந்து விலகி நின்றார்.அனைத்து அரசியல்வாதிகளிடமும் அவருக்கு நட்பு இருந்தது.ஆனால்,அதற்காக விமர்சிக்காமல் இருக்க மாட்டார்.மாவோயிஸ்டுகள் ஈவு இரக்கமின்றி நரவேட்டையாடப்பட்டதை தடுக்கவும்,அவர்களையும் வன்முறை பாதையில் இருந்து விடுவிக்கும் வண்ணமும் ஒரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆர்.எஸ்.எஸ்,வி.ஹெச்.பி,பாஜக ஆகியவை மட்டுமே அவரை விரோதியாக சித்தரித்தன.அவரது தலைக்கு இருபது லட்ச ரூபாயை அறிவித்தது அகில பாரத இந்து மகாசபை! அவரை ஜார்கண்டில் வைத்து மிகக் கடுமையாக தாக்கினார்கள் இவர்கள்! உயிர் பிழைத்தாலும் மிகவும் பாதிப்படைந்தார். 80 வயது முதியவர் அல்லவா? ஆனால், ஜார்கண்ட் அமைச்சர் ஒருவர் ஸ்வாமி அக்னிவேஷ் தானே திட்டமிட்டு தன் மீது தாக்குதல் நடத்திக் கொண்டதாக அறிவித்தார்! ஆனபோதிலும் அவர் மனதில் அவர்கள் பாஜகவினர் மீது எந்த வெறுப்பும் வைத்துக் கொள்ளவில்லை. வாஜ்பாய் இறந்த போது தனது நெடு நாளைய நட்பை கருதி இறுதி அஞ்சலி செலுத்த வந்தார் அக்னிவேஷ்.அப்போதும் இழவு வீடு என்றோ,முதியவர் என்றோ கூட பாராமல் மீண்டும் தாக்கப்பட்டார்.இதனால்,கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நடமாடமுடியாதவராக மட்டுமல்ல,உடல் நலிவுற்றவராகவும் வாழ்ந்தார். எனினும், நாட்டு நிலைமைகளை கூர்ந்து கவனித்தவாறு தொடர்ந்து எழுதியும்,பேசியும் வந்தார்.

ஜனநாயகத்தின் மாண்புகளைக் காக்கவும்,மதச்சார்பற்ற தத்துவத்தை வலுப்படுத்தவும்,சமூக நீதியை நிலை நாட்டவும் அயராது பாடுபட்டார்! மோடி,அமித்ஷா கூட்டணியால் நமது நாடு எதிர் கொண்டுள்ள வரலாறு காணாத பேரழிவுகளை,இழப்புகளை,விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுத்து நிறுத்த இறுதி மூச்சு வரை குரல் கொடுத்தார். அவரது இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்றாகும்! அவருக்கு நம் வீர வணக்கத்தை உரித்தாக்குவோம்!

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time