அடப் பாவிகளா…? யாரைத் தான் வேவு பார்ப்பது..? விவஸ்த்தை இல்லையா..?

- ச.அருணாசலம்

நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள – உலகெங்கிலும் பேசப்பட்டுவருகிற –   வேவு பார்க்கும் விவகாரத்தில் – ( பெகாஸ்ஸ்-ஸ்பைவேர்) யார் யாரெல்லாம் வேவு பார்க்கப்பட்டு உள்ளார்கள் என்று நாளுக்கு நாள் வரும் செய்திகள் நம்மை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்கின்றன! எதனால் இவர்கள் வேவு பார்க்கப்பட்டார்கள் என்று ஆழமாக பார்க்கையில், அவர்களின் நேர்மையே இந்த அரசாங்கத்தை அச்சுறுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது!

தனிமனித சுதந்திரம், உரிமை,அந்தரங்கம் ஆகியவற்றை காலில் போட்டு மிதிக்கிற செயலன்றி இவை வேறொன்றுமில்லை. ஒரு நாகரீக  சமுதாயத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென்று வைத்திருக்கும் எண்ணங்களை செயல்களை, நிகழ்வுகளை அவரறியாமல் அடுத்தவர் திருடக்கூடாது, உபயோகிக்க கூடாது என்பதே அடிப்படைக் கருத்தாகும் .

இந்த உரிமை நாகரீகத்தின்பாற் மட்டுமின்றி, நமது அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமை என்ற வகையிலும் அனைவராலும் குறிப்பாக ஒன்றிய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் கடைப்பிடிக்க வேண்டியது தலையாய கடமை.

இந்த உளவு பார்க்கும் விவகாரம் 2017 ம் ஆண்டு முதல் தொடங்கி இன்றுவரை தொடர்கிறது.

ஆனால், இப்பொழுது 14 புகழ்பெற்ற பத்திரிக்கைகள் ( அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட், பிரிட்டனின் தி கார்டியன், பிரெஞ்சு நாட்டு பத்திரிக்கை யான லே மோன்ட்,மற்றும் தி வயர் என்ற இந்திய வெப் போர்ட்டல்) இணைந்து வெளியிட்ட பட்டியல்- வேவு பார்க்கப்பட்ட நபர்களின் பெயர்கள்,டெலிபோன் நம்பர்கள்-  இரண்டு விஷயங்களை தெளிவாக எடுத்து வைக்கிறது. ஒன்று இந்த வேவு நடவடிக்கை (surveillance)  பெகாஸ்ஸ் ஸ்பைவேர் என்ற  மிலிட்டரி க்ரேட் – ராணுவத்தரமிக்க உளவு சாதனம்- ஸாப்ட்வேர் சாதனம் மூலம் நடந்தேறியது. இரண்டு , இந்த வகையான உளவு சாதனத்தை N S O என்ற இஸ்ரேல் நாட்டு நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. மேலும், இச்சாதனம் தனியாருக்கு விற்கப்படமாட்டாது. இறையாண்மையுடைய அரசுகளுக்கே இந்த உளவு சாதனங்கள் விற்கப்படும், அதுவும் இஸ்ரேல் அரசின் அனுமதி மற்றும் கட்டுப்பாட்டின் கீழ்தான் விற்பனை செய்ய இயலும்.

இத்தகைய உளவு சாதனங்களை வாங்குவதோ, அதை வைத்து வேவு பார்ப்பதோ தனியாருக்கு சாத்தியமில்லை. அரசாங்கத்தினால் மட்டுமே இந்த சாதனங்களை வாங்குவதும் அதன்மூலம் வேவு பார்ப்பதும் முடியும்.

இந்தியாவில் அப்படி என்ன 2017ம் ஆண்டு நடந்தது?   இஸ்ரேல் நாட்டிற்கு 2017ம் ஆண்டில் மோடி விஜயம் செய்கிறார் . இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையும் அவர் பெற்றார் .பெற்றது இந்த பெருமை மட்டுந்தானா ..? என்றால் இல்லை வேறொன்றும் உண்டு. அன்றைய இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெத்தன்யாகுடன் கலந்து பேசி ராணுவ தளவாடம் வாங்கும் -பல கோடிரூபாய் மதிப்பிலான – ஒப்பந்தம் செய்து கொண்டார். அவற்றில்  N S O நிறுவனம் தயாரித்து வழங்கும் ( PEGASUS SPYWARE)  பெகாசஸ் உளவு சாதனம் அடங்குமா என்று இரு நாட்டு தலைவர்களும் தெரிவிக்கவில்லை.

ஆனால், 2018 ஆரம்பத்தில் ரோகினி சிங் என்றழைக்கப்படும் பிசினஸ் அஃப்பையர்ஸ் பத்திரிக்கையின் பெண் நிருபரின் தொலைபேசி பெகாசஸ் சாதனத்தின் வேவு வளையத்துக்குள் தள்ளப்பட்டது.. காரணம் அவர் அமீத் ஷா வின் மகன் ஜெய் ஷா,  வெறும் ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில், 80 கோடி சம்பாதித்ததைப்பற்றி – அந்த அதிசயத்தை- பத்திரிக்கையில் எழுதி வெளியிட்டார்.

தேர்தல் பற்றியும், புதிய கல்விக் கொள்கை பற்றியும் எழுதிய ரித்திகா சோப்ரா,,காஷ்மீர் பற்றி எழுதிய முஜாமில் ஜலீல், இந்துஸ்தான் டைம்ஸ் ஷிஷிர் குப்தா,,பாதுகாப்புத் துறை பற்றி எழுதி வந்த டி.வி18 பத்திரிகையாளர் மனோஜ்குப்தா, இந்திய ராணுவத்தை பற்றி எழுதி வந்த இந்தியா டுடேயின் சந்தீப் உன்னிதான், உள்துறை பற்றி எழுதி வந்த தி இந்துவின் விஜைதா சிங்..என முக்கிய விவகாரங்களை எழுதி வந்த நாடறிந்த பத்திரிகையாளர்களின் தொலைபேசிகளை பாஜக அரசு ஒட்டு கேட்கிறது என்றால், அந்த துறைகளில் எல்லாம் ஏதோ மிகப் பெரிய தவறுகளை செய்து வருகிறது என்பதும், அதை இந்த பத்திரிகையாளர்கள் எழுதிவிடக் கூடாதே என்ற பதைபதைப்பும் ஆட்சியாளர்களை சதாசர்வ காலமும் உறுத்தியுள்ளது என புரிந்து கொள்ளலாம்!

அதே ஆண்டு (2018) இந்தியன் எக்ஸ்பிரஸ் ஐ சார்ந்த சுஷாந்த் சிங் என்ற பத்திரிக்கையாளரும் வேவு பார்க்கப்பட்டார், காரணம் அவர் ரஃபேல் விமான விவகாரத்தை விளக்கி புள்ளிவிவரங்களுடன் எழுதியதுதான்.

இணைய வழிபத்திரிக்கை தி வயர் நிறுவனர்களான திரு. எம் .கே. வேணு, திரு. சித்தார்த் வரதராஜன், தேவ்ரூப மித்ரா, ரோகினி சிங், பிரேம் ஷங்கர் ஜா, சுவாதி சதுர்வேதி, பரஞ்சாய் குஹா தாக்குர்தா, என்று ஒட்டுக்கேட்கப்பட்ட, வேவு பார்க்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் பட்டியல் நீளுகிறது. மக்கள் நலன் சார்ந்து நேர்மையாக இயங்கும் பத்திரிகையாளர்கள் மீது மோடி அரசுக்குத் தான் எவ்வளவு பயம்..!

2018 ம் ஆண்டு குஜராத் தேர்தலில் மோடியை திக்குமுக்காட செய்த காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியின் தொலை பேசியும் அவரது உதவியாளர்கள் ,அவருக்கு நெருக்கமானவர்கள் என ஏழு பேர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்பட்டன. காரணம் 2018ல் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆண்ட   பா ஜ க வை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சிக்கட்டிலேறியது. பொறுக்க முடியுமா மோடியால்?

நாட்டையே உலுக்கி வரும் பெகாசஸ் உளவு விவகாரத்தில் புதிய திருப்பமாக வந்துள்ள செய்தி: மிக உயர்ந்த காவல்துறை தலைவரே வேவு பார்க்கப்பட்டது தான்! தி வயர் “the Wire”  இணைய பத்திரிக்கையில் வந்த தகவலின்படி, திடீரென்று பதவி நீக்கம் செய்யப்பட்ட சி.பி.. தலைமை இயக்குனர் அலோக் வர்மாவின் மூன்று தொலைபேசிகள்  ஒட்டுகேட்கப்பட்டுள்ளன!

ரஃபேல் ஊழல் விவகாரத்தில் அலோக் வர்மா சுதந்திரமாக நடந்து வழக்கு பதிவு செய்வார் என்று சந்தேகித்த மோடி , தன்னுடைய ஆளான (Blue eyed boy)  ராக்கேஷ் அஸ்தானா மூலம் அலோக் வர்மா மீது பொய்புகார் கொடுக்கவைத்து அலோக் வர்மாவின் பதவிக்கு. உலை வைக்கிறார், அடுத்த சில மணிநேரங்களில் ,வர்மா, அவரது மனைவி,மகள்,மருமகன் என குடும்பம் மொத்தமும் கண்காணிப்பு வளையத்துக்குள் – பெகாசஸ் உளவு சாதனத்தின் வளையத்திற்குள் – கொண்டுவரப்பட்டனர்.

பதவி நீக்கத்தை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றம் செல்கிறார். அன்றிருந்த நீதிபதி ரஞ்சன் கோகோயின் விசித்திர தீர்ப்பிற்குப் பின் வர்மா மீண்டும் சி பி ஐ தலைமை இயக்குநராக பொறுப்பேற்ற சிலமணி நேரங்களில் இரவோடிரவாக -“முறைப்படி”- மீண்டும் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்.

அலோக் வர்மாவிடம் புகார் கொடுத்த மூவர்பிரசாந்த் பூஷன், அருண் ஷௌரி, யஷ்வந்த் சின்கா உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். மீண்டும் நமது  ரஞ்சன் கோகோய் சிரமப்பட்டு ஒருவழியாக வழக்கை தள்ளுபடி செய்து பா ஜ க வினரின் பாராட்டை பெற்றார். இனிதேவையில்லை என கருதப்பட்டதால் வர்மாவும் அவரது குடும்பமும் உளவு வளையத்திலிருந்து  விடுவிக்கப்பட்டனர்.

‘டைமிங்கை பார்த்தாலே தெரியவில்லையா ‘என்று நக்கலடித்த அமீத் ஷாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘டைமிங் ‘ உணர்வை வெளிப்படுத்திய இந்த செய்தி அனில் அம்பானி மற்றும் அவரது கம்பெனி உயரதிகாரி, டோனி ஜேசுதாசன், ஆகியோரின் பெயர்களும் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ளதையும்  உறுதிபடுத்தியது. ராக்கேஷ் அஸ்தானா, .கே. ஷர்மா என்ற இரண்டு சி.பி.ஐ இயக்குனர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.

2019 தேர்தலும் வந்தது. தேர்தல் பரப்புரை மற்றும் நடைமுறைகளால் தேர்தல் விதிமுறைகளை (model code of conduct) மோடி மீறுகிறார் என்ற குற்றசாட்டை புறந்தள்ளாமல் நேர்மையாக விசாரித்து ஆமோதித்தன் விளைவாக தேர்தல் ஆணையர் அசோக் லாவசா தொலைபேசியும் வேவுக்குட்படுத்தப்பட்டது.

அவர் தலைமை தேர்தல் ஆணையராக வர வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவருக்கு இடைஞ்சல் கொடுக்க அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் வேவு பார்த்தல், E D மற்றும் I T ரெய்டுகள் நடத்தப்பட்டன. லாவசா சிறிது காலங்கழித்து வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆசிய வளர்ச்சி வங்கி தலைவராக பொறுப்பேற்றவுடன் வேவு பார்த்தல் முடிவுக்கு வந்தது.

ரித்திகா சோப்ரா என்ற பத்திரிக்கையாளரும் பாதிக்கப்பட்ட அசோக் லாவசாவின் எதிர்க்குரலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததால் வேவு வட்டத்திற்குள் தள்ளப்பட்டார்.

பிரஷாந்த் கிஷோர். திரிணாமுல் செயலாளர் அபிஷேக் பானர்ஜி..இப்படி ஏராளமானோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

ஏன், கர்நாடக அரசை களவாடி ஆபரேஷன் லோட்டஸ் மூலம் கவிழ்த்ததும் உண்மையில் ஆபரேஷன் பெகாசஸ் நடவடிக்கையே என்கின்றனர் விஷயமறிந்தோர்.அந்த வகையில் தான் சித்தராமையா மற்றும் குமாரசாமி தொலைபேசிகளும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன.

முற்போக்கு சிந்தனை கொண்ட ஆனந்த் டெல்டும்டே போன்ற கல்வியாளர், ஜனநாயக ஆர்வலர் ஜெகதீப் சொக்கர் ஆகியோரை கண்டு பயப்படுவானேன்? அது போல தடுப்பூசி விவகாரத்தில் முழு ஆய்வுகள் முடியவில்லையே என கேள்வி எழுப்பிய வேலூர் சி.எம்.சி மருத்துவர் தொலைபேசியும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது.

அஒந்தக் கட்சியின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நீர்வளத்துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் ஆகியோர் தொலைபேசிகளும் ஒட்டுகேட்கப்பட்டன என்றால், பாஜக தலைமையின் யோக்கியதையை என்னென்பது..?

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் கொடுத்த உச்ச நீதிமன்ற பெண் அலுவலரும், அவர்  குடும்பத்தினரும் வேவு பார்க்கப்பட்டதிலிருந்து, தவறு செய்த தலைமை நீதிபதியை மிரட்டி தன் வளையத்திற்கு கொண்டு வர பாஜக தலைமை முயன்றதா..? என்ற கேள்வி எழுகிறது.

குஜராத் மாடலை எப்படி அகில இந்திய அளவில் விரிவு படுத்துகின்றனர் என்பதைப் பாருங்கள்…!

அன்றைய குஜராத் முதலமைச்சராக மோடியும் அவரது உள்துறை (குஜராத்) அமைச்சராக இருந்த அமீத் ஷாவும் ஒரு இளம் பெண்ணை – கட்டிடக்கலை பட்டம் பெற்ற இளம்பெண்ணை- அரசுப்பணத்தில் பல மாதங்களாக வேவு பார்த்து,தொலைபேசியை ஒட்டு கேட்டு அவர் போகுமிடமெல்லாம் காவலர்களை அனுப்பி கண்காணித்த மோடியும், ஷாவும் அதை அகில இந்திய அளவில் இப்பொழுது அரங்கேற்றி வருகின்றனர் .

இந்த அசிங்கத்தை எதிர்த்து நாடாளுமன்றத்திலும் , மக்கள் மன்றத்திலும் எழும் கண்டனங்களை வழக்கம்போல் திசை திருப்ப முயலுகின்றனர்.

”இது மோடிக்கு எதிராக, இந்தியா முன்னேற்றப்பாதையில் செல்வதை பொறுக்காத குழப்பவாதிகள் வெளியிடும் அவதூறு ! வேண்டுமென்றே நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கும் நாளன்று அவர்கள் இதை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்’’ என்று அமீத் ஷா கூறுகிறார் .

என்ன குழப்பம்? என்ன அவதூறு? உலகின் தலைசிறந்த பத்திரிக்கைகள் இந்திய நாடாளுமன்றம் கூடுவதையா கருத்தில் கொண்டுள்ளனர்? அவர்கள் 14 நாடுகளின் தலைவர்களின் தொலைபேசிகள் – பாக்.பிரதமர் இம்ரான் கான், மற்றும் பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரன் உட்பட- ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்று 400 க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை வெளியிடுகின்றனர்.

வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற பிக் டெக் நிறுவனங்கள் N S O மீது வழக்குகள் தொடுத்துள்ளனர். இஸ்ரேல் அரசுக்கு உலக நாடுகள் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய உளவு சாதனத்தை விற்பனை செய்வதற்கு, துஷ்பிரயோகம் செய்வதற்கு தங்கள் எதிர்ப்பை உலக நாடுகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் அரசு உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால் இங்கே என்ன நடக்கிறது? மோடி வாய்மூடி இருக்கிறார் . அமீத் ஷா க்ரோனாலஜி என்று குதர்க்கம் பேசுகிறார். ரவி சங்கர் பிரசாத் சுற்றி வளைத்து பேசி திசை திருப்புகிறார்.

பாஜ க வினர் இஞ்சி தின்ற குரங்கு போல செய்வதறியாமல் விழிக்கின்றனர்.

பெகாசஸ் ஸ்பைவேரை இந்திய அரசு வாங்கியுள்ளதா இல்லையா என்ற கேள்விக்கு அரசு தரப்பிடமிருந்து ஆம் அல்லது இல்லை என்று நேரிடையான பதில் இல்லை.

இந்திய அரசின் உத்தரவின் பேரில்தான் இந்த வேவு நடவடிக்கைகள் நடந்தன, நடக்கின்றன என்றால், அரசியல் சட்டம் என்னவாயிற்று? தனிமனித உரிமை, சுதந்திரம் காற்றில் பறக்கவிடப்பட்டதா? யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது?

சாதி மத வேறுபாடின்றி, ஆண் பெண் வேறுபாடின்றி, எதிர்கட்சி, சொந்தக் கட்சி என்ற வேறு பாடின்றி நேற்று அவன், இன்று நான், நாளை நீ என்று எதேச்சதிகாரி தலைமையைத் த்தவிர மற்றெல்லாரும் பாதிப்பிற்குள்ளாவது தேவைதானா?

நாட்டிலுள்ள அரசியல் அமைப்ப நிறுவனங்களான, தேர்தல் ஆணையம், கணக்கு மற்றும் தணிக்கை ஆணையம்,நீதி மன்றம் ஆகியவை எல்லாம் இப்படித்தான் வளைக்கப்பட்டதா?

எதிர்த்து கேள்வி கேட்பவர்களை மிரட்டியும்,சிறையிலடைத்தும், ஊடகத்துறையில் எதிர்ப்போரை ஒடுக்கவும் ஏனையோரைஆணையிடவும்இம்முறைதான் கையிலெடுக்கப்பட்டதா?

இதற்கு உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான ஒரு நியாயமான விசாரணை தேவை!

இந்த அநீதிக்கு காரணமானவர்களை தண்டிக்கா விட்டால் இந்த நாட்டு மக்களுக்கு மிஞ்சப்போவது கால் விலங்கு மட்டுமே!

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time