‘தலித்’னாலே வன்முறையாளர்களா..? வெட்டு, குத்து, ரத்தம், துரோகம் தானா..?

-சாவித்திரி கண்ணன்

சிறப்பான திரை மொழி, உயிர்துடிப்புள்ள கதாபாத்திரங்கள், சாதியையும், அரசியலையும் வெற்றிக்கான கச்சா பொருள்காளக்கி கொள்ளும் கலைநுட்பம் யாவும் கைவரப் பெற்றுள்ளார் பா.ரஞ்சித். ஆனால், அவருக்கு வரலாற்றையும் நேர்மையாக சொல்ல விருப்பமில்லை! அரசியலையும் நேர்மையாக அணுகத் துணிவில்லை என்பதைத் தான் சார்பட்டா பரம்பரை சொல்கிறது.

தலித் மக்கள் ஒடுக்கப்பட்டதை, அடக்குமுறைக்கு ஆளானதை, அவர்களின் தாங்கொணாத வலியை பேசுவதற்கு இன்னும் ஒரு நேர்மையான படைப்பாளி தமிழ் சினிமாவிற்கு வரவில்லை…என்றே தோன்றுகிறது!

திரையின் காட்சிப் படிமங்களில் துல்லியமாக சொல்ல வேண்டிய உணர்ச்சிகளை கடத்த தெரிந்தவர் ரஞ்சித் . அதிலும், பெண் காதாபாத்திரங்களை துணிச்சல் மிக்கவர்களாக வெளிப்படுத்தி வருவதில் முன்னோடி! தலித்துகளின் வாழ்வியலை ரசிக்கத் தக்க வகையில் திரைமொழியில் தருகிறார். ஆனால், இதுவே ஒரு முப்பதாண்டுகளுக்கு முன்பு சாத்தியமில்லை. இன்று சாதி ஆதிக்க எதிர்ப்பு, தலித் ஆதரவு ஆகிய சிந்தனை போக்குகள் பொதுச் சமூகத்தில் வலுப் பெற்றதன் பின்னணியில் தான் இது சாத்தியமாயுள்ளது என்ற புரிதலை அவர் உள்வாங்கி கொள்வது நல்லது!

ஆக, இந்த சூழல்களை உருவாக்கி கொடுத்த ஏராளமான முன்னோடிகளே இந்த திரைப்பட வெற்றிக்கு காரணமாவர்!

சார்பட்டா படத்தில் டாடி, அம்மா கதாபாத்திரங்கள் சர்வ சதாரணமாக ஆங்கிலம் பேசுவர்..! இதன் பின்னணியை தொட்டுக் காட்டியிருக்கலாம். அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், முனுசாமிப்பிள்ளை, எம்.சி. ராஜா, சிவராஜ், மீனாம்பாள் என்பது போன்ற முன்னோடி தலித் அரசியல் தலைவர்கள் எடுத்த முன்முயற்சிகள், அதன் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வால் ஆதிதிராவிட இளைஞர்கள் படித்தனர். பதவிகளும் பெற்றனர். பிரிட்டிஷ்காரர்கள் வீட்டில் சமையல் மற்றும் தோட்டப் பணிகள் செய்ததன் மூலம் பெற்ற ஆங்கில அறிவு..என எவ்வளவோ பின்னணி உள்ளது இன்றைய தலித் வளர்ச்சி சாத்தியமாயிருப்பதற்கு!

தலித் என்றாலே ரவுடிகள், வன்முறையாளர்களா..? அவர்கள் வடசென்னையில் உழன்றாலும் சரி, மலேசியா சென்றாலும் சரி, மும்பை சென்றாலும் சரி..அவர்கள் போதை மருந்து கடத்துவது, தாதாயிசம் செய்வது, உச்சகட்ட வன்முறைகளில் உழல்வது, துரோகம் செய்வது, கொலை செய்வது என்று மட்டுமே புரிந்து வைத்திருந்தால் எப்படி..?

தஞ்சையில் மிராசுதாரகளால் தலித்துகள் சாணிப்பால் குடிக்க வைக்கப்பட்ட வரலாறு உண்டே! ஆண்டாண்டு காலமாக, பரம்பரை, பரம்பரையாக அவர்கள் நிலச்சுவாந்தார்களால் உரிமையற்றவர்களாக அடக்கி ஒடுக்கப்பட்ட கொடுமைகள் உள்ளனவே! அங்கே சீனிவாசராவ் என்ற வரலாற்று நாயகர் தலித்துகளின் உரிமைக்காக வலுவான போராட்டங்களை பொதுவுடமை இயக்கத்தின் சார்பில் முன்னெடுத்த வரலாறு உள்ளதே! கூலி உயர்வு கேட்டதற்காக 44 தலித் மக்கள் உயிரோடு எரித்துக் கொள்ளப்பட்ட வெண்மணி சம்பவம் இருக்கிறதே!

பொதுக் கிணற்றிலும், குளத்திலும் தண்ணீர் எடுக்க முடியாத அவலம், சமமரியாதையோடு நடத்தப்படுவதற்கு அவர்கள் சந்தித்த பேரழிவுகள் எவ்வளவோ உள்ளன!

இந்திய மக்கள் தொகையில் கிட்டதட்ட 18 சதவிகிதமாக இருக்கும் தலித்துகள் ஒரு மிகப் பெரிய கூட்டத்தினர் தான். வெறும் மூன்று சதவிகிதமானவர்களே இருந்த பிராமணர்களைப் பற்றி ஏராளமான திரைப்படங்கள் பிராமணத் திரைக் கலைஞர்களால் எடுத்து வெற்றி பெற்றுள்ளன எனும் போது தலித்துகளைப் பற்றிய படங்கள் இப்போது தான் வரத் தொடங்கியுள்ளன. அதுவும் ஒப்பீட்டளவில் வந்துள்ளவை மிகக் குறைவாகவே உள்ளன!

ஆனால், அப்படி வரும் படங்கள் தலித்துகளின் நடைமுறை வாழ்வை பேசாமல் பகட்டு அரசியலையும், பகை அரசியலையும் பேசிக் கடப்பது தான் வேதனையாக உள்ளது.

# படித்து, முன்னேறிய தலித்துகள் பலர் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு சுயநலமாக வாழ்கின்றனர்.

# தலித் சார்பு அரசியலை முன்னெடுப்பவர்கள் தனிநபர் வழிபாட்டிலும், பிழைப்புவாத அரசியலிலும் தேங்கிவிட்டனர்.

#  திரை மொழியை திறம்படக் கற்று தலித்துகளை பேச வரும் படைப்பாளிகளோ மசாலா வன்முறை பார்முலாவில் இளைஞர்களை மழுங்கடிக்கின்றனர்.

மறைந்து போன பாக்சிங் கலையை பேசும் ஒரு வரலாற்றுப் படம், அதில் ஈடுபட்டிருந்த சகல சமூகத்தையும் பிரதிபலிக்க வேண்டாமா..? குறிப்பாக அதில் மீனவர்களுக்கு இருந்த மிகப் பெரிய பங்களிப்பை எப்படி மறைக்கத் தோன்றுகிறது. இது,  ஏதோ யதேச்சையாக நடந்திருக்க வாய்ப்பில்லை. போட்டி,பொறாமைகள் எவ்வளவு இருந்தாலும், வீர விளையாட்டு என்ற மைய புள்ளியில் சாதிகளைக் கடந்து இங்கு பல சமூகங்கள் ஒன்றுபட்டு இயங்கிய அழகான தருணங்கள் இல்லாமல் இருந்திருக்காது. விளையாட்டு மற்றும் கலை ,கலாச்சாரத் தளத்தில் நிலவிய சாதி அரசியலைப் பற்றி எவ்வளவோ பேசலாம் – பகமை பாராட்டாமல்!

திமுக, அதிமுக அரசியல் பற்றிய அடிப்ப்ப்படை புரிதல் இல்லாமல், எமெர்ஜென்ஸி என்ற அரச வன்முறை காலச் சூழல் நமது சமூக, அரசியல்,கலாச்சார தளங்களில் உருவாக்கிய மாபெரும் சரிவு பற்றிய புரிதலை உள்வாங்கிக் கொள்ளாமல் இவற்றை வெறும் குறியீடுகளாகவும், ஒரு சில வசனங்களிலும் கடந்துவிடுவது கல்லா கட்டுவதற்கான பிழைப்பு உத்தியாக்கப்பட்டுள்ளது. அதுவும் திமுக குறித்து காட்டப்பட்டுள்ளவை சந்தர்பவாத சாகஸங்களே!

தலித்துகளின் வலியை பேசும் படைப்புகளை வரவேற்கலாம். ஆனால், ஏழ்மையிலும் கண்ணியமாக வாழும் தலித்துகள் உங்கள் கண்களில் படுவதில்லையா..? துன்பத்திலும் இழி செயல்களுக்கு துணை போகாத உன்னத ஏழை தலித்துகளை தெரியாதா..? வன்முறையற்ற வழிமுறைகளில்  தடைகளை வென்று சாதித்தவர்கள் தெரியாதா..? தலித்துகளிலேயே இன்னும் அதிகமாக அடக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள அருந்ததியினரை யார் பேசுமாட்டீர்களா..? மலக் குழியில் மாண்டுபோவோரை பேசக் கூடாதா..?

தலித்துகள் என்றாலே வெட்டு, குத்து, ரத்தம்,சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோர் என பொது புத்தியில் ஒரு கருத்தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே பா.ரஞ்சித்தின்  திரை ஆக்கங்கள் உள்ளன!

புத்தர், அம்பேத்கார் ஆகியோரின் திருஉருவ அடையாள அரசியலிலேயே தங்கிவிட்டால் எப்படி..? அவர்கள் காட்டிய வழியில் பயணிக்கும் போது ஏற்படும் சாவல்களை படம் பிடித்தால் அது சாதனை! வெறும் குறியீடு அரசியலில் குதூகலம் அடைந்து முடிவதல்ல வாழ்க்கை! வெறும் அடையாள அரசியல் மட்டுமே காட்டிக் கொண்டு, அர்த்தமுள்ள அரசியலை பேசாமலே தவிர்ப்பது என்ன வகைப்பட்ட  கலை..?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time