அழிக்க துடிப்பவனிடமே அடைக்கலமாகும் ஆடுகள்!

- சாவித்திரி கண்ணன்

சசிகலாவை பற்றி கேட்டால் எடப்பாடி எஸ்கேப்..! என்ன நடந்தது..?

பன்னீர் முதலில் டெல்லி கிளம்ப, அடுத்த நாள் எடப்பாடி தன் சகாக்களுடன் விழுந்தடித்து பின் தொடர என டெல்லியில் இருவருமாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். 25 நிமிட சந்திப்பு இனிதாக இல்லை போலும்! வெளியில் வந்து நிருபர்களிடம் பேட்டியளித்த எடப்பாடியின் முகம் வெளிறி இருந்தது. குரலில் சொரத்தே இல்லை. ஏதோ தமிழ் நாட்டு நலன் தொடர்பாக விவாதித்தது போல ஏகப்பட்ட கற்பனை உரையாடல்களை சொன்னார். பக்கத்தில் இருந்த பன்னீர் செல்வத்தை பேசவே அனுமதிக்கவில்லை. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது பற்றி விவாதிக்கப்பட்டதா..? என கேட்டவுடன் நன்றி, வணக்கம் என்று சொல்லி நடையைக் கட்டினார் எடப்பாடி!

இத்தனை நாளும் எல்லா பேட்டிகளிலும், ”சசிகலாவை கட்சிக்குள் சேர்க்கமாட்டோம்’’ என திட்டவட்டமாக சொல்லி வந்த எடப்பாடியால், ஏன் தற்போது அதையே மீண்டும் உறுதிபடுத்த முடியவில்லை என்பது  கவனத்திற்குரியது. மேலும், கட்சிக்கான உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டும். அதை இனிமேலும் தள்ளிப்போட முடியாது. சசிகலா போட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எப்படி வரும் என்பது தெரியவில்லை.

அதிமுக என்ற கட்சி எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே டெல்லி உத்தரவுகளைக் கேட்டு செயல்பட்டு வரும் கட்சி தான். எமர்ஜென்ஸியை எதிர்த்த கருணாநிதியை பலவீனப்படுத்த,  எம்.ஜி.ஆரை கைபொம்மை ஆக்கிக் கொண்டார் இந்திராகாந்தி! அது எம்.ஜி.ஆர் வளர்ச்சிக்கு தான் உதவியது. ஜானகி, ஜெயலலிதா என பிரிந்த போது ஜானகியை தவிர்த்துவிட்டு ஜெயலலிதாவை ஆதரித்தது, ராஜிவ்காந்தியின் டெல்லி தலைமை. அதுவும் அதிமுக வளர்ச்சிக்கு தான் உதவியது. மேற்படி இருவரும் மக்கள் தலைவர்களாகவும் இருந்தது ஒரு காரணம் என்றால், அதிமுகவை அழித்து அந்த இடத்தில் தன்னை பொருத்திக் கொள்ள காங்கிரஸ் ஒரு போதும் திட்டமிடவில்லை.

இது நாள் வரை திமுகவிற்கு செக் வைக்க அதிமுக ஆட்சியை தாங்கி பிடித்தது பாஜக. அதுவும் அதிமுகவுக்கு ஒரு பாதுகாப்பாகவே இருந்தது. அதே சமயம் அரசியல் ரீதியாக பாஜகவுடன் அதிமுக கைகோர்ப்பதை அதிமுக தொண்டன் தொடங்கி, பொது மக்கள் வரையிலும் முற்றிலும் விரும்பவில்லை. அது தேர்தல் தோல்வியில் மிகச் சரியாகவே வெளிப்பட்டது. பாண்டிச்சேரியில் பாஜகவுடனான கூட்டு அதிமுகவை முற்றிலும் அங்கு காணாமல் செய்துவிட்டதோடு, பாஜகவை பலமாக காலூன்ற வைத்துவிட்டது.

இந்த நிலையில், ‘திமுகவை எதிர்ப்பதில் உன்னைக் காட்டிலும் நானே முன்னணியில் உள்ளேன்..’ என அதிமுகவிற்கு போட்டி அரசியல் நடத்தி வருகிறது பாஜக. அதாவது, அதிமுகவின் அரசியல் பாத்திரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது திமுகவைக் காட்டிலும் பாஜக தான் நமக்கு அனுகூல சத்ருவாக நம்மை அழிக்க துடிக்கிறது என்பதை உணர மறுத்து, அந்த பாஜகவிடமே தங்கள் உள்கட்சி முரண்களுக்காக பஞ்சாயத்து செய்யச் சென்றது தான் இன்றைய அதிமுக தலைமையின் ஆகப் பெரிய வீழ்ச்சியாகும்.

பன்னீரும், எடப்பாடியும் ஒன்றுபட முடியாமல் ஒன்றாக இருப்பது போன்ற நாடகத்தை நடத்தி வருகின்றனர். செயல்திறன்மிக்கவரான எடப்பாடி கட்சியின் ஒற்றைத் தலைமையாக மாறுவதற்கு மெல்ல,மெல்ல காய் நகர்த்தி வருகிறார். அதைப் பார்த்து தன்னை பலப்படுத்திக் கொள்ளவும் முடியாமல், எடப்பாடியை எதிர்க்கவும் முடியாமல் குறுக்கு வழியில் சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வருவது ஒன்று தான் எடப்பாடியின் ஏற்றத்தை தடுக்கும் அரணாக இருக்கும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டவராக தெரிகிறார்,பன்னீர் செல்வம்! அந்த தைரியம் தான், இன்று சசிகலாவுக்கு எதிர்காலம் குறித்த ஒரு நம்பிக்கை துளிர்விடக் காரணமாயிற்று.

கட்சித் தொண்டர்கள் மட்டத்திலும், பொது மக்கள் மத்தியிலும் தன்னை மெல்ல,மெல்ல பலப்படுத்தும் முயற்சியில் சசிகலா இறங்க தொடங்கிவிட்டார். இதை பாஜகவின் அனுமதி இல்லாமல் அவர் செய்ய துணியமாட்டார். அதை எதிர்க்க வேண்டாம் நடப்பது நடக்கட்டும்…என்பதே பாஜகவின் நிலைபாடு! அவருக்கு பெரிய ஆதரவு கிடைத்துவிடாது என்றாலும், மீடியா பூஸ்டப் மிக பிரம்மாண்டமாக இருக்கும். அது ஒரு சலசலப்பையும், அச்சத்தையும் உருவாக்கவே செய்யும்!

ஊழல் அமைச்சர்கள் மீது திமுக அரசின் நடவடிக்கைகள் பாயும் போது, அதை எப்படி எதிர்கொள்வது..? கட்சி கட்டு கோப்பாக இல்லாத பட்சத்தில் அதை எதிர்கொள்வது பெரும் சவாலாகிவிடும். முன்னாள் எம்.எல்.ஏக்களை, அதிமுக நிர்வாகிகளை திமுகவிற்குள் இழுக்கும் திமுகவானது தற்போதைய எம்.எல்.ஏக்களில் மூன்றில் ஒரு பங்கான 22 பேரை தூக்குமானால், அதை எப்படி எதிர் கொள்வது என்ற கவலையும் எடப்பாடியை வாட்டுகிறது. பன்னீரை பொறுத்த வரை அவருக்கு பதற்றமே இல்லை. அவர் எந்தச் சூழல் வந்தாலும், தன்னை மட்டும் தக்க வைத்துக் கொள்வதற்கான வழிகளை சமரச முயற்சிகளின் வழியே உருவாக்கிக் கொள்வார்.

பன்னீர் செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி இந்த மூவரில் யார் சிறந்த அடிமை என பாஜகவிற்கு நன்கு தெரியும். இதில் பன்னீர் தனக்கு ஒரு அனுகூலம் எனில், தன்னை மட்டுமல்ல, அதிமுகவையும் சேர்த்தே அடமானம் வைக்க துணிந்தவர். ஆனால், எடப்பாடியோ எவ்வளவு பணிந்தாலும், கட்சியை விட்டுத் தரமாட்டார். அதனால், அதிமுகவை பலவீனப்படுத்த பன்னீர் செல்வம் பாஜகவிற்கு கிடைத்த ஒரு வரம். பன்னீர்செல்வம் இருக்கும் வரை பாஜகவிற்கு பஞ்சாயத்து செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க மறுக்கும் எடப்பாடியின் பிடிவாதத்தை டெல்லியால் ரசிக்க முடியாது, என்கரேஜிம் செய்யாது. ஏனெனில், அமமுகவில் இருந்து பலர் திமுக வசம் சென்று கொண்டிருப்பதை தடுக்க, சசிகலாவை சேர்ப்பது தான் சரியாக இருக்கும் என பன்னீர்செல்வம் வாதம் வைத்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால்,சசிகலா அதிமுகவிற்குள் வந்தால், இதைவிட அதிகமானோர் அதிமுகவில் காணமல் போகக் கூடும். எப்படியோ தன்னுடைய முயற்சி இல்லாமல் அதிமுக பலவீனம் அடையும் வேலை நடந்தால் சரி..என்பதே பாஜகவின் பார்வையாக இருக்கும். ஆம், இன்றைய நிலையில் அதிமுகவின் உட்கட்சி முரண்களை உச்சப்படுத்தி, அது தன்னைத் தானே அழித்துக் கொள்வதைத் தான் பாஜக விரும்பும்!

அதிமுக என்ற கட்சியை அணு அணுவாக பலவீனப்படுத்தி அலேக்காக முழுங்க நினைக்கும் பாஜகவிற்கு பக்க துணையாக யார் இருப்பது என்பதில் தான் தெரிந்தோ, தெரியாமலோ பன்னீர் செல்வம், பழனிச்சாமி, சசிகலா மூவரிடையேயும் போட்டி நிலவுகிறது. அழிக்க துடிப்பவனிடமே அடைக்கலம் தேடும் ஆடுகளாக அதிமுக தலைவர்கள் இருப்பது உச்சபட்ச சாபக்கேடு!

திமுகவை எதிர்ப்பதை போன்றே பாஜகவையும் எதிர்த்தால் மட்டுமே, அதிமுக தன்னை தமிழகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள முடியும். இதை உணர்ந்து செயல்படுத்துவதற்கான தலைமை அதிமுகவில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.

அதிமுகவில் இருந்து ஆள்தூக்கும் நடவடிக்கைகள் வழியாக, திமுக தன்னைத் தானே பலவீனப்படுத்திக் கொள்வதோடு, மறைமுகமாக பாஜகவையும் பலப்படுத்தி வருகிறது. அதிமுக பலமாக இருப்பது தான் திமுகவிற்கும் நல்லது. அதே சமயம் அதிமுக ஊழல் அமைச்சர்கள் மீது உண்மையான நடவடிக்கை தேவை! ‘அந்த ஊழல்வாதிகளே திமுகவிற்கு தேவை’ என்ற ஆள்தூக்கி அரசியல் முடிவுக்கு வர வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time