ஓட்டுப்போடுவதோடு முடிந்துவிடுவதல்ல வாக்காளர்களின் உரிமை! நம் தேவைகளை மக்கள் பிரதிநிதிகளை பேசச் சொல்லி நாம் ஆணையிடமுடியுமா.? அதற்கான வழிமுறைகள் உண்டா..? செயல்படுத்துவோம்!
முறையான சனநாயகம் வீழ்ச்சியடைந்து வரும் இந்த இருண்ட காலத்தில், ஒரு ‘வாக்காளர்களின் ஆணையை ’ ஐக்கிய விவசாயிகள் முன்னணி’ வெளியிட முடிவு செய்துள்ளது. சனநாயகத்தின் இயக்க ஆற்றல் குறைந்து கொண்டிருக்கும் தருணத்தில், தெருக்களிலே சனநாயகம் மீட்கப்படுகிறது. ‘வாக்காளர்களின் ஆணை’ (voters whip) சக்திவாய்ந்தது என்றாலும் அதன் பின்னால் உள்ள கருத்து எளிமையானது.
இப்போது ஒவ்வொரு கட்சியும் அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ‘இந்தெந்த நாட்களில் அவைகளில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்; இன்னென்ன வழிகளில் வாக்களிக்க வேண்டும்’ என்று ஆணைகள் இடலாம்.
இதனுடைய அடிப்படை நோக்கம் என்னவென்றால், வாக்காளர்கள் தங்கள் நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் வழியாக பேசுகிறார்கள் என்பதாகும்; எனவே, கட்சியின் கட்டளைகளை மீற அவர்களை அனுமதிக்கக்கூடாது. ஆனால் வாக்காளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு நேரடியாக கட்டளைகளை இட முடியுமா? வாக்காளர்கள், தங்கள் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்றத்தில் அவர்கள் நடந்துகொள்ளும் முறைகள் குறித்து ஏன் நேரடியாக அறிவுறுத்த கூடாது?
இதைத்தான் ‘வாக்காளர்களின் ஆணை’ செய்கிறது. விவசாயிகள் சார்பாக, ஐக்கிய விவசாயிகள் முன்னணி (Samyukth Kissan Morcha) மழைக்கால அமர்வின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ‘ வாக்காளர்களின் ஆணை‘ ஒன்றை வெளியிட்டுள்ளது;
# அந்த ஆணை கூறுவதாவது : “நாடாளுமன்றத்தின் மழைக்கால அமர்வின்போது நாடாளுமன்றம் நடக்கின்ற அனைத்து நாட்களிலும் உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் ஆஜராகவேண்டும்;
# விவசாயிகள் இயக்கத்தின் கோரிக்கைகளை இரு அவைகளிலும் ஆதரிக்கவேண்டும்; வெளிநடப்பு செய்யக்கூடாது;
# விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் வரை, வேறு எந்த நடவடிக்கைகளும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற அனுமதிக்கக்கூடாது
மேலும் “இந்த வாக்காளர்களின் ஆணை, உங்கள் கட்சி, உங்களுக்கு வழங்கிய ஆணைக்கும் மேலானது, இதை மீறுபவர்கள் விவசாயிகளின் புறக்கணிப்பை எதிர்கொள்ளவேண்டும்” என்பதாகும்.
இது கருத்தியலில் ஒருமாற்றம் (conceptual break) ஆகும்; ஆனால் நடைமுறை செயல்பாடுகளில், இது வளர்ச்சியாகும். ‘வாக்காளர்களின் ஆணையை’ வழங்குவதற்கான நடைமுறைகள் என்ன? யார் அதை வழங்க முடியும்? வாக்காளர்கள் அதை ஆதரிக்கிறார்களா என்று எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும்? இதைக் கண்காணிப்பதற்கான வழிமுறைகள் என்ன? மீறல் என்பது என்ன? மற்றும் மீறுதலுக்கான அபராதம் என்ன? இதை யார் அமல்படுத்துவது? எவ்வாறு அமல்படுத்துவார்கள்?’ ஆகியவை குறித்து இன்னும் ஆழமான விவரங்கள் மற்றும் கருத்துக்களைக் கொண்டு, அதன் அடிப்படையில் இந்த கருத்தாக்கம் செழுமைப்படுத்தப்பட வேண்டும்.
விவசாயிகளின் கிளர்ச்சி போன்ற ஒரு வெகுமக்கள் இயக்கம் வழக்கமாக இல்லாத வகையில் தனிச்சிறப்பான தார்மீக அதிகாரத்துடன் ‘வாக்காளர்கள் ஆணை’யையிட (கொறடாவைப் போல) முடியும். ஆனால், சாதாரண காலங்களில் இதைப் பயன்படுத்தும் நெறிமுறைகள் இனிமேல்தான் உருவாக்கப்பட வேண்டும்.
எல்லா நேரத்திலும் புதுமையான வழிகளைக் கண்டு பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு இயக்கத்தில், புதுமைக்கான இன்னும் சில உதாரணங்கள்;
# டெல்லியின்எல்லைகளுக்கு வெளியே உள்ள அணிவகுப்புகள் என்கின்ற போராட்ட வடிவத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; இவை பாரம்பரியமான அணிவகுப்புகளோ அல்லது உள்ளிருப்பு ஆர்ப்பாட்டங்களோ அல்லது உட்காருவதோ அல்ல. அமர்ந்து போராட கூடாரங்களை அமைப்பதற்குப் பல மைல்கள் தூரம் நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பது என்பது, இதுவரை வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த போராட்ட வழிமுறைகளைத் தாண்டியது.
# இதேபோல், சுங்கச்சாவடிகளைஇயல்பான போராட்டத் தளங்களாக மாற்றியது,
# மாபெரும் விவசாயிகளின் மகாபஞ்சாயத்துகளை ஏற்பாடு செய்தது,
# காப் (கிராமத்தில் உள்ள மதிக்கத்தகுந்த மூத்த குடிமக்கள் தலைமையிலான மக்கள் கூட்டம்) பஞ்சாயத்துகளுடன் விவசாய சங்கங்களின் கூட்டணியை உருவாக்கியது,
# போராட்டங்களை ஆதரிக்கின்ற வகையில் ‘சமூக லங்கர்’ எனப்படும் சமூகரீதியான சமையலுக்கு ஏற்பாடு செய்தது,
# தினசரி பயன்பாட்டுப் பொருட்களுக்கு ’சமூக லங்கர்’ என்ற கருத்தை விரிவுபடுத்தி, அதை, கொரான காலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டபோது, அவற்றை சமூகரீதியாகப் பெற்று வினியோகம் செய்தது,
ஆகிய இவை அனைத்தும் சனநாயக நடைமுறைகளில் புதுமையான வழிமுறைகள் ஆகும்.
கடந்த வாரம், இது போன்று விவசாயிகள் இயக்கத்துடன் தொடர்பில்லாத மற்றொரு புதிய வழிமுறை செயல்பாட்டுக்கு வந்தது;
# சத்தீஸ்கரின்தலைநகர் ராய்ப்பூரில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை குறித்து ஒரு பொது விசாரணை நடைபெற்றது. ஆனால் இது வழக்கமாக நடைபெறும் மற்றொரு பொது விசாரணை அல்ல; வழக்கமான பொது விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வழக்கை நிபுணர்கள் மற்றும் நீதிபதிகளைக் கொண்ட ஒரு குழுவிடம் முன்வைப்பார்கள். ஆனால் இந்தப் புதியபரிசோதனையில், நடுவர் மன்றம் 17 புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்டிருந்தது. அவர்கள் மூன்று நாட்கள் விவாதம் நடத்தினர்; தீர்ப்பைச் சொல்லுவதற்கு முன், சக ஊழியர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டன. இந்தத் தலைகீழ் பார்வை பொது விசாரணை என்கின்ற கருத்தை முன்னோக்கி கொண்டு செல்லவும், அதன் சனநாயக தன்மையை ஆழப்படுத்தவும் செய்கிறது.
# சமீபத்திய காலங்களில் மிகவும் வியப்பூட்டுகின்ற வகையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வழிமுறைகளில் ஒன்று ஷாஹீன் பாக். இந்த அரசாங்கத்தின் கீழ், சிறுபான்மையினர் குரலை எழுப்புவது சாத்தியமில்லை என்று எல்லோரும் நினைத்தபோது, பாரபட்சமான குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு முடிந்துபோன விடயமாகத் தோன்றியபோது, அனைத்து நியாயமான போராட்ட வடிவங்களும் குற்றங்களாக்கப்பட்டபோது ஷாஹீன்பாக் போராட்டம் திடீரென்று வெடித்துக் கிளம்பியது. நகரத்தின் அண்டைப் பகுதிகளில் இருந்து திரண்டிருந்த, முழுவதும் பெண்களே கலந்துகொண்ட, இந்தப் பகல், இரவு கூடுகை மிகநேர்த்தியாக செயல்படுத்தப்பட்டது. இது தேசியத்தைக் குறிக்கின்ற மற்றும் திகைக்க வைக்கின்ற ஒரு கருத்தாகும்.
இவை தனித்தனியாக நடக்கின்ற உதாரணங்கள் போலத் தோன்றலாம்; ஆனால் அவை அவ்வாறு இல்லை. உங்களைச் சுற்றிலும் சனநாயக ஆர்வத்தை வெளிப்படுத்துகின்ற புதிய வழிகளைத் தேடத் தொடங்குங்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிப்பீர்கள்.
# சிலமாதங்களுக்கு முன்பு, உத்தரபிரதேசத்தில் வேலையற்ற இளைஞர்கள் யோகி அரசாங்கத்தை கேலி செய்தனர்; இந்த ஒரு சம்பவம், படித்த இளைஞர்களிடையே பரவலாக நிலவுகின்ற வேலையின்மையை முன்னிலைப்படுத்த உதவியது.
# கடந்தவாரம், பொதுமக்களில் சிலர் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்து வருவதை முன்னிலைப்படுத்த, பெட்ரோல் பம்புகளுக்கு வெளியே உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பதாகையின் முன் ஒரு புகைப்படத்தை எடுத்து, #மோடிஜிக்குநன்றி (#ThankyouModiji) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கினர்.
இது போல் இந்தப் பட்டியலில் நீங்கள் தொடர்ந்து சேர்த்துக்கொண்டே போகலாம்.
வரலாற்றில் இந்தக் காலக்கட்டத்தில், “சனநாயகத்தைக் கைப்பற்றுதல்”ஐ நேரடியாக அனுபவிக்கும்போது (அதாவதுசனநாயக வழிமுறைகள் மூலம் சனநாயகம் கைப்பற்றப்படுவதை நாம் அனுபவிக்கும் போது) மேலே நாம் எடுத்துக்காட்டிய இந்த உதாரணங்கள் நாட்டிற்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றன. ஒரு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது; ஆனால் பிரதமர், அவையில் இரண்டாவது கோவிட் அலையினால் ஏற்பட்ட இலட்சக்கணக்கான மரணங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை; ஒரு அறிக்கையை வெளியிட விரும்பவில்லை. அரசியலமைப்புரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரங்களைக் கேலிக்குள்ளதாக்குகின்ற, பெகாசஸ் உளவு பற்றி வெளிப்படுத்த உண்மைகள், நமது கண்களைத் திறந்திருக்கின்றன.
Also read
இந்தச் சூழலில், போராட்டங்களும், அந்தோலன் ஜீவிகளும் (அந்தோலன் ஜீவிகள்-‘போராட்டம் நடத்துவதன் மூலம் பிழைப்பு நடத்துபவர்கள்’ என்று விவசாயத் தலைவர்கள் குறித்து மோடி பயன்படுத்திய வார்த்தை) நமது சனநாயகத்திற்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.
ஒரு வரலாற்றாசிரியரும் சனநாயகத்தின் கோட்பாட்டாளருமான ஜான் கீன் “இவை ‘’கண்காணிக்கின்ற சனநாயகத்தின்’ நிகழ்வுகள்” என்று விவரிக்கிறார். – அதாவது, இந்தப் புதிய வழிமுறைகளானது, சனநாயகத்தின் தரத்தை ஆழப்படுத்துகிறது. இத்தகைய சனநாயக கண்டுபிடிப்புகள், புதிய வழிமுறைகளுக்கான முக்கிய எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதாக அவர் பட்டியலிடுகிறார். . அரசியலமைப்பின்படிஏற்படுத்தப்பட்ட பல சனநாயக நிறுவனங்கள் நமது சனநாயகத்தில் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. ‘வாக்காளர்களின் ஆணை’ போன்ற புதிய நடைமுறைகள் அத்தகைய செயல்படாத நிறுவனங்களால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதாக உறுதியளிக்கின்றன.
கட்டுரையாளர்; பேராசிரியர் யோகேந்திர யாதவ்
தேசியத் தலைவர், சுயஆட்சி இந்தியா
நன்றி, ‘The Tribune’
மொழியாக்கம் ;கே.பாலகிருஷ்ணன்,
சுயஆட்சி இந்தியா
மாநில ஒருங்கிணைப்பாளர்
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு (AIKSCC)
தமிழ்நாடு
‘Cell: 9444627827
Leave a Reply