பாஜகவை வளர்க்க விரும்பும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா..!

-சாவித்திரி கண்ணன்

ஜார்ஜ் பொன்னையா மாதிரியாக ஒரு நாலு பேரு இருந்தால் போதும் தமிழ்நாட்டில் இந்துமதவெறி இயக்கங்களும், பாஜகவும் ஒகோன்னு வளர்ந்திடும்! அந்த மதவாத தீக்கு நெய்யை வாளி நிறைய வாரி,வாரி ஊத்தி இருக்கிறார் பாதிரியார்.

இப்படி எவனாவது பேச மாட்டமாட்டானான்னு தானே இந்துத்துவ அறிவு ஜீவிகளும் காத்திருந்தாங்க..! இந்த மாதிரி சம்பவங்களை மிக நுட்மாக ஊதி, ஊதி  இந்துக்களை அணிதிரட்ட அவங்களை போன்றவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டது. அவங்களும் ஜமாய்க்கிறாங்க..! சோஷியல் மீடியாவெங்கும் பாதிரியார் விதைத்த வெறுப்பு பன்மடங்கு விஸ்வரூபமெடுத்து வியாபித்துள்ளது!

இந்த விவகாரத்தில் கன்னியாகும்ரி மாவட்ட காவல் நிலையத்தில் ஏராளமான புகார்கள் குவியத் தொடங்கியதும், இதை இந்து இயக்கங்கள் ஊதி பெரிதாக்கி அரசியல் ஆக்குவதற்கு முன்பே சட்டப்படியான நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்துள்ள திமுக அரசின் துணிச்சலை பாராட்ட வேண்டும். பாதிரியார் மீது கடும் நடவடிக்கை கோரி அறிக்கை விடும் நிலைக்கு தோழமை அரசியல் இயக்கங்களை தள்ளிவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கியுள்ளது திமுக அரசு! இந்த விவகாரத்தில் கொஞ்சம் தாமதித்து இருந்தாலும், அது இந்து மக்களிடம் கோபம் அதிகமாவதற்கு துணை புரிந்திருக்கும்!

தமிழகத்தில் காங்கிரஸ்,கம்யூனிஸ்டுகள், அதிமுக,மதிமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள்.. பாமக போன்ற எந்த அரசியல் இயக்கமும் பாதிரியாருக்கு பரிந்து பேச முன் வராததில் இருந்து, இந்த தமிழ் மண் மத நல்லிணக்கத்தில் கட்சி வேறுபாடின்றி, ஒருமித்த கருத்து கொண்ட மண் என்பதில் நாம் பெருமைப்படலாம்!

அறுபத்தி ஐந்து வயதுள்ள பெரியவர், அதுவும், கிறிஸ்துவ ஐக்கிய பேரமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும், குழித்துறை மறைமாவட்ட பனவிளை ஆலயத்தின் பங்குத் தந்தையாகவும் உள்ள சமூக அந்தஸ்துள்ள ஒரு பெரியவர் – மற்றவர்கள் பேசினாலே கண்டிக்கதக்க இடத்தில் இருப்பவர் – வாயிலிருந்து இத்தனை கடும் சொற்கள் வருவது விரும்பதகாததாகும்!

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மக்களை பாதிக்கும் சமூக பிரச்சினைகள், கூடங்குளம் அணு உலை போராட்டம் போன்றவற்றில் பங்கேற்றவர் மட்டுமல்ல, குமரி மாவட்டத்தின் மாபெரும் அருமணை கிறிஸ்துமஸ் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்துவதில் முக்கிய பங்காற்றுபவர் என்ற வகையில், முன்னாள், இன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் பரிச்சயமானவர். அந்த வகையில் இவரிடம் எவ்வளவு முதிர்ச்சியும், பக்குவமும் இருந்திருக்க வேண்டும்!

ஆனால், அகந்தையும், பகை உணர்வும், மாற்றுமத உணர்வுகளை இழிவுபடுத்துகிறோமே…என்ற குறைந்தபட்ச இங்கிதம் கூட இல்லையே அவரிடம்! அமைதியும்,சாந்தமும்,சமாதானமும் நிலவட்டும் என நாளும்,பொழுதும் வாழ்த்த வேண்டிய பாதிரியார் வாயில் இருந்து வர வேண்டியவைகளா இந்த சொற்கள்!

#  தி.மு.க ஆட்சிக்கு வந்தது நாங்கள் போட்ட பிச்சை. சேகர்பாபு,  மனோதங்கராஜ் ஆகியோர்  கோயிலுக்கு போகிறார்கள். என்னதான் நீங்கள் கோயிலுக்குப் போனாலும் இந்துக்கள் உங்களுக்கு ஓட்டுப் போடமாட்டார்கள்.என்கிறார் பாதிரியார். சேகர்பாபுவும், மனோ தங்கராஜும் கோவிலுக்கு போவதே ஓட்டுவாங்கத்தானா..? அவர்களுக்கும் ஒரு இறை நம்பிக்கை இருக்க கூடாதா..?

கிறிஸ்த்துவர்கள் உரிமைகளை பாஜக பறித்துவிடும்! பாஜக ஆட்சிக்கு வருவது நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு சர்வநாசம் என்று தானே கிறிஸ்த்துவர்கள் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு வாக்களித்தீர்கள். பிறகு, உங்கள் பாதுகாவர்களாக நீங்கள் கருதுபவர்களையே இந்த பேச்சின் மூலம் இழிவுபடுத்துவது உங்களுக்கு புரியவில்லையா..?

# ’’அமித்ஷா, மோடியை  நாயும், புழுக்களும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும். வரலாறு காணும். எங்களது  சாபம் உங்களை அழிக்கும். நிர்மூலமாக்கும்’’ – இப்படி ஒரு பாதிரியார் பேசினால், இந்த உணர்வு அவரை பின்பற்றும் லட்சக்கணக்கானவர்களுக்கும் கடத்தப்படாதா..? பகை அரசியல் பாதிரியார்களுக்கு அழகா..?

#  ’’நாம் ஷூ போட்ருக்கோம் எதற்கு? பாரத மாதாவிடம் இருக்கும் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நாம் ஷூ போட்டு மிதிக்கிறோம். நமக்கு சொறி, செரங்கு வந்திடக் கூடாது என..! இந்த பூமா தேவி, ரொம்ப டேஞ்சரான ஆள். சொறி பிடிக்கும். சிரங்கு பிடிக்கும்!’’  – இந்த பேச்சானது மிகப் பெரிய அறியாமை! நம்மை வாழ்விப்பதே இந்த பூமி தான்! இந்த சொறி,சிரங்கு பிடிக்கும் மண்ணில் இருந்து கிடைக்கும் உணவைத் தான் நீங்களும் உண்கிறீர்கள்! செருப்பு போடாது நடப்பது பூமி என்ற இயற்கையுடன் நமக்குள்ள தொடர்பை நாம் வலுப்படுத்திக் கொள்வது என்பது தான் இயற்கை வாழ்வியல் அறிஞர்களின் நிலைபாடாகும்.

உங்கள் திறமையை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை. உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னது யார்? எங்கள் ஆயர்கள் எங்களுக்கு கண் அசைப்பார்கள். கிறிஸ்தவ ஊழியர்கள், பெந்தகோஸ்தே ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பார்கள்! – ஆக, இதைவிட உங்கள் ஆயர்களை நீங்களே காட்டிக் கொடுக்க முடியாது. ஜனநாயகத்தில் சுய அறிவில்லாமல் மந்தைகளாக மத தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களே நாங்கள் என பிரகடனப்படுத்துகிறீர்கள் பாதிரியார் அவர்களே!

வெறுப்பும், வன்மமும் எதிர்தரப்பில் இருந்தாலும் அதை அன்பாலும்,அறிவாலும் தான் வென்றெடுக்க முடியுமே அல்லாது அதே வெறுப்பையும், வன்மத்தையும் பதிலுக்கு பிரயோகித்தால் மிஞ்சுவது அழிவே! இது ஏதோ முதல் முறையாக இவர் பேசிய பேச்சல்ல, இவர் எப்போதுமே இந்த மாதிரி தான் சர்ச்சைக்குரிய முறையில் பேசுபவர் என உள்ளுர் மக்கள் சொல்கிறார்கள். ஆக, தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்காமல் இந்த பாதிரியார் ஓயமாட்டார் போல!

அன்பையும், சகோதரத்தையும் போதிக்க வேண்டியவர்கள் பகையையும்,வன்மத்தையும் விதைக்கத் துணிந்தால் அதை தமிழக மக்கள் ஒன்றுபட்டு நின்று கட்சி, மத வேறுபாடுகள் இன்றி விலக்கி வைப்பார்கள் என்பதை இந்த சம்பவம் மீண்டும் உறுதிபடுத்திவிட்டது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time