மருந்து தயாரிக்கும் ஐடிபிஎல்லை  ஏற்க தமிழக அரசு தயக்கமா..?

- பீட்டர் துரைராஜ் 

காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, சக்கரை வியாதி ஆகியவற்றுக்கான மருந்துகளை தயாரித்து வந்த தமிழகத்தின் IDPL ஐ – மிக முக்கிய மருந்துகள், மிக மலிவான விலையில் அரசு தயாரிப்பதை தடுக்க தனியார் நிறுவனங்கள் அழுத்தம்தந்ததால் –  பாஜக அரசு முடக்கியுள்ளது. அதை தமிழக அரசு ஏற்று நடத்த அந்த நிறுவனமும், தொழிலாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். தயங்குகிறதா தமிழக அரசு..? என்ன நடந்தது..?

காய்ச்சலைப் போக்கும் பாரசிட்டமால், சீரண கோளாறுகளுக்கு அல்மாஜெல், சர்க்கரை வியாதிக்கு மெட்பார்மிண் போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட  மருந்துகளை, சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் IDPL என்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் உற்பத்தி செய்து வந்தது. அதன் உற்பத்தியை மத்திய அரசு தற்போது முடக்கி வைத்துள்ளது. அதனை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

எம்.ஜி.ஆர். இருந்த ராமாவரம் தோட்டத்தை ஒட்டியுள்ள அடையாறு ஆற்றின் மறுகரையில்,  ஐடிபிஎல் (Indian Drugs & Pharmaceuticals Ltd)  என்ற பொதுத்துறை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஒரே அரசு நிறுவனம் இதுதான். மருந்து உற்பத்தியில் ‘சுய தேவையையும்’ ‘சுயச்சார்பையும்’ எட்ட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு,  மருந்துகளை இது உற்பத்தி செய்து வந்தது. தமிழகத்தில் உள்ள இஎஸ்ஐ  மருத்துவமனைகள், பாண்டிச்சேரி அரசு மருத்துவமனைகள், இந்தியாவில் உள்ள பல ஆரம்ப சுகாதார நிலையங்கள்   இங்கிருந்துதான் மருந்துகளை வாங்கின. இதைத்தவிர டெண்டரில் கலந்துகொண்டும் மருந்துகளை விற்பனை செய்து வந்தது.

ஐடிபிஎல்1961 ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாகும். காமராசர் முதலமைச்சராக இருந்த போது  நிலத்தை தமிழக அரசு அந்த ஆலைக்கு கொடுத்தது.  நோயாளிகளுக்கு மருத்துவமனையில் வைத்து இருக்கும் அலமாரி, கட்டில், சக்கர நாற்காலி போன்றவை முதலில் இங்கு தயாரிக்கப்பட்டன. பிறகு அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் கத்தி உள்ளிட்ட மருத்துவ  உபகரணங்கள் (surgical instruments) உற்பத்தி செய்யப்பட்டன. மாத்திரை, மருந்து உற்பத்தியும் இங்கு நடைபெற்றன. இந்த நிறுவனத்தில் 6000 பேர் வரையில் பணிபுரிந்து இருக்கின்றனர். அங்கு 60 வகையான மாத்திரைகள், மருந்துக்குப்பிகள்(Capsules) உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.

இப்போது இந்த ஆலையில் முப்பத்து இரண்டு தொழிலாளர்களே உள்ளனர்;  அவர்கள் காஷூவல்  தொழிலாளர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்பத்தி நடைபெறவில்லை. ” இந்த ஆலையை மட்டுமின்றி, இது போல இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடந்து வந்த பிற ஐடிபிஎல் ஆலைகளையும் இனி நடத்த முடியாது என்று மத்திய அமைச்சரவை 2016 ல்  முடிவெடுத்தது. மருந்து தயாரிப்பு என்பது மாபெரும் லாபம் தரும் தொழில்! அதை தனியார்வசம் முழுமையாக தந்துவிடுவதே பாஜக அரசின் கொள்கை! இப்போது இந்தஆலையின் வசம் 47 ஏக்கர் நிலம் அதன் உபகரணங்களோடு உள்ளது. அந்த ஆலையின் சொத்துகளையும், நிலங்களையும் விலைக்கு எடுத்துக்கொள்ளுமாறு” என்று ஐடிபில் நிறுவனம் தமிழக அரசின் தொழிற்துறைக்கு 19.4.21 அன்று  கடிதம் எழுதியுள்ளது.

“இந்த ஆலையின்  இயந்திரங்கள் நல்ல நிலையில் உள்ளன. மருந்துகளுக்கு  சந்தை வாய்ப்பு உள்ளது.அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை இங்கு தயாரிக்க முடியும். மக்களுக்கு மலிவான விலையில் மருந்துகளைத்  தரமுடியும். எனவே மத்திய அரசின் கடிதத்தை தமிழக அரசு பரிசீலித்து, ஐடிபிஎல் ஆலையை தமிழக அரசு தொடர்ந்து நடத்த வேண்டும்”  என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின்  ஜுலை 18, ல் நடந்த பொதுக்குழு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. பத்து நாட்களாகியும் தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

இது குறித்து அந்த ஆலையின் தொழிற்சங்க தலைவரான டி.எம்.மூர்த்தியிடம் கேட்டோம் ” தமிழக அரசு காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில்  ஐடிபிஎல் நிறுவனத்திற்கு நிலத்தை ஒதுக்கீடு செய்தது. அங்கு  தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள், திறந்தவெளி அரங்கு, வியாபாரக் கடைகள்  என பல வசதிகள் இருந்தன. சோவியத் யூனியன் நாட்டில் இருந்ததைப் போல ஆலைகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய ஆலைகள் நிறுவப்பட்டன. இப்போது இருக்கும் நந்தம்பாக்கம் காவல்நிலைய  கட்டடமே, சங்க அலுவலகம் செயல்பட்ட இடம்தான்.

இந்த ஆலையில் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. பிறகு அறுபதிற்கும் மேற்பட்ட மாத்திரைகள், மருந்து குப்பிகள்(capsules) உற்பத்தி செய்யப்பட்டன. இங்கு வேலை செய்த நிரந்தர தொழிலாளர்களை விருப்ப ஓய்வில் அனுப்பிவிட்டனர். இப்போது காஷூவல்  தொழிலாளர்களே அங்கு உள்ளனர். இலாப வேட்கை கொண்ட மருந்துக் கம்பெனிகளின் தந்த அழுத்தத்தினால் இங்கு மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

ஐடிபிஎல் ஆலையை தமிழக அரசு  இலாபகரமாக நடத்த முடியும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை இந்த ஆலையில் இருந்து உற்பத்தி செய்ய முடியும். ஆலையில்  உற்பத்தி நடப்பது 6 ஏக்கர் இடத்தில்தான். காலியான நிலத்தை, தேவையற்ற கட்டடங்களை வேறு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம். நிலம் தமிழக அரசுக்குச் சொந்தமானது. இருக்கின்ற தொழிலாளர்களோடு மேலும் சிலரையும் சேர்த்து பழையபடி ஆலையைத்  தொடர்ந்து நடத்த முடியும். இப்போது இருக்கும்  உபகரணங்கள், இயந்திரங்களைக் கொண்டே ஆலையை நடத்த வசதிகள் உள்ளன. தொழில் நுட்ப அறிவு உள்ள தொழிலாளர்கள் இருக்கின்றார்கள்”  என்றார் சங்கத் தலைவராக இருக்கும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளரான டி.எம்.மூர்த்தி.

இந்த ஆலையில் உற்பத்தியில் ஈடுபட்ட உமா மகேஸ்வரியிடம் பேசினோம் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. அப்போது 40 வகையான மருந்துகளை உற்பத்தி செய்ய அனுமதி இருந்தது. மருந்துகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. பாரசிட்டமால், அமாக்சலின், ஆம்பிசிலின் போன்ற மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் மருந்துகளை இங்கு உற்பத்தி செய்யலாம். இருமல் மருந்து கூட இங்கு உற்பத்தி செய்யலாம். நான் 1999 முதல் இங்கு பணியில்  இருக்கிறேன். என்னைப் போல வேலை தெரிந்த 32 பேர் இப்போதும் இருக்கிறோம். தமிழக அரசு விரைவாக இந்த ஆலையை ஏற்று நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, இங்கு உற்பத்தி ஆகும் மருந்துகளை விநியோகம் செய்தாலே, இந்த ஆலை அதன் முழு பயன்பாட்டையும் அடையும். இதன் மூலம் தனியார் மருந்து நிறுவனக்களிடம் அதிக விலை கொடுத்து மருந்து வாங்குவதை தவிர்க்கலாம்! இங்கு உற்பத்தி ஆகும் மருந்துகள் பொதுப் பெயரிலேயே (generic medicine) உற்பத்தி ஆகின்றன. தனியார் மருந்துக் கம்பெனிகளைப் போல, இலாப நோக்கத்தோடு பிராண்ட் பெயரில் உற்பத்தி செய்யப்படுபவை அல்ல.” என்றார்.

ஆலையை இயக்குவதற்கு முதலீடு தேவைப்படுமா என்று கேட்டதற்கு, “2008 ஆம் ஆண்டுதான், இரண்டு கோடி செலவு செய்து  இந்த ஆலையைப்  புதுப்பித்தார்கள். இங்குள்ள தளவாடங்கள் நல்ல நிலைமையில் இருப்பதாக இதன் சொத்துக்களை மதிப்பீடு  செய்த   அறிக்கையில் தெரிவித்தார்கள். மராமத்து வேலை செய்த பிறகு உற்பத்தியைத்  தொடங்கலாம். பெரிதாக முதலீடு தேவைப்படாது” என்றார் உமா மகேஸ்வரி. இவர் அந்த ஆலையில் 21 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாலும், காஷூவல் தொழிலாளியாகவே இருக்கிறார்.

இப்போது ஆலையின் சொத்துகளும், நிலங்களும் ஓரிரு பாதுகாப்பு  ஊழியர்கள் வசமே உள்ளன. தொழிலாளர்களின் அன்றாட கண்காணிப்பும் இல்லை. எனவே ஆலையின் அசையும் சொத்துகள் திருடு போகாமல் இருக்குமா என்று தெரியவில்லை. ஆலையின் நிலங்களிலும் தில்லுமுல்லு நடக்க வாய்ப்புள்ளது.

“ஒரு பெட்டியில் பத்து பாரசிட்டமால் அட்டைகள் இருக்கும். ஒரு அட்டையில் பத்து மாத்திரைகள் இருக்கும். அதன் விலை ஒரு ரூபாய் 49 காசு தான். அதாவது ஒரு மாத்திரையின் விலை கிட்டத்தட்ட 15 காசுதான். காய்ச்சல் வரும் யாருமே காலங்காலமாக எடுத்து வரும் மாத்திரையாக பாரசிட்டமால் உள்ளது. கொரானா தடுப்பூசி போட்டவுடன் இந்த மாத்திரைதான் கொடுக்கிறார்கள். நாம் அன்றாடம் வீடுகளில் புழங்கும் ஒரு மாத்திரையாக பாரசிட்டமால் உள்ளது. மக்களுக்கும் மலிவு விலையில் மாத்திரை கிடைக்கும் வாய்ப்புள்ளது” என்கிறார் உமா மகேஸ்வரி.

வேலை வாய்ப்பை உருவாக்கும், அரசு மருத்துவமனைகளுக்கு  மருந்துகளைத் தயாரிக்கும், எப்போதும் சந்தை இருக்கும் மருந்துத் தொழிலில் ஈடுபடும்  எளிதான வாய்ப்பு தமிழக அரசுக்கு கிட்டியுள்ளது. என்ன செய்யப்போகிறார் தொழில் துறை அமைச்சரான தங்கம் தென்னரசு !இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவாரா..?

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை ஏற்று நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை, மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. அதே சமயம் சென்னையில் உள்ள மருந்து உற்பத்தி ஆலையை தொடர்ந்து நடத்தமுடியாது என்றும் அதனை எடுத்துக்கொள்ளக் கோரியும் ஐடிபிஎல் நிறுவனம் தமிழக அரசை கேட்டுக் கொண்டு்ள்ளது. இந்த விவகாரத்தில் தயக்கத்தை விடுத்து தமிழக அரசு விரைந்து முடிவு எடுத்து மக்கள் நலன் சார்ந்த மருந்து,மாத்திரைகளைத் தயாரிக்கும் பொதுத் துறை நிறுவனத்தை மீட்டு, நடத்துவதை உறுதிபடுத்த வேண்டும்

கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ் 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time