எடப்பாடி  ஊழல்கள் மறைக்கப்படுகிறதா?  வெள்ளை அறிக்கை தருவாரா வேலு?

-ஜீவா கணேஷ்

அ.தி.மு.க ஆட்சியின்போது நெடுஞ்சாலைத் துறையில் எடப்பாடி பழனிசாமி சொல்படி செயல்பட்ட   ஊழல் தலைமைப் பொறியாளர்களைப்  பற்றி  அறம் ஆன்லைனில் எழுதியிருந்தோம். அதனைத் தொடர்ந்து  ஊழல் பெருச்சாளிகளான தலைமைப் பொறியாளர்கள் கீதா, சாந்தி, விஜயா, சென்னையில் பாலப் பணிகளை விரைந்து முடிக்க முனைப்பு காட்டாத சுமதி ஆகியோரை  இந்த அரசு பணியிட மாறுதல் செய்தது பாராட்டக்கூடியதாக இருந்தது! ஊழலற்ற ஆட்சியைப் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.  ஆனால் இந்தத் துறையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் அனைத்தும் அந்த  நம்பிக்கையை சிதைத்துவிட்டது.

ஊழலின் நாற்றம் வெளியேறி விடாமல் பார்க்கும் அமைச்சர்  வேலு

“ஐந்து ஆண்டுகள் ஆட்சியைத்  தக்க வைத்துக் கொண்டதற்கு எடப்பாடி பழனிசாமியின்  திறமை மட்டும் காரணமல்ல, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்  பணிகள், அதில் வந்த பணம் அதிகாரிகளுக்கும், கட்சியினருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்ட விதம் ஆகியவைதான் அவருடைய ஆட்சியை நிலைநிறுத்தியது!” என்று நமது அறம் ஆன்லைன் இதழில் (ஜூன் 23) பதிவு செய்திருந்தோம்.

நெடுஞ்சாலைத்துறையில் கடந்த ஆண்டு  நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்து தவறுகள் நடந்துள்ளனவா என்று கண்டுபிடித்து  ஊழல்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தோடு எ.வ.வேலுவின் உத்தரவுபடி ஜூன் 2-ஆம்  தேதி முதல்  சாலைகளில் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது  எடுக்கப்பட்ட மாதிரிகளின் கலவைகளில் தார் சரியான அளவு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்றும் ஜல்லிக் கற்கள் சரியான தரத்தில் உள்ளனவா என்றும் சோதனை செய்யப்பட்டு, பணிகளில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால்  பில் பணம் வாங்கிய ஒப்பந்தக்காரர்களும் பில் போட்டுக்கொடுத்த பொறியாளர்களும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது.

ஆனால், சாலைகளில் ஆய்வு செய்யவும்,  சோதனை   நடத்தவும்  ஆரம்பித்து ஏறக்குறைய இரண்டு மாதங்களாகவுள்ள நிலையில்  இன்னும் அந்த ஆய்வு அறிக்கைகளை  வெளிப் படுத்தவில்லை; அப்படியானால் ஆய்வு செய்ததன் நோக்கம் தான் என்ன..? தவறுகளுக்குக் காரணமானவர்களான ஒப்பந்ததாரர்களும், பொறியாளர்களும் தண்டிக்கப்படுவார்களா..? மாட்டார்களா..? நடந்து முடிந்த ஆய்வுகளைப் பற்றி அரசு ஏன் அமைதி காக்கிறது?

பழனிசாமியின்  ஒப்பந்தக்காரர்கள் அவ்வளவு யோக்கியமானவர்களா..? இல்லையெனில்,   ‘எந்தத் தவறுகளையும்  வெளியே சொல்ல வேண்டாம்; எடப்பாடி பழனிசாமிக்கு என்ன செய்தோமோ, அதையே உங்களுக்கும் செய்கிறோம்’ என்று பேரம் பேசப்பட்டுவிட்டதா..? எ.வ.வேலு ஏன் அமைதியாகிவிட்டார்.

ஊழலுக்குத்  தண்டனை சும்மா பணியிட மாற்றம் செய்வது மட்டும் தானா..?

பதவி நீக்கம், சிறைச்சாலை ஆகிய  தண்டனைகளைத் தவிர்க்க என்ன பேரம் நடந்துள்ளது..?

நெடுஞ்சாலைத் துறையில்  வேலைகள் நடக்கும்போதே  வேலைகளின் தரத்தை  உறுதி செய்வதற்கு 10 ஆண்டுகளுக்கு முன் தரக்கட்டுப்பாடு சிறப்பு அலகை ஏற்படுத்தியது அப்போதைய தி.மு.க அரசு. “கடந்த தி.மு.க  ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 323 தரக்கட்டுப்பாடு தொடர்பான அரசாணை சாலைகளின் தரம் எப்படி பேணப்பட வேண்டும் என்று விரிவாக விளக்குகிறது. அதன்படி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர்தான்  சாலைகளின் தரத்திற்குப்    பொறுப்பானவர்! தரக்கட்டுப்பாட்டு பணிகள்  நன்கு நடைபெறுகின்றனவா என்று பார்ப்பது  அவருடைய பொறுப்பு. அவருக்குக் கீழே எட்டு தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளர்கள் உள்ளனர்.  உதவி கோட்டப் பொறியாளர்கள், உதவிப்  பொறியாளர்கள் என்று ஒரு பெரிய படையே இருக்கிறது. இவர்கள் செய்தது என்ன?” என்று நாம் கேள்வி எழுப்பியிருந்தோம்.

அ.தி.மு.க ஆட்சியில் இந்தத்  தரக்கட்டுப்பாடு அலகின்  தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டவர்தான் கீதா. சென்ற ஆண்டில் அ.தி.மு.க ஆட்சியில்  நடைபெற்ற  15,000 கோடி ரூபாய்க்கான வேலைகள் தரமாகச் செய்யப்படவில்லை என்பதால்தானே தற்போது  ஆய்வு நடத்தினார்  அமைச்சர் எ.வ.வேலு!  தலைமைப் பொறியாளர்  கீதாவைத்தானே தரம் குறைந்த வேலைகளுக்குப் பொறுப்பாக்க வேண்டும்?

ஆனால், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கீதா ஊழலுக்கு உறுதுணையாக இருந்தார் என்பதை உறுதிபடுத்திக்கொண்டு அமைச்சர் வேலு அவரைப்  பணியிட மாற்றம் மட்டுமே செய்துள்ளார். பல ஆயிரம் கோடி ஊழலுக்குத்  தண்டனை   இவ்வளவு தான் என்றால், ஊழலை ஊக்குவிப்பதாகத்தான் அர்த்தம். ஊழலுக்குத்  தண்டனை பதவி நீக்கம், சிறைச்சாலை என்றால் தான் ஊழல் ஒழிக்கப்படும். இல்லாவிட்டால் ஊழல் வளரும்; ஊழல் என்ற அந்த கள்ளிச் செடியை யாரும் கிள்ளி எறிய முடியாது!

ஏமாற்றம் அளிக்கும் அமைச்சர் ..வேலுவின்  அணுகுமுறைகள்

சுருக்கமாகச் சொன்னால் நமக்குக் கிடைத்திருக்கிற தகவலின்படி கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 75,000 கோடி ரூபாய் மதிப்பில்  பணிகள் நடந்து இருக்கின்றன.  ஜெயலிலிதா ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை  அமைச்சராக இருந்த ஐந்து ஆண்டுகளில் 25,000 கோடிக்கும்  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக நெடுஞ்சாலைத்துறைக்கும் பொறுப்பு வகித்தபோது 50,000 கோடிக்கும் பணிகளைச் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதில் பதினைந்தாயிரம் கோடிக்கும் அதிகமாக  ஊழல் நடந்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறையில் பணி செய்பவர்கள்  சொல்கிறார்கள்.  ஊழலைக்  கண்டுபிடிப்பதற்கு பெரிய ஆய்வுத்  திறமை தேவையில்லை; கைப்புண்ணுக்குக்  கண்ணாடியும்  தேவையில்லை. நெடுஞ்சாலைத்துறையில் யாரை அழைத்து விசாரித்தாலும்  உண்மை தெரியும். குறிப்பாக, இந்தப் பணிகளுக்குப் பொறுப்பான கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின்  தலைமைப்  பொறியாளராக இருந்து  இப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சாந்தி,  தரக்கட்டுப்பாடு பிரிவுக்குத் தலைமை வகித்த  இப்போதைய கிராம சாலைகள் தலைமைப்  பொறியாளர் கீதா ஆகிய இருவருக்கும் ஊழலின் பரிணாமம் முழுவதும் தெரியும்.

நெடுஞ்சாலைத்துறை அழுகிய ஈரல். அது சரியாக வேண்டுமென்றால், பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.  இந்தக்  கேடுகளுக்கு எல்லாம் பொறுப்பான  அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு  பதிவு செய்து தண்டித்தால்தான் மாற்றங்கள் சாத்தியமாகும்! ஆனால் அமைச்சர் எ.வ.வேலுவின்  அணுகுமுறைகளோ ஏமாற்றமாக உள்ளது!

 ஊழல்களை வெளிக்கொண்டு வருவதில்  அக்கரையற்ற துறைச்  செயலாளர்!

பழைய சாலைப் பணிகளை  ஆய்வு  செய்யவேண்டுமென்றால், அந்த அதிகாரிகளுக்கு அரசு முறைப்படி ஆணை வழங்கியிருக்க  வேண்டும். அப்படி ஆணை வழங்கிய பிறகுதான்,அதிகாரிகள் மாநிலம் முழுவதும் சென்று ஆய்வு செய்திருப்பார்கள். அப்படியானால், அந்த ஆய்வு அறிக்கையினை கேட்டுப் பெற வேண்டியது அரசுதான். அதிகாரிகள் தங்கள் ஆய்வின் முடிவுகளை அரசுக்குக்  குறித்த காலத்தில் அனுப்பாமல் இருக்க முடியாது!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்று முடிந்துள்ள சாலைகள் தரமாகப் போடப்பட்டதா என்கிற விவரத்தை  வெளிக் கொண்டு வருவதில் நெடுஞ்சாலைத்துறை அரசு செயலாளர் தீரஜ்குமாருக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத்  தெரியவில்லை. அக்கறையின்றி இருக்கிற அரசு செயலாளரை கண்டிக்கும் பொறுப்பு தலைமைச் செயலாளருக்கு இருக்கிறது. நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த தலைமைச் செயலாளர் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் போல தானும் அமைதி காக்க கூடாது.

நெடுஞ்சாலைத்  துறை  கொள்ளை தொடர்பாக வெள்ளை அறிக்கை தருவாரா அமைச்சர் வேலு?

எடப்பாடி ஆட்சியில் நடைபெற்ற ஊழலை  நாட்டு மக்களுக்கு சொல்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலினும்  அமைச்சர் வேலுவும் உண்மையிலேயே விரும்பினால் அந்தப் பணி மிகவும் எளிதானது. நடந்த ஆய்வுகள் தெரிவிக்கும் உண்மைகளையும் ,  ஒப்பந்த விதிமீறல்களையும் தொகுத்து வெள்ளை அறிக்கை தந்தால் போதுமானது. ஒன்றை வெளியிடுவதுதான் இந்த ஆட்சி நாட்டு மக்களுக்கு செய்கிற நல்ல பணி. ஆகவே கடந்த பத்து ஆண்டுகளில் நெடுஞ்சாலைத்  துறையில் என்ன  நடந்தது, எவ்வளவு கொள்ளை அடிக்கப்பட்டது என்று  ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா அமைச்சர் வேலு?

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time