சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்திலிருந்து ஜூலை 23 அன்று (IND-TN-02-MM-2029) விசைப் படகில் ராயபுரத்தை சேர்ந்த படகு ஓட்டுநர் ரகு, திருச்சினாங்குப்பத்தை சேர்ந்த லெட்சுமணன், சிவகுமார், பாபு, பார்த்தி ஆகியோரும் திருவெற்றியூர் குப்பத்தை சேர்ந்த கண்ணன், தேசப்பன், முருகன், ரகு ஆகியோரும் லெட்சுமிபுரத்தை சேர்ந்த தேசப்பன் உள்ளிட்ட 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். ஆகஸ்ட் 7 ந்தேதி கரைதிரும்பியிருக்க வேண்டியவர்கள் இன்று வரை திரும்பவில்லை. அவர்கள் 10 நாட்களுக்கான உணவை மட்டுமே கொண்டு சென்றனர்.அவர்களை ஜூலை 28 முதல் தொடர்புகொள்ள முடியவில்லை.
சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆகஸ்ட் 7ம் தேதி மீன் வளத்துறை இயக்குனரிடம் மனு அளித்தனர். அடுத்தநாள் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர். அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தி காணாமல் போனவர்களை மீட்க கோரிக்கை வைத்தனர். ஆனால் அவரோ பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 10000 ரூபாய் வழங்கி அனுப்பிவிட்டார். காணாமல் போனவர்களை கடலோர காவல்படை தேடுவதற்கு ஆவண செய்வதாக கூறினார்.
இன்று வரை ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காசிமேடு உதவி இயக்குநர் அலுவலகம் சென்று கண்ணீருடன் திரும்புகின்றனர். காணாமல் போனவர்கள் உண்மை நிலை என்ன? என்பது ஐம்பது நாட்களாகியும் தெரியவில்லை.
தங்கள் குடும்பத்தின் நேசத்திற்குரிய கணவன், மகன், தந்தை என்பதான நெருக்கமான உறவுகளை இழந்து இந்த மீனவகுடும்பங்கள் படும் துன்பம் இன்று வரை ஆட்சியாளர்களின் மனதை உலுக்கவில்லை. இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த வெளிப்படையான எந்த தகவலும் இல்லை.
எந்த அரசியல் கட்சி தலைர்களும் இது வரை இதில் அக்கறை காட்டவில்லை! சோஷலிஸ மீன் தொழிலாளர் சங்கம் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு பத்திரிக்கைகளுக்கு அறிக்கையும் வெளியிட்டது. திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த தமிழ் மக்கள் உரிமை கூட்டியக்கம் இம் மக்களை சந்தித்து பேசினார்கள். இதன்படி ஆகஸ்ட்ட 8ம் தேதி மாலை காசிமேடு மீன்வளத்துறை அலுவலகத்துக்கு மீனவர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மனுவும் அளிக்கப்பட்டது. அவர்களும் வழக்கம்போல கடலோர காவல்படையை வைத்து தேடிகொண்டிருப்பதாக கூறினார்கள். ஆனால், சட்டப்படி கடலோர காவல்படை 60 கடல்மைல்களுக்கு அப்பல் சென்று தேடமுடியாது இந்திய கடற்படைதான் இந்த பணியைச் செய்ய முடியும்.
Also read
மீனவர்களால் மத்திய அரசுக்கு ரூபாய் 30000 கோடி அந்நிய செலவாணி ஆண்டுதோறும் கிடைக்கிறது சென்ற ஆண்டு தமிழக அரசுக்கு மட்டுமே 4000 கோடி ரூபாய் அநிநிய செலவாணி கிடைத்தது. மீனவர்களால் இந்திய அரசுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஜி டி பியாக கிடைக்கிறது.
அப்படியிருக்கும்போது ஏன், இது வரை இந்தியக் கடற்படையை பயன்படுத்தி காணாமல் போன மீனவர்களை தேடவில்லை?
செயற்கை கோளை பயன்படுத்தி மீனவர்களை கண்டுபிடிக்கலாமே.
காணாமல் போனவர்கள் தலை நகர் சென்னையை சேர்ந்த மீனவர்களாயிருந்துமே கூட,அமைச்சரிடம் முறையிட்டுமே கூட எந்த நடவடிக்கையும் இல்லை என்றால்,தமிழகத்தின் பிற பகுதிகளை சேர்ந்தவர்களின் நிலைமையை சொல்லவும் வேண்டுமா?
மீனவ மீட்பு பணியில் இந்திய விமானபடையை ஈடுபடுத்திருக்கலாம். இது வரை எந்த நடவடக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்பதுதான் மீனவர்களின் ஆதங்கமாக உள்ளது. ஏழை மீனவர்களின் உயிருக்கு எந்த மதிப்புமே கிடையாதா? மீனவர்கள் என்றால் நாதியற்றவர்கள் என்று அரசுகள் நினைக்கின்றனவா? மத்திய, மாநில அரசுகள் இனியாவது தூக்கம் கலையுமா? மீனவர்களின் துயரம் களையுமா?
Leave a Reply