தென்னக  ரயில்வே வேலைகளில் தமிழர்கள் புறக்கணிப்பா? வெளியார் ஆக்கிரமிப்பா..?

-சாவித்திரி கண்ணன்

தமிழக ரயில்வே வேலைகளில் பிற மாநிலத்தவர் அதிகமான இடங்களை ஆக்கிரமித்து வருகிறார்கள் என தமிழக கட்சிகள் அவ்வப்போது சூடாக அறிக்கைகள் விட்டு போராட்டம் நடத்தி வருகின்றன! தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பணி இடங்கள்  95%  வெளி மாநிலத்தரால் ஆக்கிரமிக்கப்படுவதால், தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது.. .! இதற்கு பின்னணியில் பாஜக அரசின் சதி இருக்கிறதா..?

இன்று, நேற்றல்ல, கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகவே தென்னக ரயில்வே பணியிடங்களை நாம் அப்படியே லம்பாக வட இந்தியர்களிடம் பறி கொடுத்து வருவதான குற்றச்சாட்டுகளும், போராட்டங்களும் இடைவிடாது நடந்து கொண்டுள்ளன!

சமீபத்தில் கூட பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,

”தெற்கு ரயில்வேயில் முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர் பணிக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெறும் 12% பணிகள் மட்டுமே கிடைத்துள்ளன!

மொத்தமுள்ள 80 பணியிடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதல் 50 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெறும் 5 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மொத்த பணியிடங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் 12% இடங்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள 88% இடங்களை பிற மாநிலத்தவர்கள் பறித்துக் கொண்டுள்ளனர். அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தெற்கு ரயில்வேயின் செயல்பாட்டு எல்லையில் உள்ள கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் கூட, பெரும்பான்மையானவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டுக்கான ரயில்வே பணியிடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்கு தாரை வார்க்கப்படுவது இயற்கை நீதிக்கு எதிரானதாகும்.”  என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இதே போன்ற ஒரு பிரச்னை பொன்மலை ரயில்வே பணிமனைக்கு  2020 பிப்ரவரியில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் 541 பேர் பணியில் சேர்ந்தனர் என்றும், 12 பேர்தான்( சுமார் 2% தான்) தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதாகவும் கூறி, போராட்டங்கள் வெடித்தது! பொன்மலையில் மார்க்சிஸ்ட் கட்சி ,திமுக, நாம் தமிழர், தமிழ் தேசிய பேரியக்கம் உட்பட  பல இயக்கத்தினர் அப்போது போராட்டங்கள் நடத்தினர்.

இது ஏதோ மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டா..? அல்லது உண்மை தானா..என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது.

இந்த குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மையானது என்பதை அறிய மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் அளித்த பதில்:

2020ல் நியமனங்கள் செய்யப்பட்ட டெக்னீசியன், லோகோ பைலட், ஜீனியர் இனிஜினியர் உள்ளிட்ட டெக்னீசியன் பதவிகளில் தெற்கு ரயில்வேயில் 2550 பேர் நியமனம் பெற்றனர். இதில்

மொழி வாரியாக தேர்வு எழுதி நியமனமானவர்கள்

இந்தியில்                                 – 1686 பேர்.

மலையாளம்                         – 221

ஆங்கிலம்                              –    219

வங்கமொழியில்               –    143

தமிழில்                                     – 139

ஒரியா                                         – 76

தெலுங்கு                                    – 57

மராத்தி                                        – 6

குஜராத்தி                                    – 1

கொங்கணி                                 – 1

அசாம்                                           –  1

அதாவது,  2550 பேர் நியமனம்பெற்றதில் 1686 பேர்  இந்தி, 864 பேர் மற்ற மொழி  பேசுபவர். 66 சதம் இந்தி. 44 சதம் மற்றவர். தமிழர்கள் சுமார் ஐந்து சதம் தான்!

அடுத்ததாக உதவி லோக்கோபைலட் 908 பேர் தெற்குரயில்வேயில் நியமனம் பெற்றனர்.

இவர்களில் இந்தியில் எழுதியவர்கள் 90 பேர் தான். அதாவது, 10 சதம்.

ஆங்கிலம்                  -291

மலயாளம்                -176

தெலுங்கு                     -18

தமிழில் –            333 பேர்.  அதாவது 33 சதம்பேர்.

இந்தி 10 சதம் தான்! மற்றவர் 90 சதம்

அடுத்ததாக ஜூனியர் எஞ்சினியர்    1180 பேர் நியமனம் பெற்றவர்களில்

இந்தி                        -160             (13%)

ஆங்கிலம்              – 298

மலயாளம்              315            (26%)

தமிழில்                268       22%

தெலுங்கு             120

ஒரியா                            11

வங்கம்                           -4

மராத்தி                          2

குஜராத்தி                 1

கன்னடம்                   1

இந்த தகவல்களைக் கொண்டு நாம் பார்க்கும் போது, 13 சதம் பேர் தான் இந்திக்காரர்கள்! 87 சதம் மற்றவர்கள்!

அதே சமயம் ஆங்கிலத்தில் எல்லா மொழிக்காரர்களும் கலந்திருப்பர். அதில் பெரும்பாலும் தென்னிந்தியர்களாயிருக்கவே வாய்ப்புள்ளது.

ஆக, இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது;

#  டெக்னீசியனில் இந்திக்காரர்கள் 66 சதமும், லோகோ பைலட்டில்  10 சதமும், ஜூனியர் எஞ்சினீயரில் 13 சதமும் தேர்வுபெற்றுள்ளனர்

#  அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களும் வெவ்வேறு விகிதாச்சாரங்களில் தேர்வு பெற்றுள்ளனர்.

#  முறையாக,சுயமாக முயன்று பயிற்சி எடுத்து தமிழில் தேர்வு எழுதியவர்களும் தேர்வடைந்துள்ளனர்.

இது குறித்து   தட்சிண ரயில்வே எம்பிளாயிஸ் யூனியன் தொழிற்சங்க தலைவர் தோழர்.  த.இளங்கோவன், (DREU) அவர்களிடம் பேசிய போது அவர் சொன்னவை;

”வேலையில்லா பிரச்னை முன்னெப்போதும் இல்லாத அளவு இருக்கையில்  தமிழர்களின் கவலை புரிந்துகொள்ளக்கூடியதே.

எல்லா இடங்களிலும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் மிகப்பெரும்பான்மையாக சேர்ந்துள்ளனர் என்பது சேகரிக்கப்பட்ட விவரங்களில் இருந்து தெரிகிறது.பெரும்பாலும் வட இந்தியர்கள்.ராஜஸ்தான் உ.பி.வங்கம்,பிஹார் ஆகிய மாநிலத்தவர் அதிகம்.

அதே சமயம் குரூப் டி தேர்வில் மலையாளிகளே அதிகம் வந்தனர். அடுத்ததே வட இந்தியர்கள்.

தேர்வில் ஊழல் என்று 90 சதம் சொல்ல முடியாது. அப்படியென்றால், மலையாளிகள் வருவது எப்படி? ஜுனியர் இஞ்ஜினியர் தேர்வில் தமிழர்கள் வருவது எப்படி?

10.வடமாநிலத்தவர் பெரும்பாலும் எஸ்.சி, எஸ்.டி காலியிடங்களை குறி வைக்கின்றனர்.எஸ்சி 15 சதம் எஸ்டி 7.5 சதம் காலியிடங்கள் உள்ளன.மொத்தம் 22.5 சதம் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். மற்ற இடங்களுக்கும் அவர்கள் வந்தாலும், இந்த காலியிடங்களின் பெரும்பாலானவற்றை அவர்களே பெறுகின்றனர் என்பது  நமது ஆய்வில் தெரிய வருகிறது.

இதற்கு நடைமுறை சார்ந்த சில காரணங்கள் உள்ளன;

தமிழில் தேர்வு எழுத அனுமதி உண்டு. ஆனால் தமிழில் புத்தகங்களும் கிடையாது. தமிழில் தேர்வுக்கு தயாராக்கும் பயிற்சி மையங்களும் கிடையாது. எந்த ஒரு தேர்வும் கல்வித்தகுதி இருந்தாலும், பயிற்சி இல்லாமல் வெற்றி பெறமுடியாது.சுயமாக பயிற்சி எடுத்துக்கொள்ளும் திறமைசாலிகள் தான் வென்றுதான் இருக்கிறார்கள்.தமிழக இளைஞர்களிடம் திறமைக்கு வேலை கிடைக்காது என்றும் லஞ்சம் மூலமே வேலை கிடைக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இதனால், அலட்சியப்படுத்துகின்றனர். முயற்சியைத் தவிர்க்கின்றனர்.

பிற மாநிலத்தவர் தேர்வு எழுத எடுத்துக்கொள்ளும் முயற்சியும்,பயிற்சியும்  தமிழர்களிடம்  இல்லை.2013 குரூப்-டி தேர்வு கணக்குப்படி தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பித்தவர்களில் 30 சதம் பேரே தேர்வு எழுத வந்தனர். முயற்சி எடுக்கும்போது தேர்வு பெறுகின்றனர்.வட இந்தியாவிலும் கேரளத்திலும் நிறைய பயிற்சி மையங்கள் உள்ளன. வட மாநிலத்தவர் இந்தியில் தேர்வுக்கு பயிற்சி பெற்று இந்தியில் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் 36 வகை பழங்குடியினர்கள் உள்ளனர்.இவர்களுக்கு சாதி சான்றிதழ் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. பெரும்பாலும் சான்றிதழ் கிடைப்பதே இல்லை. தமிழகத்தை ஆண்ட எந்த ஆண்ட  கட்சியும், ஆளும் கட்சியும்  இதில் மனம் இரங்கவில்லை. இதனால் 7.5 சதம் காலி இடங்களை சுளையாக மீனாக்களும், மலையாளிகளும் தட்டிச்செல்கின்றனர். இது யார் தவறு..?

தேர்வுக்கு விண்ணப்பங்கள் அகில இந்திய அளவில் கோரப்பட்டாலும் விண்ணப்பதாரர்கள் ஒரு ரயில்வேக்குதான் விண்ணப்பிக்கமுடியும்.தெற்கு ரயில்வேக்கு விண்ணப்பிப்பவர் வேறு ரயில்வேக்கு விண்ணப்பிக்க முடியாது.தெற்கு ரயில்வேக்கு விண்ணப்பிப்பவர் ஆங்கிலம் இந்தி யுடன் தென் மாநில மொழிகள் எதிலும் தேர்வு எழுதலாம்.எந்த மொழியிலும் மொழித்தேர்வு கிடையாது.

ஒருவர் எழுதிய விடைத்தாளை மறுபடியும் பார்க்கமுடியும்.சரியான விடைத்தாளையும் பார்க்கமுடியும்.கம்ப்யூட்டரே மதிப்பெண் போடும்.பிறகு normalaitsation என்ற முறையில் அதுவே ஒவ்வொருவரின் மதிப்பெண்ணையும் கணக்கிடும்.மனித தலையீடு எதுவும் கிடையாது.

போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கை 90 சதம் மத்திய மாநில அரசு  வேலைகளில் தமிழர்களுக்கே ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பது!  மத்திய அரசு வேலைகளுக்கான  இட ஒதுக்கீட்டில்  மாநில அரசு உத்தரவு போடமுடியாது. மாநில  அரசு வேலைகளில் மத்திய அரசும் சட்டம் போட்டு இட ஒதுக்கீடு செய்யமுடியாது.

இந்திய அரசியல் நிர்ணய சட்டம் இதனை தடுக்கிறது.

அதனால், மத்திய அரசோ, மாநில அரசோ அரசு வேலையில் மண்ணின் மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய முடியாது.

பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இதனை வலியுறுத்துகின்றன.

இதுவரை எந்த மாநில அரசும் மத்திய அரசு வேலையிலோ மாநில அரசு மண்ணின் மைந்தர்களுக்கே வேலை என எந்த இட ஒதுக்கீட்டு சட்டமும் இயற்றவில்லை.

1968ல்  மகாராஷ்ட்ரா,  1986ல் கன்னடம்,  1995ல் குஜராத், 1999ல் மேற்கு வங்கம், 2007ல் உத்தராகண்ட், 2010ல் மத்திய பிரதேசம், 2015ல்சட்டீஸ்கர்,  2017ல் ஆந்திரா, தெலங்கானா கோவா,ஜார்க்கண்ட் ..என்று சில மாநில அரசுகள் சட்டம் இயற்றியதாக பலர் சொல்வதில் உண்மையில்லை, பொய் தகவலாகும்!

மண்ணின் மக்களுக்கே அரசு வேலை  என்பதை சட்டமாக்கிய மாநிலங்கள்  இந்தியாவில் எதுவுமே இல்லை!

எனவே,  தமிழகத்திலும் அரசு வேலையிலோ, தனியார் வேலையிலோ இட ஒதுக்கீட்டுக்கு எந்த சட்டமுமில்லை. மேற்கு வங்கம்,கேரளா,உத்தர பிரதேசம் எங்கும் எத்துறையிலும் இட ஒதுக்கீட்டுக்கு எந்த சட்டமுமில்லை.” என்றார் தோழர்.இளங்கோவன் உறுதியுடன்!

ஆக, இதில் மத்திய பாஜக அரசு சதி உள்ளது என்ற குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கே வரமுடிகிறது.

ஆனால், நமது தமிழக தொழில் அமைச்சர் தங்கம் தென்னரசு தி இந்து பத்திரிகைக்கு                            ( 28.7.2021)தந்த பேட்டியில் தமிழக தொழில் குழுமங்களிடம் 75 சதவிகித வேலைவாய்ப்பை தமிழக இளைஞர்களுக்கு தரச் சொல்வோம். அதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என்றுள்ளார்.

இது எல்லா மாநில அரசியல்வாதிகளும் சொல்வது தான்! ஆனால், எந்த மாநிலத்திலும் சாத்தியப்படவில்லை. அதற்கு சட்டம் இடம் தரவில்லை என்பது பல நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.

தொழில்அதிபர்கள் சங்கமான அஸோசம் பொதுசெயலாளர் டி.எஸ் ராவத் இவ்வாறு கூறுகிறார்:

”வேலைகளில் இட ஒதுக்கீடு என்ற அறிவிப்புகள் எல்லாம் அரசியல் பேச்சுகள். நடைமுறை சாத்தியமற்றவை. ஒரு மாநிலத்தில் முதலீடு செய்யும் கம்பெனிகள், நல்ல லாபத்தை உறுதி செய்ய திறமையின் அடிப்படையில் வேலைக்கு ஆள் எடுக்கின்றன. சாதி மதம் பார்ப்பதில்லை,  எந்த மாநிலத்தவர் என்றும் பார்ப்பதில்லை”

ஆக, தொழிற்சாலைகளுக்கு தேவை, திறமையான தொழிலாளர்கள். அவர்கள் எந்த மொழி பேசுபவர்கள் என்று அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களை நிர்பந்தித்தால் அவர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லவே வாய்ப்புகள் அதிகம். ஆகவே, நாம் உழைக்கும், திறமையான  இளைஞர்களை தயார்படுத்த வேண்டும். அந்தந்த தொழிலுக்கான புத்தகங்களை தமிழில் கொண்டு வந்து தேர்வு எழுத ஊக்குவிக்க வேண்டும். அதற்கான பயிற்சி மையங்களை ஏற்படுத்த வேண்டும். தகுதியான இளைஞர்களை தயார் செய்யத் தவறிவிட்டு, புலம்புவதும், போராடுவதும் வீணாகத் தான் போகும்!  அத்துடன் டாஸ்மாக் கலாச்சாரம் – மது அடிமைத்தனம் – முடிவுக்கு கொண்டு வரப்படுவதும் முக்கியம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time