அசாம் –  மிசோரம் எல்லை மோதல்! பகை அரசியலில் பாஜக!

- ச.அருணாசலம்

சுதந்திர  இந்தியாவில் எழுபதாண்டுகளுக்கும் மேலாக இரு மாநில எல்லை முடிவிலா வன்மமாகத் தொடர்கிறது! ”எங்கள் பகுதிக்குள் ஊடுருவாதே.. நிலத்தை அபகரிக்காதே..” என மிசோராம் மக்கள் கொந்தளிக்கின்றனர். இந்திய-பாகிஸ்தான் எல்லை மோதல் போல, அஸ்ஸாம் , மிசோரம் அண்டை மாநிலங்கள் என்பது மாறி, அந்நிய நாடாக அடித்துக் கொண்டனர்!  மோதலில் அசாம் போலீசார் ஆறு பேர் உயிரிழப்பு, 50க்குமேற்பட்ட காவலர்கள் படுகாயம்!  ஏன் இந்த மோதல்? என்ன காரணம்?

அசாம் மற்றும் மிசோரம் இடையே 165 கி.மீ நீள எல்லை உள்ளது. கோலாசிப், மாமித் மற்றும் அய்சுவால் ஆகிய மூன்று மிசோரம் மாவட்டங்கள் ! அசாமின் கச்சார்,ஹைகண்டி மற்றும் கறீம்கஞ்ச் மாவட்டங்களை ஒட்டியுள்ளது.

அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களிடையில் உள்ள  எல்லை பிரச்சினை தான் முற்றி,வலுத்து இத்தகைய மோதல் வரை வளர்ந்துள்ளது. அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவும், மிசோரம்மாநில முதல்வர்  ஜொரந்தாம்காவும்  ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றங்கூறுகின்றனர்.

உண்மை நிலவரம் என்ன? என்னதான்  பிரச்சினை?

அசாம் மாநிலத்திற்கு அதனுடைய அண்டை மாநிலங்களான நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர்  ஆகிய மாநிலங்களுடன் எல்லை தாவா (  boundary disputes)  ஆரம்ப முதலே இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இம்மாநிலங்கள் கிரேட்டர் அசாம் ப்ராவின்ஸ் என்றழைக்கப்பட்ட  பிரிவுபடாத அசாம் மாநிலத்திலிருந்து சுதந்திரத்திற்குப் பின்னர் பிரித்து ஏற்படுத்தப்பட்ட பிரதேசங்கள் (மிசோரம் ,நாகாலந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்கள்) என்பதுதான்.

நாகாலாந்து மாநிலத்திற்கும் அசாமிற்குமிடையே உள்ள எல்லை தாவா பெருமளவு மோதலையும், உயிர்சேதத்தையும் முன்பு ஏற்படுத்தியது, அவை ஓரளவு தீர்க்கப்பட்டு இன்று பதற்றம் தணிந்துள்ளது.

ஆனால், அசாம் – மிசோரம் பிரச்சினை இப்பொழுது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வெளியான இரண்டு  அறிவிப்பாணைகளே (Notifications)   இதன் மூல காரணம் எனலாம். அவை 1875ம் ஆண்டு வெளியான ஆணை, மற்றொன்று 1933ம் ஆண்டு வெளியான ஆணை.

1875ம் ஆண்டு வெளியான அறிவிப்பாணை யை மிசோ இன மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர், ஏனெனில் ,மிசோ மக்கள் தலைவர்களை ( Mizo Tribal Chiefs) கலந்து சம்மதம் பெற்ற பின்னரே 1875 ஆண்டு  ஆணை வெளியிடப்பட்டது. அதன்படி லுஷாய் மலைப்பிராந்தியத்திலிருந்து (இன்றைய மிசோரம்)  கச்சார் சமவெப்பகுதியை-இன்றைய அசாம் பிரதேசம்- பிரித்து இவ்வாணை  அறிவித்தது.  மேலும் இவ்வாணை 1873ம் ஆண்டு ஏற்பட்ட வங்காளத்தின் கிழக்கு எல்லை ஒழுங்கமைப்பு -Bengal  Eastern Frontier Regulation of 1873- இன் அடிப்படையில் ஏற்பட்ட ஆணை !

இதன்மூலம் லுஷாய் மலைப்பகுதி (மிசோரம்) செல்வதற்கே அனுமதி INNER LINE PERMIT  வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அது இன்றும் தொடர்கிறது. ஏன் தொடர வேண்டும் எனத் தெரியவில்லை.ஆனால்,’’இப்படி ஒரு எல்லை கோடோ,எல்லை தாண்டும் அனுமதியோஒன்றுமில்லை.அஸ்ஸாம் வட கிழக்கு மாகாணங்களின் நுழைவு வாயில்! அப்படி இருக்க உள் நாட்டு எல்லை கோடுகள் எதற்கு..?’’ என்கிறார் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.

ஆனால் 1933ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அசாம் மாநிலத்தை மொழி மற்றும் கலாச்சாரம்,பழங்குடி வசிப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்டங்களை (அசாமில்) பிரித்தது.இந்த பிரிவு புது மாவட்ட எல்லைகளை , லுஷாய் மலைப்பிரதேசம்,கச்சார் சமவெளி மற்றும் மணிப்பூர் இடையே ஏற்படுத்தியது!

இந்தப்பிரிவினையை மிசோ மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களை கலந்து ஆலோசிக்காமல் நடந்த இந்த வரையறுப்பை, ஆணையை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை.தங்கள் நிலங்கள் பறிபோனதாக கருதுகின்றனர். ஆனால், அசாம் மாநிலமோ இதை ஏற்றுக்கொண்டுள்ளது.

மிசோரம் மாநிலம், 1933ம் ஆண்டு ஏற்படுத்தபட்ட எல்லைகளை அடிப்படையாகக் கொண்டே  1972ல் முதலில் யூனியன் பிரதேசமாகவும் பின்னர் 1986ல் மாநிலமாகவும் மாற்றப்பட்டது.

அன்றுமுதல் தங்களிடமிருந்து  எடுக்கப்பட்ட பகுதிகளை திருப்பியெடுக்க மிசோரம் மாநில மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், அசாம் மாநிலமோ குறிப்பாக இன்றைய முதல்வர் சர்மா ,” எங்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிதான் மிசோரம், அந்த எல்லைகளை மீறக்கூடாது” என்று கறாராக பேரினவாதம் செய்கிறார். இதுவும் பா ஜ  கட்சியின்  வெறுப்பின அரசியலும், மத அடிப்படையிலான அரசியலும் பிரச்சினையை மேலும் தூண்டிவிடுவதாகவே உள்ளது.

மிசோராம் மக்கள் தாங்கள் பதிக்குள் அஸ்ஸாம் வழியாக வங்கதேச அகதிகள் சட்டவிரோதமாக ஊடுருவுகிறார்கள் என கொந்தளிக்கிறார்கள். தாங்கள் நீண்ட நெடுங்காலமாக பயிர்ர் வளர்த்து பேணி வந்த நிலப்பரப்பை அஸ்ஸாம் சொந்தம் கொண்டாடுகிறது பெரிய அண்ணன் தோரணையில்! என்கிறார்கள்!

பிரச்சினையை சுமுகமாக தீர்க்க வேண்டிய இடத்தில் உள்ள ஒன்றிய அரசு என்ன செய்கிறது? முளையிலேயே கிள்ளிவிடாமல் பிரச்சினையை முற்றவிட்டது ஏன்?

வடக்கு வளாகத்தில் (நார்த் பிளாக்) கோலோச்சும் உள்துறை அமைச்சகமும் அதன் தலைமை ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் அமீத் ஷாவும் தூங்கிக் கொண்டிருந்தனரா..? என்ற கேள்வி அனைத்து மட்டங்களிலும் இன்று ஒலிக்கிறது!

இந்நிகழ்வு நடப்பதற்கு ஒருநாள் முன்பாகத்தான் வட கிழக்கு மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமீத் ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரச்சினையின் ஆழமும்,வீரியமும் உள்துறை அமைச்சகத்தின் கவனத்தில் படவில்லையெனில்,அந்த பேச்சுவார்த்தைகளின் லட்சணம் எப்படிப்பட்டது. உள்துறை அமைச்சரின் யோக்கியதை என்ன எனப் புரிந்து கொள்ளலாம்!

அதுவும் வடகிழக்கு வளர்ச்சி ஆணையம் (NorthEast Development Agency NEDA)   என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதை பா ஜ க வின் துணை அமைப்பாக பாவித்து அதன் ஒருங்கணைப்பாளராக ஹிமந்தா சர்மா இருந்த போதும் ஒற்றுமையும், இணக்கமும் வளர்க்காமல் பகையுணர்வும், மோதலும் வளரவே துணை புரிகிறார்!  இந்த அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் பா ஜ க வை சேர்ந்தவர்கள் என்பதுதான் இதில் வினோதமான விஷயம். மோதலும், பதற்றமும் வளரவிட்டதும், அதை தீர்க்க நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கைமீறி போகவிட்டதும் யார்குற்றம்?

இந்த துப்பாக்கிச்சூடும் உயிர்ச்சேதமும் ஒன்றிய அரசின், உள்துறை அமைச்சகத்தின்  இயலாமையை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

ஜூலை 24 ந்தேதி , ஷில்லாங் நகரில் அமீத் ஷா , ‘ நரேந்திர மோடி தலைமையிலான அரசு வடகிழக்கு மாநிலங்களுக்கிடையிலான எல்லை பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வைப்பதில் முனைந்து செயல்படுகிறது. ‘ என்று பறைசாற்றினார் . அப்பொழுது அவருடன் ஹிமந்தா பிஸ்வா சர்மா(அசாம் முதல்வர்) மற்றும் ஜொரந்தாங்கா (மிசோரம் மாநில முதல்வர்) ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சொல்லி 48 மணி நேரத்திற்குள் இந்த பயங்கர மோதல் கைகலப்பு, உயிர் சேதம் நிகழ்ந்துள்ளது எதைக் காட்டுகிறது?

இந்த இரு மாநில முதல்வர்களுடனான சந்திப்பிற்கு பின்பும் அமீத் ஷாவால் இம்மோதலை தவிர்க்க முடியவில்லை என்றால், இவ்விரு முதல்வர்களும் வடகிழக்கு வளர்ச்சி ஆணையத்தில் அங்கத்தினர்களாக இருந்த போதும், பிரச்சினை மோதலாக வெடிக்கிறதென்றால், அது, அமீத்ஷாவின் கையாலாகாத்தனத்தை மட்டும் காட்டவில்லை, மாறாக, அமீத் ஷா மற்றும் மோடி அரசின் கவனமெல்லாம் கட்சியின் பலத்தைப் பெருக்குவதிலும், ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதிலும்தான் இருக்கிறதேயொழிய, வட கிழக்கு மாநிலங்களிடையே நல்லிணக்கத்தை விதைப்பதிலும், ஒற்றுமையையும் வளர்ப்பதிலும், நிர்வாகத்திறனை மேம்படுத்துவதிலும் இல்லை என்பதையே காட்டுகிறது.

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time