டி.ஜி.பி அறிவிப்பு நடைமுறைக்கு வருமா..? ஸ்டண்டா..?

-சாவித்திரி கண்ணன்

தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக காவலர்களுக்கு வாராந்திர விடுமுறை அறிவித்துள்ளார். இப்படி ஒரு உத்தரவை ஒரு டிஜிபி தன்னிச்சையாக போட முடியுமா..? போட்டாலும் அது நடைமுறைக்கு வருமா..? என காவல்துறையிலேயே பலர் சந்தேகிக்கிறார்கள்..? வாராந்திர விடுமுறை என்பது மிக அவசியமானது. தேவையானது. ஆனால், அதை ஒரு முதலமைச்சர் மட்டுமே முடிவு எடுத்து சொல்ல முடியும். விளம்பர வெளிச்சத்திற்காக ஒரு டிஜிபி வரம்பு மீறி செயல்படுகிறாரோ..?

ஏனென்றால், காவலர்களுக்கு வாராந்திர விடுமுறை வழங்க வேண்டும் என்பது பல்லாண்டுகால கோரிக்கை. இது தொடர்பாக நீதிமன்றமே பரிசீலிக்க சொல்லியும் அரசு அசைந்து கொடுக்காமல் உள்ளது. சென்ற ஆட்சியின் போதும் அப்போதைய டிஜிபி ராஜேஸ்தாஸ் அவர்களும் இது தொடர்பாக விரிவான ஆய்வுகளும், ஆலோசனைகளும் நடத்தி அரசிடம் கோரிக்கை வைத்தார். பிறகு, அவரும் தன்னிச்சையாக காவலர்களுக்கு வாராத்திற்கு ஒரு நாள் விடுமுறை என 2019 ல் அறிவித்தார். அது, இன்று வரை அமலாகவில்லை.

இங்கே காவலர்கள் என்பவர்கள் ஆட்சியாளர்களின் அடிமைகள். காவல்துறை என்பது ஆட்சியாளர்களின் ஏவல் துறை அவ்வளவே! இந்த மனநிலையில் இருந்து கேரள அரசாங்கம் மட்டுமே விடுபட்டுள்ளது!

1861 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் காவலர் சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தில் காவல்துறை பணியில் இருப்பவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதாகத்தான் அறியப்படுவார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.  அதாவது குறிப்பிட்ட வேலை நேரம் என்ற வரையறை கிடையாது. அத்துடன் விடுமுறை நாளும் கிடையாது! இதைத் தான் இன்று வரை சுதந்திர இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும் அச்சு பிறழாமல் பின்பற்றுகின்றன!

வாய்ப்பு அமையும் போது வீட்டுக்குச் சென்று உறங்கலாம், குளித்து,சாப்பிட்டுவிட்டு வரலாம்!  மற்றபடி ஸ்டேசனே கதி என்று தான் இருக்க வேண்டும்! தீபாவளி, பொங்கல் சமயங்களில் விடுமுறை கூட விடுமுறை கிடைப்பதில்லை. இது மாதிரியான விஷேச நாட்களில் தான்  காவலர்களுக்கு பணிச் சுமை கூடுகிறது! ஆனால், நமது பக்கத்து மாநிலமான கேரளத்தில் எட்டு மணி நேர வேலையும்,வாராந்திர விடுமுறையும் சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. இங்கே கூடுதல் நேரம் பார்க்கும் வேலைக்கு தக்க மேலதிக நியாயமான ஊதியம் வழங்கப்படுவதுமில்லை.ஏதோ பேரளவுக்கு ஒரு சிறிய தொகை தரப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விவியன் என்ற பேராசிரியர் இந்தியாவில் காவலர்கள் நிலை பற்றி ஒரு ஆய்வினை மேற் கொண்டார். இதில் மொத்த காவலர்களில் 75% மானவர்கள் மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றோடு தான் பணியாற்றுகின்றனர் என அவர் குறிப்பிட்டு உள்ளார்! அதிலும் அடித்தளத்தில் இருக்கும் காவலர்கள் மிகவும் அடிமையாக நடத்தப் படுவதாகவும் கூறியுள்ளார். ஆங்கிலேயர் காலத்து அதே அடிமைத்தன அணுகுமுறையை சுதந்திர இந்தியாவில் சொந்த மக்களிடமே ஏன் பிரயோகிக்க வேண்டும்..? எனத் தெரியவில்லை.

தமிழக காவலர்களின் பெரும்பாலான பணி நேரமும், ஹீயுமன் ரிசோர்சும் வி.வி.ஐ.பிக்களின் பாதுகாப்பிற்கு தான் செலவிடப்படுகிறது! முதலமைச்சர்,கவர்னர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் செல்லும் கான்வாய் மற்றும் அரசியல் தலைவர்களின் பொதுக்கூட்டம் இவற்றுக்கே செலவாகிறது. இங்கே அவசியமின்றி காவலர்களை நிற்கவைக்கும் நிலை என பணிச்சுமை உள்ளது. மேலும் சுமார் 15 சதவிகித காவலர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

ஆக,முறையான திட்டமிடலும், காவலர்களும் மனிதர்கள் தானே என்ற அவர்களுக்கும் ஓய்வும், குடும்ப உறவுகளும் தேவை என்ற புரிதலும் இருந்தால் அவர்களுக்கு வாரந்திர விடுமுறை என்பது எப்போதோ வழங்கப்பட்டிருக்கும். வாராந்திர ஒரு நாள் விடுமுறை என்பதே ததுங்கினத்தோமாக இருக்கும் போது பிறந்த நாள், திருமண நாள் இதற்கெல்லாம் விடுமுறை கொடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பது போலவும், தன்னை தனி ஒரு நிறுவன முதலாளி போலவும் கருதி சைலேந்திரபாபு தன்னிச்சையாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு விளம்பர வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டுள்ளார் என காவல்துறையில் இருப்பவர்களே சொல்கிறார்கள்! இந்த விடுமுறை இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, டி.எஸ்பி, ஏ.சி உள்ளிட்டவர்களுக்குமா..? இல்லையா என்பதிலும் தெளிவில்லை. அவர்களுக்கும் தானே வேண்டும்.

ஓய்வற்ற கடும் பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தங்களால் தான் அவர்கள் முரட்டுத்தன முள்ளவர்களாக மாறுகிறார்கள்! மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். அதனால் லாக்கப் கொலைகளும் நடக்கின்றன. இதையும் மக்கள் தான் அனுபவிக்க வேண்டியுள்ளது. அதாவது காவலர்களுக்கு அதிக பணிச்சுமை, விடுமுறையின்மை ஆகியவை ஏதோ காவலர்கள் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை.தன் விளைவுகளை இந்த சமூகமும்,ஏழை எளிய செல்வாக்கில்லாத மக்களும் தான் அனுபவிக்கின்றனர். காவலர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்வதும்தொடர் நிகழ்வாக உள்ளது! இதனால் அவர்களின் குடும்பமும் நிர்கதியாகிறது.

2012 ஆம் ஆண்டு நீதிபதி கிருபாகரன் காவலர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க  உத்தரவிட்டிருந்தார்.ஆனால் அப்படி அமைக்காமல் தமிழக அரசு காலம் கடத்தி வந்தது! இதைத் தொடர்ந்து மீண்டும் 2018 ல் காவலர்களுக்கு விடுமுறை வழங்குவது சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை என்பது அவசியம். அவர்கள் இதற்காக வீதி இறங்கி போராட முடியாது. ஆனால்,அவர்கள் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தால் என்னவாகும் என அரசு யோசித்து பார்க்க வேண்டும். ஆகவே காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் பதில் அளிக்க நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்! அதிலும் தீர்வு எட்டப்படவில்லை. ஆக, கோர்ட், வழக்கு, நீதிபதி தந்த அழுத்தம் எதுவுமே கடந்த பல ஆண்டுகளாக சாத்தியப்படவில்லை.

எனவே, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தான் இது தொடர்பாக திட்டவட்டமான ஒரு முடிவை அறிவிக்க முடியும். அப்படி அவரே அறிவிக்கும் முன்பாக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோரை கலந்து பேசித் தான் அறிவிக்க முடியும். இது ஏதோ எடுத்தேன், கவிழ்த்தேன் என தன்னிச்சையாக ஒரு டி.ஜி.பி எடுக்கும் முடிவல்ல.

இப்படி ஒரு அறிவிப்பை சைலேந்திரபாபு வெளியிடுவதற்கு மாறாக, முதல்வர் ஸ்டாலினே தமிழக அரசின் ஆணையாக இந்த அறிவிப்பை  தரச் செய்திருந்தால், அது  தான் உண்மையிலேயே  சாதனையாக இருந்திருக்கும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்   

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time