குழந்தைப்பேறு ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமையா..? -சாரா’ஸ்

- பீட்டர் துரைராஜ்

குழந்தை பெற்றுக்கொள்வது என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமையா..?

‘அவள் உடல் அவள் உரிமை’. என்பதை சமூகம் ஏற்கிறதா..? குழந்தை பெற்றுக் கொள்வதோ, மறுப்பதோ  அல்லது தள்ளிப் போடுவதோ அவள் மட்டுமே எடுக்க முடிந்த முடிவா..? இதைப் பற்றி மிக இயல்பாக இந்தப் படம் விவாதிக்கிறது. இப்படத்தின் இயக்குநர் ஜாது அந்தாணி ஜோசப் சிக்கலான இந்தக் கதையினை மிக நேர்த்தியுடன் சுவாரசியமான படைப்பாக்கி இருக்கிறார்

‘மலையாளப் படத்தை நம்பிப் பார்க்கலாம். படத்தில ஒண்ணுமே இல்லைனாலும் இரண்டு மணி நேரம் ஓடிவிடும் ‘ – என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி   சொல்லுவார். இந்த மாதம்  வெளி வந்திருக்கும் சாரா’ஸ் (Sara’s) படம் அப்படித்தான் உள்ளது. சாதாரண கதை, சிறிதும் தொய்வில்லாமல்  இறுதிவரை செல்கிறது.

இப்படத்தில்,  சாரா சினிமாவில் இணை இயக்குநராக இருக்கிறாள். நல்ல கதையைக் கையில் வைத்துக்கொண்டு,  தயாரிப்பாளரைத் தேடி  அலைகிறாள். அது தொடர்பான காட்சிகள் ஓரிரு நிமிடங்களில், அழகாக வருகின்றன. அது தொழில் சார்ந்த பிரச்சினைகளாக  இருக்கலாம்; ஒரு பெண் வழக்கமாக எதிர்கொள்ளும் சிக்கல்களாக இருக்கலாம். சாராவிற்கு அது பற்றி கவலை இல்லை; எதிர் கொள்கிறாள். ஊடகத்துறையில் இருக்கும் அவள்,  பள்ளியில் படிக்கும்போதே ‘ஓரடி முன்னால்’ இருந்தவள்தானே !  வயதாகிவிட்டதால் திருமணம் செய்ய, அவளது பெற்றோர் வற்புறுத்தி வருகின்றனர். திருமணம் செய்தால் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகளை தன்னால் வளர்க்க முடியாது. அவைகள் தரும் தொல்லைகளை சமாளிக்க முடியாது. எனவே திருமணத்தைத் தவிர்த்து வருகிறாள். ஏற்கனவே மூன்று படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்த அவளுக்கு, தன்னுடைய முன்னேற்றம் (career) முக்கியம்.

இந்த நிலையில், கதை தொடர்பாக ஒரு தடயவியல் நிபுணரை சந்திக்கச் செல்கையில், ஐடி துறையில் பணியாற்றும் ஜீவன் என்ற இளைஞனைச் சந்திக்கிறாள். அவனுக்கும் குழந்தை பெற்றுக்கொண்டு வளர்ப்பதில் விருப்பம் இல்லை என்பதால், இருவரும் காதலிக்கிறார்கள்.

இதுவரை நடப்பது சாதாரண காதல் கதை. மிகையான காட்சிகள் இல்லை; மிகையான வசனங்கள் இல்லை; மிகையான ஒப்பனை இல்லை. எளிமையான வசனங்கள். சாதாரணமாக கதை நடக்கிறது. சஸ்பென்ஸ்  இல்லை; விறுவிறுப்பும் இல்லை. புதிதாக திருமணமாகி, அண்டை வீட்டில் குடி வந்திருக்கும் தம்பதிகளையே நாம் திரைப்படத்திலும் பார்க்கிறோம். இந்தப் படத்தை இயக்கிய ஜீடி அந்தோணி ஜோசப் பாராட்டுக்குரியவர். படத்திற்கு பெரிய செலவும் இல்லை.

கதாநாயகனாக சன்னி வானே (sunny wayne) நடித்துள்ளார். தன் மனைவி சாராவை புரிந்து கொள்கிறான். வீட்டுச் சமையலை, ஒரு நாள் விட்டு ஒருநாள் அதாவது வாரத்திற்கு  நான்கு நாட்கள்  சமைக்கிறான். தன் மனைவியோடு,  லொகேஷனை தேடி அலைகிறான். சகல விதத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்கிறார்கள்.  கர்ப்பத்தைத் தள்ளிப்போட,  எடுத்த முயற்சி தோல்வியுற சாரா கர்ப்பமாகிறாள் (accidental pregnancy). கதை சிக்கலாகிறது .

மருத்துவரிடம் செல்கிறார்கள்.‘மோசமான பெற்றோராக இருப்பதை விட,  பெற்றோராக  இல்லாமல் இருப்பதே மேல்’ என்ற கொள்கை உடைய மருத்துவராக சித்தீக் நடித்திருக்கிறார். கருவைக் கலைப்பதா, வேண்டாமா என்று யார் முடிவு செய்வது ! தம்பதிகளுக்குள் முடிவெடுக்க முடியவில்லையென்றால், யார் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார்.

‘நீங்கள் முற்போக்காளராக இருக்க வேண்டியதில்லை. ஆனால் நடக்கின்ற இயல்பான மாற்றங்களை ஏற்றுக் கொண்டால் போதும்’ என்பதை சொல்லும் பாத்திரங்களாக சாராவின் அப்பாவான வின்செண்ட் வருகிறார். தந்தையும், மகளும் புரிதலோடு பயணிக்கிறார்கள். வசனங்கள் இயல்பாக உள்ளன. நாம் வீட்டில் பேசும் வசனங்கள்தான். அக்‌ஷய் ஹரீஷ் வசனம் எழுதியுள்ளார். ஷான் ரகுமான் இசை காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப உணர்வுகளைக் கடத்தி வலு சேர்க்கிறது.

இந்தப்படம் பேசுவது என்னவோ சாரா கர்ப்பமாவதைப் பற்றியதுதான். ஆனால் இதற்குள்ளே பல பெண்களின் பிரசவமும், குழந்தைப் பேறும் போகிற போக்கில் வருகிறது. “இரண்டு குழந்தைகளைப் பெற்ற, நீங்கள் இப்போது எங்கு இருக்கிறீர்கள் ?” என்று தன் மாமியாரைப் பார்த்து கேட்கும்  கேள்விக்கு  பதில் என்ன ? இக்கதையில் தடயவியல் நிபுணராக நடிக்க இருக்கும்,  மூத்த நடிகைக்கு,  ஒரு குழந்தை பிறந்தவுடன் நின்று போன கலைவாழ்வு இழப்புதானே !

மூன்று குழந்தைகளைப் பெற்றவள், நான்காவது கர்ப்பத்தின் ஆலோசனைக்கு மருத்துவரைப் பார்க்க தனியாகத்தானே வருகிறாள் ? பிள்ளை வளர்ப்பில் அவளது  கணவனுக்குப் பங்கு இல்லையா ! அவனை அவள் மனைவி எட்டி உதைக்கும் போது படம் முடிவடைகிறது. இந்தக் காட்சிதான் இறுதிக் காட்சி. அனைவரும் ரசித்து சிரிக்கிறார்கள். அதாவது இயக்குநர் தான் சொல்ல வந்தததை சொல்லுவதில் வெற்றி பெற்றுவிட்டார்.

சாராவாக நடிக்கும் அன்னா பென் நடிப்பு அற்புதம். அவளது முகபாவனைகளை ரசித்துக்கொண்டே இருக்கலாம். நமது தெருவில் துறுதுறுவென்று சுற்றித்திரியும் ஒரு பெண்ணாகக் கூட இவள் இருக்கலாம்.

உச்சக்கட்டம் நாம் அனைவரும் ரசிக்கும்படி உள்ளது. அவரவர் பார்வை அவரவருக்கு ! இயக்குநர் எதனையும் வலிந்து சொல்ல வில்லை. அதேசமயம் பேச வேண்டிய எதையும் பேசாமலும் இல்லை. சாரா படம் எடுத்தாளா ? குழந்தைப் பெற்றாளா ?   சமகாலத்தை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக இந்தப் படம்   உள்ளது.

– பீட்டர் துரைராஜ்.

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time