தொல்லியலே தொலைந்து போ! கல்வெட்டே காணாமல் போ- பா.ஜ.க அரசின் பார்முலா

-சாவித்திரி கண்ணன்

தொல்லியல் துறை என்றாலே பாஜகவினர் ஏனோ அலறுகின்றனர்! அவர்களை பொறுத்த அளவில் வரலாறு என்பது கற்பனையும், மாயைகளும் கொண்டு கட்டி எழுப்பப்படுவது! அதற்கு பெரும் இடையூறாக தொல்லியல்துறை இருப்பதாக கருதுகிறார்கள்! அதனால் தான், இந்தியாவில் இருக்கும் தொல்லியல் துறையின் கல்வெட்டு கிளையை காலாவதி ஆக்கிவிட கங்கணம் கட்டிச் செயல்படுகின்றனர். இதை எதிர்த்து தேச அளவிலும், சர்வதேச அளவிலும் வரலாற்று அறிஞர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

ஆனால், தொல்லியல் துறை மூலமாக கல்வெட்டுகள், புராதனப் பொருட்கள் இல்லாமல் வரலாறு என்பதே உருவாகி இருக்க வாய்ப்பில்லை. ஆதாயங்களை கருதி வரலாற்றை உருவாக்க துடிக்கும் மனோபாவம் கொண்ட ஆட்சியாளர்களுக்கு, ஆதாரங்களோடு வரலாறு உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் வரலாற்று அறிஞர்களே பெரும் எதிரிகள்! தொல்லியல்துறை வல்லுனர்களோ  தொல்லைக்குரியவர்கள்!

”தொல்லியல்துறைக்கு நிதி ஒதுக்கமாட்டேன். தொல்லியல்துறை பணியிடங்களை நிரப்பமாட்டேன். தொல்லியல் துறை கல்வெட்டு பணிகள் அப்படியே ஸ்தம்பித்தால் எனக்கென்ன வந்தது..” என்பது தான் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் கையாளும் அணுகுமுறையாக உள்ளது!

அதுவும் இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிக கல்வெட்டுகள் ,கிடைக்கின்றன. இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுகளில் சரிபாதி தமிழ் கல்வெட்டுகளாக உள்ளன! இதை இந்திய தேசியத்தை வாய்கிழிய பேசும் பாஜக அரசால் ஏற்கமுடியவில்லை என்றால், அவர்கள் பேசுவது போலித் தேசியம் அல்லாது வேறு என்ன..?

தமிழகத்தில் கீழடியில் நடக்கும் ஆய்வுகளை கண்டு ஒட்டுமொத்த தமிழகமே உவகையில் திளைக்கையில் துக்ளக்கில் துர்வாசருக்கு மட்டும் மூக்கு வேர்கிறது. வயிறு பற்றி எரிகிறது. ”எளவு இங்கெல்லாம் ஒரு சமஸ்கிருத கல்வெட்டு கூட கிடைக்கலையே..! ”’ என உள்ளுக்குள் பொருமுகிறார்! அப்படி கிடைத்திருந்தால் துர்வாசர், ”கீழடி ஒரு வெட்டி வேலை” என்றா எழுதி இருப்பார். ”ஆஹா..ஆரிய மாதாகி ஜே..என…இல்லையில்லை, பாரத மாதாக்கி ஜே..”  எனத் துள்ளி குதித்திருப்பார்!

கீழடி ஆய்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டதும், தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் எதுவும் இனி தேவை இல்லை..என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜக அரசு அனைத்து பணிகளையும் திடீரென்று முற்றிலும் முடக்கியது நினைவிருக்கலாம்!

அப்போது, கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் காமராஜ், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு பதில் அளித்த தொல்லியல்துறை, ”தமிழகத்தில் ஏற்கெனவே 92 பாதுகாக்கப்பட்ட புராதான இடங்கள் உள்ள நிலையில், மேலும் 54 பாதுகாக்கப்பட்ட புராதான இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது  என மதுரை உயர் நீதிமன்றத்தில் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 11 ஆயிரம் கல்வெட்டுகள் படிவம் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ் கல்வெட்டுகளில் பல 15 அடி உயரத்துக்கு மேல் இருப்பதால் அவற்றை படிமம் செய்வதில் சிரமம் உள்ளது.’’ என்று தெரிவித்து இருந்தது. அப்போதே இது குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தக் கூடியதா..பாஜக அரசு!

மைசுருவை சேர்ந்த பிரபல பேராசிரியர் நரசிம்ம மூர்த்தி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், கதறித் துடித்துள்ளார். ”ஏற்கனவே தொல்லியல் துறையில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் பல பணிகள் ஸ்தம்பித்துள்ளன. கண்டெடுக்கப்பட்ட 74,000 கல்வெட்டுகளை பிரதியெடுக்கும் வேலைகள் முழிமை பெறலவில்லை. அப்படி பிரதி எடுக்கப்பட்ட விபரங்களை நூல் வடிவில் பதிபிப்பதில் பாதிப்பணிகளே நடந்துள்ளன! இங்கே 122 பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், நீங்களோ இருக்கின்ற 304 பணி இடங்களை ஒழித்துக் கட்டுகிறீர்கள். அதற்கு பதிலாக, புதிதாக 758 பணி இடங்களை உருவாக்குகிறீர்கள்..! அதில் ஒரு பதவி கூட கல்வெட்டு துறைக்கு இல்லை என்பது பேரதிர்சியாக உள்ளது. தேச அளவிலும், சர்வதேச அளவிலும் இந்த துறையில் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்திய, அர்ப்பணிப்புள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், நிபுணர்கள் இந்த நிலைமை கண்டு ஆழ்ந்த கவலையடைகிறோம். கல்வெட்டுதுறை இல்லாமல் முறையான வரலாறு சாத்தியமில்லை. ஆகவே, நீங்கள் உடனடிஒயாக கவனம் செலுத்தி தொல்லியல் துறையில் கல்வெட்டு கிளைக்கு உரிய பணி இடங்கள் நிரப்பி வரலாற்று ஆய்வுகள் தொடர துணை நிற்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

நரசிம்ம மூர்த்தி மட்டுமின்றி, பிரபல நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணரும் நாணயவியல் நிபுணருமான ராஜா ரெட்டி, தமிழகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோவை பேரா. சுப்புராயுலு, சென்னை பேரா. ராஜவேலு, கொல்கத்தாவை சேர்ந்த சுஷ்மிதா மஜும்தார், கர்நாடகாவின் டி.எஸ்.ரவிசங்கர்,  தார்வாரின் எஸ்.வி.பாடிகர், பாரிசிலிருந்து வசுந்தரா பிலியயோசாட், ஒடிசாவின் ஆச்சாரியா… போன்றோர் தொல்லியல் துறையை மீட்டெடுக்கும் இந்த இயக்கத்தில் பங்கு கொண்டிருக்கிறார்கள். அரசின் செவிகளில் இவர்களது குரல் விழுமா தெரியவில்லை.

முதுபெரும் ஆய்வாளர்கள்  குரல் எழுப்பினால் போதுமா..? ஆகவே இந்தியா முழுமையிலும் உள்ள வரலாற்று மாணவர்கள், ஆய்வு மாணவர்கள் இந்த போக்கு கண்டு அதிர்ந்து அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள்!

பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அறிவு ஜீவிகள் ஆனா, ஊனா..வெள்ளைக்காரனை கேவலமா சொல்லுவாங்க, திட்டுவாங்க.., ஆனால். பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் ஜெனரல் அலெக்சாண்டர் குன்னிங்ஹாம் என்ற ஆங்கிலேயரால் தான் இந்திய தொல்லியல் துறை 1861ல் உருவாக்கப்பட்டு, அதன் பிறகு 1886ல் கல்வெட்டுக் கிளை உருவாக்கப்பட்டது. அதன் பிறகு நமக்கு கிடைத்த வரலாற்று வெளிச்சங்களால் தான் இன்றைக்கு நமக்கெல்லாம் ஒரு தெளிவான வரலாற்று பார்வை கிடைத்துள்ளது. இல்லாவிட்டால், ”அயோத்தி தசரத மகாராஜாவிற்கு அறுபதாயிரம் பெண்டாட்டிகள்”, ”ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்சுணன் பொண்டாட்டியை எண்ணிவிட முடியாது..”என்ற கதைகள் தான் இங்கு உண்மையான வரலாறாக நிலை பெற்று இருக்கும்!

இந்தப் பின்னணியில் தான் இப்போது பாஜக அரசு தொல்லியல் துறையை எட்டிக்காயாக எண்ணும் போக்கை  நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது குறித்து, இந்தியாவின் முதல் பெண் தொல்லியல் ஆய்வாளரான மார்ஸிய காந்தி அவர்களிடம் பேசிய போது, ”ஒரு நாட்டின் – ஒரு இனத்தின் வரலாற்றினை  எழுதுவதற்குத் துணையாக இருக்கும் அடிப்படைத் தரவுகளில் கல்வெட்டுகள் எனப்படும் எழுத்துச் சான்றுகள் மிக மிகச் சிறப்பான இடத்தை வகிக்கி்ன்றன. இலக்கியங்களில் கவிஞனின் கற்பனையும்  கலந்திருக்குமாதலின்,  அவை தரும் வரலாற்றுச் செய்திகளையும், அவ்வக்காலத்தே காலத்தே எழுதப்பட்ட  கல்வெட்டுகள் இருக்குமாயின் அவற்றை ஐயத்திற்கு இடமின்றி உறுதி செய்ய இயலும்.

இவ்வகையில் தென்னிந்திய – குறிப்பாகத் தமிழகக்   கல்வெட்டுகளுக்கு  இந்திய வரலாற்றில் சிறப்பான பங்கு உண்டு.  இதனை உணர்ந்த ஆங்கிலேய அரசு 1861 இல் தொல்லியல் அளவீட்டுத்துறை ஒன்றினை  நிறுவி இந்தியா முழுவதிலும் உள்ள கல்வெட்டுகளைப் பதிவு செய்யத் தொடங்கியது. அதன் நீண்ட நெடுங்காலப் பயணத்தில் இந்தியா முழுவதிலுமிருந்து கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு, படிக்கப்பட்டு உரிய   வரலாற்று குறிப்புகளுடன் தொடர்ந்து நூலாக வெளியிடப்பட்டு வருகிறது.

இந்திய கல்வெட்டுக்களில் அரபிய,பெர்சியமொழிக் கல்வெட்டு களுக்காக நாக்பூரிலும், சமஸ்க்ருதம் மற்றும் திராவிட மொழிக் கல்வெட்டுகளுக்காக -அதாவது தமிழ், தெலுகு,கன்னடம்  ஆகிய மொழிகளில் அமைந்த கல்வெட்டுகளுக்காக மைசூரிலும் கல்வெட்டுப் பிரிவுகள் இயங்கி வருகின்றன. சென்னையிலும் ஒரு கிளை இயங்குகிறது. மைசூர் கல்வெட்டுப் பிரிவில்,

தமிழ் கல்வெட்டுகள் – 30,000,

தெலுகு கல்வெட்டுகள் – 9000,

கன்னடம்  கல்வெட்டுகள் – 9500,

சமஸ்கிருதம்  கல்வெட்டுகள் – 17000,

பிற மொழி கல்வெட்டுகள் சுமார்  – 5000

ஆக மொத்தம் சுமார்  70,000 க்கும் அதிகமான கல்வெட்டுகளின் படிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  ஆண்டுதோறும் தற்போதும் புதியன படி எடுக்கப்பட்டு அவற்றுடன் இணைகின்றன. இங்குள்ளவற்றில் சுமார் 50 சதவீதக் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டுகளின் பாடங்கள்  தென்னிந்திய கல்வெட்டுகள்  பல  தொகுதிகளாக வெளியிடப்படுகின்றன. இதுவரை 30 க்கும் மேற்பட்ட தொகுதிகள் வெளிவந்துள்ளன.ஆண்டுதோறும் படியெடுக்கப்படும் கல்வெட்டுகளும் உடனுக்குடன் படிக்கப்பட்டு அவற்றின் செய்திச் சுருக்கம் முதலில் கல்வெட்டு ஆண்டறிக்கையாக வெளியிடப்படுகின்றது. இது வரை 1920 ஆம் ஆண்டுவரை வெளிவந்த ஆண்டறிக்கையில் பதிவுபெற்றகல்வெட்டுகளின் வாசகங்களே வெளியிடப்பட்டுள்ளன.இன்னும் 100 ஆண்டுப் பதிவுபெற்ற கல்வெட்டுகள் வெளிவர வேண்டிய நிலையிலுள்ளன.

தற்போது மைசூரில் தமிழுக்கு 4 ஆய்வாளர்களும்,தெலுகு,கன்னடத்திற்குத் தலா 3 ஆய்வாளர்களும், சமஸ்கிருதத்திற்கு 7ஆய்வாளர்களும் (இதில் 11 பேர் இளநிலையிலும் 6 பேர் உயர்நிலையிலும் உள்ள ஆய்வாளர்கள்) பணிபுரிகின்றனர். இவர்களால் ஆண்டுதோறும் கல்வெட்டுக்களைப் புதியதாகப் படிஎடுக்கவும், அவற்றைப் படித்து ஆண்டறிக்கை தயார் செய்யவும் மட்டுமே முடியும். இந்த நிலையில் கல்வெட்டுப் பாடங்களை வெளியிடுவதில் தாமதம் தவிர்க்க இயலாததாக உள்ளது.

அண்மைக்காலங்களில்  பணி நிறைவு செய்த- கல்வெட்டுப் பிரிவில் பணியாற்றி அனுபவம் பெற்ற ஆய்வறிஞர்கள், பல்கலைக்கழகங்களில் பணியாற்றினாலும், கல்வெட்டில் பயிற்சியுடைய பேராசிரியர்கள் ஆகியோரிடம் இக்கல்வெட்டு பதிப்புப் பணிகள் ஒப்படைக்கப்பட்டு பணி நடைபெற்று வருகின்றது.  இவ்வாறு இப்பணி செய்வதில் அனுபவமும் தேர்ச்சியும் உடையவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலேயே உள்ளனர் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.பெரும்பான்மையோர் 70 அகவை காலத்தில் வாழ்கின்றனர்.

இந்நிலையில் தொல்லியல் துறையின் பதவிகள் மறுசீரமைப்பு செய்வதாகக் கூறி, 16. 6. 2021 அன்று வெளியான குறிப்பாணையில் சுமார் 750 பதவிகள் ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ளன. 100 பதவிகள் ஏற்கனவே 2020, மே மாத அரசாணை மூலம் குறைக்கப்பட்டுள்ளன. ஒப்பளிக்கப்பட்டுள்ள பதவிகளில்  சுமார் 500 பதவிகள் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் பிரிவிற்கும், 80  பதவிகள், மரபுச்சின்னங்களைச் சுற்றித் தோட்டங்கள் அமைப்பதற்கும், 100 பதவிகள் தொல்லியல் அகழாய்வு பிரிவுகளுக்கும் ஆகும். இதில் ஒரு பதவி கூட கல்வெட்டுப் பிரிவுக்கு இல்லை என்பதுதான் வருந்தத்தக்க செய்தி.

ஆனால் குறைக்கப்பட்ட பதவிகளில் ஓர் உயர்நிலை கல்வெட்டு ஆய்வாளர் காசுகளுக்கு (numismatics) ஆனவர் பதவியும் ஒன்று.தற்போது ஒப்பளிக்கப்பட்ட பதவிகளில் சமஸ்கிருதம், திராவிட மொழிக்கு ஒன்று; (திராவிட மொழிகளில் தமிழும் அடக்கம்) அரபி,பர்சியனுக்கு ஒன்று என இரு இயக்குனர் பதிவுகள் மட்டுமே உள்ளன. அதிலும்  திராவிட,சமஸ்கிருத கல்வெட்டு களுக்கான இயக்குனர் பணிமாற்று அடிப்படையில்நியமிக்கப்படுவார்.

ஏற்கனவே கல்வெட்டுப் பிரிவில் பணியாற்றுவோருக்குப் பதவி உயர்வு வாய்ப்புகளே இல்லை.பலர் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியில் சேர்ந்த பதவியிலேயே தொடரும் நிலை இருப்பதால், பல்கலைக்கழகங்களுக்குப் பேராசிரியர்களாகச் சென்று விடுகின்றனர்.

எனவே, கல்வெட்டுகளைப் படித்துப் பொருள் புரிந்து வரலாற்றோடு இணைத்துப் பதிப்பித்து வெளியிடும் திறமை கொண்டவர் அருகி வருகின்றனர்.

நூறு ஆண்டுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ள கல்வெட்டுக்களின் வாசகங்கள் (ஆண்டிற்கு ஏறத்தாழ 500 என்று கொண்டாலும் 50,000 கல்வெட்டுகள்)வெளியிடப்பட வேண்டிய தேவை உள்ளது. கல்வெட்டு ஆதாரம் என்பது மறுக்க இயலாத அடிப்படையாக உள்ள நிலையில், இத்தகைய நடவடிக்கை அங்குள்ள முப்பதாயிரம் தமிழ்க் கல்வெட்டுக்களும் வெளி வரவே இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தும். வரலாற்றுக்கு வலுசேர்க்கும் கல்வெட்டுகள் வெளிவர- குறிப்பாக 30,000 தமிழ்க் கல்வெட்டுகள் வெளிவரத் தனிநபர்களின் முயற்சி பலன் தருமா என்பது கேள்விக்குறியே. தமிழக அரசு இந்த நிலையினை மாற்ற விரைந்து நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.’’என்றார்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time